Monday 16 January 2012

அகிரா குரொசாவா -பகுதி இரண்டு


அகிரா குரொசாவா
பகுதி இரண்டு

எஸ்.ஆனந்த்



ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரொசாவா ஐம்பதுகளில் இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை அவரின் சிறந்த படைப்புகளாக குறிப்பிடப்படுபவை. திரைப்படங்களை இயக்கும் போது ஸ்டுடியோக்களுடன் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளும், தயாரிப்பு செலவு தொடர்பான பிரச்சினைகளும், அவரை ஆயாசமடையச்செய்திருந்தன. சொந்தமாகத் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அவரது படைப்பாக்க பயணத்தின் இரண்டவது கட்டம் அறுபதுகளில் தொடங்குகிறது.

குரொசாவாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம், "The Bad Sleep Well"(1960). அதிகார துர்ப்பிரயோகம், குற்றங்கள் செய்பவருக்கு அனைத்து பாதுகாப்புகளையும் அளித்து, அவர்கள் நிம்மதியாக உறங்க உதவுகிறது என்பதைக குறிப்பதான தலைப்பைக்கொண்ட இப்படம், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜப்பானின் அரசியல், பொருளாதார குற்றங்கள், வணிகங்களில் நிலவிய ஊழல்கள் ஆகியவற்றை கதையாகச் சொல்லுகிறது.
‘யொஜிம்போ’ – Yojimbo (1961) மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று அதிக வசூலைத் தந்த திரைப்படம். வசதி படைத்த வியாபாரியின் அடியாட்களுக்கும் அவனை எதிர்க்கும், சாகே மது தயாரிப்பவனின் குழுவுக்கும் இடையே எந்நேரமும் கைகலப்புகள். சஞ்சுரோ, அதிக ஊதியம் கொடுப்பவர்க்கு உதவுபவனாக, இரு தலைவர்களிடமும் மாறி மாறி பணிபுரிந்து, இரு குழுக்களும் போராடி அழிந்துபோகுமாறு செய்கிறான். தொஷிரோ மிஃபூனே சஞ்சுரோ பாத்திரத்தில் நடிக்க, பிரமிப்பூட்டும் வாட் சண்டைக் காட்சிகள் கொண்ட படம். 1964 இல் இப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட ’For a Fistful of Dollars’, க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டைக் கதாநாயகனாகக் கொண்டு இத்தாலிய இயக்குநர் செர்ஜியொ லியோனின் இயக்கத்தில் வெளிவந்தது.

’யொஜிம்போ’வின் இரண்டாவது பகுதியாக தொடர்ந்து வெளிவந்த சஞ்சுரோ - Sanjuro (1962)வுக்கு அடுத்து .’High and Low’ (1963) திரைக்கு வந்தது. எட் மக்பெய்னின் (Ed McBain) துப்பறியும் மர்மக் கதையை தழுவி உருவாக்கப்பட படம். காலணிகள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் கோன்டோவின் புதல்வனை தான் கடத்தியிருப்பதாக தொலைபேசியில் பணம் கேட்டு ஒருவன் அவரை மிரட்டுகிறான். ஆனால் கடத்தப்பட்டிருப்பது அவர் காரோட்டியின் மகன். கதையின் பெரும் பகுதி கோன்டோ மாளிகையின் வரவேற்பறையில் நிகழ்கிறது. ஒட்டு கேட்கும் கருவியுடன் தொலைபேசியருகில் போலீஸ். அந்த அறை கடத்தியவனால் கண்காணிக்கப்படுகிறது என்பது தெரிகிறபோதிலும், அவன் எங்கிருந்து கண்காணிக்கிறான் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.

தொடர்வது, நான்கு நிமிடங்கள் நம்மை இருக்கையின் முனையில் அமரச் செய்யும் ’புல்லட்’ரயில் காட்சிகள். குறிப்பிட்ட இடத்தில் கோன்டோ பணப் பெட்டியை ரயிலிருந்து வீசி எறியவேண்டும். பணப் பெட்டி எறியப்படும்போது ஓடும் ரயிலிருந்து அந்த இடம் போலீஸ் காமெராக்களால் பதிவு செய்யப்படுகிறது.. கிடைக்கும் தடயங்களைக் கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சிறுவன் விடுவிக்கப்படுகிறான்.
கடத்தியவன் ஏழை மருத்துவ மாணவன். போதை பொருட்கள் தொடர்பான பல குற்றங்களில் ஈடுப்பட்டிருப்பவன். யோக்கோஹாமா நகரின் சேரியிலிருக்கும் தன் குடிசையிலிருந்து, குன்றின் மேல் தெரியும் கோன்டோவின் அரண்மனை போன்ற மாளிகையை எப்போதும் வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். தன்னைப் போன்றவர்களுக்குக் கிட்டாத வாழ்க்கை வாழும் கோன்டோவைத் தண்டிக்கவேண்டும் எனும் எண்ணம் உருவாகிறது. அவர் மகனைக் கடத்தத் திட்டமிட்டுத் தவறாகக் காரோட்டி மகனைக் கடத்திவிடுகிறான்

விறுவிறுப்பும், திகிலும் கொண்டு சிறப்பாகப் படமாக்கப்ட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம் குரொசாவா சித்தரிக்கும் மனிதாபிமானம். கடத்தப்பட்டது காரோட்டியின் மகன் என அறிந்தபின் கோன்டோ வாளா இருந்திருக்கலாம். தனது பண உதவியின்றி காரோட்டியின் மகனை உயிருடன் மீட்பது அரிது என உணரும் கோன்டோ, ஈட்டிய செல்வம் அனைத்தையும் இழக்க நேரிடும் நிலையிலும், சக மனிதனுக்கு உதவ முன்வருவது மிக அழகாகச் சொல்லப்படிருக்கிறது.

ஒளிப்பதிவிற்கு டெலிபோட்டோ (telephoto lens) லென்ஸ்கள் குரொசாவாவினால் அதிகம் பயன்படுத்தப்பட்டன.டெலிபோட்டோ லென்ஸ்களை கொண்டு தொலைவிலிருந்து ஒளிப்பதிவு செய்ய முடிவதால், நடிகர்கள் காமெரா இருக்கும் உணார்வு இன்றி இய்ற்கையாக நடிக்கமுடிகிறது என்பதற்காக இநத லென்ஸ்களை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டெலிலென்ஸ்கள் நீண்ட குவிதூரம் (long focal length ) கொண்டவை. இவற்றைக் கொண்டு படமெடுக்கும் போது பதிவாகும் பரப்பளவு குறைவு. இதனால் ஒளிப்பதிவின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதைத் தவிர்க்க, ஒன்றுக்கும் மேற்பட்ட காமெராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்றில் தவறு நேரும்போது மற்றொன்றில் எடுக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோண்டோ மாளிகை வரவேற்பறையில் நிகழ்பவற்றைப் படமாக்குவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காமெராக்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால், ஒரே அறையில் நிகழும் காட்சிகளை நாம் பல கோணங்களில் திரையில் காண்கிறோம்; அதிக நேரம் காட்டப்படும் காட்சிகள் வேகமாக நகர்வதாக உணருகிறோம்.

குரொசாவா படமெடுத்து எடிட் செய்யும் முறை வழக்கத்திற்கு மாறுபட்டது.. ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்டுள்ளபடி முதல் காட்சியிலிருந்து வரிசைக் கிரமத்தில் (chronological order) ஒவ்வொரு காட்சியாகப் படமெடுப்பார். ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகள், அன்றன்றே எடிட் செய்யப்பட்டுவிடும். இறுதியில், தேவையான ஒரு சில மாற்றங்களை செய்தபின் படத்தை முழுமையாக இணைக்க வேண்டியதுதான். எடிட்டிங்கில் அவர் மன்னர். படத்தின் வளர்ச்சியை அறிந்து செயல்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுவதாகச் சொல்லுவார்.

அடுத்து வந்த ‘Red Beard ‘ (1970) இல் இளம் மருத்துவ மாணவன் யசுமோத்தோ ‘சிவப்புத் தாடி’ என அழைக்கப்படும் மருத்துவர் நிதேயிடம் பயிற்சி மாணவனாகப் பணிபுரிய வருகிறான் சேரிவாழ் ஏழை மக்களும், பாலியல் தொழிலளர்களும் மருத்துவ உதவி பெறும் அந்த இடம் முதலில் அருவருப்பை அளிக்கிறது; தொடர்ந்து பணியாற்றுவதில் விருப்பமில்லை. ‘சிவப்புத் தாடி’ மருத்துவரின் பணியை அருகிலிருந்து தொடர்ந்து கவனிக்கநேருபவனின் மனம் மாறுகிறது. ஏழைகளுக்காக முழு மனதுடன் பணியற்றும் மருத்துவனாக மாறுகிறான். இத்துடன் அங்கு நடப்பதாகச் சில கிளைக்கதைள் சொல்லப்படுகின்றன.‘சிவப்புத் தாடி’ மருத்துவருக்கும், யசுமோத்தோவுக்கும் மருத்துவப் பணியை விட சமூக விரோதிகளிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் ஏழை மக்களைப் பாதுகாப்பது முக்கிய பணியாகிறது. Red Beard திரைப்படம் அப்போதைய ஜப்பானிய அரசியல் அமைப்புக்கு எதிரான பிரகடனம்.. ஏழ்மையையும் அறியாமையையும் அதிகரிக்க வகை செய்யும் ஒரு அரசியல் அமைப்பு, ஏழைகளை தாக்கும் கொடிய வியாதிகளை விட அதிக ஆபத்தானது என்பதைச் சொல்லும் படம். இப்படம் உலகெங்கிலும், ஜப்பானிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மணிலாவில் குரொசாவா ரமொன் மாகசசே விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

‘சிவப்புத்தாடி’ யாக நடித்த, முக்கிய நடிகர் தொஷிரோ மிஃபூனேயுடன் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்த கூட்டணி இப்படத்துடன் முடிவடைகிறது. படம் உருவாகிக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து, உறவு மோசமாகியிருந்தது. படப்பிடிப்பு முடியும் வரை, இரண்டு வருடங்கள் தாடியுடன் இருக்க வேண்டியிருந்த மிஃபூனே, அந்த நேரத்தில் பிற படங்களில் நடிக்க முடியாமற் போனதால் கோபமடைந்ததும் இதற்கான காரனங்களில் ஒன்று.

குரொசாவா இயக்கிய திரைப்படம் என்றாலே மிஃபூனேயின் நினைவு மனதில் வருவது தவிர்க்க முடியாதது. குரொசாவாவின் பல திரைப்படங்கள் இவருக்காகவே உருவாக்கப்பட்டவை என்று நினைக்கத்தோன்றும். இருவரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். மிஃபூனே வாட்சணடை குதிரை சவாரி அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர். குரொசாவா படங்களில் உண்மையான வாட்களைக் கொண்டே சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன, ரஷொமோனிலிருந்து ஒவ்வொரு படத்திலும் மிஃபூனே வாட்களைப் பயன் படுத்தியிருக்கும் விதம் பிரமிப்பூட்டுவது. நடிப்பும் அப்படியே. குரொசாவா படங்களில் நடிப்பவர்கள் ஒரு குடும்பம் போல தொடர்ந்து அவருடைய படங்களில் பங்கேற்று வந்தனர். இந்தப் பிரிவைத் தொடர்ந்து மேலும் பல பின்னடைவுகளை குரொசாவா சந்திக்க நேர்ந்தது. ஜப்பானிய புதிய அலை சினிமா உருவாகி, இந்த நேரத்தில் உச்ச நிலையை அடைந்திருந்தது. நாகிஷா ஒஷிமா, ஷிண்டோ, இமாமுரா, தெஷிகஹாரா போன்ற இளம் இயக்குநர்கள் திரைப்படங்களில் புதிய, சோதனை முயற்சிகளை மேற்கொண்டிருந்தன்ர். குரொசாவா, மிகையுணர்ச்சி மிக்க படைப்புகளுக்கு முக்கியம் தரும் பழமைவாதியாக, மிசோகுச்சி , ஓசு காலத்திய நீர்த்துப்போன இயக்குநராக ’புதிய அலை’ இளம் இயக்குநர் சிலரால் முத்திரை குத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். புதிய அலையை மீறி அமெரிக்கப் பாணி கேளிக்கை சினிமா ஜப்பானிய மக்களை முற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

ஜப்பானிய ஸ்டுடியோக்கள் அவரின் அடுத்த திரைப்படத் தயாரிப்புக்கு நிதியளிக்க மறுத்துவிட்டன. வேறு வழியின்றி அமெரிக்க திரைப்பட நிறுவனங்களை அணுகினார். ’Runaway Train ’ என்ற தனது திரைக்கதையை அமெரிக்காவில் படமாக்க முயற்சித்தார். முடியவில்லை. (’Runaway Train ’ ரஷ்ய இயக்குநர் கான்ச்லோவ்ஸ்கியால் இயக்கப்பட்டு, அமெரிக்கத் தயரிப்பாக 1985 இல் வெளியிடப்பட்டது.).

அமெரிக்க ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனம் (Fox Film Corporation) ’தோரா, தோரா, தோரா’ – Tora,Tora,Tora (1970) திரைப்படத்தின் ஜப்பானிய பகுதியை இயக்க குரொசாவாவை ஒப்பந்தம் செய்தது. படமெடுப்பதில் அவருக்கும் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பல பிரச்சினைகள். குரொசாவா ஜப்பானுக்கு திரும்பிவிட்டார். மன நலம் பாதிக்கப்படிருந்ததால் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார் என ஃபாக்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்வற்றைச் செயல்படுத்த மறுத்த ஃபாக்ஸ் நிறுவனம், தன் விருப்பத்தை மீறி தன்னை பணி நீக்கம் செய்ததாக குரொசாவா தெரிவித்தார்.

குரொசாவாவின் மேதமையை நன்கறிந்த சக இயகுநர்கள் கோபயாஷி, கோன் இச்சிக்காவா கினோஷித்தா ஆகியோர் குரொசாவாவுக்கு கை கொடுக்க முன்வந்தனர். குரொசாவாவுடன் இணைந்து இவர்கள் தொடங்கிய கூட்டு தயாரிப்பு நிறுவனம் Yonki no Kai - (Four Musketeers). இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக குரொசாவா இயக்கிய ‘Dodesukaden’ (1970) தோல்வியைத் தழுவிய போதிலும், குரொசாவாவிற்கு மறு நம்பிக்கையைக் கொடுத்த படம். அவரின் முதல் வண்ணப்படம். இருபத்தெட்டு நாட்களில் படமாக்கப்பட்ட இப்படத்தை தன் மனநிலை ஆரோக்கியத்துடன் இருப்பதை நிரூபிப்பதற்காகவே தான் உருவாக்கியதாக குரொசாவா குறிப்பிட்டுள்ளார். கூட்டு தயாரிப்பு முயற்சியும் முடிவுக்கு வந்தது. இடையே தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை இயக்கினார்.

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி குளியலறையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த குரொசாவாவை, தற்செயலாக அங்கு வந்த பணிப்பெண் கண்டதால் மருத்துவ மனைக்கு உடனடியாகக் கொண்டு சென்று காப்பாற்ற முடிந்தது. கத்தியால் கழுத்து, தோள், கைகள் பகுதிகளில் இருபத்தி இரண்டு இடங்களில் குத்தி, தன் உயிரைப் போக்க முயன்றிருந்தார். உலகம் முழுவதிலிமிருந்து தந்திகளும், கடிதங்களும் குவிந்தன. தங்களிடம் உள்ள பணம் அனைத்தையும் அவருக்கு படமெடுக்க கொடுத்துவிடத் தயாராக இருப்பதாக பள்ளிச் சிறுவர் கடிதம் எழுதியிருந்தனர்.

ஓளி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக வெளி உலகுக்குத் தெரியும் திரையுலகத்தின் மறுபக்கம் இருள் நிறைந்த கதைகள் கொண்டது. கணக்கிலா அளவில் பணம் புழங்கும் திரையுலகம், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட வியாபரிகளால் ஆளப்படுவது. ஜப்பான் என்றல்லாது நம் நாடு உட்பட உலகெங்கும் இந்நிலைதான். சிறந்த படைப்பாளிகள் பலர், இருந்த இடம் தெரியாமல் காணாமற் போயிருக்கிறார்கள். குரொசாவா போன்ற மேதைகள், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது, இடர்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டு, போராட்டத்துடன் திரைப்படக் கலையை முன்கொண்டு சென்றவர்கள்.குரொசாவா உடல் நிலை தேறி உற்சாகமான மனநிலைக்கு திரும்ப சற்றுகாலம் ஆனது. 1972 இல் சோவியத் யூனியனின் மாஸ் பிலிம்ஸிலிருந்து, திரைப்படம் ஒன்றை இயக்க கோரி அழைப்பு வந்தது. அவரே கதையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். முழு உற்சாகத்துடன் திரைப்பட வேலைகளைத் தொடங்கினார். அற்புதமான ஒரு திரைப்படம், ‘தெர்ஸு உஜாலா’(1975) Dersu Uzala உருவானது.


ரஷ்யாவின் மங்கோலிய எல்லை பகுதியில் வாழும் தெர்ஸு உஜாலாவுக்கு வீடு என்று ஒன்றும் கிடையாது. தன் வயது என்னவென்று தெரியது. மனைவியையும் குழந்தைகளையும் பல வருடங்களுக்கு முன் அம்மை வியாதிக்குப் பலிகொடுத்தபின் நாடோடியாக காட்டில் வேட்டையாடி உண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இயற்கையுடன் ஒன்றிப்போன வாழ்க்கை.

1902 ஆம் ஆண்டு , ரஷ்ய மங்கோலிய எல்லைப்பகுதியின் வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ குழுவின் தலைவரான அர்சனீவை காட்டில் தற்செயலகச் சந்திக்கும் தெர்ஸு, அவர் குழுவுக்கு வழிகாட்டியாக சற்றுகாலம் பணிபுரிகிறார். அவருக்கும் அர்சனீவுக்கும் இடையே மரியாதை கலந்த ஆழமான நட்பு உருவாகிறது. மீண்டும் ஐந்து வருடங்கள் கழித்து அந்தக் காட்டுப்பகுதியில் தெர்ஸுவைச் சந்திக்கும் அர்சனீவ், அவரைத் தன்னுடன் வாழ அழைத்துச் சென்றுவிடுகிறார்.

எவ்விதமான கால அட்டவணைக்கும், ஒழுங்குக்கும் கட்டுப்படாமல் காடுகளில் இயற்கையுடன் இணைந்து வழ்ந்த தெர்ஸுவுக்கு அர்சனீவின் இல்லத்தில் வாழ முடிவதில்லை. வேட்டைக்காக அர்சனீவ் அன்பளிப்பாக அளிக்கும் நவீன துப்பாக்கியோடு மீண்டும் காட்டிற்கு, தன் இறுதிக் காலத்தை கழிக்கத் திரும்புகிறார். அர்சனீவ் அடுத்த முறை தெர்ஸுவின் உயிரற்ற உடலைத்தான் காண முடிகிறது. வைத்திருந்த நவீன துப்பாக்கிக்காக தெர்ஸு கொல்லப்பட்டிருக்கிறார். அவர் உடலை அடையாளம் காட்டுவதற்காக வரும் அர்சனீவ் அந்த கட்டுப்பகுதியில் அவர் உடலைப் புதைப்பதுடன் படம் முடிவடைகிறது.
இயற்கையையும், நட்பையும் கொண்டாடும் இத் திரைப்படத்தின் பெரும்பாலன பகுதிகள் சைபீரிய பகுதியில் கடுமையன குளிர்காலத்தில் படமாக்கப்பட்டவை. தெர்ஸு, எரியும் விறகைத் திட்டுகிறர். பறவைகளின் ஒலிகள் மழை பற்றிய தகவலை அவருக்குத் தெரிவிக்கின்றன. இயற்கையின் மொழியை அறிந்திருக்கிறார். இயற்கையின் அங்கமாகவே அவரை உணருகிறோம். இயறகை எழில் மிக்க மலைப்பகுதிகளும், ஆறுகளும், காடுகளும், பனி படர்ந்த சமவெளிகளும் நம்மை வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லுகின்றன.

குரொசாவா வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்கிய காலம் போய், அடுத்த படத் தயாரிப்புக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1978 ஆம் வருடம் இத்தாலிக்குச் சென்று மகளையும், பேரக் குழந்தையையும் பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றவர், அவரை மானசீக குருவாக கொண்ட இயக்குநர்கள் கொப்போலா, ஜார்ஜ் லூக்காஸ் இருவரையும் சந்த்தித்தார்.

இந்த இருவரின் முயற்சியால் குரொசாவாவின் அடுத்த திரைப்பட தயாரிப்பில் அமெரிக்க 20th Century Fox நிறுவனம் ஜப்பானின் தொஹோ ஸ்டுடியோவுடன் இணைந்தது. ஆறு மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மாண்ட தயரிப்பு காகேமூஷா (1980) Kagemusha. முதல் திரையிடலில் மட்டும் வசூல் பத்து மில்லியனைத் தாண்டிவிட்டது. கான் திரைப்பட விழா பரிசு முதல் உலகம் முழுவதிலுமிருந்து பரிசுகளும் பராட்டுகளும் குவிந்தன. தக்கேதா வம்சத் தலைவன் ஷிங்கெனின் காவலரால் பிடித்துவரப்படும் திருடன் காகேமூஷா, தோற்றத்தில் தலைவனை அப்படியே உரித்து வைத்திருக்கிறான். எதிரிகளை ஏமாற்ற தன்னைப்போல் தோற்றமுள்ள காகேமூஷாவைப் பயன்படுத்த தலைவன் முடிவு செய்வதால், காகேமூஷா அரண்மனையில் ரகசியமாகத் தங்கவைக்கப்ப்டுகிறான்.

எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி தலைவன் இறந்துவிடுகிறான். தன் இறப்பை மூன்று வருடங்களுக்கு ரகசியமாக வைக்கவேண்டும் என்பது இறக்கும்போது அவன் இடும் உத்தரவு. காகேமூஷாவை அரசனாக நடிக்க வைக்கின்றனர். இந்த ஏற்பாட்டை அறவே வெறுக்கும், தலைவனுக்கு முறையின்றி பிறந்த வாரிசான கத்சுயோரி, போலி அரசன் பற்றிய ரகசியதை உடைக்க, காகெமூஷா அவமானப்படுத்தப்ட்டு வெளியேற்றப்படுகிறான்.
இறுதியில் பிரமிக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டிருக்கும் போர்க்காட்சிகளுடன் படம் முடிகிறது. தக்கேதா குலம் அடியோடு அழிகிறது. திருடன் காகேமூஷாவும் உயிரிழக்கிறான். உணமைக்கும் போலிக்குமுள்ள இடைவெளி பற்றி தத்துவார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் பதினாறாம் நூற்றாண்டில் நிகழும் கதை. தலைவன் ஷிங்கெனாகவும், திருடன் காகேமூஷாவாகவும் இரட்டை வேடங்களில் திறம்பட நடித்திருப்பவர் நடிகர் நகதாய். குரொசாவா ஓவியராதலால் இப்படத்தில் வண்ணங்களை கதையின் ஆழத்துக் கேற்ப மிக அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். இருந்தும் அவர் திருப்தியடையவிலை. வண்ணங்களை சரியான அளவில் படங்களில் கொண்டுவருவது பற்றி அறிவதற்காக இங்மர் பர்க்மனின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்வெஸ்ட்டை சந்த்தித்தார். குரொசாவாவின் எளிய மனம் பற்றி நிக்வெஸ்ட் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

குரொசாவா, பெர்க்மன், ஃபெலினி மூவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. இதற்காக ரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிற்கு குரொசாவா வராது இருந்துவிட்டார். ஃபெலினியும், பெர்க்மனும் மிகப் பெரிய ஆளுமைகள்; இவர்களூடன் இணைந்து படமெடுக்கும் அளவு தனக்குத் தகுதியிருப்பதாகக் கருதவில்லை என்று நிக்வெஸ்ட்டை சந்த்தித்தபோது சொல்லியிருக்கிறார். ’காகேமூஷா’வை இயக்கியபோது குரொசாவாவின் வயது எழுபது. ஏற்கெனெவே அவர் முடிவு செய்திருந்த ‘ரான்’ அடுத்த்த படமாக 1985 இல் உருவானது, இத்தாலிய தயாரிப்பாளர் Serge Silberman உம், ஜப்பானிய தொஹோ ஸ்டுடியோவும் இணந்து தயரித்த படம். . ‘கிங் லியர்’ நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட ஜப்பானியக் கதை. ’ரான்’ எனும் ஜப்பனிய வார்த்தை போர், கலகம் குழப்பம் எனும் அர்த்தங்கள் கொண்டது.

காகேமூஷா படம் எடுப்பதற்கு முன்பே, இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் story boardக்காக அவர் கைவண்ணத்தில் நூற்றுக்கணக்கான வண்ண ஓவியங்கள் உருவாக்கப்படிருந்தன. குறைந்துகொண்டே வந்த குரொசாவின் கண் பார்வை படம் எடுக்கப்பட்டபோது மிகவும் மங்கிய நிலையை அடைந்திருந்தது. ரான் படத்திற்கான அரங்க நிர்மாணங்கள், காட்சியமைப்புகள், ஒளிப்பதிவுக் கோணங்கள் அனைத்தும் இந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன.

ஃப்யூஜி மலைப்பகுதியில் அரச குடும்பத்தினர் பங்குபெறும் காட்டுப்பன்றி வேட்டையுடன் ’ரான்’ துவங்குகிறது. வயதான அரச வம்ச தலைவர் ஹிதெத்தோரா, தன் மூன்று புதல்வர்களில் மூத்தவனுக்கு முக்கிய அதிகாரங்களையும் மற்ற இருவருக்கும் குறைந்த அதிகாரமுள்ள சில பொறுப்புகளையும் பிரித்துக் கொடுத்துவிட்டு பெயரளவில் தலைவனாக ஆட்சியை தொடர்கிறார். இந்த ஏற்பாட்டை எதிர்க்கும் இளையவர்களில் ஒருவனான சபுரோ குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுகிறன். மனைவியின் தொடர்ந்த நச்சரிப்பால் மனம் மாறும் மூத்தவன் தன்னை ஆதரிக்கும் ஒரு சகோதரனை சேர்த்துக்கொண்டு, தந்தையைத் துரத்திவிட்டு அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்ற, குடும்ப உறவுகள் சிதைகின்றன. வயதான தந்தை ஹிதெத்தோரா அநாதையாக தனது உதவியாளனுடன் அலைந்துகொண்டிருக்கிறார். தமையன்களின் மனைவிகளும் எதிரும் புதிருமாகின்றனர். தொடரும் தாக்குதல்களில், ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டு, குடும்பமே முற்றிலுமாக அழிந்துபோகிறது.

’ரான்’ திரைப்படம் கான் திரைப்பட விழா முதல் பல உலகத் திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றது. உடல் நலம் குன்றியிருந்த குரொசாவாவின் மனைவி ரான் படப்பிடிப்பின் போது மரணமடைந்தார். குரொசாவாவின் இயக்கத்தில் தொடர்ந்து Dreams (1990) - , Rhapsody in August (1991) வெளிவந்தன. Madadayo (1993), அவர் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த படம். Dreams மாறுபட்ட அமைப்பைக் கொண்ட திரைப்படம். மனிதனுக்கும் இயறகைக்குமான உறவை அடிப்படையாகக் கொண்ட எட்டு கதைகளின் தொகுப்பு. சிறப்பாக படமாக்கபட்டிருக்கும் இத்தொகுப்பில் தனித்து நிற்பது ஐந்தாவது பகுதியாக வரும் ‘காகங்கள்’ - Crows. குரொசாவாவை நினைவுறுத்தும் இளம் ஓவியன் ஓவியக்கூடத்தில் வான்கோவின் (Van Gogh) சித்திரங்களை பார்த்துக்கொண்டிருக்கிறான். வான்கோவின் ’லாங்வா பாலம்’ (Langlois Bridge) ஓவியத்தில் தன்னை மறப்பவன் அப்படியே அந்த ஓவியத்திற்குள் சென்றுவிடுகிறான்.

லாங்வா பாலத்தினருகில், துணிகளை துவைத்துக்கொண்டிருக்கும் பெண்களிடம் வான்கோ எங்கிருக்கிறார் எனக் கேட்டு ஓவியத்தினுள் அவரை தேடிச் செல்கிறான். கதிரவனின் முழு ஒளியில் காதில் கட்டுடன். நின்றுகொண்டிருக்கிறார் வான்கோ. ”சக்தி மிக்க கதிரவன் என்னை வரையுமாறு கட்டாயப்படுத்தும்போது என்னால் நேரத்தை வீணாக்க முடியாது” என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். வான்கோவின் வண்ண நிலப்பரப்புகளில் அவரது துரிகைச் சுழிப்புகளின் வழியே நடந்து ‘காகங்கள் ‘ ஓவியத்திற்கு வந்து சேருகிறான். வான்கோ தன்னை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் ஒலி கேட்கும் அதிர்ச்சியில் ஓவியத்திலிருக்கும் காகங்கள் கலைந்து, மிகுந்த ஒலியெழுப்பி ச்ட்டகத்திற்கு வெளியே பறக்கின்றன. மெய் சிலிர்க்க வைக்கும் பகுதி.

இந்த மேதையின் இயக்க திறமை நீர்த்துப் போய்விட்டது என்று எப்படி சொல்ல முடியும்? 80 வயதான குரொசாவாவின், மேதமையைப் பறை சாற்றுவதற்கு 9.50 நிமிடங்கள் ஓடும் இந்தப் பகுதி ஒன்று போதும் பின்னணியில் Chopin இன் செவ்வியல் இசை. வான்கோவாக அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸெஸி நடித்திருக்கிறார்.. ’ட்ரீம்ஸ்’ படத்தின் The Blizzard, The Tunnel, Mount Fuji in Red, The Weeping Demon பகுதிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருப்பவை. குரொசாவா மேற்கில் அதிகம் சிலாகிக்கப்பட்டது ஜப்பானில் அவர் மீது எதிர்மறை விமரிசனங்கள் உருவாக காரணமானது. மேற்கத்திய அழகியலையும், பாணியையும் தனது படைப்புகளுக்கு அடிப்படையாக எடுத்துக்கொண்டவர் என்று விமரிசிக்கப்பட்டார். ஷேக்ஸ்பியர், தாஸ்தயோவ்ஸ்கி போன்றவர்களின் படைப்புகளை படமாக்கியதும் மேற்கத்திய ஸ்டுடியோக்களின் ஆதரவை நாடியதும் இதற்கான காரணங்களில் முக்கியமானவை. மேற்கத்திய நாடுகளை பொறுத்த வரையில் இதற்கு நேர் எதிர்மாறாக, ஜப்பானிய கலாச்சாரங்களை ஆழமாகப் பிரதிபலிக்கும், அந்நாட்டின் சரித்திர கால வாழ்க்கையை கண்முன் கொண்டுவரும் படைப்புகளைக் கொடுத்தவர் என்றே கருதப்படுகிறார்.

குரொசாவாவின் கதைகளில் மனிதத்துவத்திற்கே முதன்மையான இடம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அரசியல் கோட்பாடு எதையும் அவர் தன் படங்களில் முன்வைத்ததில்லையே தவிர, அவர் படங்களில் அரசியல் இல்லை என்று கூற முடியாது. ஷேக்ஸ்பியர் நாடங்களின் தழுவலாக இருந்தபோதிலும், Throne of Blood, ரான் திரைப்படங்கள் பதினாறாம் நூற்றாண்டு ஜப்பானின் சரித்திர நிகழ்வுகளோடு இசைந்து சொல்லப்பட்ட கதைகளைக் கொண்டவை கபூகி, நோ போன்ற ஜப்பானிய செவ்வியல் கலைகளின் பாதிப்பை அவருடைய பல படங்களில் காணலாம்.

குரொசாவா மீது ’மேற்கத்திய’ பாணியில் படமெடுப்பவர் போன்ற எதிர்மறை விமரிசனங்களைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள், புதிய அலை சினிமா இயக்கத்தைச் சேர்ந்த தீவிர இடதுசாரி இயக்குநர்கள். ’பிரெக்ட்’ (Brecht)டிய பாணியைத் தூக்கிப் பிடித்த இவர்களும் மேற்கத்திய பாணியைப் பின்பற்றியவர்களே. குரொசாவாவின் மனிதத்துவ பார்வையும் இவர்களால் தீவிர விமரிசனத்துக்குள்ளானது. குரொசாவா அளவுக்கு ஜப்பானியக் கலாச்சாரத்தை இவர்களில் எவரும் உலகறியச் செய்ததில்லை..

‘ரான்’ திரைப்படத்தில், புதல்வர்களால் புறக்கணிக்கப்பட்டு, சொந்த நாட்டில் அநாதையாக அலையுமறு கைவிடப்பட்ட அரசன் ஹிதெத்தோராவின் பாத்திரத்தை தன்னைப் பிரதிபலிக்கும் பாத்திரமாகவே குரொசாவா உருவாக்கியுள்ளார். ஸ்டுயோக்களின் புறக்கணிப்புகளும், தொடர்ந்த எதிர்மறை விமரிசனங்களும் அந்த அளவு அவரைப் பாதித்திருந்தன. குரொசாவாவுக்கும் ஹிதெத்தோரா பாத்திரத்திற்குமான ஒற்றுமை பற்றி பல விமரிசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குரொசாவா, தான் இயக்கிய திரைப்படங்களின் அழகியலையும் அர்த்தங்களையும் பற்றிப் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்தார். ஒரு காட்சியின் அர்த்தம் என்ன என்று தன்னால் வார்த்தைகளில் விவரிக்க முடிந்திருந்தால் அதைத் தான் சிரமப்பட்டு படமாக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று சொல்லியிருக்கிறார். சினிமாவைக் கண்களால் கண்டு உணர்வது மட்டுமே சாத்தியம் என்பார். திறனாய்வு என்ற பெயரில் எந்த ஒரு திரைப்படத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து வார்த்தைகளில் எழுதுவதையும், பேசுவதையும், அவர் ஏற்றுகொண்டதில்லை.

திரைப்பட்ங்களில் இசை (music), ஒலி (sound) இவற்றின் பங்கு பற்றி மிகத் தெளிவான கருத்துகளைக் கொண்டிருந்தார். அவர் படங்களின் தொடக்கத்தில் காண்பிக்கப்படும் எழுத்துக்களுடன் முழு இசையையும் கேட்கலாம். அதன் பிறகு தொடரும் படத்தில் மிகவும் தேவையான சில இடங்களில் மட்டும் குறைவான அளவில் இசை பயன் படுத்தப்ட்டது. இசையை இரண்டாம் பட்சமாக தேவைக்கு ஏற்றவாறு மிகச் சரியாக பயன் படுத்தவேண்டும் என்பார்.

இந்திய சினிமாவைப் பொறுத்தவகையில், அவருக்கு சத்யஜித் ராய் மீது மிகுந்த மதிப்பிருந்தது. ராய் இறந்தபோது மிகவும் கலங்கிப்போனார்.

குரொசாவா பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் வெளிவந்துள்ள புத்தகங்களில் ஜப்பானில் வாழ்ந்து குரொசாவை நேரில் அறிந்த டொனால்டு ரிச்சி, ஜோஆன் மெலன் போன்ற விமரிசகர்களின் எழுத்துக்கள் முக்கியமானவை. பீட்டர் கோவீ போன்ற திரைப்பட அறிஞர்கள் அவர் படங்களைப் பற்றி எழுதவும், அவர் படங்களின் டிவிடிக்களில் விளக்க உரைகள் அளிக்கவும் செய்திருக்கின்றனர். குரொசாவா எழுதிய சுயசரிதை ’Something like an Autobiography’ என்ற புத்தகமாக 1982 இல் வெளிவந்துள்ளது.

‘கிரைட்டீரியன்’ நிறுவனம் குரொசாவா இயக்கிய திரைப்படங்கள் அனைத்தையும் மறு பதிவு செய்து மிகச் சிறப்பாக வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. ஒவ்வொரு படத்தின் டிவிடியும் அப்பட உருவாக்கத்தில் தொடர்புள்ள ஆவணப்படங்கள், அப்படத்தில் பங்காற்றியவர், குரொசாவா - இவர்களின் நேர்காணல்களுடன், விளக்க உரை (commentary) சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட துணைவரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

1998 ஆம் வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி சினிமாவுக்காகவே வாழ்ந்த இந்த மேதை டோக்கியோவில் மரணமடைந்தார். இறுதிவரை அவர் தன் வாழ்நாளில் இயக்கி அளித்த படைப்புகள் முப்பத்து ஒன்று. இவருடைய படைப்புகள் உலகம் முழுவதும் ஏராளமான புதிய படைப்புகளுக்கு மூலகாரணமாக இருந்துவருவதைக் காண்கிறோம்.

திரைப்படங்களைத் தனது தத்துவார்த்த தேடல்களுக்கான களமாகவே அவர் பயன்படுத்தினார் சமரசங்களுக்கு அவரிடம் இடமில்லை. குரொசாவாவை அவரது படைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது; ஒவ்வொரு படைப்பும் அவரது ஆன்மாவின் வெளிப்பாடு.

My films come from my need to say a particular thing at a particular time. The beginning of any film for me is this need to express something. It is to make it nurture and grow that I write my script- it is directing it that makes my tree blossom and bear fruit.

The characters in my films try to live honestly and make the most of the lives they’ve been given. I believe you must live honestly and develop your abilities to the full. People who do this are the real heroes.

–Akira Kurosawaஅகிரா குரொசாவா - பகுதி ஒன்று

Wednesday 11 January 2012

அகிரா குரொசாவா - பகுதி ஒன்று


அகிரா குரொசாவா
பகுதி ஒன்று

எஸ்.ஆனந்த்

தலைவன் வஸிஷு அணிவகுத்து நிற்கும் படையினரிடம் அரண்மனையின் இரண்டாம் தளத்திலிருந்து கர்ஜனையுடன் ஆணைகளிட்டுக் கொண்டிருக்கிறான்...

எங்கிருந்தோ திடீரென பாயும் ஒரு அம்பு.. அடுத்து ஒன்று, அடுத்து என ...

.அவனுடைய படை வீரரிடமிருந்து அவனை குறிவைத்து சரமாரியாகப் பாயும் அம்புகள்.. . .

நிலை தடுமாறி வெறியுடன் கீழே இறங்கி வருகிறான் உடலெல்லாம் அம்புகள், கழுத்தில் ஒன்று ....

அவன அதுவரை நடத்திச் சென்ற படைவீர்ர் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்க...

வெறியுடன் ஆக்ரோஷமாக உருவிய வாளுடன், காலை எடுத்து முன்னே வைக்கும் போது நிலையிழந்து கீழே விழுகிறான். உயிர் பிரிகிறது.

அகிரா குரொசாவாவின் ‘Throne of Blood’ திரைப்படத்தின் மெய்சிலிர்க்கவைக்கும் இறுதிக் காட்சிகளில் ஒன்று..

கதை சொல்வதில் உணர்ச்சிகளையும் காட்சிகளில் பிரம்மாண்டத்தையும், கொண்டு அற்புதமாக உருவாக்கப்பட்டிருப்பவை குரொசாவாவின் படைப்புகள். குரொசாவா தனக்கென தனிப் பாணியை உருவாக்கிக்கொண்டவர். ஒரு சிறு காட்சியில் கூட எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காது, தன் முழு உழைப்பயைம், கவனத்தையும் கொண்டு திரைப்படஙகளை உருவாக்கிய மேதை. உலகளவிலும், நமது நாட்டிலும் அதிகம் அறியப்படும் ஜப்பானிய இயக்குநர்.

இவ்வருடம் (2010) குரொசாவாவின் நூறாவது பிறந்த தின நினைவாக எங்கள் திரைப்பட சங்கத்தில் நடந்த திரையிடுதலில் அவரைப்பற்றிய ஆவணப்படத்துடன் ‘‘Throne of Blood’’ திரைப்படம் திரையிடப்பட்டது. 140க்கு மேல் இருக்கைகள் கொண்ட அந்த அரங்கம் வழக்கத்திற்கு மாறாக அன்று நிறைந்து, பலர் நின்று கொண்டு படத்தைப் பார்க்கவேண்டியதிருந்தது. இவரது படங்களைப் பார்த்திராதவர் கூட இவர் பெயரை அறிந்திருக்கும் அளவு நம்மூரில் இந்த மேதையின் பெயர் பிரபலமானது.

பிரெஞ்சு புதிய அலை சினிமா பத்திரிகை ‘ கஹியே தூ சினிமா’வின் நேர்காணலில் அவர் யதார்த்தவாதியா அல்லது ‘Romantic’ஆ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஒரு sentimentalist என்று பதிலளித்தார். மனிதத்துவத்தை மையப்படுத்தும் கதைகளைக் கொண்டே தனது அனைத்து திரைப்படங்களையும் உருவாக்கினார். அவரது திரைப்படங்கள் தத்துவார்த்தமான கேள்விகளும், தேடல்களும் கொண்டவை.

குரொசாவா 1910 ஆம் ஆண்டு ஜப்பானில் டோக்கியோவின் ஒமோரி மாவட்டத்தில் பிறந்தவர். சாமுராய் குலவழிக் குடும்பம். பள்ளியில் படிக்கும் காலத்தில் வாட்பயிற்சியும் பெற்றார். சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுடனிருந்தார். தாஸ்த்தோவ்ஸ்கி, கார்க்கியின் எழுத்துக்கள் அவரைக் கவர்ந்தன. தந்தை குடும்பம் முழுவதையும் திரைப்டக் காட்சிகளுக்கு அடிக்கடி அழைத்துச் செல்வது வழக்கம். பள்ளிப்படிப்பு முடிந்தபின் ஓவியராகப் பயிற்சி பெற்றார். இலக்கியத்திலும் செவ்வியல் இசையிலும் ஈடுபாடு அதிகரித்தது. நாடகங்களுக்குச் சென்றார். திரைப்படங்களில் மனம் நாட்டம் கொண்டது.

திரைப்பட அரங்குகளில் மேற்கத்திய மௌன திரைப்படங்களுக்குக் கதை சொல்லும் ’பென்ஷி’யாக அவர் சகோதரர் பணிபுரிந்ததால், தரமான பல ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய மௌன திரைப்படங்களை காண முடிந்தது. இடதுசாரி கலைஞர்கள் இயக்கம் ஒன்றில் சிறிது காலம் இணைந்திருந்தார் அரசியலிலும் ஓவியக்கலையிலும் ஈடுபாடு குறைய, திரைப்படக் கலையில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

பேசும் படங்கள் அறிமுகமானபின் வேலையிழந்த அவர் சகோதரர், வேலையிழந்த ’பென்ஷி’களுக்காக ஸ்டுடியோக்களுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் தோல்வியடைந்த்தது. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 1933 இல் நிகழ்ந்த தமையனின் தற்கொலையும், அதற்கு பத்து வருடங்களுக்கு முன் 1923இல் குரொசாவா நேரடியாக காண நேரிட்ட காண்ட்டோ நில நடுக்க அழிவுகளும் அவரது இள மனதை வெகுவாகப் பாதித்திருந்தன.

பின்னாளில் தொஹோ ஸ்டுடியோவாக மாறிய பி சி எல் நிறுவனத்தில் 1936 இல் சேர்ந்து, இயக்குநர் யமமோட்டோவின் குழுவில் ஒருவராக பணிபுரிந்தார். முழு சுதந்திரத்துடன் பணிபுரிய முடிந்தது. விரைவில் குழுவின் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தப்பட்டார். நருசே (Naruse) போன்ற பிற இயக்குநர்களிடமும் உதவியாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இந்நேரம் அவர் எழுதிய திரைப்பட கதை வசனங்கள், பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றன. பிற ஸ்டுடியோக்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுக்க தொடங்கினார்.

குரொசாவா இயக்கிய முதல் திரைப்படம் ‘Sugata Sanshiro” (1943). ஜப்பானில் ஜூடோ தற்காப்புக் கலை ஆரம்பித்த மெய்ஜி காலத்தில் நிகழும் கதை. இப்படம் சிறப்பான வரவேற்பைப் பெற, ஜப்பானியத் திரையுலகில் கவனம் பெற்றார். ‘Sugata Sanshiro”வின் இரண்டாவது பகுதியுடன் சேர்த்து 1947 வரை ஐந்து திரைப்படங்கள் அவரது இயக்கத்தில் வெளியாகின. குரொசாவாவும் அவரது சம கால இயக்குநர்களும் 1952 வரை ஜப்பானில் இருந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசின் கடுமையான தணிக்கை விதிகளை பின்பற்றிப் படமெடுக்க வேண்டியிருந்தது.
குரொசாவாவின் தனித்துவ பாணியின் தொடக்கம் 1948 இல் வெளியான ’Drunken Angel’. சேரிப் பகுதி ஒன்றில் மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்துவரும் மருத்துவர் சனதாவும்; அப்பகுதியின் தாதாவான ஜப்பானிய ‘ம்ஃபியா’ யக்கூஸாவைச் (Yakuza) சேர்ந்த மட்சுனாகாவும் இரு முக்கிய பாத்திரங்கள். இரண்டாவது உலகப் போரில் தோல்வி அடைந்ததால் அவமானமுற்று கலக்கமடைந்திருந்த ஜப்பானிய இளைஞர்களின் அன்றைய நிலையைப் பிரதிபலிப்பதாக, வனமுறையை மட்டுமே நம்பும் மட்சனாகவின் பாத்திரம் வடிவமைக்கப்ட்டிருக்கிறது.

மட்சுனாகா, தனக்கு காசநோய் தாக்கியிருப்பதைத் தெரிவித்து அறிவுரை அளிக்கும் சனதாவைக் காணும்போதெல்லாம் அலட்சியம் செய்வதுடன் கோபத்தில் அவரை தாக்கவும் செய்கிறான். காச நோய் முற்ற, அப்பகுதியின் யக்கூஸா தலைவன் தகுதி பறிக்கப்பட்டு தெருவில் விடப்படுகிறான். சனதா அவனைத் தன் வீட்டில் தங்க வைத்து மருத்துவம் செய்கிறார். நல் வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கக் கிடைதத அனைத்து வாய்ப்புகளையும் நழுவவிட்டு, யக்கூஸா குழுவில் அவனுடைய இடத்தைப் பறித்துக்கொண்டவனால் இறுதியில் கொலைசெய்யப்டுகிறான்.மட்சுனாகாவைக் காப்பாற்ற முடியாமற் போனதை எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் சனதாவை, அவர் உதவியால் காச நோய் குணமான ஒரு இளம் பெண், மகிழ்ச்சியுடன் இனிப்பு உண்ண அழைத்துச் செல்வதுடன் படம் முடிகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஜப்பான் அடைந்திருந்த அவல நிலையின் குறியீடாக சேரிக் குடியிருப்பின் நடுவில் ஒரு பெரிய கழிவு நீர்க் குட்டை காட்சிகளில் மைய இடத்தைப் பெறுகிறது.

1965 வரை குரொசாவாவின் படங்களில் தொடர்ந்து நடித்த தொஷிரோ மிஃபூனே (Toshirô Mifune), தனது இறுதி வாழ்நாள்வரை அவர் படங்களுக்கு இசையமைத்த ஃபுமியோ ஹயசாகா (Fumio Hayasaka) இருவரும் இப்படத்திலிருந்து குரொசாவாவுடன் இணைகின்றனர். மருத்துவர் சனதாவாக நடிக்கும் தகாஷி சிமுராவும்(’இக்குரு’ பட நாயகர்) தொடர்ந்து குரொசாவா படங்களில் நடித்தவர்.

Stray Dog (1949) திரைப்படத்தில் போலீஸ் பணியில் புதிதாக சேர்ந்த முரகாமியின் கைத்துப்பாகி பஸ்ஸில் செல்லும்போது திருடப்பட்டுவிடுகிறது. திருடியவனைப் பிடித்து கைத்துப்பாக்கியை மீட்பதற்காக ஊரெல்லாம் அலைந்து தேடுகிறான். ஒரு கொலையில் அத் துப்பாக்கி பயன் படுத்தப்டுகிறது. இறுதியில் மேலதிகாரி ஒருவரின் உதவியுடன் கொலையாளி பிடிக்கப்பட்டு, துப்பாக்கி மீட்கப்படுகிறது. முரகாமியாக மிஃபூனேயும் அதிகரியாக தகாஷி சிமுராவும் தோன்றுகின்றனர். போருக்கு பிந்தைய ஜப்பானின் அவல நிலை இப்படத்திலும் ஆழமாகச் சித்தரிக்கப்படுகிறது. 1950 இல் இரு படங்கள். முதலில் Shûbun வெளியானது.அடுத்து வெளிவந்த ’ரஷோமோன்’ குரொசாவாவிற்கு உலக இயக்குநர்கள் வரிசையில் அழியாத இடத்தைப் பெற்றுத்தந்த திரைப்படம். பழம்பெரும் க்யோட்டோ நகரின் தென்புற ரஷோமோன் வாயிலில் கொட்டும் மழைக்காக ஒதுங்கியிருக்கும் மூவர் பேசிக்கொண்டிருக்க கதை துவங்குகிறது. காட்டு பாதை வழியே பயணம் செய்யும் ஒரு சாமுராய் கொல்லப்ப்பட்டு அவன் மனைவி கற்பழிக்கப்பட்ட செய்தியை மத குரு சொல்ல, உடனிருக்கும் மரம் வெட்டி காட்டினுள் சாமுராயின் உயிரற்ற உடலைத் தான் கண்ட நிகழ்ச்சியை விவரிக்கிறான். மூன்றாவது நபரான வழிப்போக்கன் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

அடுத்து, காவல் நிலையம். கொல்லப்பட்ட சாமுராயின் மனைவி நடந்ததைச் சொல்கிறாள். கணவனையும் தன்னையும் காட்டுப் பாதையில் வழி மறித்த கொள்ளையன் தஜிமோரோ, கணவனைக் கட்டிப்போட்டுவிட்டு தன்னை கற்பழித்துவிட்டுச் சென்றுவிட, கணவன் கத்தியால் தன்னை மாய்த்துக் கொண்டதாகக் கூறுகிறாள். கைது செய்யப்பட்டிருக்கும் தஜிமொரோ இதற்கு நேர்மாறாக, கறப்பழித்தபின் சாமுராயின் மனைவி தன்னை விரும்பி, தன்னுடன் வருவதற்கு வேண்டிக் கொண்டதாகவும், தன் கணவனை கொன்றுவிட சொன்னதாகவும் சொல்கிறான். வாட் சமரில் சாமுராயை அவன் கொன்றபின், மனைவி தப்பி ஓடிவிட்டதாக சொல்கிறான்.

ஒரு சாமியாடி மூலம் இறந்தவனின் வாக்குமூலத்தைக் கேட்கிறோம். மனைவி தன்னை கற்பழித்த திருடன் தஜிமோரோவுடன் சென்றுவிட விரும்புகிறாள். கோபத்திலிருக்கும் சாமுராயிடம் அவளைக் கொன்றுவிடுமாறு தஜிமோரோ சொல்கிறான். அவள் தப்பித்து ஓடிவிடுகிறாள். கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் சாமுராய், திருடன் தஜிமோரோ சென்றபின், கத்தியால் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான்.

இறுதியாக, மரம் வெட்டி தான் சொல்லாமல் மறைத்ததாக, நடந்தவற்றை மீண்டும் விவரிக்கிறான். கற்பழித்தபின் அப்பெண்ணை தன்னுடன் வந்துவிடுமாறு தஜிமோரோ கெஞ்சுகிறான். தனக்காக இரு ஆண்களும் வாட் சண்டையிட்டு, வெற்றிபெற்றவர் தன்னை அடைவதுதான் முறை என்கிறாள். தொடரும் வாட் சமரில் கணவன் கொல்லப்படுகிறான். மனைவி தப்பித்து ஓடிவிடுகிறாள். தஜிமோரோ, சாமுராயின் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, குதிரையுடன் சென்றுவிடுகிறான்.நடந்த நிகழ்வுகள், அதைக் காண நேரிட்ட மரம் வெட்டியாலும், அந்நிகழ்வுகளில் நேரடி தொடர்புடையவர்களாலும் விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சொலபவரின் கோணத்தில், நடந்ததை திரையில் காண்கிறோம். நான்கு பேர்கள் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யார் சொல்வது உண்மை, யார் கொலையாளி என்பவை பதில் கிட்டாத கேள்விகளாகின்றன.

’உண்மை’ என்பது என்ன என்பதற்கான ஒரு தியானம் என விமரிசகர்களால் சிலாகிக்கப்படும் படைப்பு ‘ரஷோமோன்’. குரொசாவாவின் வழக்கமான நேர்கோட்டுக் கதை சொல்லலிலிருந்து இத்திரைப்படம் மாறுபடுகிறது. ரஷோமோனை ஒரு அறிவியல் புதிராகக் கொள்ளலாம். தத்துவ அடிநாதங்களுடன் கூடிய சிக்கலான ஒரு புதிருக்குள் நம்மை குரொசாவா அழைத்துச் செல்கிறார்.

நிகழ்ந்தவற்றை வெவ்வேறு கோணங்களில் ஐந்து முறைகள் திரையில் காண்கிறோம். ஒவ்வரு முறையும் புதிதாகக் காண்பதாகவே உணருகிறோம். ஒவ்வொரு முறையும் வாட் சண்டை காட்சிகளும் வேறுபடுகின்றன. மனைவி சொல்லும் கதையில் இருவரின் ஆக்ரோஷமான வாட் சணடையையும் இறுதியாக மரம் வெட்டி சொல்லும் கதையில் நிகழும் வாட் சமரில், போரிடும் இருவரும் உயிருக்குப் பயந்து உணர்ச்சிகள் அலைக்கழிக்கப் போரிடுவதையும் காண்கிறோம்.
குரொசாவா தேர்ந்த ஓவியர். இப்படம் முழுவதும் ஒளியும், நிழலும் கவித்துமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. காட்டினுள், உச்சி வானில் ஒளிரும் கதிரவனை, மரங்களூடே நேராக காமெரா கொண்டு காட்டிக் கொண்டே செல்லும் காட்சி போன்று படம் முழுவதும் விரவிக்கிடகும் ஒளிப்பதிவு புதுமைகள். காட்டுக்குள் கண்ணாடிகொண்டு பிரதிபலிக்கப்பட்ட ஒளியைப் பயன்படுத்தி படமெடுக்கப்பட்டது. மௌன படங்கள் போல முற்றிலும் பிம்பங்களை கொண்டே குரொசாவா கதையைக் கொண்டு செல்கிறார். வசனங்கள் இரண்டாம் பட்சமாகின்றன.

புரிந்துகொள்ள முடியவில்லை என, ’ரஷோமோன்’ கதையின் கருத்தை தெளிவாக்குமாறு கேட்டுக் கொண்ட அவரது உதவி இயக்குநர்களுக்கு குரொசாவா சொன்னது: ’தங்களுடனும், பிறருடனும் நேர்மைமையாக இருப்பது என்பது மனிதர்களால் முடியாத காரியம். தங்களைப்பற்றியும், தாங்கள் அறிந்தவற்றைப் பற்றியும் அதிகமாக இட்டுக் கட்டி பெரிதாக்கிச் சொல்லாமல் மனிதர்களால் இருக்க முடியாது. இத்தகைய மனிதர்களைப் பற்றிய கதை இது. இப்பொய்கள் இவர்கள் தங்களைப் பெரியவர்கள் என நினைத்துக் கொள்ளச் செய்பவை. ’நான்’ எனும் ஆணவத்தைக் கொண்டு விரித்துக் காட்டப்படும் ஒரு விசித்திர ஓவியச் சுருளாக இப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.’

முடிவில், அனாதையாக விடப்பட்ட கைக்குழந்தையை தன் குழந்தைகளுடன் வளர்ப்பதற்காக மரம் வெட்டி அன்புடன் எடுத்துச் செல்வது, சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளாலும் மனமுடைந்து மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்த மத குருவை வாழ்க்கையின் மீதும் மனிதர்களின் மீதும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச்செய்கிறது.ரஷோமோனுக்குப் பின் ஜப்பானிய திரைப்படங்களின் பக்கம் உலகின் கவனம் திரும்பியது. இக்ககதைப் பாணியை பின்பற்றி இன்றுவரை திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. ரஷொமோன் வெளிவந்து சில வ்ருடங்களில் இப்படத்தின் பாணியை பின்பற்றி, வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள்’ தமிழ் நாட்டில் 1954 இல் வெளியானது.

அடுத்த படத்திற்காக குரொசோவா தாஸ்தோவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை தேர்ந்தெடுத்தார். தயாரிப்பாளர்களான ஷொச்சிக்கு ஸ்டுடியொவுக்கும் குரொசாவாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தன. நன்றாக எடுக்கப்பட்டிருந்த ’இடியட்’ துரதிர்ஷ்டவசமாக சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் குரொசாவாவின் அடுத்த படத்தைத் தயாரிக்க இருந்த டேயீ நிறுவனம் அதை ரத்து செய்தது. மனமுடைந்த குரொசாவா நடப்பது நடக்கட்டும் என மனைவியுடன் விடுமுறையை கழிக்க கடற்கரை பக்கம் சென்றுவிட்டார். வீடு திரும்பியபோது ரஷோமோன் வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்ற செய்தி அவருக்காக காத்திருந்தது,

ரஷோமோன் வெனிஸுக்கு அனுப்பட்டது குரொசாவாவுக்கு தெரியாது. ஜப்பானிய திரையுலகை சேர்ந்த சில முக்கியமானவர்களின் வற்புறுத்தலினால், டேயீ ஸ்டுடியோ தயக்கத்துடன் இப்படத்தை அனுப்பியிருந்தது. வெனிஸில் ’தங்க சிஙகம்’ விருது பெற்றபின் ரஷோமோன் உலக திரையரங்கின் சூடான விவாதப் பொருளானது. சிலர் புறக்கணிக்க, சிலர் எதிர் விமரிசனங்கள் எழுப்ப, இங்க்மர் பெர்க்மன் போன்ற ஐரோப்பிய இயக்குநர்களுடன் அமெரிக்க இயக்குநர்களும், முக்கிய விமரிச்கர்களும் இப்படத்தின் புதுமையை வியந்து பாராட்ட, குரொசவாவின் படைப்புகளுக்கு உலக திரையரங்கில் ஒரு வகையான எதிர்பார்ப்பு உருவானது.

குரொசவாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ’இக்குரு’ – Ikuru (1952) தொஹோ ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டது. முப்பது வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காது பணிக்கு சென்றுகொண்டிருக்கும் நகராட்சி அலுவலக அதிகாரி வாட்டானபேயின் கதை. மாற்றங்களின்றி தினசரி ஒரே ஒழுங்குடன் செல்லும் மந்தமான வாழ்க்கை. மனைவி இறந்தபின், மகனுடனும் நெருக்கமாக இல்லாது மனதளவில் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். .

வயிற்று வலிக்கான மருத்துவ சோதனைகள் வயிற்றில் புற்று நோய் முற்றிய நிலையிலிருப்பதைத் தெரிவிக்க,. இன்னும் சில மாதங்களே உயிர்வாழ முடியும் என்பது தெரிய வருகிறது. சோதனை முடிந்தபின், கதிரவன் மறையும் காட்சியை அநுபவித்து காண்பவருக்கு மனது உறுத்துகிறது. அன்றுவரை தான் வாழ்க்கையை நிராகரித்து வாழ்ந்திருப்பதை வலியுடன் உணருகிறார். அவருடைய வாழ்க்கை அடியோடு மாறுகிறது.

மதுக்கூடத்தில் தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரை அன்றிரவு சந்திக்க, இருவரும் மது அருந்திக்கொண்டு காலைவரை சுற்றி அலைகின்றனர். உடன் பணிபுரியும் இளம் பெண்ணுடன் நட்பு கொண்டு அவளை வெளியே அழைத்துச் செல்கிறார். அனைத்துக்கும் மேலாக வாழ்வில் முதல் முறையாக பணிக்குச் செல்லாமல், மனம் விரும்பியபடி காலத்தைக் கழிக்கிறார். அலுவலகப் பணியில் அதுவரை அவர் கண்டுகொள்ளாமல் விட்ட, எழைகள் வாழும் குடியிருப்பில் பூங்கா அமைக்கப்படும் முயற்சிக்கு அனைத்து உதவிகளும் செய்து மன நிறைவோடு தன் இறுதி நாளைச் சந்திக்கிறார்.வாட்டானபே இறந்தபின், அவர் வீட்டில் நடக்கும் மது விருந்தில், அவரைப்பற்றி ஒருகாலத்தில் இகழ்ந்து பேசியவர் எல்லாம், இறுதி நாட்களில் அவரிடம் கண்ட மாற்றங்களையும், உறுதியுடன் அவர் பூங்கா திட்டத்தை பலத்த எதிர்ப்புகளூடே நிறைவேற்றியதையும் சேக்(Sake) மதுவின் தாக்கத்தில் நெகிழ்ந்து பேசிக்கொண்டிருக்க, நடந்தவற்றை ‘ஃப்ளாஷ்பேக்’ ஆக காண்கிறோம். ஒன்றுக்கும் உதவாதவர் என துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் வாட்டனாபே, துணிவுடன் மற்றவருக்கு நல்லது செய்தவராக இறுதியில் புகழப்படுகிறார். உயிர்வாழக் கிடைத்துள்ள நேரம் குறைவு என அறிந்த பின் அவருள் ஒரு மறுபிறப்பு நிகழ்கிறது.

குரொசாவாவின் படைப்புகளில் தனித்து நிற்கும் திரைப்படம். வாழ்க்கை, உயிர் பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பும் திரைப்படம். விறுவிறுப்பான காட்சிகளுக்கு இடமில்லாத சிக்கலான கதையை, தனது தனித்துவமான இயக்கத்தால் ஒரு நிமிடம் கூட தொய்வின்றி சொல்லப்படும் காவியமாக அளித்திருக்கிறார். தகாஷி சிமுரா, வட்டானபே பாத்திரமகவே மாறியிருக்கிறார். தான் கட்ட உதவிய பூங்காவின் ஊஞ்சலில் அமர்ந்து அசைந்துகொண்டு ’வாழ்க்கை குறுகியது’ என வாட்டானபே பாடிக்கொண்டிருக்கும் புகழ்பெற்ற காட்சியுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது....

பிரம்மாணடமான தயாரிப்பான ‘Seven Samurai’ 1954 இல் திரைக்கு வந்தது. பதினறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை. மலைப்புறத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயிகள் பாடுபட்டு விவசாயம் செய்து சேகரிக்கும் தானியங்களை அபகரித்துச் செல்லும் கொள்ளையரை முறியடிக்க முடிவு செய்கின்றனர். சாமுராய் வீரர்களைக் காவலுக்கு நியமிப்பதற்காக, சில விவசாயிகள் அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று தேடி, காலில் விழாக்குறையாக கெஞ்சி ஒவ்வொரு சாமுராயாகச் சேர்த்து, இறுதியில் ஏழு சாமுராய்கள் கொண்ட குழுவுடன் ஊர் திரும்புகின்றனர்.சாமுராய்கள் அந்த கிராமத்தில் வாழ்வதும், கிராமத்தாருக்கு பயிற்சி கொடுத்து போராடி, கொள்ளையரை நிர்மூலமாக்குவதும் படத்தின் கதை. நான்கு சாமுராய்கள் இப்போராட்டங்களில் உயிரிழக்கின்றனர். காதல் கதை ஒன்று கிளைக் கதையாக சொல்லப்ப்டுகிரது. சாமுராய் வீரர்கள் கொள்ளையரை வெற்றிகரமாக முறியடிப்பதுடன், ஊரார் ஒன்று சேர்ந்தால் எவ்வித எதிர்ப்பையும் முறியடிக்க முடியும் எனபதை அந்த விவசாயிகளை உணரச் செய்கின்றனர்

படமெடுப்பதற்குப் புதிய உத்திகளையும் நுட்பங்களையும் குரொசாவா பயன்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பல கேமராக்கள் பயன் படுத்தப்பட்டன. வாட் போர், அம்பு எய்தல், குதிரைகள் பயன்படுத்தப்பட்டுள்ள முறை அனைத்தும் பிரமிப்பூட்டுபவை. இப்படத்தின் சணடைக்காட்சிகள் பற்றி இன்றும் சட்டகம் சட்டகமாக விவரிக்கப்பட்டு எழுதப்பட்டுக்கொண்டி ருக்கிறது.

ஸ்டுடியோவிலிருந்து வெகு தொலைவிலிருந்த மலைப்பகுதியில் முழுப்படப்ப்டிப்பும் நடந்தது. செலவு திட்டமிட்டிருந்ததை விட மிகவும் அதிகமாக, தொஹோ ஸ்டுடியோ குரோசாவவைக் கட்டுப்படுத்த முயன்றது. குரொசாவா ஒத்துக்கொள்ளவில்லை. நினைத்தபடியே படத்தை எடுத்து முடித்தார். இப்படத்திற்கான செலவால் தொஹோ ஸ்டுடியோ முடப்படும் நிலைக்கு வந்துவிட்டது எனச் சொல்லப்படுவதுண்டு.

‘Seven Samurai’ படம் வெற்றிப்படமாக அமைந்தது. உலகெங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. பரிசுகள் பாராட்டுகள் குவிந்தன. ஹாலிவுட் முதற்கொண்டு - (Magnificent Seven, Wild Bunch) - பல நாடுகளில் இப்படத்தை பின்பற்றி படங்கள். உருவாயின. டொனால்ட் ரிச்சி போன்ற விமரிசகர்கள் மிகச் சிறந்த உலகத் திரைப்படங்களில் ஒன்றாக இப்படத்தை குறிப்பிடுகின்றனர்.

ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’ நாடகத்தை குரொசாவா ஜப்பானிய ‘நோ’ (Noh) நாடகபாணியில் ‘Throne of Blood ‘ (1957) திரைப்படமாக உருவாக்கினார். ஜபபானிய சூழலுக்கு ஏற்ப, பதினாறாம் நூற்றாண்டில் நடப்பதாக அமைக்கப்பட்ட கதை. ஜப்பானிய சரித்திரத்தின் சோதனை மிகுந்த காலங்களில் ஒன்றான பதினாறாம் நூற்றாணடைச் சார்ந்த கதைகளையே பெரும்பாலும் குரொசாவா தனது சரித்திர திரைப்படங்களுக்கு பயன்படுத்தினார்.
கதாநாயகன் வஷிஸுவாக மிஃபூனேயும், தீய எண்ணங்களின் மொத்த உருவான மனைவி அஸ்ஸாஜியாக, இஸுசு யமதாவும் (ரஷோமொன் கதாநாயகி) நடிக்க, ஃப்யுஜி மலையில் அரங்கம் எழுப்பப்பட்டு பல காட்சிகள் படமாக்கப்பட்டன. தொஹோ ஸ்டுடியோவிலும் ஃப்யூஜி மலையிலிருந்து கொண்டுவரப்ப்ட்ட கருத்த எரிமலை மண்ணைப் பயன்படுத்தி இதற்கான அரங்கம் உருவாக்கப்பட்டு படமெடுக்கப்ப்ட்டது.

தலைவனுக்காகப் போரிட்டு எதிரிகளை முறியடிக்கும் முக்கிய தளபதி வஷிஸு, தன் மாளிகைக்கு வந்து தங்கும் தலைவனை மனைவி அஸ்ஸாஜியின் ஆலோசனைப்படி கொன்று அடுத்த தலைவனாகிறான். குற்ற உணர்வு ஆக்கிரமித்து அலைக்கழிக்க, அடிக்கடி மன நிலை குலைந்து அலைமோதுகிறான். அஸ்ஸாஜியும் உளநிலை பதிக்கப்பட்டு தன் கைகளில் தலைவனின் ரத்தம் இருப்பதாகக் கற்பனை செய்து, அடிக்கடி கைகளைக் கழுவிக் கொண்டேயிருக்கிறாள்.

நடக்கப் போகும் நிகழ்வுகளை ஒரு ஆவி முன்பே சொல்லிவிடுகிறது. அதன் படி தனக்குப் பின் தன் நண்பனின் மகன் அரியாசனத்தைக் கைப்பற்றுவான் என அஞ்சும் வஷிஸு அவனைக் கொல்ல முயலுகிறான். இறுதியில் அவன் மாளிகையை எதிரிகள் முற்றுகையிடும் நேரம், தன் படைவீரர்களாலேயே கொல்லப்படுகிறான். காட்சியமைப்புகளின் பிரம்மாண்டம், நவீன உத்திகள், காமெரா கோணங்கள் – இவற்றுடன் மூடுபனியும் காற்றும் நிறைந்த கருப்பு நிற ஃப்யூஜி மலைப்பகுதியும் சிறப்பான நடிப்பும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
ஷேக்ஸ்பியர் நாடகத்தின் உள்ளடக்கத்தைக் கொண்ட புத்த அறவியல் புனைவாக இப்படத்தை குரசோவா உருவாக்கியிருக்கிறார். தற்பெருமையும், அகங்காரமும், நினத்ததை அடைந்தே தீரவேண்டுமெனும் பேராசையும் மனிதனை நிர்மூலமாக்கிவிடுவதை இப்படம் சொல்லுகிறது., சக்தி மிக்க தலவன் வஷிஸுவின் கோட்டையும் வீரர்களும் இருந்த இடம் இறுதியில், மயானமாக ஒரே ஒரு அடையளக்கல்லுடன் மூடுபனியிடையே தெரிவதைக் காண்கிறோம்.
தாஸ்தோவ்ஸ்கியின் ‘The Lower Depths’ நாவல் ‘டொஷென்க்கோ’ திரைப்படமாகப் பரிணமித்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னான ‘எடோ’ காலத்தில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்க்கையைப் பதிவுசெய்வதாக இப்படத்தை குரொசாவா அமைத்தார். அந்தக் காலத்திற்கேற்ப அரங்கமும், பாத்திரங்களுக்கான ஆடைகளும் அமைக்கப்பட்டன.

நாற்பது நாட்கள் தொடர்ந்த ஒத்திகைக்குப் பிறகு நேரடியாகப் படப்பிடிப்பு நடந்தது. மிஃபூனே, இசுசு யமதாவுடன் குரொசாவா படங்களின் வழக்கமான நடிகர் குழாத்திலிருப்போர் நடித்தனர். திருடர், நோயுற்றோர், முதியவர், சூதாடிகள் தங்கும் கொட்டடி போன்ற விடுதி. அதன் உரிமையாளன் கறாரானவன். அவன் மனைவிக்கும் அவள் சகோதரிக்கும் அங்குள்ள ஒரு திருடன் மேல் ஆசை. சிரிப்பும் ஏளனமுமாகப் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் அங்கு தங்கும் ஒரு நடிகனின் தற்கொலையுடன் முடிகிறது.

தாஸ்தோவ்ஸ்கியின் இந்தக்கதை பிரெஞ்சு இயக்குநர் ழான் ரென்வரால் 1936 இல் படமக்கப்பட்டிருந்தது. இரண்டு திரைப்படங்களும் கட்டாயம் பார்க்கப்பட வேண்டியவை. ரென்வாரை பின்னாளில் குரொசாவா நேரில் சந்தித்தார். இப்படம் வெளியான நேரத்தில் குரொசாவாவுக்கு லண்டனில் விட்டோரியோ டி சிகா, ஜாண் ஃபோர்ட், ரெனெ க்ளேய்ர் ஆகியோருடன் நடந்த பாராட்டு விழாவில் “Throne of Blood” படத்திற்கு விருது அளிக்கப்பட்டது.

1958 இல் குரொசாவவின் ‘The Hidden Fortress’ வெளியனது. ஃப்யூஜி மலையின் அடிவாரத்தில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. உள்நாட்டுப் போர்கள் நிறைந்திருந்த காலத்தில், நாடிழந்த ஒரு இளவரசி, அவள் அரசவையைச் சேர்ந்த ஒருசிலருடன் மலைப்பகுதியில் எதிரிகளிடமிருந்து மறைந்து தங்கியிருக்கிறாள். அவளைப் பாதுகாக்கும் தளபதியாக மிஃபூனே நடித்திருக்கிறார்.
போர்க்களங்களில் கொல்லப்பட்டவர்களின் உடமைகளைத் திருடி வாழும் வேலையற்ற இரு விவ்சாயிகள், இளவரசியிடமிருக்கும் தங்கத்தைத் திருடமுயன்று தோல்வியுறுகின்றனர். அவர்களைக் கொண்டே அந்தத் தங்கத்தை இளவரசியும் தளபதியும் எதிரியின் சோதனைச் சாவடிகள் வழியே கடத்தி எடுத்துச் செல்கின்றனர். இறுதியில் இழந்த நாடு மீட்கப்பட, இளவரசி அரசியாகிறாள் சன்மானங்களுடன் விவசாயிகள் இருவரும் ஊர் திரும்புகின்றனர்.

படத்தில் காட்டப்படும் தீ விழாவும், அடிமைகளின் கலவரமும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப் பட்டிருப்பவை. குரொசாவாவின் மிகப் பெரிய வெற்றிப்படங்களில் இப்படம் ஒன்று. அவரின் முதல் ’அகலத் திரை’ (Wide Screen ) திரைப்படமும் ஆகும்.

குரொசாவா முப்பது திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். 1960க்கு முன்பு வரை இந்த மேதையின் உருவாக்கத்தில் வெளியான திரைப்படங்களைப் பற்றி இங்கு கண்டோம். அறுபதுகளுக்க்ப் பின் குரொசாவா இயக்கிய திரைப்படங்கள், அவரது வாழ்க்கை , கலை பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.
அகிரா குரொசாவா - பகுதி இரண்டு


(தொடரும்)

Tuesday 10 January 2012

மாமல்லன்: படத்தையும் படிக்கலாம்

கோணங்கள் அடுத்த திரையிடல்-
ஃப்ரான்ஸெஸ்கோ ரொஸ்ஸியின்
Christ Stopped at Eboli

15 ஜனவரி 2012 மாலை 5.45 மணி பெர்க்ஸ் மினி திரையரங்கம்

மாமல்லன்: படத்தையும் படிக்கலாம்