Wednesday 17 October 2012

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் -3



ஹெர்ஸாக் 
பற்றி
ஹெர்ஸாக் 

- 3 -




பால் க்ரானின்
தமிழில்: எஸ்.ஆனந்த்

கதை சொல்லலைத் தாண்டி உங்கள் திரைப்படங்கள் வழியே பார்வையாளரைச் சென்றடைய வேண்டும் என  நீங்கள்  விரும்பும் கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிச் சொல்ல முடியுமா?

திரைப்படத்தில்  கதை சொல்லல் ஒன்றே போதும். திரக்கதையை கொள்கை, கோட்பாடுகளைச் சார்ந்ததாக நான் அமைப்பதில்லை.  கதைக்கான அடிப்படை விஷயங்கள் மனதிலிருக்கும். கதையை எழுதுவதற்கு முன்பே மெல்ல வளர்ந்து மனதில் முழுக்கதையாக உருவாகிவிடும். அதை எழுத்தில் வடிப்பதுதான் நான் செய்வது. திரைக்கதையை விரைவாக எழுதி முடித்துவிடுவேன். தட்டச்சு இயந்திரம் அல்லது கணினி உதவி கொண்டு திரைக்கதையை எழுதி முடிக்க நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் ஆவதில்லை.  
தனிப்பட்ட கொள்கை, கோட்பாடு  எதையும் நான் பின்பற்றுவதில்லை. உலகை என்னுடைய பார்வையில் காண்பதின் வெளிப்பாடாக எனது திரைப்படங்கள் அமைகின்றன. இதனால் திரைப்படங்களைக் கட்டுடைத்து அலசுபவர்களுக்கு  எனது படைப்புகள்  பல நேரங்களில் சிரமத்தைக் கொடுப்பவையாக அமைந்து விடுகின்றன. ஜோசப் கோன்ராட், காஃப்கா, கோயா போன்ற மேதைகள் எந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றித் தங்கள் படைப்புகளை  உருவாக்கினர் ?
இன்றைய  கலாச்சாரத்தில் காணப்படும்  படிமங்களின் தரப் பற்றாக்குறை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள படிமங்கள் படிப்படியாக வலிமையிழந்துகொண்டிருப்பதாகக் கருதுகிறேன். பிம்பங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, சக்தியிழந்தவையாக ஆகிவிட்டன, தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், பெரிய அளவு உருவப்படங்களிலும் கிராண்ட் கன்யான் போன்ற இயறகைக் காட்சிகளையோ, பிற காட்சிகளையோ மீண்டும் மீண்டும் காணும்போது அவை பிம்பங்களை அபாயகரமான ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதை உணருகிறேன். நமது பார்வையைக் கெடுப்பவற்றில் மிகவும் அபாயகரமானதாக தொலைக்காட்சியைக் கருதுகிறேன். தொலைக்காட்சி நிலையங்களை நாம் கைக்குண்டுகள் வீசித் தகர்க்காத தவறுக்காக பின்னாளில் நம் பேரக் குழந்தைகள் நம்மீது  குற்றம் சாட்டப்போவது நிச்சயம். பார்வையாளரின்  கற்பனை வளத்தைத் தொலைக்காட்சி அதன் உயிரற்ற பிம்பங்களைக் கொண்டு கொன்றுவிடுகிறது. 
பிம்பங்களின் உருவாக்கம் நமக்குள்  நிறைவானதாக இல்லாவிடில்  கூடிய விரைவில் டினோசார்கள் அடியோடு அழிந்தது போல அழிந்துவிடுவோம். இன்றும் மாற்றங்களின்றி துவக்க காலத்தில் இருந்தது போன்றே  இயேசு கிறிஸ்துவின் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார்கள். கிறித்துவம் நீர்த்துப் பழையதாக ஆகிவிட்டது என்பதற்கு இது ஒன்றே சாட்சியம். இன்றைய கலாச்சாரத்தையும், நமது ஆழ்மன உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பிம்பங்கள் உருவாகவேண்டியது அவசியம். அதனால்தான் எந்த இலக்கை நோக்கி எடுக்கப்படவையாக இருந்தாலும், எத்தகைய கதைக் கருக்களைக் கொண்டிருந்தபோதிலும், முற்றிலும் புதிய முறையில் படிமங்களைப் பயன்படுத்தி  உருவாக்கப்படும் திரைப்படங்களை நான் அதிகமாக விரும்புகிறேன். புதிய படிமங்களைத் தேடி உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இருந்தும் இந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்ள சில படைப்பாளிகள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். 
முற்றிலும் புதிய, தெளிவான பிம்பங்களைப் பதிவு செய்வதற்கு  எங்கு  செல்லவேண்டுமென்றாலும் தயாராக இருக்கிறேன். ஒருமுறை நாசாவின் விண்வெளிப் பயணத்தில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றிருந்தேன். ஒரு காமெராவுடன் அப்படிப் பயணம் செய்யும்போது  புதிய அற்புதமான பிம்பங்களைப் பதிவு செய்யலாம். இன்றுவரை விண்வெளிப்பயணம் எனக்குக் கிட்டாத ஒன்றாகவே இருக்கிறது.
பல வருடங்களாக வெளிவந்துள்ள உஙகள் படைப்புகளில் உள்ளோட்டமாகக் காணப்படும்  அடிப்படைக் கருக்கள்(themes) என விமரிசகர்கள் சுட்டிக்காட்டுபவை பற்றி உங்கள் கருத்து என்ன?
ஒரு திரைக்கதையை எழுதும்போது குறிப்பிட்ட அடிப்படைக்  கருவை மனதில் கொண்டு எழுதுவதில்லை. கதையைக் கதையாகச் சொல்வதே நான் செய்வது. சில நேரங்களில் முந்தைய படத்திற்குத் தொடர்புடைய கருத்துக்கள் இப்போது எழுதும் திரைக்கதையில் கலந்துவிடலாம். இவற்றையெல்லாம் முன்கூட்டித் திட்டமிட்டுக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் கதையின் அடிப்படைக் கருக்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. சில விமரிசகர்கள் எனது திரைப்படங்களில் தொடர்ந்து காணப்படும் அடிப்படைக் கருக்கள் என சிலவற்றைச் சொல்லியிருக்கலாம். குறிப்பிட்ட முறையில் திரைப்படங்களை அணுகவும் எழுதவும் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் கண்டறிந்ததாகக் குறிப்பிடுபவற்றைச் சரியென்றோ தவறென்றோ நான் சொல்வதில்லை. அவர்கள் அறிந்த முறையில் எனது படங்களை அணுகுகின்றனர். நான் என்னுடைய முறையில்  எனது படைப்புகளை உருவாக்குகிறேன்.  ஒன்று நிச்சயம். எனது திரைப்படங்களை வழக்கமாகப் பார்ப்பவரால், அதுவரை பார்த்திராத எனது புதிய படைப்பு ஒன்றைப் பார்க்கும் போது, முதல் பத்து நிமிடங்களில் அது ஹெர்ஸாகின் படைப்பு என்று சொல்லிவிட முடியும்.
உங்களின் சில படைப்புகளாவது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கலாம் என நீங்கள் கருதலாம் அல்லவா?
என்னுடைய திரைப்படங்களில் வரும்  கதா பாத்திரங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் உணர்வு எனக்கு எப்போதும்  உண்டு. இருளிலிருந்து வெளிப்படும் அவர்களுக்கு  நிழல்களோ, கடந்த காலங்களோ இல்லை. நாற்பது வருடங்களாக  உருவாக்கியுள்ள அனைத்து படைப்புகளையும்   எனது மன வெளிப்பாட்டின் மொத்தமான ஒரு பெரும் ஆக்கத்தின் பகுதிகளாகவே  கருதுகிறேன். இப்பெருங்கதையின் பாத்திரங்கள் தங்களை வெளிப்படுத்த  எந்த மொழியுமின்றி, நம்பிகையிழந்து  தனியாகப் போராடுபவர்கள். அதனால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அவர்களின் போராட்டங்களில் வெற்றிக்கான வாய்ப்புகளே இல்லை. காயங்களுடன் இருந்தும் எவ்வித உதவியுமற்ற நிலையில் சலிப்பின்றி தாங்களாகவே போராடிக்கொண்டிருக்கின்றனர். 
என்னுடைய முக்கிய பாத்திரங்கள் அனைவரும் விளிம்பு நிலையில் வாழும் அந்நியர்களே.  இருந்தும் காஸ்ப்பர் ஹவுசர் போன்ற பாத்திரத்தை அவ்வாறு வகைப்படுத்துவதும் சிரமம். என்னை ஒரு முக்கியமற்ற விசித்திரமான  இயக்குநர் எனச் சொல்வார்கள். என் திரைப்படங்களைக் காணும்போது அவை எவ்வகையிலும் விசித்திரமானவை அல்ல என்பதை உணருவீர்கள். மூன்றடி தள்ளி அமர்ந்திருக்கும் உங்களால் விசித்திரமாக என்னிடம் எதையாவது காண முடிகிறதா? என்னுடைய பாத்திரங்களும் எவ்வகையிலும் விசித்திரமானவர்கள் அல்ல.
உங்களை கதாபாத்திரங்களுடன் எந்த அளவு நெருக்கமாக உணருகிறீர்கள்?
இந்தப் பாத்திரங்கள் மீது எனக்கிருக்கும் அனுதாபத்தைப் பார்த்து நானே இப்பாத்திரங்களில் நடித்திருக்க வேண்டும் என நண்பர் ஒருவர் விளையாட்டாகக் குறிப்பிடுவதுண்டு. என்னால் நன்றாக நடிக்க முடியும். அவசியமிருந்திருந்தால் எனது படங்களில் முக்கிய பாதிரங்களாக நான் நடித்தும் இருந்திருக்கலாம்.  பெண்களைக் குறைவாகவே முக்கிய பாத்திரங்களில் பயன்படுத்தியிருப்பது ஏன்  என என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கான விடையாகவும் இதைக் கொள்ளலாம். ஏனென்றால் பெண் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. எனது படங்களின்  முதன்மைக் கதாபாத்திரங்கள் வழியே என் வாழ்வின் பகுதிகள் வெளிப்படுகின்றன எனலாம். 
நான் அனுதாபப்படுபவர், எனக்கு முக்கியமாகப்படுபவர் பற்றி மட்டுமே திரைப்படமோ, ஆவணப்படமோ என்னால் எடுக்க முடியும். என்னுடைய திரைப்படங்களின்  முக்கிய பாத்திரங்கள் அனைவரும் எனது வாழ்க்கையை இனம் காட்டுபவர்களே. இவர்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகை தொடர்பு இருக்கிறது. நான்  ஒரு குறிப்பிட்ட தத்துவப் பார்வையையோ, சமுதாயக் கட்டமைப்பையோ கொண்டு கதைகளைச் சொல்லும் அறிவாளி அல்ல.  திரைப்படங்கள் நேராகப் பார்க்கப்பட வேண்டும். திரைப்படக்கலை அறிவாளிகளுக்கானதல்ல; பாமர மக்களுக்கானது. நானும் பாமரன் தான்; புத்தகங்களை அதிகமாகப் படிப்பவனோ, தத்துவார்த்தமான சிந்தனைகளை மேற்கொள்பவனோ அல்ல. தத்துவ சிந்தனைகளை விட அசலான நேரடி வாழ்க்கை எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. 
கண்கள் குருடான, காது கேட்காத ஐம்பத்து ஆறு வயது பெண்மணி ஃபினி ஸ்ட்ராபிங்கர் பற்றி நீங்கள் எடுத்துள்ள Land of Silence and Darkness  எனக்கு மிகவும் பிடித்த படம். திரையிடப்படும் ஒவ்வொருமுறையும்  பார்வையாளரை அப்படம் வெகுவாகப் பாதிப்பதைக் காண்கிறேன்.  அது ஏன் என்று சொல்ல முடியுமா?
இப்படம் ஒருவரின் தனிமையைப் பற்றிய மென்மையான உனர்வுகளை, தாங்கொண்ணா சிரமங்களை பார்வையாளர் உணரச் செய்யும்  படைப்பு; தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் பற்றியது. வாழ்வின் துயரமும் வலியும் தோலுரித்துக் காட்டப்படுகின்றன. பார்வையும், கேட்கும் திறனுமற்ற ஃபினி ஸ்ட்ராபிங்கரை சந்தித்தது அதுவரை தனிமையை நான் நினைத்திராத அளவு என்னுள் உணரச் செய்தது. நமக்குக் கண்பார்வையும், கேட்கும் திறனும் இல்லையென்றால் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை,  பார்க்கும் ஒவ்வொருவரையும் இப்படம் உணரச் செய்யும். எனது திரைப்படம் Kaspar Hausar  மனிதரின் இயலாமை பற்றிய மற்றொரு  படைப்பு.   மகிழ்ச்சியோ துக்கமோ தன் வாக்கையை எவ்விதத்திலும் பாதிக்க ஸ்ட்ராபிங்கர் அனுமதிக்கவில்லை என நான் நம்புகிறேன். தனது வாழ்க்கை அர்த்தமுள்ளது எனபதை அவர் அறிந்திருந்தார். தன்னைப்போல் பார்க்க, கேட்க இயலாத பலரைச் சந்தித்து அவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இப்படத்தின் முக்கியமான விஷயம், இதை உருவாக்க்கிய குழு வெறும் மூன்று பேர்கள் மட்டுமே கொண்டது என்பது. இது படம் எடுக்க ஆர்வமுள்ளோருக்கு  உந்துதலை அளிக்கும் அற்புதமான செய்தி அல்லவா?
ஆம். அத்துடன் படெமெடுக்கப் பயன்படுத்திய பிலிமின் நீளமும், திரையில் காணும் படத்தின் நீளமும்  இரண்டுக்கு ஒன்று என்ற விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படம் மூன்றுமணி  நேரத்தில் படமாக்கப்பட்டது. மொத்த செலவும் முப்பதினாயிரம் டாலர்களில் முடிந்துவிட்டது. மொத்தம் மூன்று பேர்கள் – நான், காமெராவிற்கு ஷ்மிட் ரெய்ட்வான், எடிட்டிங்கிற்கு ஜெலிங்காஸ். எங்களிடம் வேறு ஒன்றும் கிடையாது. இருந்தும் முப்பது வருடங்கள் கழிந்து இன்றும்  பார்க்கப்படும் ஒரு படம் உருவானது. இது இன்றைய படைப்பாளிகளுக்கான ஒரு பாடம் எனலாம். தற்போது அதிக விலையில்லாத டிஜிட்டல் காமெராக்கள், எடிட்டிங்  உபகரணங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. உங்கள் படைப்பை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்    எனும் வைராகியம் இருந்தாலே போதும். படத்தை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் நிதிக்காக  நிறுவனங்களை நம்பிக் காத்திருக்காதீர்கள். மிகக் குறைவான செலவில் Land Of Silence and Darkness போன்ற படைப்புகளை உங்களால்  உருவாக்க முடியும்.

இதுவரை எடுத்த படங்களிலேயே  இப்படத்திற்காக மேற்கொண்ட உழைப்பு சிறப்பானது என என்னால் சொல்ல முடியும். படத்தின் நகர்வு மென்மையான முறையில் பாதிரங்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதாக, காமெராவின் சுவாசத்தை உணர்த்துவதாக அமையவேண்டும் என்பதால் காமெராவை முழுவதும் கைகளில் எடுத்துப் படமாக்கினோம்.  ட்ரைபாட் (Tripod) உபயோகிக்கவில்லை. ஜூம் லென்ஸ் (Zoom lens) பயன்படுத்தவில்லை: மாறாகக் கூட்டதிற்குள் காமெராவை எடுத்துச்சென்று சென்று அருகாமைக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரெய்ட்வான் படமாக்கினார். முப்பத்து மூன்று வயதில் பார்வை இழந்த, காது கேட்காத ஃபெயிஷ்மான், ஆறு வருடங்கள் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வாழ்ந்தவர். இப்படத்தின் இறுதியில் அவர் நடந்து சென்று ஒரு மரத்தைத் தொடும் காட்சி வருகிறது. அந்த இரண்டு நிமிடக் காட்சி, அவர் வாழ்க்கையின் உணர்வுகளை மொத்தமாக வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும் மறக்கமுடியாத காட்சி.  அக்காட்சிக்கு முன் ஓடும் ஒன்றரை மணி நேரப் படப் பகுதி அந்த இரண்டு நிமிடக்காட்சியைப் பார்வையாளர் சரியாக உணர்ந்து உள்வாங்கும்படியான  மனநிலையை அடைவதற்கு  உதவுகிறது.
ஃபினியை (ஸ்ட்ராபிங்கர்) எப்படி சந்தித்தீர்கள்?
மேற்கு ஜெர்மனியில் தாலிடொமைட்டினால் (Thalidomide - குழந்தைகள் ஊனமுடன் பிறக்கக் காரணமான மருந்து) பாதிக்கப்பட்டோர் பற்றி ஒரு ஆவணப்படம் தயரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது   Handicapped Future  உருவானது. ஊனமுற்றோரைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட படம். உனமுற்றோருக்கு  மிகவும் பழமையான முறையிலான மருத்துவ வசதிகளே புழக்கத்தில் இருந்த நேரம். அவர்களுக்கான இடங்கள், நடைபாதைகள்.  லிப்ட் வசதிகள் எதுவும் அப்போது  இல்லை. அவற்றிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான படைப்பு இப்படம். நேரடியான அரசியல் படைப்பு எனச் சொல்லலாம். ஜெர்மனியிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும்  ஊனமுற்றோருக்கான வசதிகள் அமுலுக்கு வர இம்முயற்சிகள் வழிவகுத்தன. இப்படம் இன்றைய பார்வையில்  வழக்கமான ஆவனப்படங்களை ஒத்திருப்பதாகவே தோன்றும். எனக்குப் பிடித்த படைப்பு  என்று இப்போது இதைச் சொல்ல முடியாது. 
Land of Silence and Darkness க்கு Handicapped Future   முன்னோடி. அப்போதைய மேற்கு ஜெர்மனி குடியரசுத் தலைவர் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்குப் படமெடுக்கச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த ஃபெனியைக் கண்டேன். ஃபெனிக்கு அவருக்கான விசேஷ  தொடு மொழி வழியே பேச்சை ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். குடியரசுத் தலைவரைப்  படமெடுத்துக்கொண்டிருந்த ஷ்மிட் ரெய்ட்வானிடம் அதைக் காட்டிய மறு நிமிடம் அவர்    காமெராவைத் திருப்பி  ஃபெனியைப் படம் பிடிக்கத் தொடங்கினார்.
என்னுடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் பற்றி இங்கு நான் சொல்லியாகவேண்டும். எனக்கும் அவர்களுக்கும்  இடையே நெருக்கமான உடல் மொழித் தொடர்பு உண்டு. அடுத்தவர்  உடலின் ஒவ்வொரு  அசைவின் அர்த்தம் என்ன என்று உணர முடியும். தொட்டாலோ, மிக மெதுவாக ஒரு வார்த்தை சொன்னாலோ கூடப் போதும் , அது என்னவென்று உணர்ந்து மிகச் சரியாக காமெரா நகர்த்தப்படும்; கோணங்கள் மாற்றப்படும். ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச் (Thomas Mauch) உடலுடன் இணைந்து ஒவ்வொரு அடியாக நடக்கமுடியும் அளவு அவருக்கும் எனக்கும்  உணர்வுத் தொடர்பு உண்டு. படைப்பு உருவாக்கதின் போது அந்த அளவு ஒளிப்பதிவாளரின்  உணர்வுகள் எனது உணர்வுகளுடன் இணைந்து இயங்கும்.
ஃபினி தன்னைப் படமெடுக்க எளிதில் சம்மதித்தாரா?
தன்னைப்போல் உடல் ஊனமுற்றோரைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் படம் என்பதைப் புரிந்திருந்ததால் அவரிடம் அனுமதி பெறுவது சிரமமானதாக இல்லை. எவ்வாறு படமெடுக்கப் போகிறோம் என்பதற்கான திட்டங்கள் எதுவுமில்லாமல் துவங்கினோம்.  விரைவில் ஃபினியுடன் தொடு மொழியில் பேசக் கற்றுக்கொண்டேன். ம்யூனிக்கில் வாழ்ந்த என் தாயார் ஃபினிக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். அவரும் ஃபினியுடன் தொடு மொழியில் பேசக் கறுக்கொண்டார்.  ஃபினிக்கு எதெல்லாம் முடியாது எனக் கருதப்பட்டதோ அதை எல்லாம் அவரை அனுபவிக்கச் செய்தேன். அவரை என் மோட்டார்பைக்கில் வேட்டைக்கு அழைத்துச் சென்றேன். எனது ஒரு வயது மகனைப் பார்த்துக்கொள்ளச் செய்தேன். எல்லாவற்றையும் துணிவுடனும் மகிழ்ச்சியுடனும் செய்தார். அந்தப் படத்தை விட அவர் எனக்கு மிக முக்கியமானவர். படம் முடிந்து ஐந்து வருடங்களில் இறந்துவிட்டார்.   
காது கேட்காத, பார்வையற்ற குழந்தைகளையும் படத்தில் காண்பிக்க வேண்டும் என்று ஏன் முடிவு செய்தீர்கள்?
ஃபினி தனது இளம் பருவத்தில் கண்பார்வையை இழந்தவர். உலகைத் தனது கண்களால் முதலில் பார்த்தவர். இக்குழந்தைகள் அப்படியல்ல. பிறப்பிலேயே பார்வையற்ற அவர்களுக்கு புற உலகைப்பற்றிய எந்தக் கற்பனைக்கும் வாய்ப்பில்லை. அந்த மறுபக்கத்தையும் காண்பிப்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. இது புத்தகம், இது உணவு என்பதெல்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பிறப்பிலேயே குருடாகவும், செவிடாகவும்  பிறந்த ஹெலென் கெல்லர் தத்துவம் பயின்றார். அவர் வாழ்க்கை பற்றி  எண்ணும்போது, இம்மாதிரியான குழந்தைகளுக்குள் இருக்கும் அரூபமான சிந்தனைகள், உணர்வுகள் பற்றிய பல கேள்விகள் என்னுள் உருவாகின்றன. அவர்கள் மனதுள் அனாமதேயமாக ஓடிக்கொண்டிருக்கும் விவரிக்க முடியாத பயங்கள், உணர்ச்சிகள் வெளியுலகுக்கு வெளிப்பட என்றும் வாய்ப்பில்லை. இதை எல்லாம் நினைக்கும் போது அதிர்ந்து போகிறேன்.
Land of Silence and Darkness படத்திற்கு வெகுஜன ஆதரவு கிடைத்ததா?
முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மறுத்துவிட்டனர். அதற்கு இரண்டரை வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. முதல் முறையாக ஓளிபரப்பப்பட்டபோது அதைப் பின்னிரவில் இறுதியாக ஓளிபரப்பினார்கள். அப்படியும் அதற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்க, பார்வையாளர் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும்  இருமுறை ஒளிபரப்பப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமாக ஆகிவிட்டது. ஜெர்மனிய நாளிதழ்கள் சில உடல் ஊனமுற்றோரைத் தவறாகப் பயன் படுத்தி பெயர் ஈட்டிக்கொள்கிறேன் எனச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸ் (Oliver Sacks ) உட்பட  பலர் திரண்டெழ, குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாது போயின. விரைவில் இப்படம் முக்கியமான படைப்பு என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
¬¬¬¬¬¬¬¬¬¬¬----------------------------------------------------------------------------- 
பால் க்ரானினின் ‘Herzog on Herzog’   நூலில் தனது வாழ்க்கை,  படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி புகழ்பெற்ற ஜெர்மனிய திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்ஸாக் (Werner Herzog) மனம் திறந்து சொல்லும் பதில்களின்  முக்கிய பகுதிகள்   தொடராக அளிக்கப்படுகின்றன.
-------------------------------------------------------------------------
நன்றி:தமிழினி

Tuesday 25 September 2012

Tuesday 14 August 2012

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் -2



ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக்

2

 பால் க்ரானின்


தமிழில் : எஸ்.ஆனந்த் 

 (பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்குத் தனது வாழ்க்கைபடைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக்  மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும்    ‘Herzog on Herzog’  நூலின் முக்கிய பகுதிகள்   தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது. )  

புதிய ஜெர்மன் சினிமா’ (New German Cinema) உருவான நேரத்தில் நீங்கள் இயக்கிய ‘Signs of Life’(1968)  வெளிந்தது. பாஸ்பைன்டர் இயக்கத்தில்’Love is Colder than Death’  போன்ற அவரது முதல் கட்டத் திரைப்படங்கள்  வெளிவந்திருந்தன. விம் வென்டர்ஸின் குறும் படங்கள், ஸ்க்லாண்ட்ராப்பின்  ‘Young Torless’ வெளி வந்திருந்தன.  அந்த நேரத்தில் உங்களை ஒரு புதிய இயக்கத்தின் அங்கமாக  உணர்ந்தீர்களா?  
புதிய ஜெர்மன் சினிமாஎன்பது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது அல்ல. அதற்கு முந்தைய  ஓபர்ஹாஸென் அறிக்கை’ (Oberhausen Manifesto) காலத்திற்கு முன்பே திரைப்படங்களை இயக்கத் தொடங்கியிருந்தேன்.  அந்த அறிக்கை உருவானது கூட எனக்குத் தெரியாது. நான் முதலிலிருந்தே ஜெர்மனிக்கு வெளியே அதிகக் காலம் கழித்தவன். புதிய ஜெர்மன் சினிமாவின் முக்கிய காலமாகக் கருதப்படும் 1970களில் உலகின் பல பாகங்களில் படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருந்தேன்.  புதிய அலையின் முதல் கட்டத்தைச் சேர்ந்தவர்களாக  ஓபர்ஹாஸென் அறிக்கைகுழுவைச்  சொல்லலாம்.  அவர்களில் பலர் விரைவில் காணாமற் போய்விட்டனர். அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட இருபத்து ஆறு இளம் இயக்குநர்களில் முக்கியமான இருவர் க்ளூஜ்(Alexander Kluge) , ரெய்ட்ஸ்(Edgar Reitz) . நான்  இரண்டாவது அலையைச் சேர்ந்தவன்  பாஸ்பைன்டரும்  விம் வென்டர்ஸும் பிறகு   வந்த மூன்றாவது அலையைச் சேர்ந்தவர்கள். எங்களுக்குப் பின் சிறந்த திரைப்படங்களுடன் வந்த இயக்குநர்கள்  திரைப்படத்துறையில் தொடரவில்லை; அதிகப் பணம் கிடைக்கும் தொலைக்காட்சிப் படைப்புகளை இயக்கச் சென்றுவிட்டனர்.
 

ஜெர்மனிய திரைத்துறையில் நிகழ்ந்துகொண்டிருந்த மாற்றங்கள் வெளிஉலகுக்கு எப்போது தெரிய வந்தன
மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்ததை  வெளியுலகு அறியவந்த  நேரம் புதிய ஜெர்மன் சினிமாநீர்த்துப்போன நிலையை அடைந்திருந்தது. இருந்தும் ஜெர்மனிய இயகுநர்களின் திரைப்படங்கள் சர்வதேச அளவில் திரையிடப்பட இது காரணமாயிற்று. போருக்குப் பின் ஜெமனியின் மீது உலகம் முழுவதும் நிலவிய வெறுப்பால்  ஜெர்மனிய திரைப்படங்களை பிற நாடுகளில் திரையிடுவது சிரமமானதாக ஆகிவிட்டிருந்தது. இரு முக்கிய பணிகள் இருந்தன. ஒன்று அழிந்த  நகரங்களை மீண்டும் உருவாக்குவது. இரண்டாவதுஜெர்மனியின் மீதான மதிப்பை  உலக மக்களிடம் மீட்டுப் பெறுவது. இரண்டும் இன்றுவரை போராட்டமாகவே இருந்துவருகிறது. போர் முடிந்து அரை நூற்றாண்டுக் காலம் ஆகிவிட்ட போதிலும் இன்னும் இந்த நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. 

இன்று  ஜெர்மனி அதன் சினிமாவுக்காக அறியப்படும் நாடு அல்ல எனபதை என்னல் சொல்ல முடியும். சினிமாவின் வளர்ச்சிக்கான தூரப் பார்வையோ, ஆர்வமோ சற்றும் இல்லாத ஒரு நிலை இன்று நிலவுகிறது. திரைப்படப் பள்ளிகளிலிருந்து வெளிவரும்  அநேக படைப்பாளிகள் ஒரு சில திரைப்படங்களுக்குப் பின் காணாமற் போய்விடுகின்றனர். படமெடுப்பவர்களும் ஹாலிவுட் பாணியில் படமெடுக்கவே முயலு கின்றனர். 

புதிய அலையின் உச்ச கட்டமான 1970களில் கூட ஜெர்மனிய படைப்பாளிகள்  தங்கள் திரைப்படங்களை சர்வதேச அளவில் வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை. நான் எல்லைக்கு வெளியே எனது படைப்புகளைக் கொண்டு சென்றேன். லண்டன் பார்வையாளர்களாலும், பெருவின்(Peru) இந்தியப் பழங்குடிப் பார்வையாளர்களாலும் Aguirre: The Wrath of God (1972), The Enigma of Kaspar Hauser (1974) போன்ற திரைப்படங்கள் ரசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது  மிகுந்த மன நிறைவைத் தந்தது. 
1970களில் வெளிநாடுகளில் படமெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் பிற ஜெர்மனிய இயக்குநர்களுடன் உங்களுக்குத்  தொடர்பு இருந்ததா?   
பிற ஜெர்மனிய இயக்குநர்களுடன் அந்நேரத்தில் ஒப்பிடும்போது அந்நியனாகவே என்னை உணர நேர்ந்தது. பாஸ்பைன்டரை சந்திப்பது உண்டு. அன்பான மனிதர்; நல்ல நண்பர். பாஸ்பைன்டர் வருடத்திற்கு இரண்டு, மூன்று என மிக விரைவாகப் படைப்புகளை அளித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களில் ஐந்து!   இந்த அளவு அவசரம் தேவையில்லை என்பது எனது கருத்து. அவர் படைப்புத் திறன் மீதான நம்பிக்கை குறையும் நேரம் திடீரென ஒரு அற்புதமான படைப்பைக் கொடுத்துவிடுவார்.  விம் வெண்டர்ஸ் என்னைப்பற்றி அக்கறை கொண்ட  நெருங்கிய நண்பர். இவரும் என்னைப் போலத் திரைப்படக் கலையை தனக்கான வழியில் எடுத்துச் சென்றுகொண்டிருப்பவர். 
 
1970 இல் ஜெர்மனிய திரைப்படத்துறையை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்ததில் தொலைக்காட்சித் துறை பெரும் பங்கு வகித்துள்ளதல்லவா?
திரைப்பட தொலைக்காட்சி ஒப்பந்தம் (Film/Television Agreement) இணை தயாரிப்புகளுக்கு வழிவகுத்தது. இதனால் அரங்கங்களில் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் திரைப்படங்கள்  தொலைக்காட்சி நிலையங்களால் ஒளிபரப்பப்பட்டன. நான் Aguirre: The Wrath of God  திரைப்படத்தை எடுத்து முடித்தபோது  கையில் பணம் இல்லாத நிலையில்  தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உரிமையை   விற்க வேண்டியதாயிற்று. அதனால் Aguirre இன் முதல் காட்சி திரையரங்கங்களில் திரையிடப்பட்ட அதே நேரத்தில் தொலைக்காட்சியிலும்  ஒளிபரப்பப்பட்டது. பின்னர் வெளிவந்த என் படைப்புகளின் ஒளிபரப்புக்கு இரண்டு வருடங்கள் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண் டேன்.
உங்கள் திரைப்படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒளிபரப்பிற்காக ஒரு திரைப்படத்தை ஐம்பத்து ஒன்பது நிமிடம் முப்பது நொடிகளுக்குக்  குறைப்பது  போதுமானதல்ல என நான் கருதியிருப்பேனானால் திரைப்படத்தை தொலைக்காட்சிக்காக மாற்றி அமைப்பதைத் தவிர்த்திருந்திருப்பேன். எண்பது நிமிடங்கள் ஓடும் Little Dieter Needs to Fly (1998) ஆவணப் படத்தை தொலைக்காட்சிக்காக சரியாக நாற்பத்து நான்கு நிமிடங்கள் முப்பது நொடிகளாகச் சுருக்கி அளிக்கவேண்டியதிருந்தது. அதன் பெயரையும்  Escape from Laos என மாற்றிவிட்டேன். ஒரு மணி நேரம் ஓடும் The Great Ecstasy of Woodcarver Steiner  (1974) படத்தை ஜெர்மனியில் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பவேண்டுமென விரும்பினேன். அதை அறிமுகம் செய்ய ஐம்பது நொடிகள் தேவைப்பட்டதால் நாற்பத்து நான்கு நிமிடம் பத்து நொடிகளுக்கு  சுருக்கி அளிக்கவேண்டியதிருந்தது. இதனால் திரைப்படக் கலை மீதான எனது மதிப்பை எவ்வித்திலும் சமரசப்படுத்திகொண்டதாக நான் கருதவில்லை, திரைப்படத்தை உருவாக்குவது செயல் நுட்பத்தைச் சார்ந்தது எனக் கருதுபவனாததால்  எனது படைப்புகள்   பார்வையாளரை எவ்வாறு சென்றடையவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறேன்.
துரதிர்ஷ்டவசமாக சமீபகலமாக நிலை மாறிவிட்டிருக்கிறது. தர மதிப்பீட்டு  எண்கள்(rating figures) தொலைக்காட்சி நிறுவனங்களின் கடவுள்களாகிவிட்டன. உலகமுழுவதும் ஊடகங்கள் இந்த எண்களைக் கொண்டே மதிப்பிடப்டபடுகின்றன.
 

உங்களுக்கும் ஜெர்மனிய விமரிசகர்களுக்குமிடையே எப்போதும் கருத்து வேற்றுமை நிலவுகிறதே.  இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் வெற்றி பெறும் உங்கள் படைப்புகள் ஜெர்மனியில் ஏன் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை?
இங்கிலாந்து பிரான்ஸோடு அல்ஜீரியா, ரஷ்யா, அர்ஜெண்ட்டீனா ஆகிய நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம் ஜெர்மனியில்  திரைப்படத்தை விட தொலைக்காட்சியை அதிக மக்கள் பார்க்கின்றனர். ஜெர்மனியர்கள் என்றுமே தங்கள் கவிகளை மதித்ததில்லை. இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் வழக்கம். இறந்து பல ஆண்டுகள் கழிந்தபின் ஏற்றுக்கொள்ளுவார்கள். எனது படைப்புகளுக்கும் இந்த நிலைதான் எனக் கருதுகிறேன். அயர்லாந்தில் ஒரு தங்கும் விடுதியில் என் தொழில் பற்றிக் கேட்டபோது இயக்குநர் என்று சொல்லாமல்  கவிஞன் என்று சொன்னேன். அன்பாக வரவேற்று,  பாதி வாடகைக்குத் தங்குமிடம் தந்தார்கள். ஜெர்மனியில் இவ்வாறு சொல்லியிருந்தால் கதவை இழுத்து முகத்தில் மூடியிருப்பார்கள்.
Aguirre: The Wrath of God படத்திற்கான செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தபோது ஜெர்மனியர் பக்கமிருந்து தொடர்ந்து சிரிப்பொலிகள் எழுந்தவண்ணமிருந்தன. ஜெர்மனிய பார்வையாளர்களின் இந்த தன்னம்பிக்கையற்ற நிலைக்குக் கடந்த நூறு வருடங்களில் பேரழிவுகளையும், பெரும் உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய  இரு உலகப் போர்களுக்கு ஜெர்மனி காரணம் என்ற குற்ற உணர்வை அடிப்படையாகச்  சொல்லலாம். போருக்குப் பின் ஜெர்மனியர்களை இந்த உணர்வு எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கச் செய்துவருகிறது. யாராவது தமது கலைப்படைப்பை ஜெர்மனியை விட்டு வெளியுலகுக்கு எடுத்துச் செல்ல முயலும் போது அனைவரும் அதை சந்தேக்க் கண்களுடன் காண்பது வழக்கமாகிவிட்டது. 
உங்களின்  முதல் திரைப்படம் Signs of Life, எழுத்தாளர் அச்சிம் வான் ஆர்னிமுடைய சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இவருடைய எழுத்துக்கள் உங்களை  எந்த விதத்தில் பாதித்திருந்தன?
ஆர்னிமின் அந்தக் கதையில் வயதான, ஊனமுற்ற  ஒரு கர்னல், குளிருக்காக மூட்டப்பட்ட தீயில் மரத்திலான தனது செயற்கைக் கால்  எரிந்து கொண்டிருப்பதுகூடத் தெரியாமல் தன்னை மறந்து கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கதையின் இப்பகுதி  திரைக்கதையை எழுதத் தூண்டியது எனலாம். மற்றபடி பதினைந்தாவது வயதில் நான் மேற்கொண்ட கிரீஸ் பயணம்  இக்கதைக்கு வலுவான அடிபடையாக அமைந்தது. பல வருடங்களுக்கு முன் கிரீஸில் எனது பாட்டனார் சென்றிருந்த பாதையில் பயணத்தை மேற்கொண்டிருந்தேன். இளம் வயதிலேயே பல்கலைக் கழக செவ்வியல் துறைக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த அவர் அதைத் துறந்துவிட்டு, கிரீட் தீவில்  முக்கியமான அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார். 

கிரீட் தீவின் மலைகளில் அலைந்துகொண்டிருந்த போது ஒரு பள்ளத்தாக்கில் மனதைக் கிறுகிறுக்க வைக்கும் காட்சி ஒன்றைக் கண்டேன். பத்தாயிரம் காற்றாடி ஆலைகள் – மலர்களுக்கு மதம் பிடித்துக்கொண்டது போல்-  சுற்றிக்கொண்டிருந்தன. என்னைக் கிள்ளிப் பர்த்துக்கொண்டேன். நிஜம் தான். பரவசமளிக்கும் விசித்திரமான அந்தக் காட்சியை என்றாவது ஒரு நாள்  திரைப்படத்தில் கொண்டுவரவேண்டும் என  நினைத்துக் கொண்டேன். Signs of Life திரைப்படத்தின் மையப் பகுதியாக இந்தக் காட்சி அமைந்தது. இந்தக் காற்றாலைகளை அன்று  காணாதிருந்தால் பரவசமளிக்கும் இந்த நிலப்பரப்பை வான் அமிம் கதையுடன் இணைத்திருந்திருக்க முடியாது. 
Signs of Life இல் கிரீட் தீவின் அற்புதமான நிலப்பரப்புகளைக் காணலாம். எழுத்துக்கள் காண்பிக்கப்ப்டும் முதல் காட்சியில் மலைப் பள்ளத்தாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகநேரம் ஒரே காட்சியாகக்  காண்பிக்கப்படுகிறது; அந்த மலையின் நிலப்பரப்புகளுக்குள் பள்ளத்தாக்கின் வழியே நீங்கள் ஏறிச்செல்வதற்கும், அந்த மலையின் அற்புதப் பரப்புகள் உங்களுள் வந்து சேருவதற்கும் தேவையான  நேரம் கொடுக்கப்படுகிறது. நாம் கண்டுகொண்டிருப்பது  வெறும் மலைப்பரப்புகளாக மட்டுமல்லாது, நம்முள்ளிருக்கும்  மனப்பரப்புகளாகவும் ஆகின்றன. 
இந்தத் திரைப்படத்தை இரண்டாவது உலகப் போர் நேரத்தில் நிகழ்வதாக ஏன் காட்டியிருக்கிறீர்கள் ?
கிரீஸை நாஜிகள் ஆக்கிரமித்திருந்தது அடிப்படையான ஒரு விஷயம் மட்டுமே. சரித்திரக் கதையாக சிலர் இதை எடுத்துக்கொள்ளலாம்.  சரித்திரத்தைச் சொல்ல நான் முடிவு செய்திருந்தால் கையில் ஒரு மைக்குடன் ஒலிபெருக்கி வழியாக இதைப்பற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றியிருக்க முடியும். இப்படத்தைப் பொறுத்தவரையில்  சரித்திர உண்மைகள் என்னை ஈர்க்கவில்லை.  கதையில் இரண்டாம் உலகப்போர் பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை.
இக்கதையை பண்டிதத்தனமாக சரித்திர உண்மைகளைக் கொண்டு அணுகும்போது உண்மைக்குப் புறம்பானவற்றைக் காணவேண்டி வரும். இப்படத்தில் காண்பிக்கப்படுவது வெறுங்கால்களுடன், சட்டை அணியாத, காப்டனுக்கு சல்யூட் செய்யாத படைவீரர்கள். ஹிட்லரின் ரணுவத்திற்கும் இவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 1950ஆவது வருட வாகனம்  ஒன்று படத்தில் பயன்படுத்தப்படுகிறது.  இத்திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ, குறிப்பிட்ட போரையோ பற்றியதல்ல. இக்கதை  இரண்டம் உலகப்போரின் வன்முறைகளையும். அபத்தங்களையும் இதுவரை அளிக்கப்படாத மற்றொரு கோணத்தில் சொல்கிறது. போரின் அழிவுக்கான  ஆயுதங்கள் மனிதரின் கையில் கிடைக்கும் போது என்ன நேருகிறது என்பதைச் சொல்கிறது. போரின் அபத்த நிலை, ஆக்கிரமிக்கும் ரணுவத்திற்கும் அங்கு வாழ்பவர்களுக்கும் இடையே உருவாகும்  இருத்தலியல் பிரச்சினைகளைக் கொண்டு முன்வைக்கப் படுகிறது.
படப்பிடிப்பு எளிதாக நடந்து முடிந்த்தா?
நான் எப்போதும் சிக்கலான   பிரச்சினைகளை ஈர்ப்பவன் என்பது இந்த  படத்திலிருந்து தொடர்ந்த எனது  படைப்புகள் அனைத்திலும் நிரூபணமானது.  Signs of Life படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று அனைத்தும் தயாரக இருந்த நிலையில் படப்பிடிப்புக்கு மூன்று வரங்களுக்கு முன் கிரீஸ் நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது.  ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. விமான நிலையங்கள் மூடப்பட்டன. ரயில்கள் எல்லைகளோடு நிறுத்தப்பட்டன. காரில் வழியில் எங்கும் நிறுத்தாமல் ஏதென்ஸ் வந்து சேர்ந்தேன்.  படப்பிடிப்புக்கான லைசன்ஸ் ரத்துசெய்யப்பட்டிருந்தது. எப்படியோ சமாளித்து துவங்கிய படப்பிடிப்பில் கதாநாயக நடிகருக்கு குதிகாலில் அடிபட்டு ஆறு மாதங்கள் நடிக்க முயாமற் போயிற்று. அதற்குப் பிறகு இடுப்பிற்கு மேல் மட்டுமே அவரை காமெராவில் காட்ட முடிந்தது.  வாணவேடிக்கை காட்சி எடுப்பதற்கு கைது செய்யும் அளவுக்குத் தடை இருந்தது. எந்தப் படப்பிடிப்பிலும் ஒரு இயக்குநர்  தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத பல பிரச்சினைகளைக் கட்டாயம்  சந்திக்க வேண்டி வரும்.  திரைப்படமெடுப்பதில் பிரச்சினைகள் என்பவை இயற்கையாகவே இணைந்திருப்பவை என்பதை உணர்ந்தேன். இந்த்த் திரைப்படம் எனக்கு  நல்ல பாடமாக அமைந்தது.
Last Words குறும்படம் எவ்வாறு உருவானது ?
 Signs of Life  எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் உருவான குறும் படம் Last Words. இரண்டு நாட்களில் எடுத்து ஒரே நாளில் எடிட் செய்து முடிதேன். திரைப்பட உருவாக்கத்தில் புதிய முறைகளைப் பரிசோதித்துப்பார்க்கும் முயற்சியில் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பியதன் விளைவு இந்தக் குறும் படம். முழுக்க அறிமுகமற்ற புதிய எல்லைகளுக்குள் துணிவுடன் செல்லும் வாய்ப்பை உருவாக்கிய படம்.
தொழு நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு  ஒரு தீவிலிருக்கின்றனர்.  அவர்களை காவலர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும்போது மன நிலை பிழன்ற ஒருவர் அங்கிருந்து வெளியேற  மறுக்கிறார்.  காவல் துறை வலுக்கட்டாயமாக அவரை  வெளியே கொண்டுவருகிறது. அவர் பேசுவதில்லை. இரவுகளில் தனது இசைக்கருவியை மீட்டிக்கொண்டிருக்கிறார். வழக்கமான முறையில் இந்தக் கதை சொல்லப்படுவதில்லை. இன்றும் புதிய முறைகளில் கதையை எடுத்துச் செல்வதற்கும், கதை சொல்லும் விதிகளை  மீறுவதற்கும் தேவையான  மன உறுதியையும், துணிச்சலையும்  ஊக்கத்தையும் இந்தக் குறும்படம் எனக்கு  அளித்து வருகிறது.
உங்களின் முதல் வண்னப்படம் Precaution Against Fanatics  விசித்திரமான சிரிப்புப் படம்.  அதைப்பற்றி சொல்லுங்கள்.
Last Words போன்று கதை சொல்லலில் இது ஒரு துணிவான முயற்சி. விசித்திரமான சிரிப்புப் படம், ஆனல் ஜெர்மன் மொழி தெரியாதவர்களால் இத்தன்மையை உடனே உணர முடியாது. என்னை சிரிப்பில்லாத முகத்தைக் கொண்டவன் என ஒரு பத்திரிகை விவரித்தது. என் திரைப்படங்களில் சிரிப்பை ஓரளவு எதிர்பார்க்கலாம். ம்யூனிக்கில் குதிரைப்பந்தயம் நடக்குமிடத்திற்குச் சென்றபோது அதைப்பற்றி திரைப்படம் எடுக்க முடிவு செய்தேன். கொடாக் பிலிம் நிறுவனத்திடம் கழித்துவைக்கப்பட்டிருந்த உபயோகமற்ற வண்ண பிலிம் சுருள்களைக் கொடுக்குமாறு  கேட்டுக்கொண்டேன். உபயோகமற்றது எனத் தெரிந்து  இந்த சுருள்களை நான் பெற்றுக் கொள்வதாகவும்; பின்விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பில்லை எனவும்  எழுதிக்கொடுத்தபின் இந்த பிலிம் சுருள்கள் எனக்குக் கிடைத்தன. துணிந்து இச்சுருள்களைப் பயன்படுத்திப் படமெடுத்தேன். எந்தப் பிரச்சினையும் எழவில்லை.

இந்த நேரம் ஆப்பிரிக்கா சென்று, Fata Morgana, Even Dwarfs Started Small,  Flying Doctors of East Africa ஆகிய  மூன்று வித்தியாசமான திரைப்டங்களை உருவாக்கியுள்ளீர்கள்.   
Flying Doctors of East Africa ஆப்பிரிக்காவில்  தான்சனீயாவிலும் கென்யாவிலும் படமாக்கப்பட்டது. அந்த மருத்துவர்களுடன் பணிபுரிந்தவர்கள்  கேட்டுக்கொண்டதால் படமாக்கினேன். இது  ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பது போன்ற முறையில் உருவான படம். கண் நோய் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் குருடர்களாக ஆகிக்கொண்டிருந்த நேரத்தில்  மருத்துவர்கள் அதற்கான மருந்துகளை மக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர்.  எனக்குப் பிடித்த முறையில் உருவாக்கியிருந்த போதும் என் முக்கிய படைப்புகளில் ஒன்றாக இதைக்  கருதுவதில்லை.
 
Even Dwarfs Started Smallக்கு முன்பே எடுக்கப்ட்ட Fata Morgana சில வருடங்கள் கழித்து வெளியிடப்பட்டது ஏன்?
Fata Morgana முப்பது வருடங்கள் கழிந்தபின், இன்றைய தேதியிலும் அதே உயிர்த்துடிப்புடன் பார்வையாளரைப் பாதிக்கும் படைப்பு. பர்வையாளர்களுக்குக் காட்டுவதைத் தள்ளிப்போடலாம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. உடனே வெளியிடவில்லை இரண்டுவருடங்கள் கடந்தபின்,என்னிடமிருந்து இப்படப் பிரதியை இரவல் வாங்கிய இரு  நண்பர்கள் அதைக் கான் திரைப்பட விழாக்குழுவிடம்   அளித்துவிட்டனர். கானில் திரையிடப்பட்டவுடன் அப்போதைய இளம் தலைமுறையினரிடம் மிகவும் பிரபலமாகியது. முதல் சைக்கிடெலிக் அநுபவக் கலைப்  படமாக – அவ்வாறான படைப்பாக இல்லவிடினும் – எடுத்துக்கொள்ளப்பட்டது.
Fata Morgana படத்திற்கான திரைக்கதையுடன் ஆப்பிரிக்கா சென்றிருந்தீர்களா அல்லது அங்கு காண்பவற்றை ஆவணமாகப் பதிவு செய்ய நினைத்திருந்தீர்களா?
Fata Morgana அதிக சிரமங்களுடன் உருவாக்கப்பட்ட படம். ஆப்பிரிக்காவில் மிக எச்சரிக்கையுடன் படமெடுக்க முயன்ற போதும் பல சிக்கல்களும் பிரச்சினைகளும் உருவாகின. எனது ஆப்பிரிக்க அனுபவங்களை நினைத்துப் பார்க்கும்போது  எப்போதுமே அடிவயற்றில் பயத்தைக் கிளறுபவையாகவே இருக்கின்றன. யானை சுடும் துப்பாக்கியோடு ஆப்பிரிக்க பணியாட்கள் சாமரம் வீச மிருகங்களை வேட்டையாடச் சென்ற எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிளிமஞ்சாரோ அனுபவங்களைப்  பெறும் ஆசையோடு நான் ஆப்பிரிக்கா செல்லவில்லை. தெற்கு சஹாரா பாலைவனத்தில் ஒரு அறிவுப் புனைவுத் திரைப்படத்தை உருவாக்குவது எனது திட்டம்.  முதல் நாள் படப்பிடிப்பின் போதே அத்திட்டத்தைக் கைவிட்டேன். நான் கண்ட பாலைவன நிலப்பகுதிக் காட்சிகள் என் மனதை மாற்றிவிட்டன. கதையைப் புறந்தள்ளிவிட்டு அப்பகுதியில்  காணக்கிடைத்த அற்புதமான கானல்  காட்சிகளை (Mirages) படமெடுக்கத் தொடங்கினேன். பதினெட்டு மாதக் குழந்தை உலகை முதல் முதலாக அறியத் தொடங்குவது போன்ற அனுபவம்.  
Fata Morgana என்பதற்குக் கானல் என்று அர்த்தம். முதற்பகுதியில்  எட்டு வெவ்வேறு காட்சிகளில் எட்டு விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  தரையிறங்கிக் கொண்டிருக்கின்றன.  நேரம் ஆக ஆக நாளின் வெப்பம் கூட, இறங்கும் விமானங்களின் பிம்பங்கள் அதிர்வாக, தெளிவில்லாது  தெரியத் தொடங்குகின்றன. உடலில் காய்ச்சல் அதிகரிக்கும் போது பாதிக்கப்படும் பார்வை கொண்டு காண்பதைப்போன்ற ஒரு நிலை. பாலைவனத்தில் கானலை அழகாகப் படம்பிடிக்கலாம். கானல் நிஜப் பொருளின் பிரதிபலிப்பு: கண்களால் காணலாம் ஆனால் தொட முடியாது, நிஜத்தில் அது அங்கிருக்காது. 
தொலைவில் அடிவானத்தில்  பஸ்  நீரில் மிதந்து செல்வது போலவும், மக்கள் தரைக்கு மேல் வழுக்கிச் சென்று கொண்டிருப்பது போலவும் கன்களுக்குத் தெரியும். பஸ்ஸைப் படமெடுத்தபின் அதைப் பார்ப்பதற்கு அருகில் சென்றால் அங்கு ஒன்றுமில்லை- தரையில் அதன் சக்கரத் தடங்கள் இல்லை! பல நூறு மைல்களுக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கும் ஒரு பஸ் அதீத வெப்பத்தின் காரணத்தால் நம் கன்களுக்கு அவ்வாறு  கானலாகத் தோன்றியிருக்கிறது. தாங்க முடியத அளவு வெப்பம். எப்போதும் தாகமுடன் இருந்தோம்.
 

ஒரு சிறிய குழுவுடன் கையில் பணமும் அதிகம் இல்லாமல் சஹாரா பாலைவனத்தின் நடுப்பகுதியில் எப்படி படமெடுக்க முடிந்தது?
ஆப்பிரிக்காவிற்கு வரும் வழியில் இரவில் எங்கள் இரண்டு கார்களிலேயே படுத்துறங்கினோம். ஹோட்டலில் தங்கவில்லை. பாலைனத்தில் படச்சுருள் எமல்ஷன் (Emulsion)  வெப்பத்தில் இளகிவிடும். அடிக்கடி அடிக்கும் மணற் காற்றில் காமெராக்களுள் மணல் புகுந்துவிடும். நகரும் காட்சிகளுக்கு (tracking shots)  காமெராவை எங்கள் வோல்க்ஸ்வாகென் வான் மீது வைத்து, நான் மெதுவாக ஓட்ட, ஓளிப்பதிவாளர் மேலிருந்து படமெடுப்பார். படத்தில் காட்டப்படும் உடைந்து கிடக்கும் இயந்திரப் பகுதிகள் அங்கிருந்த  பாழடைந்த  அல்ஜீரிய ராணுவ டெப்போ ஒன்றிலிருந்தவை.
தான்சனீயாவிலும் கென்யாவிலும் இப்படத்தின் பகுதிகளை எனது ஒளிப்பதிவாளர்  தாமஸ் மாக் (Thomas Mauch) கொண்டு படமாக்கினேன். தொடர்ந்து   உகாண்டாவில் படப்பிடிப்பு. நாங்கள் படமெடுத்த பகுதியை காவல்துறையினர்  பார்க்க முயன்ற போது வரப்போகும் ஆபத்தை உணர்ந்து அங்கிருந்து அவசரமாக ஜெர்மனிக்குத் திரும்பினோம். மீண்டும் படமெடுக்க இரு  வாகனங்களில்  சஹாரவை பலமுறை கடந்திருந்த நண்பரும், மற்றொரு நண்பரும், நானும், ஒளிப்பதிவாளருமாக  நால்வர் சஹாரா பாலைவனத்திற்குப்  பயணத்தைத் தொடங்கினோம். துவக்கத்திலேயே ஒளிப்பதிவாளரின் கை அடிபட்டு விரல் பதிமூன்று இடங்களில் நொறுங்கிவிட்டது,
 

பரந்த உப்புப் பரப்பில் (salt flats) முதலிலும், தொடர்ந்து  அல்ஜீரியப் பாலைவனப் பகுதியின் நடுவிலிருக்கும் ஹாகர் மலைப்பகுதியிலும் படமெடுத்துவிட்டு நைஜர் குடியரசின் மேற்குப் பகுதிக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். தெற்கு சஹாராவை அடைந்த போது மழைக்காலம் ஆரம்பித்தது. எங்கும் சேறும், சகதியும் மணலுமாக அபாயகரமான சூழ்நிலை. ஆனால் வெப்பம் அதிகரிக்கும் இந்த நேரங்களில் கானல் படிமங்களைப் (mirages)  படமெடுப்பது எளிது.   தொடர்ந்து ஐவரி கோஸ்ட்டில் படமெடுத்துவிட்டு உகாண்டா செல்லத் திட்டம். அங்கு உள்நாட்டுப்போர் நிகழ்ந்து கொண்டிருந்ததால் காங்கோ செல்லத் திட்டமிட்டு காமெரூன் வரை படகில் சென்றோம்.
காமெரூனில் நிலமை கட்டுக்கடங்காமற் போய்விட்டது. நால்வரும் கைது செய்யப்பட்டோம். ஒளிப்பதிவாளர் பெயர் அவர்கள் தேடிக்கொண்டிருந்த ஜெர்மன் போராளியின் பெயரை ஒத்திருந்தது இதற்குக் காரணம். அறுபது கைதிகள் இருந்த சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஒளிப்பதிவாளரையும் என்னையும் மலேரியா நோய் தாக்கியது.ஒருவழியாக விடுதலையாகி வெளியே வந்து பயணத்தைத் துவங்கியபின்னும்,  நாடு முழுக்க விநியோகப்பட்டிருந்த கைது வாரண்ட் ரத்துசெய்யப்படாதிருந்ததால் மீண்டும் மீண்டும் கைதாகிக்கொண்டிருந்தோம். இந்த நேரமெல்லாம் படப்பிடிப்பும் தொடர்ந்தது. இறுதியில் விமானம் மூலம் ஜெர்மனிக்குத் திரும்பினோம். இரண்டு மாதங்கள் கழித்து Even Dwarfs Started Small  படப்பிடிப்புக்காக கானரி ஐலண்ட்ஸ் சென்றபோது இப்படத்தின் இறுதிக்காட்சிகளை எடுத்து முடித்தோம்.
 

பாலைவனம் அதற்கான ஜீவனையும், மாயங்களையும், அபத்தங்களையும்  கொண்டிருந்தது. எங்கும் அளவுக்கு அதிகமான  அமைதி; தனிமையை ஆழமாக உணரச்செய்யும் அமைதி. காரில் பயனம் செய்தபோதிலும் அப்பரந்த மணற்பரப்பில் கால்களால் நடந்து செல்வது போன்ற உணர்வே மேலோங்கியிருந்தது. பாலைவனத்தில் கழித்த நாட்களின் பாதிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. Fata Morgana திரைப்படத்தை உருவாக்கிய  அனுபவம், மிக மோசமான சூழ்நிலையின் நடுவிலிருக்கும் போதும் அச்சூழ்நிலையை சிறந்த முறையில்  பயன் படுத்தும் கலையைக் கற்றுத்தந்தது.
Fata Morgana என் மனதில் எப்போதும் இருக்கும் படைப்பு. இப்படத்தின் பின்னணியில் ஒலிக்கும் பேச்சுக்கு (voice over) இருவர் உதவினர். ஜெர்மனிய மொழியில் பேசுவது லோட்டெ ஏயிஸ்னர். ஆங்கில பேச்சை நான் பேசுவதற்கு  அழகாக அமைத்துக் கொடுத்தவர் அமோஸ் வோகெல் (Amos Vogel) நான் அதிகம் மதிக்கும்  அற்புதமான மனிதர். திரைப்பட அறிஞர். வியென்னாவில் வாழ்ந்த அவர் நாஜிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பித்துப்   புலம் பெயர்ந்து நியூயார்க்கில் குடியேறிவர். அவர் பெயரை என மகனுக்குச் சூட்டியிருக்கிறேன்.
Even Dwarfs Started Small   படத்திற்கு நடிகர்கள் எப்படிக் கிடைத்தார்கள்? வழியில் சந்தித்தீர்களா?
ஜெர்மனியக் கலாச்சாரதில் குள்ளர்களுக்கும், சிறிய உருவம் கொண்டவர்களுக்கும் முக்கிய இடம் உண்டு. தேவதைக்கதைகள், பாரம்பரியக் கதைகள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களாக இவர்களைக் காணலாம்.   இவர்களின் பார்வையில் கதை சொல்லப்டுகிறது. தற்போதைய  அசுரத்தனமான  சந்தைக் கலாச்சாரத்தின் முன் நாமும் இவர்களைப் போன்றவர்களாகத் தான் இருக்கிறோம்.
நடிப்பதற்கு ஆள் கிடைக்க ஒரு வருடம் ஆனது. குள்ளர் ஒருவரைக்  கண்டுபிடித்துவிட்டால் போதும். தொடர்ந்து அவர் நண்பர்களை எளிதாகச் சேர்த்துக்கொள்ள முடிந்தது. அவர்களைக் கலந்து ஆலோசித்தே ஒவ்வொரு கட்டமாகப் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் மனித உணர்வு அவ்ர்கள் மேல் மதிப்பு கலந்த மரியாதையை உருவாக்குகிறது.  படப்பிடிப்புக் குழுவினருடன் அனைவரும் நெருக்கமான நட்புடன் இருந்தனர். ஐந்து வாரங்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒலியையும் அப்போதே பதிவு செய்தோம். 
 

இப்படம் ஜெர்மனியில் தணிக்கைக்கு உள்ளானது என அறிகிறோம்.
ஜெர்மனிய அரசியல் நிர்ணய சட்டம் எவ்வகையான தணிக்கையையும்  அனுமதிப்பதில்லை. திரைப்படத் துறையினர் அவர்களாகவே ஏற்படுத்தியிருந்த விதி முறைகளைக்கொண்ட  சுய தணிக்கை முறை அமலிலிருந்தது. விதிகள் மீறப்பட்டால் தண்டனை கிடையாது ஆனால் திரையரங்குகள் அப்படங்களைத் திரையிடுவதில்லை. நான் தணிக்கைக்கு    அளித்தபோது  தடை செய்யப்பட்டது. பல காட்சிகள் பிரச்சினைக்குரியவைகளாகக் கருதப்பட்டன. திரையரங்கங்களை நானே ஏற்பாடு செய்து சில ஊர்களில் திரையிட்டபோது எதிர்ப்புகளும் , உயிருக்கு மிரட்டல்களும் எழுந்தன. வலது சாரி பாசிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டேன். மேல் முறையீடுகள் பல செய்தபின் வெட்டுகள் ஏதுமின்றி படம் திரைக்கு வந்தது. படத்தைப்பற்றி ஏராளமான வதந்திகள் உலவத் தொடங்கின. அவற்றை அடக்குவதற்கு பதிலுக்கு வேறு   வதந்திகளை நான் பரப்பவேண்டியதாயிற்று.
உங்களுக்கு எப்போதவது போர் அடித்திருகிறதா?
இல்லை . ஒருபோதும் இல்லை. ஜன்னல் வழியாகப் பல நாட்கள் வெறுமே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு மனைவி பயந்திருக்கிறாள். நான் இரவில் கனவு காண்பதில்லை. இரவில் கனவில்  காணமுடியாதவற்றைத் திரையில் காட்டுவதற்காக பிம்பங்களை உருவாக்குகிறேன். நான் தொடர்ந்து பகல் கனவு கண்டுகொண்டிருப்பவன். திரையில் நான் காண்பிக்கும் பிம்பங்கள் என்னுடையவை மட்டுமல்ல; அவை உங்களுடையவையும் ஆகும்.  
- தொடரும் -

 


Tuesday 22 May 2012

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக்

ஹெர்ஸாக் பற்றி
ஹெர்ஸாக்

பால் க்ரானின்

-தமிழில் : ஏஸ்.ஆனந்த் -

உலகத் திரையரங்கில் வெர்னர் ஹெர்ஸாக் எனும் பெயர் தனித்து நிற்பது. ஜெர்மனிய புதிய அலை படைப்பாளிகளில் ஒருவராக பதினேழு வயதில் திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய ஹெர்ஸாக், தற்கால இயக்குநர்களில் மிக முக்கியமானவராக மதிக்கப்படுபவர். நிறுவப்பட்ட திரையுலக விதி முறைகளை எப்போதும் மீறிக்கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி பற்றியும் அவரது படைப்பாக்க முறைகள் பற்றியும் சொல்லப்படும் விசித்திரமான கதைகள் ஏராளம்.
ஹெர்ஸாக் பிறந்தது 1942 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ம்யூனிக் (Munich) நகரில். ஜெர்மனியின் ஆஸ்திரிய எல்லையை ஒட்டியிருக்கும் மலைப்பகுதியிலுள்ள சச்ரங் கிராமத்தில் அவரின் குழந்தைப்பருவம் கழிந்தது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலம். கடுமையான சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை. சிறுவனாக, பதினான்கு வயதிலேயே நெடுந்தூர கால்நடை பயணங்களை மேற்கொண்டார். பதினேழு வயதில் திரைப்படங்களைத் தயாரிக்க தொடங்கினார். அதற்குத் தேவையான பணத்திற்காக உருக்குத் தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக இரவு நேரங்களில் பணிபுரிந்தார். பத்தொனபது வயதில் அவர் அளித்த முதல் படைப்பு Herakles. (1961).
வற்றாத கற்பனை வளத்துடனும் இளைஞனுக்குரிய உற்சாகத்துடனும் இன்றுவரை திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த எழுபது வயது படைப்பாளியின் கைவண்ணத்தில் இதுவரை அறுபத்து மூன்று படைப்புகள் - முழு நீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும் படங்கள் - உருவாகியுள்ளன. பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் இப்பகுதியில் தொடர்ந்து அளிக்கப்ப்டும்..
----------------------------------------------------------------------------------------------------------


ஒன்று

திரைப்படங்களை உருவாக்குவதுதான் உங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள்?
சுதந்திரமாக எண்ணத் துவங்கிய கணத்திலிருந்து திரைப்படங்களை உருவாக்கப் போகிறேன் என்பது நான் உளமாற உணர்ந்த ஒன்று. பதினான்கு வயதில் கால்நடையாக பயணம் செய்யத் துவங்கினேன். கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் சேர்ந்தேன். அந்த சில வாரங்களில் திரைப்படங்களை உருவாக்குவது பற்றிய என் முடிவு மேலும் வலுவுற்றது. இன்றுவரை நான் இதை ஒரு தொழிலாக எண்னியதில்லை.
உலகில் தொலைதூரங்களிலுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்து திரைப்படங்களை உருவாக்கியிருப்பவர் என அறியப்படும் நீங்கள் பயணம் செய்வதை எப்போது தொடங்கினீர்கள் ?
பள்ளிப்படிப்பு முடிவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்காக மான்செஸ்டரில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். சிதிலமடைந்த பழைய வீட்டை வாங்கி அதில் நானும் நான்கு வங்காளிகளும், மூன்று நைஜீரியர்களும் தங்கியிருந்தோம். எப்போதும் எலிகள் ஓடிக்கொண்டிருக்கும். புறக்கடை முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும். அங்கிருக்கும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். இறுதித் தேர்வுகள் முடிந்த உடன் ம்யூனிக்கிலிருந்து கிரீஸ் பயணம். டிரைவராக ஒரு ட்ரக்கை ஓட்டிக்கொண்டு ஏதென்ஸ் நகரை அடைந்தேன். அடுத்து கிரீட் (Crete) தீவுக்கு சென்று வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தபின் எகிப்திலிருக்கும் அலெக்ஸாந்திரியாவிற்கு படகில் பயணம்.
அலெக்ஸாந்திரியா வழியாக பெல்ஜிய காங்கோவை அடைவது நோக்கமாக இருந்தது. அப்போதுதான் விடுதலை பெற்றிருந்த காங்கோ முழுவதும் வன்முறையும் அராஜகமும் மிகுந்திருந்தது. நைல் நதி வழியாக சூடானுக்கு படகில் சென்றுகொண்டிருந்தேன். நல்லவேளையாக கிழக்கு காங்கோ எல்லையை அடையும் முன் உடல்நலம் குன்றியதால் எகிப்திலிருக்கும் அஸ்வானுக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அந்நேரம் காங்கோ சென்ற எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. அஸ்வான் அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம். ரஷ்யர்கள் அதன் கட்டிடப்பகுதியை பார்த்துக்கொள்ள, ஜெர்மனிய பொறியியலாளர்கள் மின்சார இணைப்புகளுக்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.

உடல் நிலை மிகவும் மோசமானது. அணை கட்டுவதற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொட்டடி ஒன்றில் என் நிலை அறியாது படுத்திருந்தேன். எலிகள் என்னைக் கடித்துவிட்டு நான் அணிந்திருந்த கம்பளி உடையை தங்கள் கூட்டிற்காக பிய்த்து எடுத்துச் சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் ஒரு ஜெர்மன் பொறியியலாளர் கண்களில் பட்டேன். ஒருவழியாக ஜெர்மனிக்கு திரும்பி வந்தேன். கன்னத்தில் எலி கடித்த காயம் ஆற பல நாட்கள் ஆயிற்று. இன்றும் அந்த வடு இருக்கிறது.
ஜெர்மனி திரும்பியபின் என் முதல் திரைப்படங்கள் சிலவற்றை எடுத்து முடித்தேன். அந்நேரம் நான் இலக்கியமும், சரித்திரமும் பயின்றுகொண்டிருந்த ம்யூனிக் பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது தலையைக் காட்டிவிட்டு வருவது வழக்கம்.
திரைப்படங்கள் எடுப்பது என்ற உங்கள் முடிவை பெற்றோர் எவ்வாறு எதிர்கொண்டனர்?
என் வாழ்க்கை நிகழ்வுகள் எதிலும் தந்தை பங்கு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு நான் திரைப்பட இயக்குநராக ஆவதில் விருப்பமில்லை. அதற்கான திறமையும், பலமும், வியாபார உத்திகளும் இல்லாதவனாக என்னைக் கருதினார். பதினான்கு வயதிலிருந்தே தயாரிப்பாளர்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும் திரைக்கதைகளை அனுப்பத் துவங்கியிருந்தேன்.
என் தாய் எனது முடிவுகளை சரியான பார்வைகொண்டு அணுகியவர். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். மேற்கு ஜெர்மனியின் அன்றைய பொருளாதார நிலை பற்றி எனக்கு தெளிவாக்கியவர் அவர்தான். அவ்வப்போது யாரிடமும் சொல்லாமல் எங்காவது சென்றுவிடுவேன். எங்கு சென்றிருக்கிறேன் என்று தெரியாவிட்டாலும் என் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்திருந்ததால் பொறுமையோடு எனக்காக காத்திருப்பார். நிமோனியா காய்ச்சலில் நான் படுத்திருப்பதாக விடுப்பு கேட்டு பள்ளிக்கு கடிதம் எழுதிவிடுவார். நான் பள்ளியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவன் அல்ல எனபதை அறிந்திருந்தார். பல முறைகள் நடந்தோ, ஏதாவது வாகனங்களில் இலவசமாகவோ வடக்கு ஜெர்மனிக்கு சென்றிருக்கிறேன். அங்கு காலியாக இருந்த ஆளற்ற வீடுகளில் எவருக்கும் தெரியாமல் தங்குவது எனக்கு கைவந்த கலை.
வேலை வாய்ப்பு அதிகாரி ஒருவரின் அறிவுரை பெயரில் என் தாய் புகைப்படங்களை டெவலப் செய்யும் இடத்தில் எனக்காக வேலைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு மட்டும் முடித்திருந்த எனக்கு, புகைப்படங்கள் தொடர்பான வேலையிலிருந்து அடுத்து திரைப்பட பிலிம் டெவலப் செய்யும் வேலை கிடைத்து அப்படியே திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைய முடிவது எளிது என அவருக்குச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு நேர் மாறாக எண்ணிக்கொண்டிருந்த என்னை அவரால் வற்புறுத்த முடியவில்லை.

1942 இல் பவேரியாவின் (Bavaria) மிகப் பெரிய நகரமான ம்யூனிக்கில் பிறந்தீர்கள். போர் முடிந்திருந்த நேரத்தில் அங்கு வாழ்ந்தது எப்படி இருந்தது?
நான் பிறந்து சில நாட்களில் நாங்கள் இருந்த இடம் குண்டுவீச்சால் சேதமடைந்தது. தெய்வாதீனமாக உயிர் தப்பினோம். ஜெர்மனியின் ஆஸ்திரிய எல்லையில் உள்ள மலைப்பகுதி கிராமம் சச்ரங்கிற்கு குடி பெயர்ந்தோம். ஜெர்மனியின் எஸ் எஸ் படையினர் தப்பி ஓடிக்கொண்டிருந்த நேரம். அமெரிக்க படையினர் வந்துகொண்டிருந்தனர். சிறுவர்களான என்னையும் என் சகோதரர்களையும் கொண்டு இங்கு கிடைக்காத பல பொருட்களை என் தாய் ஆஸ்திரியாவிலிருந்து கடத்தியிருக்கிறார். போர் முடிந்த அந்நேரம் கடத்தல் என்பது ஏறக்குறைய அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 
குழந்தையாக இருந்த நாட்களில் சினிமா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நாகரிகத்தை விட்டு எங்கோ தொலைவில் தனிமையில் வாழ்ந்ததைப் போன்ற நிலையில் சச்ரங் கிராமத்தில் வாழ்ந்தோம். இத்தனைக்கும் ம்யூனிக் ஒன்றரை மனி நேர கார் பயண நேரத்தில் தான் இருந்தது. வாழைப்பழத்தை நான் முதலில் கண்டது எனது பன்னிரண்டு வயதில்; தொலைபேசியில் முதலில் பேசியது பதினேழு வயதில். குழாய் தண்ணீர் வசதியோ தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தப்படும் கழிப்பறையோ கிடையாது. படுப்பதற்கு மெத்தைகள் கிடையது; பதிலாக காய்ந்த இலைகள் நிரப்பப்பட்ட துணிப்பைகள். காலைகளில் எழும்பொழுது மூடியிருக்கும் போர்வை மீது மெல்லிய அடுக்காக பனி உறைந்திருக்கும். ஆனால் அந்நேரம் வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பல விளையாட்டுகளை நாங்களே கற்பனையில் உருவாக்கிக்கொண்டோம். படையினர் விட்டுச் சென்ற துப்பாக்கிகளும் குண்டுகளும் எங்கள் சொத்தாகின. எங்களைச் சுற்றி ஒரு புது உலகை உருவாக்கிக் கொண்டோம்.
இன்று என்னைச் சுற்றியுள்ள பலவற்றிற்கு நான் இன்னும் சரியாக பழக்கமாகவில்லை. தொலைபேசி மணியடிப்பது திடீரென அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.   
போரின் போது மக்கள் வசிக்கும் இடங்களில் குண்டுகளால் கட்டிடங்கள் பாழானது வேதனையான விஷயம். ஆனால் சிறுவர்களுக்கு அந்த நேரம் மிகுந்த சுவராஸ்யமானதாகவே இருந்தது. உடைந்த கட்டிடங்களை தங்கள் உலகமாக சுவீகரித்துக் கொண்டு புதிய அனுபவங்கள் அளித்த கறபனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடுகளும், கட்டுப்படுத்துபவர்களும் முற்றிலுமாக இல்லாதிருந்த நேரம் அது.
உங்கள் முதல் நினைவுகள் பற்றிக் கூற முடியுமா ?
இரண்டு முக்கிய சம்பவங்கள் நினைவிலிருக்கின்றன. ஒரு இரவில் என் தாயார் என்னையும், சகோதரனையும் படுக்கையிலிருந்து எழுப்பி போர்வைகளைச் சுற்றி தூக்கிக்கொண்டு வீட்டின் பின் பக்கத்திலிருந்த சரிவான பகுதிக்கு கொண்டு சென்றார். வானம் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் இருந்தது. விமானக் குண்டுவீச்சில் பன்னிரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்த ஆஷ்ச்சூவை தாண்டி இருந்த ரோசென்ஹெம் நகரம் எரிந்துகொண்டிருந்ததைக் காண்பித்தார். அப்போதைய எனது உலகின் எல்லை அந்த இடம் வரைதான். ரோசென்ஹெம் வரை கூட நான் சென்றிருந்ததில்லை.
இரண்டாவது நினைவு, கடவுளை நேரில் கண்டது. சாந்தா க்ளாஸ்(Santa Claus) நாள் டிசம்பர் ஆறு அன்று. அந்த வருடத்தில் ஒவ்வொருவரும் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு அவ்ர் கையில் எடுத்துவரும் நாள். எனக்கு மூன்று வயது இருக்கும். கதவு திறந்து திடீரென ஒரு உருவம் உள்ளே வர, பயந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டேன். என்னை அந்த உருவம் கருணையோடு அன்பாக பார்த்த்தது. அப்போதே தெரியும் அது கடவுள் தான் என்று. மின்சார நிறுவனத்திலிருந்து வந்த ஊழியர் அது என்பது பிற்பாடு தெரிந்தது.
நான் ஐந்து அல்லது ஆறு வயதாக இருக்கும் போது நிகழ்ந்ததாக என் தாய் சொன்ன ஒரு சம்பவம் உண்டு. கடுமையாக பனி பெய்துகொண்டிருந்த காலம். உடல்நலமின்றி இருந்த என்னை அவசரமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பனி அதிகமானதால் ஆம்புலன்ஸ் வருவதற்கு வழியில்லை. ஒரு சறுக்கு ஸ்லெட்ஜ்ஜில் என்னை போர்வைகளைப் போர்த்தி வைத்து, ஆஷ்ச்சூவிலிருந்த மருத்துவனைக்கு அந்த பனியில் இழுத்துச் சென்று சேர்த்தார். மீண்டும் எட்டு நாட்கள் கழித்து கனமாக பனிமூடியிருந்த பாதையில் நடந்து வந்து என்னை மருத்துவமனையில் பார்த்தார். நான் எந்த பிரச்சினைகளும் இன்றி அங்கு இருந்தது பற்றி அவருக்கு மிகுந்த ஆச்சரியம். ஒரு போர்வையிலிருந்து பிரித்தெடுத்த நூல் ஒன்று அந்த எட்டுநாட்களும் எனக்குத் துணையாக, விளையாட்டுப் பொருளாக இருந்தது. அந்த நூலில் எனக்கான பல கதைகளும் பல அற்புதங்களும் இருந்தன.
நீங்கள் வாழ்ந்த பவேரியப் பகுதி அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் இருந்த்தது. அமெரிக்க படையினரைப் பார்த்த நினைவுகள் உண்டா?
அறுபத்து ஐந்து பேர்கள் இருந்தார்கள் சூயிங் கம் மென்றபடி ஜீப்புகளில் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு படைவீரரை என்னால் மறக்கவே முடியாது. கருப்பு வண்ண மனிதர்களை தேவதைக்கதைகளில்தான் படித்திருந்தேன். கம்பீரமான உடல்வாகுடன் ஆழமான குரலோடு பேசிய அந்த கறுப்பு படைவீரருடன் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு அவர் கொடுத்த சூயிங் கம்மை ஒரு வருடம் மீண்டும் மீண்டும் சவைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் எப்போதும் பசியுடனே இருந்தோம். ஒருமுறை ஒரு பசுவை கொன்று சமைத்துக்கொண்டிருந்த பணியாளர்களை கண்டேன்.
கண்டெடுத்த தானியங்கி துப்பாக்கி கொண்டு ஒரு காக்கையை சுட்டேன். சுடும்பொழுது ஏற்பட்ட அதன் உந்து விசையில் பின்னால் வீசப்பட்டேன். என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பதிலாக, அந்த துப்பாக்கியைக் கொண்டு சுடுவது எப்படி என்று கற்றுத் தந்தார். துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு ஒரு கனத்தமரத்தை மரத் துண்டுகள் சிதறிப்பறக்க, துளைத்துச் சென்றது. ‘துப்பாக்கியிலிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும். விளையட்டுத் துப்பாக்கியைக் கூட ஒருவர் முன்னும் உயர்தலாகாது‘ என்று என் தாய் அப்போது சொன்னதை இன்றுவரை நான் மறக்கவில்லை. விரலைக்கூட எவரையும் நோக்கி உயர்த்துவதில்லை.
சிறு வயதில் எவ்வாறு இருந்தீர்கள்?
சிறுவயதிலிருந்தே நான் ஒரு தனிமை விரும்பி. ஒரே அறையில் தான் அனைவரும் வசித்தோம். சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற நினைவு இன்றி மணிக்கணக்காக புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். மூத்த சகோதரன் டில்பெர்ட் படிப்பை விட்டுவிட்டு வியாபரத்தில் இறங்கி வெகு விரைவில் நல்ல நிலையை அடைந்தான். பதினாறு வயதில் குடும்பத்தைப் பர்த்துக்கொண்டவன் அவன் தான். இளைய சகோதரன் இசையில் வல்லவன். ஆசிய நாடுகளில் இந்தியா. பர்மா, நேபாளம் என சுற்றிக் கொண்டிருந்தான். Aguirre: The Wrath of God (1972) படமெடுக்கும்போது உதவி கேட்டிருந்தேன். படமெடுத்துக்கொண்டிருந்த பெரு (Peru) நாட்டிற்கு வந்து வேண்டிய உதவிகளைச் செய்தான். அன்றிலிருந்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை அவன் தான் கவனித்துக் கொள்கிறான்.
நீங்கள் முதலில் பார்த்த திரைப்படங்கள்?
பள்ளியில் கண்ட 16 எம் எம் படங்கள். பிறகு ஜோரோ, டர்ஜான், டக்டர் ஃபூ மன்ச்சூ, இன்னும் பல சாதாரண அமெரிக்க திரைப்படங்கள். இந்த திரைப்படஙகளை எடுக்கப் பயன் படுத்தப்பட்டிருந்த நுட்பங்கள் என்னை கவர்ந்தன. கதை சொல்லல். படத்தொகுப்பு போன்றவற்றைப் பற்றிய அறிமுகத்தை தந்தன.
அந்நேரம் உருவாகிக் கொண்டிருந்த நவீன (Avant-garde) திரைப் படைப்பு களைக் கண்டதுண்டா?
F.W. முர்னவ் போன்ற இயக்குநர்களின் எகஸ்பிரஷனிச திரைப்படங்களை பின்னர் தான் கண்டேன். என்னுடைய இருபதாவது வயதில் ஜெர்மனிக்கு வந்த ஒருவர் பல திரைப்பட சுருள்களை கொண்டுவந்திருந்தார். வித்தியாசமாக படமெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்த என்னை அவரிடமிருந்த ஸ்டான் பிராக்கேஜ் (Stan Brakhage) , கென்னத் ஆங்கர்(Kenneth Anger) போன்றோரின் படைப்புகள் கவர்ந்தன. துணிவுடன் புதிய பாதைகளில் படமெடுப்பவர்கள் என்று இவர்களைப் பற்றி ஒரு திரைப்பட இதழில் கட்டுரை எழுதினேன்.
நான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பவனில்லை. மாதம் ஒரு படம் அல்லது திரைப்பட விழாக்களில் ஒர மூச்சாக பல படங்கள் எனப் பார்ப்பது வழக்கம். பார்க்கும் ஒவ்வொரு படமும் மனதில் ஆழப் பதிந்துவிடும். வருடங்கள் கழிந்த பின்னும் பார்த்த திரைப்படம் வெளிப்படுத்திய அழகியலும், வலிகளும் என்னை விட்டு விலகியதில்லை. மோசமான திரைப்படங்கள்தான் திரைப்படத்தை எப்படி எடுக்கக் கூடாது என்பதை எனக்குக் கற்றுத் தந்தன. எனது முதல் திரைப்படம் நான் செய்த முதல் தவறு. அடுத்து எப்படி எனது திரைப்பட உருவாக்கத்தை சரியாகக் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்த்தியது இந்த முதல் படம் தான்.

சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மிகவும் குறைந்த வயதில் நிறுவியவர் நீங்கள். உங்கள் திரைப்படங்கள் அனைத்தும் ‘வெர்னர் ஹெர்ஸாக் புரொடக்‌ஷன்ஸ்’ ஆல் தயாரிக்கப்பட்டவை. தயாரிப்பில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
தயாரிப்பாளருக்கு நான் அனுப்பியிருந்த படைப்பைப் பற்றி நேரில் பேச அழைப்பு வந்தபோது எனக்கு வயது பதினேழு. என்னை ஒரு இயக்குநராக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறுவன் என்பதால் கேலியுடன் நிந்தனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டேன். அப்போதே எனது திரைப்படங்களை நானே தயரிக்கவேண்டும் என முடிவு செய்தேன். தாய் அவருடைய பணக்கார நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். ஒரு அனுபவமும் இல்லாத சிறுவனான நான் எப்படி திரைப்படம் எடுக்கமுடியும் என அவர் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரத்த குரலில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்த இரண்டாவது நாளில் ’வெர்னர் ஹெர்ஸாக் புரொடக்‌ஷன்ஸ்’ என்னால் தொடங்கப்பட்டது.
தயாரிப்புக்கு யாரும் கிடைக்காததால் நான் துவங்கிய நிறுவனம், இன்றுவரை எனது படங்களை நானே தயாரிக்க காரணமாய் இருக்க்கிறது Nosferatu திரைப்படம் எடுக்கும் வரை ம்யூனிக்கில் இருந்த ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் குடியிருப்புதான் எனது நிறுவன அலுவலகம், எனது குடியிருப்பு, எடிட்டிங் அறை அனைத்தும். எல்லா வேலைகளையும் நானே கவனித்துக்கொண்டேன். தயரிப்பாளராக இயங்க ஒரு தொலைபேசி, ஒரு கார், ஒரு டைப்ரைட்டர் மூன்றும் இருந்தால் போதும். மெதுவாக உலக அளவில் எனது திரைப்படங்கள் அறியப்படத் துவங்க, வேலைகள் அதிகமாகி தனியாக இயங்குவது என்பது சிரமமானதாக ஆனது.
20th Century Fox நிறுவனம் Nosferatu திரைப்படத்தின் சக தயாரிப்பாளராக இணைந்தது. ஒப்பந்தம் பற்றிப் பேச ஹாலிவுட்டுக்கு அழைத்தனர். அவர்களை ம்யூனிக் வரச் சொன்னேன். உறையவைக்கும் ம்யூனிக் குளிரில் வந்து இறங்கிய படக் கம்பெனி உயர் அதிகரிகள் நால்வரையும் விமான நிலையத்திலிருந்து ஹீட்டர் இல்லாத என் வோல்க்ஸ்வாகன் மினி பஸ்ஸில் அழைத்து வந்தேன். கதை வசனம் எழுத பட்ஜெட்டில் இரண்டு டாலர்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. கதை வசனம் எழுத எனக்குத் தேவைப்படும் 100 வெள்ளைத் தாள்களுக்கும் பென்சிலுக்கும் ஆகும் செலவு அவ்வளவுதான் எனபதை விளக்கினேன்.
துவக்கத்தில் தயரிப்புக்கான பணம் எங்கிருந்து கிடைத்த்து?.
பள்ளி இறுதி வருடங்களில் உருக்குத் தொழிற்சலையில் இரவில் வெல்டராகவும், கார்கள் நிறுத்துமிடங்களில் சிப்பந்தியாகவும் பணி புரிந்து பணம் ஈட்டினேன். திரைப்படம் எடுக்க விரும்புவோரிடம் நான் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அறிவுரை என்னவென்றால், அலுவலக வேலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் வலுவைப் பொறுத்து எந்த வேலை வேண்டுமானாலும் செய்து பணம் ஈட்டுங்கள். செக்ஸ் கிளப்பில் காப்பாளனாகவோ, மனநல விடுதி வார்டனகவோ வேலை செய்யுங்கள். கால்களைப் பயன்படுத்தி எங்கும் நடந்து செல்லுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். திரைப்படத்துடன் தொடர்பில்லாத வேறு கலை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வின் அடிமட்ட அனுபவங்கள்தான் திரைப்பட உருவாக்கத்திற்கான அடிப்படைகள்.
என்னுடைய திரைப்படங்களை 35 எம் எம் பிலிமில்தான் படமாக்க வேண்டும் என முடிவு செய்தேன். 16 எம் எம் பிலிம் பயன் படுத்தி உருவாக்கினால் செலவு மிகவும் குறையும். ஆனல் எனக்கு அதில் உடன்பாடில்லை. அந்நேரம் என்னைப்போலவே ஏழெட்டு இளைஞர்கள் படமெடுக்கத் துவங்கியிருந்தனர். முடிவில் ஒருவரும் தங்கள் இலக்கை அடையவில்லை. நான் ஒருவன் தான் படத்தை முடித்தவன். பணம் இருந்தால் மட்டும் போதாது. உள்ளார்ந்த ஈடுபாடும், தெளிவான திட்டமிடுதலும். இருந்தால் மட்டுமே ஒரு திரைப்படத்தை துவங்கவும் முடிக்கவும் முடியும். Fitzcarraldo திரைப்படத்தில் கப்பலை மலை மீது இழுத்துக் கடக்கவைத்தது பணம் அல்ல, நம்பிக்கை.
என் முதல் திரைப்படம் Heracles முட்டாள்த்தனமாக, சரியான இலக்கின்றி எடுக்கப்பட்ட படம். அது எனக்கு எடிட்டிங் போன்ற பல நுட்பங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருந்த படம் .
திரைப்படப் பள்ளிகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?
உலகம் முழுவதும் திரைப்படப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னுடைய படைப்புத்திறன் மீதான நம்பிக்கை மட்டுமே கடந்த நாற்பது வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கச் செய்துவந்திருக்கிறது. பள்ளியில் கற்பவற்றில் பெரும்பாலனவற்றை மறந்து விடுவோம். நாமாகக் கற்றுக்கொள்பவைதான் எப்போதும் நம்மோடு இருப்பவை.

திரைப்படம் எடுப்பது பாதுகாப்பற்ற தொழில். பணம், தொழில் நுட்பம், திட்டமிடுதல் அனைத்தும் சரியாக அமைய வேண்டும். கப்பலைக் கட்டலாம். 5000 எக்ஸ்ட்ராக்கள் கொண்ட ஒரு காட்சியை முக்கிய நடிகர்களுடன் திரைப்படமாக்க ஏற்பாடுகள் செய்யலாம். இறுதி நிமிடம், முக்கிய நடிகருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு அவர் படப்பிடிப்புக்கு வரமுடியது போகலாம். அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒரு சிறு விஷயம் சரியாக அமையாவிட்டால் மொத்த முயற்சியும் தோல்வியடைய நேரும். இத்தகைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பதை படமெடுப்பவருக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம். பிரச்சினைகளைப் பற்றி புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தொழிலில் இடமில்லை.

நான் திரைப்படப் பள்ளி துவங்குவதாக இருந்தால் அதன் நுழைவு விண்ணப்பம் பூர்திசெய்யும் தகுதி பெற நெடுந்தூர கால்நடைப்பயனம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். தூரம் என்றால் உதாரணத்திற்கு மாட்ரிட்டிலிருந்து கீவ் வரை உள்ள 5000 கிலோமீட்டர்கள். நடக்கும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களை எழுதவேண்டும். எழுதிய பக்கங்களைக் கொண்டு நீங்கள் உண்மையாகவே நடந்து அந்த தூரத்தைக் கடந்தவரா என்று என்னால் சொல்ல முடியும்.
நடந்து பயணம் செய்யும்போது பள்ளி அறையில் கற்பதை விட மிக அதிகம் கற்பீர்கள். இத்தகைய பயணம் ஐந்து வருடங்கள் திரைப்படப் பள்ளியில் கற்பதை விட அதிகம் கற்றுத்தரும். உங்கள் அனுபவம் வகுப்பறைக் கல்விக்கு முற்றிலும் எதிர்மறையானதாக இருக்கும். பள்ளியறை திரைப்படப் படிப்பு திரைப்படத்தை சாகடிப்பது; உணர்வுபூர்வ அணுகுதலுக்கு எதிரானது. என்னுடைய பள்ளி என்று ஒன்று இருந்தால் பல மொழிகளைக் கற்கச் செய்வேன். எதற்கும் அஞ்சாதிருக்க குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டு சாகசங்களைக் கற்கச் செய்வேன். திரைப்படமெடுக்க விரும்பும் இளைஞர்கள் மனதில் பிரமிப்பையும், கொழுந்துவிட்டெரியும் ஆசையையும், ஏற்படுத்துவது மட்டுமே அவர்கள் திரைப்படங்களை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும்.
முதல் படமான Herakles வெளிவரும்போது உங்களுக்குப் பத்தொன்பது வயது.
இளமையாக இருக்கும்போதே படமெடுக்கத் துவங்கிவிட்டேன். Herakles க்குப் பிறகு திரைக்கதைக்கான கார்ள் மேயர் பரிசை Sighns of Life க்காக பெற்றேன். பரிசுத்தொகை 10,000 டாய்ஷ் மார்க்குகள். எனது திறமையை நான் உணர்ந்துகொள்ள இந்தப் பரிசு உதவியது. அடுத்த படைப்புகளுக்கு எனக்கு உந்துதலாக இருந்தது. 35 எம் எம் மில் எடுத்த அடுத்த குறும்படங்கள் Game in the Sand, The Unprecedented Defence of the Fortress of Duetschkreuz இந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு எடுக்கப்பட்டவை.
திரைப்படங்களை எடுக்கும்பொழுது ஆபத்தான முறைகளைப் பின்பற்றுபர், அதிக ‘ரிஸ்க்’ எடுப்பவர், நடிப்பவர்களையும் ஆபத்தான படப்பிடிப்புகளில் ஈடுபடுத்துபவர் என்று சொல்லப்படுகிறதே?
ஆபத்தான வழிகளில் திரைப்படங்களை உருவாக்குபவனாக இருந்தால் இப்போது உங்கள் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய உயிரையோ, படத்தில் பணிபுரிவர் உயிரையோ முட்டாள்த்தனமாக ’ரிஸ்க்’ எடுத்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்படி நான் படங்களை உருவாக்கியதில்லை. ஏதாவது ‘ரிஸ்க்’ எடுக்கும் காட்சி எடுக்கப்பட வேண்டியதிருந்தால் முதலில் அதை என்னைப் பயன்படுத்தி பரிசோதித்து, ஆபத்தில்லை என அறிந்த பிறகே அம்முயற்சியை பிறர் மூலம் செயல் படுத்துவேன்.
Fitzcarraldo திரைப்படத்தை அமேசான் காடுகளில் எடுத்தபோது மிகுந்த காலதாமதமானதற்கு காரணம் ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்த ஆபத்தான சூழ்நிலைகளோ, படப்பிடிப்புக் குழுவினர் எதிர்கொண்ட பாதுகாப்பு பிரச்சினைகளோ அல்ல. இயற்கை பிரச்சினைகள் படப்பிடிப்பைத் தொடர்ந்து பாதித்தன. சொல்லப்போனால் Fitzcarraldo வில் க்ளாஸ் கின்ஸ்கியை (Klaus Kinski) வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டன.
Sighns of Life தயாரிக்க  அதிக காலமானது ஏன் ?
படத்தயாரிப்புக்குப் பணம் இல்லாத நிலையில் அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அமெரிக்காவில் படிக்கும்போது உருக்குத் தொழிற்சாலைகளில் வேலை செய்து தேவையான பணத்தை சம்பாதிக்கலாம் என பிட்ஸ்பர்கை தெரிவு செய்தேன். ஆனால் நன் சென்ற நேரம் உருக்குத் தொழிற்சலைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. வந்திறங்கி மூன்றே நாட்களில் உதவிப் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டு உணவுக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் சில நாட்களைக் கழித்தேன். ஆறு குழந்தைகளிருந்த ஒரு வீட்டில் ஆறுமாதங்கள் தங்க இடம் கிடைத்தது. கணவர் இல்லாது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அந்த அன்பான தாய்க்கு நான் நன்றிக்கடன் பட்டவன்.
அந்த நேரத்தில் நாசாவுக்கு (NASA) ஆவணப்படங்கள் தயாரிக்கும் திட்டம் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. விசா அனுமதியின்றி இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் வேலை போய்விட்டது. கொட்டும் பனியில் பழைய வோல்க்ஸ்வாகன் கார் ஓன்றில் நியூயார்க் வந்து சேர்ந்தேன். விறைக்கும் குளிரில் காரில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். என் கால் வேறு உடைந்து கட்டுப்போடப்பட்டிருந்தது. நியூயார்க்கில் என்னைப்போல் தெருக்களில் வாழ்ந்தவர்கள் தினமும் அதிகாலை மூன்று மணி போல ஓரிடத்தில் கூடி தீ மூட்டி குளிர்காய்வது வழக்கம். ஒரு நாள் கால் கட்டை பிரித்துப்போட்டுவிட்டு, எல்லையைக் கடந்து மெக்சிகோ வந்து சேர்ந்தேன்.
அங்கு ஸ்பனிஷ் மொழியை கற்றுக்கொண்டீர்கள் அல்லவா?
ஆம். லத்தீன் அமெரிக்க நாடுகள் எப்போதுமே என்னைக் கவருபவை. தினமும் ஆயிரக்கணக்கான கார்கள் அனுமதி பெற்று எல்லையைக்கடந்து அமெரிக்காவிற்குள் சென்று திரும்பிக்கொண்டிருந்தன. மற்றொரு காரிலிலிருந்து திருடிய அனுமதி ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிக்கொண்டு அமெரிக்கவிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பொருட்களை காரில் கடத்திக் கொண்டுவந்து விற்று பணம் சம்பாதித்தேன் ஒரே ஒரு முறை ஒருவர் வற்புறுத்திக் கேட்டதற்காக கைத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்தேன். அதைக்கொண்டு நான் துப்பாக்கிகளை கடத்தியவன் என்று கதை சொல்லப்படுவதுண்டு. பிறகு ரோடியோக்களில் (Rodeo) காளைகளைக் கட்டுப்படுத்தும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன்.

மெக்சிகோவிலிருந்து எங்கு சென்றீர்கள்?
அங்கிருந்து ஐரோப்பாவில் சிலமாதங்கள் சுற்றியலைந்துவிட்டு ஜெர்மனிக்கு திரும்பினேன். Sighns of Life தயரிப்புக்கான வேலைகளைத் துவங்கினேன். ம்யூனிக் அப்போது ஜெர்மனியின் கலைத் தலைநகரமாக இருந்தது. பிற இளம் தயாரிப்பாளர்களுடன் தொடர்புகொண்டேன். தனது முதல் திரைப்படம் Young Torless எடுக்க இருந்த Volker Schlöndorff எனக்கு நெருங்கியவரானார்.
ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பைண்டரும் (Rainer Wener Fassbinder) அப்போது படங்களை எடுக்கத் துவங்கியிருந்தார், 1968 இல் என்னை அணுகி அவருடைய திரைப்படங்களை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டபோது, அவருடைய திரைப்படங்களை அவரே தயாரிப்பது தான் சரியானது என்றேன். அதன் படியே சுதந்திரமாக தனது சொந்த தயாரிப்பில் படங்களை உருவாக்கத் துவங்கினார்.
உங்கள் திரைக்கதைகள் வித்தியாசமானவை. அவை பற்றி சொல்ல முடியுமா?
என் முதல் திரைப்படங்களில் மிகக் குறைவான வசனங்களே இருந்தன, வசன அமைப்பு புதிய முறையில் இருக்கவேண்டும் எனபது என் விருப்பம். திரைக்கதைகள் (Screenplays) அவற்றிற்கேயான உயிரோட்டம் கொண்டவை. என் திரைக்கதை புத்தகமாக வெளிவரும்போது, புகைப்படங்கள் இன்றி திரைப்படத்தை சார்ந்து இராத ஒன்றாகவே வெளியிடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் திரைக்கதை என்பது இலக்கியம் போல தனித்து நிற்பது.
உங்கள் படைப்புகளுக்கு அரசால் நிதியுதவி ஏதாவது அளிக்கப்பட்டதா?
1960களில் ஜெர்மனிய சினிமாவின் உந்து சக்தியென ஒருவரைச் சொல்லவேண்டுமனால் அது இயக்குநர் அலெக்ஸாண்டர் க்ளூஜ் (Alexander Kluge). அவரின் அயராத முயற்சியால் பல நல்ல காரியங்கள் நிகழ்ந்தன. திரைப்பட நிதியுதவிச் சட்டத்திற்கு பின்புலம் அவர்தான். ஜெர்மனிய திரைப்படப் படைப்பாளிகள் ஒரு சங்கத்தைத் துவங்கினர். அவர்களின் பார்வைக்கு நம் படக்கதையை அனுப்பி, அது அங்கீகரிக்கப்பட்டால் 300,0000 டாய்ஷ் மார்க்குகள் உதவித் தொகை கிடைக்கும். என்னதான் பரிசுகளும் பாரட்டுகளும் என் படங்களுக்குக் கிடைத்திருந்தாலும் இரண்டு வருடங்கள் இந்த உதவிப்பணம் எனக்கு மறுக்கப்ட்டது.
இருபத்தி இரண்டு வயதில் Sighns of Life ஐ முடித்து வெளியிட்டேன். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தேசிய விருது பெற்றிருந்த போதும் படத்தை விநியோகம் செய்வதற்கு ஆளில்லை. பெர்லின் திரைப்பட விழாவில் Silver Lion விருதையும் இப்படம் வென்றது. இதற்காக ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்த திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது வந்திருந்தவர் ஒன்பது பேர்கள் மட்டுமே. தொடர்ந்து வெளிவந்த எனது படைப்புகள் மீது பார்வையாளரின் கவனத்தைத் திருப்புவதற்கு நான் வெகு பாடு படவேண்டியதிருந்தது.
மகிழ்ச்சிக்கான வழிகளைத் தேடிக்கொண்டிருப்பது என்பது உங்கள் வாழ்கைத் தேடலாக எப்போதும் இருந்ததில்லை என்கிறீர்கள். திரைப்பட உருவாக்கம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. 
தேடல்கள் எனக்கு இல்லை. வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்விக்கு எளிமையான விடை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது வேலை எப்போதும் மகிழ்ச்சியைத் தந்து வந்திருக்கிறது. சரியாகச் சொல்லப்போனால் நான் அதிகம் நேசிப்பது திரைப்படமெடுக்கும் எனது பணியை. இந்தப் பணி எனக்குக் கிடைத்த பரிசு. நான் இந்தத் துறையில் பல தடைகளைக் கடந்து வந்தவன். இருந்தும் சிறந்த படைப்பாற்றல் கொண்ட பலருக்குக் கிட்டாத அளவு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. எப்போது எனது பதினான்கு வயதில் திரைப்படங்களைப் படைப்பதுதான் எனது கடமை என உணர்ந்தேனோ அப்போதிலிருந்து எனது எண்னங்களை இத்துறையில் செயல்படுத்துவது ஒன்றே எனது குறிக்கோளாக இருந்துவந்திருக்கிறது.