Monday 23 May 2011

பாதல் சர்கார்

பாதல் சர்கார்

எனும் பண்பாட்டு நெறியாளர்.......




(15.07.1925 – 13.05.2011)

பொன். சந்திரன்

15.05.2011 அன்று இரவு 9மணிக்கு மதுரை சுந்தர் காளி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “பாதல்தா இறந்துவிட்டார்; சற்று முன் நண்பர் லோகு அமெரிக்காவிலிருந்து இந்த தகவலை தந்தார்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. மீண்டும் மீண்டும் யார் இறந்தது என்று கேட்டேன். நம்ம பாதல் சர்கார் இறந்துவிட்டார் என்று உறுதிபடுத்தினார். அதிர்ச்சியாக இருந்த்து. (பாதல் சர்க்காரை மிகவும் நெருக்கமானவர்கள் “பாதல்தா” வங்காளியில் ”அண்ணன் பாதல்” என்றுதான் அழைப்பார்கள்).

ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மதுரைக்கு சென்றிருந்த நான் அன்று மதியம் சுந்தர் காளியை சந்தித்தபோது பாதல் சர்கார் பற்றியும் பாதல் சர்காரிடம் பயின்ற என் போன்றோர் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் பற்றியும் விரிவாக பேசிக் கொண்டிருந்தோம். (நாம் பேசிக்கொண்டிருக்கும்போது பாதல் சர்கார் இறந்த செய்தி அப்போது எங்களுக்கு தெரியாது).

ஆம், பாதல் சர்காரிடம் நாடகக் கலையை ஓரளவு கற்ற நூற்றுக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் அவர் நினைவாக சிலவற்றை பதிவு செய்வதும் தமிழ் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என நினைக்கிறேன்.

பாதல் சர்க்கார் முதல் முறையாக பெஙகளுரில் நாடகப் பட்டறை நடத்தியபோது பெங்களுரிலேயே இருந்தும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு பத்து நாள் பட்டறை நடத்துகிறார் என்று அறிந்தவுடன் அப்பட்டறையில் கலந்துகொள்ள பேரார்வத்துடன் நானும் என் சகோதரரும், தோழருமான பொன்.பரமேசுவரனுடன் கலந்துகொள்ள வாய்ப்பு கேட்டு பட்டறை நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மாமல்லபுறத்திற்கு அருகாமையில் இருந்த ”ஓவியர் கிராமத்திற்கு” பட்டறை தொடங்க இருந்த அன்று காலை சென்றடைந்தோம். பட்டறைக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் கடைசி நேரத்தில் முன் வைக்கப்பட்ட எங்கள் கோரிக்கையை பட்டறை ஏற்பாட்டாளர்கள் தயக்கத்துடன் பாதல் சர்கார் முன் வைத்தனர். அவருடைய நாடகப் பட்டறைகளில் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையில் அவர் எப்போதும் கறாராக இருப்பாராம். காரணம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக பங்கு பெறுவோர் இருந்தால் பட்டறையின் பயன் யாருக்கும் கிடைக்காமல் போய்விடும் என்றும் எண்ணிக்கை கூடும்போது தன்னுடைய கவனத்தை எல்லோருக்கும் போதுமான அளவுக்கு செலுத்த இயலாது என்ற காரணத்தாலும் அவர் பங்கு பெறுவோரின் எண்ணிக்கையை பொறுத்த வரையில் கறாராக இருந்தார். அதன் அடிப்படை என்ன என்பதை பட்டறையின்போது நாம் நன்கு உணர முடிந்தது. இருப்பினும், நாங்கள் பெங்களுரிலிருந்து சென்றிருந்த காரணத்தாலும், பங்கு பெற வேண்டிய வேறு இருவர் குறித்த நேரத்தில் வராத காரணத்தாலும் எங்களுக்கு பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சிக் களிப்பில் மூழ்கினோம்.

அதுவரை பெங்களூர் வட்டத்தில் கலைப் பணியில் ஈடுபட்டிருந்த எனக்கு அந்த பட்டறையில் கலந்து கொண்ட பலரையும் அதற்கு முன்பு அறிமுகம் இல்லை. கடற்கரையில் இருந்த அந்த பத்து நாட்களை நாடகப் பட்டறையில் பங்கு கொண்ட தோழர் சாமிநாதன் அவர்கள் “மனதில் பதிந்த காலடிச் சுவடுகள்” என்று அந்த பட்டறை விளையாட்டுகளையும் ஆம், பாதல் சர்காரின் நாடகப் பாணியை விளையாட்டாகத்தான் கற்றுக்கொண்டோம். அனுபவங்களையும் அருமையாகத் தொகுத்து வெளியிட்டார். பகலெல்லாம் பட்டறை, இரவு உணவிற்கு முன்போ பின்போ கலந்துரையாடல்கள் என பத்து நாட்களையும் மிக நன்றாகக் கழித்தோம். 1980இல் (?) நடந்த அந்த பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத்தான் இன்று நினைவு கூறமுடிகிறது. அவர்களில் சிலர் பின்னாளில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும், நாடக இயக்குனர்களாகவும், படைப்பாளிகளாகவும் உருப்பெற்ற, பேரா. மூ.இராமசாமி, பிரபஞ்ஞன், பூமணி, ’பரிக்‌ஷா’ ஞாநி, புதுவை குணசேகரன்,ஆங்கிலப் பேராசிரியர் ஆல்பர்ட், ’வெளி’ ரங்கராஜன், விமலாதித்த மாமல்லன், முத்துராமலிங்கம், அம்ஷன் குமார், பின்னாளில் தில்லி நாடகப் பள்ளிப் பேராசிரியான இராஜேந்திரன் ஆகியோர் அடங்குவர்.

பாதல் சர்காரிடம் நேரடியாக பயிலவில்லை என்றாலும் அவருடைய பாணியை ஏற்று பயின்ற நாடக ஆர்வலர்கள் ஏராளம். கருநாடகத்தைச் சார்ந்த ’சமுதாயா’ என்னும் நாடக இயக்கத்தால் படைக்கப்பட்டு (சமுதாயாவைச் சார்ந்த பொருளியல் பேராசிரியர் கிருஷ்ணசாமி அவர்களால் எழுதி இயக்கப்பட்ட) ”பெல்ச்சி” (Belchi) என்னும் கன்னட நாடகத்தை பெங்களுர் வாழ் தமிழர்களிடம் 1973 முதல் கலைப் பணியில் ஈடுப்பட்டிருந்த ”மக்கள் சமூகப் பண்பாட்டுக் கழகம்” தமிழில் படைத்து 1977ம் ஆண்டு முதல் 1981 வரை 400 நிகழ்ச்சிகளுக்கு மேல் கருநாடகம், கேரளம், மற்றும் தமிழ் நாட்டில் நிகழ்த்தியது என்றால் நம்பும்படியாக இருக்காது. (பெல்ச்சி நாடகத்தை கன்னடத்திலிருந்து தமிழிற்கு மொழியாக்கம் செய்தது மட்டுமின்றி அதனை தமிழ் சூழலுக்கு ஏற்ப செழுமைப் படுத்திய சிறப்பு நண்பரும் எங்கள் நாடக ஆசானுமான தோழர் தி.சு.சதாசிவம் அவர்களைச் சாரும்). சென்னையைச் சேர்ந்த ”மக்கள் மறுமலர்ச்சி மன்றம்” என்னும் பெயரில் கலை இலைக்கிய பணியை மேற்கொண்டு வந்த அமைப்பு “பெல்ச்சி” நாடகத்தை பலமுறை நிகழ்த்தியதின் விளைவாக அதை முன்னின்று நடத்திய தோழர் பரமேசுவரன் ’பெல்ச்சி’ பரமேசுவரனாக அறியப்பட்டார்! பெல்ச்சி ஒரு நாடகமாக அல்லாமல் ஒரு இயக்கமாகவே விரிந்தது எனலாம். “பெல்ச்சி என்பது தமிழ் நாட்டின் கீழ் வெண்மணி போல் பீஹாரில் 1977இல் பெல்ச்சி என்னும் கிராமத்தில் 14 தலித் மக்களை (அதேபோல் அதற்குப் பிறகு 1980இல் பிப்ரா என்னும் கிராமத்தில் 14 தலித் மக்களையும்) மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவங்களையொட்டி புனையப்பட்ட அரசியல் விமர்சன நாடகமாகும். அவசரசட்ட காலகட்டத்தை தொடர்ந்து நடந்தேறிய அரசியல் மாற்றங்களை கதைக்களமாகக் கொண்டு ஆடல், பாடல், இசை என் பல்சுவைகளோடு, பார்வையாளர்களின் பங்கேற்போடு மிகச் சிறந்த காவியமாகக் விளங்கிய வீதி நாடகக் கலைப் படைப்பாகும்; A total Play என்று பெருமையோடு கூறிக் கொள்ளும் அளவுக்கு அமைந்த முழுமையான இந்த கலைப் படைப்பு ஏறக்குறைய தமிழில் 1977 முதல் 1981 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிகழ்த்தப்பட்டது)

இதைப் போல் தமிழகம் மட்டுமின்றி, கருநாடகத்திலும், ஆந்திராவிலும், கேரளாவிலும் பாதல் சர்காரின் நாடகப் பாணியில் ஈர்க்கப்பட்டு சமூக மாற்ற சிந்தனையோடு கலைப் பணியை மேற்கொண்ட கலை இயக்கங்கள் ஏராளம். 1983-84 இல் வங்கி வேலை நிமித்தமாக கல்கத்தாவில் இருந்தபோது பாதல் சர்காரின் ”அங்கன் மன்ச்சு” (முற்றம்) என்னும் நாடக அமைப்பு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நடத்திய நாடகங்களில் பலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பின்னணியில் சில ஆண்டுகளாக நாடக இயக்கத்தில் ஈடுபட்ட பட்டறிவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, சமூக மாற்ற இயக்கத்தில் கலைப் பணியின் பங்கு பற்றி நாம் வளர்த்து கொண்ட அணுகுமுறையைப் பற்றி இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

பாதல் சர்கார் 50க்கும் மேலான நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார் என்பதை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருடைய நாடகப் பாணி ஆயிரக் கணக்கான சமூகச் செயல்வீரர்களை நாடக இயக்கத்திற்கு ஈர்த்துள்ளது என்றால் மிகையில்லை.

பாதல் சர்கார் நாடக அரங்குகளை மூன்றாக வகைப்படுத்துவார். Folk Theatre அல்லது Epic Theatre என்னும் நாட்டுப்புற அரங்கை ”முதல் நாடக அரங்கு” (First Theatre) என்றும்; நவீன நாடகப்பாணியான- Proscenium Theatre - மேடை நாடகங்களை “இரண்டாம் அரங்கம்” என்றும் நவீன நோக்கோடு நாட்டுப்புறவியல் அணுகுமுறையுடன் இயங்கும் வீதி/தெரு நாடக அரங்கை ”மூன்றாம் அரங்கம்” (Third Theatre) என்றும் அவர் விளக்குவார். மூன்றாம் அரங்கம் என்று அறிவிக்கப்பட்ட அவருடைய நாடகப் பாணியை அவர் சில சந்தர்ப்பங்களில் “கெரில்லா அரங்கு” (Guerilla Theatre) என்றும் “Theatre of Feelings” ”உணர்வு அரங்கு” என்றும் குறிப்பிட்டதை கேட்டிருக்கிறேன். கெரில்லா அரங்கு என்பது கெரில்லா குழுக்கள் நாடகம் நடத்துவதற்கான நாடகப் பாணி என்ற அர்த்தத்தில் அல்ல. பெரிய முன்னேற்பாடுகள் இன்றி மக்களோடு மக்களாக கரைந்து நிகழ்த்துவதற்கான கலை நிகழ்ச்சி என்ற முறையில் அதனை கெரில்லா அரங்கு என்று கூறுவார். அதே போல் பலரும் சமூக நடப்புகளை ”தெரிந்து” வைத்திருக்கிறார்கள் ஆனால் வெகுச் சிலர் தான் அதனுடைய சாரத்தை உணர்ந்திருக்கிறார்கள்; செய்ல்பாட்டிற்கு அறிவோடு உணர்வும் கலத்தல் வேண்டும் (It is not enough to “Know” but one should also “feel” to act; Knowing should blend with feelings) என்பதால் அவருடைய நாடகப் பாணியை “Theatre of feelings” “உணர்வு அரங்கு” என்று வர்ணித்தார்.

மேலும் மாற்றுக் கலைப் பணியின் நோக்கம் சமத்துவ மனோபாவத்தையும் அதற்கான விழுமியங்களையும் வளர்த்தெடுப்பதுதான் என சளைகாமல் வாதாடுவார். இதனை விளக்குவதற்கு அவர் பட்டறையில் கூறிய சுவாரசியமான சம்பவத்தை நினைவுகூறுகிறேன். அவருடைய ஒரு நாடகத்தில் (நாடகத்தின் பெயர் சரியாக நினைவில்லை, Tringsha Shatabdi ”முப்பதாம் நூற்றாண்டு” என நினைக்கிறேன்). அந்நாடகத்தின் கதையின் கரு இதுதான்: இருவர் வர்க்க பேதமுள்ள சமூகத்திலிருந்து ’தற்செயலாக’ வர்க்க பேதமற்ற சமூகத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள். (இது புனைவு). வர்க்க பேதமற்ற சமூகத்தில் நாடகக் காட்சிகள் விரிந்து வளர்கின்றன. அச்சமூகத்தில் பணம் இல்லை. திருடர்கள் இல்லை; சிறை இல்லை; போலீஸ் இல்லை; சொத்து இல்லை; சுரண்டல் இல்லை; சாதி இல்லை; மதமில்லைல; மார்கிசின் “மூல தனம்” அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது!; எங்கும் சுதந்திரம்; எதிலும் சுதந்திரம் என காட்சிகள் அனைத்தும் சுவாரசியமாக நீள்கின்றன. இந்நாடகத்தைப் பார்க்கும் பார்வையாளர்களிடம் இயல்பாக இப்படிப்பட்ட சமூகம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்படிப்பட்ட சமூகம் வராதா? இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளையும் எண்ணங்களையும் வேட்கைகளையும் எழுப்புவதாக அமையும். இந்நாடகத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு இருந்ததாம். ஆனால் அவ்வமையம் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகள் இந்நாடகத்தை எள்ளி நகையாடினார்களாம். காரணம், இப்போதைய தேவை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; அதற்கான நாடகங்களைத்தான் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கனவுகளையும் கற்பனைகளையும் அல்ல; என்று வாதிட்டார்களாம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது வர்க்க/சாதி பேதங்களற்ற சமூகத்தை காண்பதற்க்காகத்தான் என்பது உண்மையானால் ஏன் இந்நாடகத்தை எள்ளி நகையாட வேண்டும்; அப்படியானால் இவர்களுடைய நோக்கம்தான் என்ன என்று வினவி அந்நாடகத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவில் தொடர்ந்து நடத்தினேன் என்று பாதல் சர்கார் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கலைப் பணியின் இலக்கு ஆட்சி அதிகாரத்தை கடந்தது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கானப் பணி அரசியல் பணியாகும். அதற்கு கலை வடிவங்கள் பயன்படலாம். கலை வடிவங்கள் பயன்படுத்தப் படுவதால் அவை கலைப் பணியாகமாட்டா. ஆனால் மக்களின் ஆட்சி அமைய தோதான மனோபாவத்தை, உளப்பாங்கை, அதற்கான விழுமியங்களை மக்களிடையே வளர்த்தெடுப்பதும் வார்த்தெடுப்பதும் தான் கலைப் பணியின் இலக்கும் நெறியுமாகும். இதனை மேற்கொள்ள கலைப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடும், கூட்டுமுயற்சியும், தேர்ந்த புலமையும் இன்றியமையாதது. எல்லா சமூக அநீதிகளும் சுரண்டல்களும், கொடுமைகளும் தெரிந்தோ தெரியாமலோ, தொடர்வதற்கும் தக்க வைத்துக் கொள்வதற்கும், துணைப்போகும் கலை இலக்கிய நிறுவனங்கள்/இயக்கங்கள் இவ்வாறுதான் செயல் படுகின்றன. அப்படியானால் சமூகம் அடியோடு மாற்றப் பட வேண்டும் என விரும்பும் ஆற்றல்களின் கலைப் பயணத்தின் தடங்கள் எளிதானவையல்ல. அவை சில நிகழ்ச்சிகளாகவோ, முழக்கங்களாகவோ அல்லாமல் மாபெரும் இயக்கமாக அமைய வேண்டியதன் தேவையை இது உணர்த்துகிறது. கலை ஓர் அனுபவமாக மலரவேண்டும். சமத்துவ/சுதந்திர விழுமியங்களை தன்வயமாக்கும் பயணமாக அமையவேண்டும். ஆக, கலைப் பணி என்பதே ஆழ்ந்த தத்துவார்த்த யுத்தத்தை, அறவியல் போராட்டத்தை நடத்துவதற்கான களமாக அமைய வேண்டும். அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பும் பின்பும் தொடர்ந்து இயங்கும் பண்பாட்டுப் புரட்சியாகும்.

இத்தகைய பண்பாட்டு புரட்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவரான பாதல் சர்காரின் இழப்பு ஈடுகட்ட இயலாததுதான். அவருடைய மாணாக்கர்களான நாம் என்ன செய்ய போகிறோம்? நம் வழி அவர் மீண்டும் உயிர்த்தெழுவாரா?