Tuesday 26 June 2007

01 ஜூலை 2007 திரையிடல் : குவாய்தான்



குவாய்தான் ஜப்பானிய இயக்குநர் மசாகி கோபயாஷியின் அற்புத திரைக்க்காவியமாகும்.நான்கு கதைகள் கொண்டது. நான்கும் திகிலூட்டும் கதைகள். ஆவிகள் சம்பந்தப்பட்டவை. ஆனால் வெறும் திகிலை மட்டும் மையமாக எடுத்துக் கொள்ளாமல், மிக அற்புதமான காட்சி அமைப்புகளையும், ஒலி ஒளி அமைப்புகளையும் கொண்டு நம்மை பரவசத்தில் ஆழ்த்திடும் திரைப்படம் இது. மிகுந்த பொருட்செலவில் கலையம்சத்தோடு எடுக்கப்பட்ட திரைப்படம்.

குவாய்தான் ஐந்து சர்வதேச பரிசுகளை பெற்ற படம். கான் திரைப்பட விழாவில் பரிசுபெற்ற திரைப்படம். ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். இயக்குநர் மசாகி கோபயாஷியின் முதல் வண்ணப்படம். 1964 இல், நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே , இன்றிருக்கும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவிகள் ஏதுமில்லாத காலத்தில் , எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. ஜப்பானிய பழங்கால கலைகளான கபுகி மற்றும் புனராகு பொம்மலாட்ட உத்திகளை கோபயாஷி இத்திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கலையம்சத்திற்காக மிகவும் உயர்வாக உலகளவில் மதிக்கப்படும் திரைப்படமிது.
குவாய்தானின் நான்கு கதைகள்.




* முதல் கதையான ' கறுத்த கூந்தல்' தன்னை மிகவும் நேசிக்கும் தன் மனைவியை பிரிந்து பணத்திற்காக செல்வந்தர் குலத்து பெண்ணொருத்தியை மணம் செய்துகொள்ளும் ஒரு சாமுராய் வீரனைப்பற்றியது. தனது குற்றத்தை பின்னர் உணரும் அவன் தன் பழைய மனைவியிடம் திரும்பி வருகிறான். மன்னிப்புக்கோரி இரவை மகிழ்ச்சியாக மனைவியுடன் கழிக்கிறான். ஆனால் காலையில் அவன் உணருவது ......



* பனிப்புயலில் சிக்கிக் கொள்ளும் இரு மரவெட்டிகளைப்பற்றியது 'பனிப் பெண் ' கதை. இருவரில் வயதான கிழவன் அந்த ஆவிப் பெண்ணிடம் சிக்கி இறக்க , அடுத வாலிபனுக்கு ஒரு நிபந்தனையுடன் உயிர்ப்பிச்சை கிடைக்கிறது. காலங்கள் கடக்க , அந்த நிபந்தனையும் மறக்கப்பட்டு விடுகிறது. அதன் விளைவோ .....



* கண் பார்வயற்ற ஒரு அற்புதமான பாடகனைப் பற்றியது 'காதற்ற ஹொய்ச்சி'யின் கதை. பழங்கால போர்களின் வீர தீர நிகழ்வுகளை பாடுவதற்காக அழைத்து செல்லப்படும் ஹொய்ச்சி, தன் பாடல்களை, அந்த போரில் இறந்தவர்களின் ஆவிகளுக்காக தான் பாடிக்கொண்டிருப்பதை அறியநேருகிறது. அந்த ஆவிகளிடமிருந்து ஹொய்ச்சியை காப்பதற்காக ஹொய்ச்சியின் குரு செய்யும் முயற்சியின் விளைவை காண்கிறோம்.


* ஒரு எழுத்தாளரைப் பற்றிய கதை 'ஒரு கோப்பை தேநீரில்'. இது முற்றுப் பெறாத கதை. கோப்பையிலுள்ள தேநீரிலிருக்கும் ஒரு ஆவியுடன் தேநீரைப் பருகியதன் விளைவாக நிகழும் நிகழ்வுகளை காண்கிறோம்

படம் : ஜப்பானிய மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன். நேரம் : 164 நிமிடங்கள்

இடம்: அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம், கணபதி, கோவை.

நேரம்: 01 07 2007 மாலை 5.45 மணிக்கு.

Tuesday 19 June 2007

ரித்விக் கட்டக் திரைப்பட விழா

17 06 2007 அன்று கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் திரையிடப்பட்ட ரித்விக்கட்டகின் திரைக் காவியங்களைக் காண கட்டக் திரைப்பட விழாவிற்கு வந்த சினிமா ஆர்வலர்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றி. எமது அடுத்த ஒருநாள் திரைப்பட விழா ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி - கீயெஸ்லாவ்ஸ்கியின் புகழ்பெற்ற 'மூன்று நிறங்கள்' - 'நீலம்', 'வெள்ளை' , 'சிவப்பு' ஆகிய மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி.

Wednesday 6 June 2007

17 ஜூன் 2007 : ரித்விக் கட்டக் திரைப்பட விழா

(இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை. மற்ற விவரங்களை இந்த அறிவிப்பின் இறுதியில் காணலாம். )


ரித்விக் கட்டக்

1925 – 1976

இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை


இந்திய சினிமாவின் மிக வும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால் அது ரித்விக் கட்டக்காகத்தான் இருக்க முடியும்.அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்திய கலைஞர்களி லேயே மிகவும் புரிந்துகொள்ள முடியாத வருமாக விளங்கியவரும் ரித்விக் கட்டக்தான். சிலரின் பார்வையில் ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை. ஆனால் அவர்கள் பார்க்கத் தவறுவது, கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும் , அக்கறையும் ஆழமான நேசமுமாகும். இன்னும் சிலரின் பார்வையில் அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுநன். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்ளாதது அவரின் ஒவ்வொரு ஷாட்டின் பின்னாலும் உள்ள அன்னியமும் ஆழமுமான ஒழுங்கு முறையும் ஆகும். கட்டக் மிகவும் அடக்கமானவர். அதனால்தானோ என்னவோ ஒரு திரைப்பட இயக்குநர் என்ற முறையில் தன்னையோ , தன் படங்களையோ ஒருபோதும் விற்கமுடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்குப் பின்பாவது , இப்போது அவர் படைப்புகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. உலகமெங்குமுள்ள ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரின் சொந்த வாழ்நாளின் போது இழந்துவிட்டோம் என்பதை உணர்கின்றனர். ஆனால் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அவர், அவருக்கு மிகவும் பிடித்த அவரின் படத்தலைப்பு போல ' மேக டாக்க தாரா' வாக - மேகம் கவிந்த தாரகையாக - இருந்துவிட்டார்.

( நன்றி : சென்னை பிலிம் சொசைட்டி வெளியிட்ட 'ரித்விக் கட்டக்' நூலின் முன்னுரையில் இயக்குநரும் , ரித்விக் கட்டக்கின் மாணவருமான ஹரிஹரன் )


கட்டக் திரைப்பட விழாவில் அவரது புகழ்பெற்ற மூன்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

மேக டாக்க தாரா ( 1960)


கல்கத்தாவின் வெளிப்பகுதியில் அகதிகளுக்கான குடியிருப்பில் வாழும் புலம் பெயர்ந்த குடும்பத்தின் கதையிது. தன் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும் மூத்த மகளான நீதாவின் கதையை கட்டக் அற்புதமான ஒரு காவியமாக நமக்கு அளிக்கிறார்.மூத்த சகோதரன் ஒரு பாடகனாக முயன்றுகொண்டிருக்கிறான். இளைய சகோதரன் படிப்பை தொடர முடியாத நிலை. கவலையற்று வாழும் இளைய சகோதரி , வயதான தந்தை , எப்போதும் அமில வார்த்தைகளால் எரிக்கும் தாய் மற்றும் காதலன் - இவர்களோடான நீதாவின் வாழ்வு கட்டக்கால் ஒரு செலுலாய்ட் கவிதையாக இயற்றப்பட்டுள்ளது.

படம் வங்க மொழியில் - ஆங்கில ச்ப் டைட்டில்களுடன் - ஓடும் நேரம் : 120 நிமிடங்கள்.


கோமல் கந்தார் (1961)


கட்டக்கிற்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஏறக்குறைய அவரது வழ்க்கை சரித்திரத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். கோமல் கந்தார் 1940களின் மக்கள் நாடக இயக்கத்தை பற்றியும் அந்த இயக்கதிலிருந்த இரு குழுக்கள் , அவர்களிடையே நிலவிய பொறாமை , போட்டி , பூசல்கள் பற்றியும் சொல்லுகிறது.தாகூரின் கவிதை இப்படத்தின் தலைப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்கவிதையில் ஒரு பெண் ஒரு ராகத்தோடு ஒப்பிடப்பட்டு , அந்த ராகம் வங்காளத்தோடு ஒப்பிடப்ப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியின் பிளவுபட்ட மனநிலை, மக்கள் நாடக இயக்கம் இரு குழுக்களாக பிரிந்திருப்பதையும் , வங்காளம் இரண்டு துண்டுகளாக பிளவுண்டதையும் பிரதிபலிக்கிறது.
படம் வங்க மொழியில் - ஆங்கில ச்ப் டைட்டில்களுடன் - ஓடும் நேரம் : 110 நிமிடங்கள்.
சுபர்னரேகா (1962)

1947 பிரிவினைக்குப் பின் கல்கத்தாவில் வசிக்கும் ஈஷ்வர் , ஈஷ்வரின் தங்கை சீதா ஆகிய இரு வங்காள அகதிகளைப் பற்றியது சுபர்னரேகா திரைப்படத்தின் கதை. சுபர்னரேகா ஆற்றின் கரையில் மிகுந்த ஏழ்மை நிலையில் வசிக்கும் இவ்விருவரின் கதையுடன், மற்ற புலம்பெயர்ந்த வங்காளிகளின் அவல நிலையை காண்கிறோம். இந்த அவலநிலையையும் மீறி, கடக்கின் பாத்திரங்கள் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளுவதை காண்கிறோம்.

படம் வங்க மொழியில் - ஆங்கில ச்ப் டைட்டில்களுடன் - ஓடும் நேரம் : 125 நிமிடங்கள்


இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை.
தொடர்புக்கு : konangal@gmail.com
அனுமதி இலவசம்.

நேரம் : 17 06 2007 , ஞாயிறு காலை 9.45 மணி முதல் மாலை 6.30 மணி வரை

இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவுக்கு நன்கொடை ரூ.50 .

உங்களால் முடிந்த அளவு நன்கொடை கொடுத்து கோணங்களின் முயற்சிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மதிய உணவு வேண்டுவோர் இந்த எண்களில் தொடர்புகொண்டு முன்பே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். 9894871105 , 94430 39630