Saturday, 6 February 2021

லெனி ரைபென்ஸ்தால்




லெனி ரைபென்ஸ்தால்

எஸ்.ஆனந்த்


புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர், நடிகை, அழகி,  திரைப்படக்கலையின் இலக்கணத்திற்கும், அழகியலுக்கும் வளம் சேர்த்த முன்னோடி, லெனி ரைபென்ஸ்தால் (Leni Riefenstahl).  
லெனியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ’கௌண்ட்டர் பன்ச்’ (Counter Punch) இதழில் ‘என்றும் சாகாத நாஸி’, என்று கட்டுரை வெளியானது. 
லெனி ரைபென்ஸ்தால்  ஜெர்மனியர்.  ஹிட்லரையும், பிரச்சார மந்திரி கோயபல்ஸையும் நெருக்கமாக அறிந்தவர். ’Triumph of the Will ’  நாஸி பிரச்சாரப்படத்தை  இயக்கியவர். இக் காரணங்களால்  இரண்டாம் உலகப் போருக்குப் பின் சபிக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டவர்.  இருந்தும் இன்றுவரை  ஒரு உண்மையை யாராலும்  மறுக்க   முடிய வில்லை. லெனி ஒரு மேதை; திரைப்பட மேதை. 
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால்  ’ஒதுக்கப்பட்ட’ நாடானது. லெனி மீதான எதிர்மறை விமரிசனங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன, விமரிசனங்களைத் தாண்டி   திரைப்படக் கலையை ஆராதிக்கும் ஆர்வலர்கள் பலரால்  லெனி   கொண்டாடப்பட்டு வருவதையும்,  உலகின் மிகச்சிறந்த பெண் இயக்குநர்களில் முதலிடம் வகிப்பவராக மதிக்கப்படுவதையும்,  காண்கிறோம். 

லெனியின் கலை முயற்சிகள் பல்கலைக் கழகங்களின் திரைப்படப் பாடங்களில் இடம்பெற்றுள்ளன. ’ டைம்’ பத்திரிகை 20ஆவது நூற்றாண்டின் நூறு முக்கிய கலைஞர்களில் ஒருவராக லெனியைக் குறிப்பிட்டுள்ளது. ஹாலிவுட்டால் புறக்கணிக்கப்பட்ட லெனிக்கு, வாழ்நாள் சாதனைக்கான விருதை  அமெரிக்காவில்  1997 ஆம் வருடம் சினிகான் (Cinecon ) லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வழங்கியது. 2003 ஆவது வருடம் மரணமடையும் வரை லெனிக்கு ரசிகர் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன.  லெனியை நாஸி என இறுதிவரை  நிரூபிக்க முடியவில்லை.  
லெனியை ஹிட்லரின்  பிரச்சார இயக்குனர் என ஒதுக்குவது சரியா? அல்லது கலைத் தாயின் குழந்தை எனக் கொண்டாடுவது சரியா? இந்த விவாதங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. லெனியை எவ்வாறு எதிர் கொள்வதாயினும், லெனி ரைபென்ஸ்தால் என்ற பெண்ணின் வாழ்வையும்,  படைப்புகளையும் பற்றி முதலில் அறிவது அவசியம்.  
சினிமா தோன்றி ஏழு வருடங்களில், 1902 இல் பெர்லினில் பிறந்த லெனியின் சிறுவயது  தேவதைக் கதைகளைப் (Fairy tales) படிப்பதிலும் அக்கதைகள் சொல்லும் கற்பனை உலகில் வாழ்வதிலுமாகக் கழிந்தது. விடுமுறை நாட்களில் பெர்லினுக்கு அருகில் ஒரு ஏரிக்கரையோரம் இருந்த வீட்டிலும், மரங்களும் காடுகளும் அடர்ந்த்த அதன் சுற்றுப்புறங்களிலும் தனிமையில் காலம் கழிப்பது பிடித்த பொழுது போக்காக இருந்தது.   இயற்கையின் மீதான லெனியின் மோகம்  இறுதி வரை குறையவில்லை.
நடனமும் , ஓவியமும் கற்றுக் கொண்டிருந்த லெனி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். மொர்னவ் போன்ற பல முக்கிய ஜெர்மானியத் திரைப்பட இயக்குனர்களின்  உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஜெர்மானிய  நாடக இயக்குனரும் , தயாரிப்பாளருமான மாக்ஸ் ரெயின்ஹார்ட் (Max Reinhardt)  லெனியைத் தனது நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொண்டார். விரைவில்  நடன நிகழ்ச்சிகளுக்காகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பபட்டார். பிரபலமடைந்து வரும் வேளை ஒரு விபத்தில் முழங்காலில் அடிபட  நடன வாழ்வு முற்றுப்பெற்றது. 
லெனி முழங்கால் வலியுடன் இருந்த நேரத்தில் ஒரு திரைப்பட அரங்கைக் கடந்து  செல்ல வேண்டியதிருந்தது. வலியையும் மீறி சினிமா ஈர்க்க, உள்ளே சென்ற லெனியை, அந்தத்   திரைப்படம் முழுமையாக ஆட்கொண்டது.. அத்திரைப்படம் புவியியலாளரும்  மலை ஏறும்  நிபுணருமான  ஆர்னால்ட் பான்க்கின் (Arnold Fanck) ‘மலை’ படங்களில் (Mountain films) ஒன்று. அனைத்துத் திரைப்படங்களும் ஸ்டுடியோக்களில் தயாராகிக் கொண்டிருந்தன. அதற்கு நேர்மாறாக  மலை ஏற்றம், பனிச்சறுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட நடிகர்கள், காமெரா நிபுணர்கள் கொண்டு முற்றிலும் இயற்கையுடன் இணைந்த மலைப் பகுதிகளில் பான்க் தனது படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது திரைப்படங்கள்   பிரம்மாண்டமான மலைகளில் நடைபெறும் சாகசம் நிறைந்த கதைகளைக் கொண்டிருந்தன.   
இயற்கை விரும்பியான  லெனி பான்க்கின் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.. பான்க்கின் இயக்கத்தில் லெனி நடித்த  முதல் படம் ‘The Holy Mountain’  1926 இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.  மலை ஏற்றம். பனிச்சறுக்கு போன்றவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற லெனி , தனக்குப் பிடித்த இயற்கை எழில் சூழ்ந்த மலைகளில் சாகசங்கள் நிகழ்த்தும் கதாநாயகியாகத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். வழக்கமான சரித்திர, குடும்பத் திரைப்படங்களுக்கு மாறாக அழகான இளம் லெனியுடன்,  இயற்கையையும் , உடல் வலிமையையும்  முன்னிறுத்திய இப்படங்கள் பெரிதும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. 
லெனி ஜெர்மனியின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படலானர். ஜெர்மனிய இயக்குனர் F.W.மொர்னவின் ஃபாஸ்ட் (FAUST) திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும்  வாய்ய்பு மயிரிழையில் தவறியது.  ஜெர்மனியில் லெனிக்குப் போட்டியாக இருந்தவர்  எனச் சொல்லக்கூடிய  ஒரே நடிகை,  மயக்கும் விழிகளுடன் ஐரோப்பா முழுவதும் ரசிகர்களைத் தன்  பிடியில் வைத்திருந்த மார்லீன் டெய்ட்ரீக் (Marlene Dietrich). 
நடிப்பதை விடப் படங்களை இயக்குவதில் லெனிக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. சொந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ‘ரைபென்ஸ்தால் ஸ்டுடியோ பில்ம்ஸ்’  இதற்குள்  உருவாகிவிட்டிருந்தது. அவர்  இயக்கி, கதாநாயகியாக நடித்த Blue Light (1932)    திரைப்படமும், அவர் இயக்கிய Triumph of the Will,  Olympia ஆகிய இரு ஆவணப்படங்களும் லெனி ரைபென்ஸ்தால் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவராக அறியப்படுவதற்குக்  காரணமாயின.
லெனியின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம்  Blue Light    ஹங்கேரிய திரைப்படக் கோட்பாட்டாளர் பெலா பலாஸுடன் (Béla Balázs),  இணைந்து உருவாக்கிய படம்.    இத்தாலிய டோலமைட் மலைப் பகுதியில் நிகழும் கதை. வெகுளியான  இளம் பெண் ஜுண்ட்டா மலை  மீதுள்ள குடிலில் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்துபவள்.  அருகிலிருக்கும்  கிராமத்தினர் அவளைச்  சூனியக்காரி என  ஒதுக்கி வைத்திருக்கின்றனர். 
பவுர்னமி இரவுகளில் மலையின் மேலிருந்து வெளிப்படும்  நீல நிற ஒளியில்  அந்தக் கிராமமே முழுகிவிடுகிறது. ஒளி வரும் இடத்தை  அடைய முயன்ற  பல இளைஞர்கள் தவறி விழுந்து மரணமடைகின்றனர். வியன்னாவிலிருந்து வரும் ஒரு இளம் ஓவியன் அந்தக் கிராமத்து விடுதியில்  தங்குகிறான். 
ஜுண்ட்டாவை சந்திக்கும் ஓவியன் விரைவில் அவளுடனே தங்கிவிடுகிறான். இருவரின் பேசும் மொழிகள் வேறு. சைகைகளால் பேசிக்கொள்ளுகின்றனர். பவுர்னமி இரவில் ஜுண்ட்டா மலை மீது ஏறுவதைக் கண்டு பின் தொடருகிறான். நிலவொளியை நீல வண்ணத்தில் பிரதிபலிக்கும் அற்புதக் கற்கள் எராளமாக இறைந்து கிடக்கும்  மலைப்பகுதியில் மெய்மறந்து ஜுண்ட்டா அமர்ந்திருப்பதைக்  காண்கின்றான்

ஓவியனுக்குப் பவுர்னமி இரவின் நீல வண்ண ஒளி, மாய ஒளியல்ல; விலை மதிப்பற்ற கற்களால் பிரதிபலிக்கப்படும் நிலவின் ஒளியெனப் புரிகிறது.  கிராம மக்களிடம் அதைச் சொல்கிறான். பேராசை கொண்ட அந்த மக்கள் மலையிருந்த  விலைமதிப்பற்ற கற்களை விற்பதற்காக எடுத்து வந்துவிடுகின்றனர். இதை அறியாத ஜுண்ட்டா, மீண்டும் பவுர்னமியன்று நீல ஒளியைத்தேடி மலை மீது ஏறும் போது இருளில் வழி தெரியாது தவறி விழுந்து இறந்துவிடுகிறாள். 
மலைகளில், இயற்கையாக எடுக்கப்பட்ட படம். சில முக்கிய நடிகர்கள் தவிர நடித்தவர் அனைவரும் அந்த மலையகக் கிரமத்து மக்கள். பிற்காலத்தில் இத்தாலியில் உருவான ’நியோ ரியலிச’ பாணியை ஒத்து அமைந்திருக்கும். படம். அற்புதமான   ஒளிப்பதிவும் லெனியின் திறமை யான எடிட்டிங்கும் கொண்ட  Blue Light     லண்டனிலும் , பாரிசிலும் சிறப்பான  வரவேற்பைப் பெற்றது. வியன்னா திரைப்பட விழாவில் வெள்ளிப்பதக்கம் பரிசு பெற்றது. 
ஜெர்மனியின் பொருளாதார நிலை மோசமான நிலையை அடைந்திருந்தது. முதல் உலகப் போரில் படு தோல்வியடந்த பின் சரியான ஆட்சியில்லாமல் நாடு எங்கோ போய்க்கொண்டிருந்தது குழப்பமான அரசியல் சூழ்நிலை வேறு.   நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த பணவீக்கம், திருட்டுச் சந்தை, உணவுத் தட்டுப்பாடு,  விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசின் மீது  மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருந்திருந்தனர்.
ஜெர்மனியை மீட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல வல்லவரான ஒரு தலைவருக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். 1930களில் ஜெர்மனியில்  தேசியப் பொதுவுடமைக் கட்சியின் (National Socialist Party) தலைவர்களில் ஒருவரான ஹிட்லர், ஜெர்மனியை உலகின் முதன்மையான நாடாக மாற்றுவது பற்றிய தனது அனல் பறக்கும் பேச்சுக்களால் மக்களை ஈர்த்துக்கொண்டிருந்தார், இவரது பேச்சுக்காகவே பலர் இக்கட்சியில் சேர்ந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. தேசியப் பொதுவுடமைக் கட்சி வளர்ந்து,  ஜெர்மானிய அரசியல் அரங்கின்  முக்கிய அங்கமான ’நாஸிக் கட்சி’யாக ஆனது.  
லெனி ஹிட்லரின் தீவிர விசிறியானார்.  அனறைய அனைத்து ஜெர்மனிய மக்களைப் போல, ஹிட்லரை ஜெர்மனியை மீட்க அவதரித்த தலைவனாக ஏற்றுக்கொண்டார். ஹிட்லரின் பேச்சை நேரில் கேட்டபின்  எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து கடிதம் எழுத,  ஹிட்லரிடமிருந்து உடனே அழைப்பு வந்தது. 
1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன்,  கட்சிப் பிரச்சாரப் படங்கள் தயாரிப்பதற்கு லெனியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. நாஸிக் கட்சிக்காக லெனி தயாரித்த முதல் பிரச்சார ஆவணப்படம் 1933 நியூரம்பர்க் கட்சி மாநாடு பற்றிய ’Victory of Faith’. கட்சிப் பிரச்சினைகளால் இப்படம் வெளியே காட்டப்படாமல் நிறுத்தப்படது. அடுத்த வருடம், 1934 இல்  நியூரம்பர்க்கில் நடக்கப்போகும் நாஸிக் கட்சி மாநாட்டை படமெடுக்கும்படி லெனி கேட்டுக்கொள்ளப்பட்டார். விளைவு, என்றும் பேசப்படும் அளவில் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட Triumph of the Will. 

வானில் பறந்துகொண்டிருக்கும் ஹிட்லரின் விமானத்திலிருந்து காணும் மேகங்களுடன்  Triumph of the Will   தொடங்குகிறது. நியூரெம்பர்க் நகரின் மேல் வரும்போது ஹிட்லரின் விமான நிழல் நகரின் மேல் நகர்ந்து செல்வதும், ஹிட்லர் விமானத்தில் நியூரெம்பெர்க்கில் இறங்குவதும்,    ஒரு கடவுள் வானிலிருந்து பூமிக்கு இறங்கி வருவது போல் காட்டப்படுகிறது. வழி நெடுக மக்களின் ஆரவாரத்துடன் நீண்ட வாகன அணிவகுப்பு. வழியிலிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள், சிறுவர், வயதானவர் – எனக் காமெரா இவர்களை அருகாமை கோணங்களில்  இடையிடையே காட்டிக்கொண்டே ஹிட்லரைத் தொடருகிறது. 
இரவு ஹிட்லர் தங்கும் விடுதியின்  முன் கலை நிகழ்ச்சிகள். மறுநாள் ஹிடலர் பார்வையிடும் அணிவகுப்புகள். இரண்டு லட்சம் பேர்களின் இறுக்கமான அணிவகுப்பை லெனி படமாக்கிருக்கும் விதம் பிரமிப்பை அளிக்கிறது. ஹிட்லரின் அடுத்த நிலையிலிருக்கும் ருடால்ப்ஃ ஹெஸ் ஆரம்பித்து வைக்க, முக்கிய தலைவர்களின் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகள் ஆரம்பிக்கின்றன. ஹிட்லரின் பேச்சு  மெதுவாக ஆரம்பித்து உணர்ச்சியின் உச்சத்தில் முடிகிறது. யூதர்களைத் தாக்கும் இனவெறிப்பேச்சுகள் இந்த சொற்பொழிவுகளில் இல்லை. மாறாக ஹிட்லரின் பேச்சில்  ஜெர்மனிக்கும் உலகுக்கும் தேவையான அமைதி பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. 
விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து மரியாதை செய்கின்றனர். ஹிட்லர் நிகழ்த்தும் உரை முடிந்தபின். நடக்கும்  இரவு வாண வேடிக்கைகள் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாஸிக் கட்சியின் பிரிவுகள் அனைத்துமே ராணுவம் போல சீருடைகளுடனும், விதிமுறைகளுடனும் இயங்குவதைக் காண்கிறோம். இறுதி நாளன்று ஹிட்லரின் உரை முடிந்த பின் ”ஹிட்லர் தான் ஜெர்மனி , ஜெர்மனி தான் ஹிட்லர் ” எனும் ருடால்ப்ஃ  ஹெஸ்ஸின் முழக்கத்துடம் படம் முடிகிறது. 
மிகவும் நெருக்கமான அருகாமை கோணங்களும், மிகத் தூரக் கோணங்களும் (extreme long shots) சிறப்பாகப் படம் முழுக்கப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன, தலைமை நிலையை வலியுறுத்தும் வகையில்  ஹிட்லரைப்  பெரும்பாலும் தாழ்கோணங்களில் கீழிருந்து படமாக்கிருக்கின்றனர்.  அணிவகுத்து நடப்போரை வானிலிருந்து காமெரா கொண்டு  அவர்களின் நிழல்களுடன் மேலிருந்து காட்டுவது போன்று படம் முழுவதும் சிதறிக்கிடக்கும் ஒளிப்பதிவு அற்புதங்கள். ஒளிப்பதிவுக்கலையும், காட்சி அமைப்புக் கலையும் புதிய உயரங்களுக்குக்  கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 
இப்படத்தின் பாதிப்பு இன்றும், இனிவரும் காலங்களிலும் தொடருவதைத் தவிர்க்க முடியாது. அன்று  ஆர்சன் வெல்ஸின் ‘சிட்டிசன் கேன்’ படக் காட்சிகள் இப்படத்தின் காட்சிகளுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டன. பின்னர் தொடர்ந்து   வந்த ஏராளமான  திரைப்படங்களில் இப்படத்தின் காட்சியமைப்புகளும் காமெரா கோணங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. ஜார்ஜ் லூக்காஸ், ரிட்லி ஸ்காட், ஸ்டீவென் ஸ்பீல்பெர்க், எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  
அழகியலையும், சிறப்பான  உத்திகளையும் மட்டும் கொண்டு  ஒரு படம் சிறப்பானது எனக் கணிப்பது தவறு. அப்படத்தின் சாரம் - உள்ளடக்கம் – என்னவெனக் காண்பது அவசியம். அப்படிப் பார்க்கையில் ஒலிம்பியா நாஸிகளையும் ஹிட்லரையும்  முன்வைக்கும் படம். இதைப் பற்றிப் பேசுவதே தவறு என எதிர்ப்புகள் ஒருபக்கம் .
இது ஒரு கட்சியின் மாநாட்டையும் அக்கட்சியின் தலைவரையும் காட்டும் படமேயன்றி எதிர்மறையாக எதையும் சொல்லும் படமல்ல. சினிமா எனும் கலைவடிவத்திற்கு உரம் சேர்க்கும் நுட்பங்கள் பல கொண்ட படம் . இப்படத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள  பல புதிய உத்திகள் திரைப்பட வளர்ச்சிக்கு  இன்றியமையாதவை. எனப் பாராட்டுகள் ஒரு பக்கம். 


லெனியின் மீதான கடுமையான எதிர்ப் பிரச்சாரம் இப்படத்துடன் தொடங்குகிறது. Triumph of the Will லெனியின் திறமைகளை உலகறியச் செய்த படம். அதே சமயம் லெனிமீது இறுதிவரை அழிக்கமுடியாத கறை படியச் செய்த படமும் கூட. சக ஜெர்மானியரைப் போல, ஜெர்மனியைக் காக்கவந்த  மானுட தெய்வமாக ஹிட்லரை நம்பிய லெனியால் எடுக்கப்பட்ட இப்படம், ஹிட்லரின் உண்மையான முகம் வெளிப்பட்டபின், லெனி  புறக்கணிக்கபடுவதற்கு முக்கிய  காரணமானது. வாழ்நாள் முழுவதும் லெனியின் மீதான இந்தப் பழியும் புறக்கணிப்புகளும் தொடர்ந்தன.
Triumph of the Will லெனிக்கு ஜெர்மனியில் புதிய அங்கீகாரத்தை அளித்தது. அடுத்து  1936 பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் படமெடுக்கும் பொறுப்பு  லெனிக்கு அளிக்கப்பட்டது. லெனியின் மேதமையை முழுமையாக வெளிப்படுத்தும் படம் ’ஒலிம்பியா’. நாலாயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற பத்தொன்பது விளையாட்டுகளின் 129 நிகழ்வுகள் (events)  செலுலாய்ட் கவிதைகளாக நம் கண்களின் முன் திரையில் விரிகின்றன. விளையாட்டுகளின் விறுவிறுப்பும், வேகமும்  சற்றும் குறையாது காட்டப்படுள்ளன. ஒலிம்பியா இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. 
முதற்பகுதி – Festival of the Nations .  ஒரு இசைக் காவியத்தின் prelude போலத் தொடங்குகிறது. கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்த காலத்தை நினவுறுத்துவதாக, இன்று சிதிலமடந்து கிடக்கும்  பண்டைய  கிரேக்க  அரண்மனைகள், கட்டிடங்கள் வழியாகத் தொடங்கும்  காமெராவின் பயணம், கிரேக்க  அரீனாவின்  நீண்டுயர்ந்து நிற்கும் தூண்கள் இடையே தெரியும்  வானையும் மேகஙளையும் அடைவதுடன்,  பண்டைய மனித உருவங்களுக்கு மாறுகிறது. ஆண்களில் ஆரம்பித்துத் தொடர்ந்து கவித்துவமான ஒவியங்கள் போலக்  காட்டப்படும் பெண்களின் உடல்கள். தொடரும் காட்சிகளில்   ஒலிம்பிக் தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி ஓடிவரும் பண்டைய விளையாட்டு வீரன் நவீன தீபத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வீரனாக மாறுகிறான்.  இந்தப் பன்னிரண்டு நிமிட முன்னுரையின் -prologue -  முடிவில்  ஒலிப்பிக் தீபம் அரங்கில் ஏற்றப்படுகிறது.
அனைத்து நாடுகளின் அணிவகுப்பு முடிந்தவுடன் போட்டிகளின் ஆரம்பம். ஆண் பெண் இரு பாலர்க்கும்  போட்டிகள் தொடர்கின்றன. பாலே நடனம் போல நாம் காணும் உயரத் தாண்டுதல் (high jump), நிழல்களாகக் காணும் வாட்சண்டைப் போட்டி, அவ்வப்போது மெதுவான வேகத்திற்கு (slow motion) மாறும் ஓட்டப்பந்தயங்கள், பிரமிப்பூட்டும் தாழ் கோணங்களில் காட்டப்படும் காட்சிகள் எனத் தொடர்ச்சியாகப் பந்தயங்கள் கலையுணர்வோடு அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன.  
முதல் பகுதியின் உச்சம் மாரத்தான் ஓட்டப்பந்தயம். காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் முறை நம்மையும் ஓடுபவர்களில் ஒருவராக்கி விடுகிறது.  ஓடிக்கொண்டிருக்கும் கால்கள், இறுகும் கால் தசைகள், ஓடுபவர்களின் நிழல்கள்  என ஒவ்வொரு சட்டகத்திலும் ஓட்டதின் வேகத்தையும் , சக்தியையும் உணரமுடிகிறது.  இந்த முதல் பகுதியின் கதா நாயகன் நான்கு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்லும் அமெரிக்க கருப்பின ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்ஸி  ஓவன்ஸ்.
இரடாவது பகுதி – Festival of Beauty-  ஒலிம்பிக் வீரர்கள் தங்குமிடங்களில் இயற்கையோடு இணைந்து கலையழகோடு  எடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் உடல்கள் காட்டப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது. ஹாக்கி, கால்பந்தாட்டம், குதிரை ஓட்டம், எனத்  தொடரும் பந்தயங்கள். இறுதியில் உச்சமாகக் காட்டப்படுவது தண்ணீரில் குதிக்கும் (diving ) போட்டிகள். மேலிருந்து குதிப்பவர் தண்ணீரில் மூழ்கி நீரினடியில் சென்று மேலே எழும்பி வரும் வரை காமெரா தொடர்கிறது. ஒவ்வொருவரும் குதிக்கும் பலகைகளிலிருந்து மேலெழுவதை  கீழிருந்து காணும்போது பறவைகள் பறக்கத் தொடங்குவது போல நாம் காண்கிறோம். அடுத்தடுத்த காட்சிகளாக இக்காட்சிகள்  காட்டப்பட்டுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
வெகு சில இடங்களில் ஹிட்லர் காட்டப்படுகிறார். அதுவும், இறுக்கமாகப் பதட்டத்துடன் போட்டிகளைப் பர்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு வெற்றிக்குப் பின் அமெரிக்க தேசிய கீதத்துடன் அமெரிக்கக் கொடி அருகாமையில் காட்டபடுகிறது. அமெரிக்க வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அதிகம் காட்டப்பட்டிருக்கிறார். ஜெர்மனி குறைவாகவே காட்டப்பட்டிருக்கிறது.
ஒலிம்பிக் அரங்கத்தில்  முன்கூட்டியே படப்பிடிப்புக்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒளிப்பதிவிற்கான பல புதிய உத்திகள் இந்தப் படத்திற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டன. பதினாறு நாட்கள் நடந்த விளையாட்டுப் போட்டிகள் முப்பதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களால் படமாக்கப்பட்டன. ஒலிம்பியா படக்குழுவில் மொத்தம் முன்னூறூ பேர்களுக்கு மேல் இருந்தனர். அதி நவீன லென்ஸ்களுடனான காமெராக்கள் உபயோகப்படுத்தப்பட்டன.  தாழ்கோண காட்சிகள் தோண்டப்பட்ட  குழிகளிலிருந்தும், உயர் கோணக் காட்சிகள்  இரண்டு உயர் கோபுரங்கள் மேலிருந்தும் படமாக்கப்பட்டன.. ஓட்டப்பந்தயங்கள் , படகோட்டம் நீச்சல் முதலியவை அதே வேகங்களில்  நகர்த்த்தப்பட்ட கேமராக்களால் படமாக்கப்பட்டன.  
இறுதியில் காட்டப்படும்  தண்ணிரில் குதிக்கும் (diving) போட்டிக் காட்சிகளை  மேலிருந்து ஒன்று; கீழிருந்து ஒன்று, தண்ணீருக்கடியில் ஒன்று என மூன்று காமெராக்களுடன் மூன்று கோணங்களில் ஒளிப்பதிவாளர்கள்  படமாக்கினர். படமெடுப்பதற்கான ஒவ்வொரு கோணமும், காமெராக்களில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு லென்ஸும் லெனியினால் முடிவுசெய்யப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 250 மணி நேரம் ஒடும் படச் சுருள்களைப் பார்த்து முடிப்பதற்கு  லெனிக்கு மூன்று மாதங்களானது. இப்படத்தை லெனி எடிட் செய்வதற்கு ஆன காலம் ஒன்றரை வருடங்கள். 1938 இல் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது.

விளையாட்டு நிகழ்ச்சிகள்  பற்றிய  ஆவணப் படங்களில் லெனி ரைஃபெந்த்தலின் ஒலிம்பியா முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  ஒலிம்பியாவுக்காக  லெனியால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல புதிய  எடிட்டிங், இயக்க உத்திகளும்,  ஒளிப்பதிவு நுட்பங்களும் இன்றைய திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக் காட்சி விளம்பரங்கள், எடுக்கப்படும் முறைகளில் இரண்டறக் கலந்துவிட்டவை;   என்றும் பயன்படுத்தக்கூடிய அளவு நவீனமானவை. ஒலிம்பியாவுக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பத்து வருடங்கள் கழித்து சர்வதேச ஒலிம்பிக் குழு இப்படத்திற்காக லெனிக்கு  தங்கப்பதக்கம் வழங்கியது.  1955 இல்  உலகின் மிகச்சிறந்த பத்து படங்களில் ஒன்றாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டது. 
1938 இல் ஒலிம்பியாவை அறிமுகப்படுத்த அமெரிக்காவிற்கு சென்ற லெனி  அங்கு வால்ட் டிஸ்னியின் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஜெர்மனிக்குத் திரும்பியபின் ஆரம்பித்த திரைப்படம்  Lowlands,     பல முறை தடைபட்டு , 1944 இல் முடிக்கப்பட்டது. வெளிவருவதற்கு மேலும் பத்து வருடங்கள் ஆயின. இதற்கிடையில் 1944 இல் ஒரு ராணுவ உயர் அதிகாரியுடன் நடந்த லெனியின் திருமணம் இரண்டு வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.   
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு, லெனி மூன்று வருடங்கள் சிறையிலிருந்தார். லெனியிடமிருந்த படமெடுக்கும் கருவிகளும் திரைப்படங்களும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய சொந்த வீடுகளையும் இழந்தார்.  சில நாட்கள்  மன நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாஸிகளுடன் ஒருவராக விசாரணை செய்யப்பட்டார். 
லெனி நாஸிக் கட்சி உறுப்பினரல்ல. படமெடுக்கும்போது காண நேர்ந்த நாஸிக் கட்சிக் கூட்டங்களைத் தவிர  எந்த நாஸி கட்சிக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை. நாஸிகள் நடத்திய இனப் படுகொலைகளில் அவருக்குப் பங்கில்லை. யூத இன வெறுப்புப் பிரச்சாரத்திலும் பங்கில்லை. இந்த விவரங்கள் நேச நாடுகளின் விசாரணைகளில் நிரூபணம் ஆன பின் லெனி ஒரு நாஸி அல்ல ஆனால் நாஸி அனுதாபி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு  விடுதலை செய்யப்பட்டார். 
விடுதலைக்குப் பின் தாயுடன் பெர்லினில் அடுக்கு  மாடிக் குடித்தனப் பகுதி ஒன்றில் வாழ்ந்தார். 1952ல் பின்லாந்து ஒலிம்பிக் பந்தயங்களைப் படமாக்கக்  கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டார். 1953 இல் பறிமுதல் செய்யப்பட்ட படங்களும், காமெரா, எடிட்டிங் உபகரணங்களும் திருப்பி அளிக்கப்பட்டன. 1954 இல் Lowlands திரைக்கு வந்தது. லெனியின் மேதமையை நன்கறிந்த  பிரெஞ்சு கவிஞரும் இயக்குநருமான ழான் காக்தூ (Jean Cocteau) அவ்வருடக் கான் திரைபட விழாவில் (Cannes Film Festival)  அப்படத்தை  இடம்பெறச் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. 
ழான் காக்தூ, Blood of a Poet (1930) , Beauty and the Beast (1946), Orpheus(1960) போன்ற முக்கிய திரைப்படங்களை அளித்திருப்பவர். லெனி அவருடன் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்த  வால்ட்டேரின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்  1963 இல் காக்தூவின் மறைவினால் நின்றுபோனது. தொடர்ந்து  கென்யாவின் அடிமை வணிகம் பற்றி  ஆவணப் படமெடுக்கச் சென்ற லெனி  கார் விபத்தில் படு காயமடைந்தார். அந்தப் படபிடிப்பும் நிறுத்தப்பட்டது.
திரைப்படங்களை எடுக்க லெனி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பிறாரால் தடுக்கப்பட்டன அல்லது இடையில் நிறுத்தப்பட்டன. லெனி புகைப்படக் கலைக்கு திரும்பினர். 1962 இல் சூடானிலிருந்த நூபாவுக்கு(Nuba) ஜெர்மன் ஆய்வுக் குழு ஒன்றுடன் சென்றவர், மீண்டும் அங்குள்ள பழங்குடிகளை புகைப்படம் எடுப்பதற்காகச் சென்று அவர்களுடன் பல மாதங்கள் தங்கினார்.  அவர்களின் மொழியையும் , வாழ்க்கை முறைறைகளையும் அறிந்தார். முற்றிலும் இயறகையோடு இணைந்திருந்த நூபிய மக்களின் வாழ்க்கை லெனி வாழ விரும்பிய வாழ்கையோடு ஒத்திருந்தது. 

நூபா பழங்குடிகளின் புகைப்படங்கள் அடங்கிய லெனியின் முதல் புத்தகம் The Last of the Nuba, 1972 இல் வெளிவந்து.  Africa, People of Kau என வரிசையாக லெனியின் புகைப்படப் புத்தகங்கள் வெளிவந்தன.  புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராக அறியப்படலானர். சூடான் அவருக்குச் சிறப்புக் குடியுரிமை அளித்துக் கவுரவித்தது.  லெனியிடம் வெளிப்படையாகத் தொடர்பு கொள்வதை பலர் தவிர்த்த போதிலும் சில முக்கிய கலைஞர்கள், இயக்குனர்கள்,  திரைக்கலை அறிஞர்கள் துணிந்து அவரது திறமைகளை வெளிப்படையகப் பேசினர், பழகினர்.  பிரான்ஸின் புதிய அலை சினிமா இதழ் ‘Cahiers du Cinéma ‘1965 செப்டம்பரில்  லெனியின் பேட்டியை வெளியிட்டது. ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ குழுப் பாடகர் மிக் ஜாகர் போன்ற பிரபலங்கள் அவருடைய இல்லத்திற்கு  விருந்தினராகச் செல்ல ஆரம்பித்தனர். 
கலையுலகில் நிலவிவந்த வெறுப்பு நீங்கி, லெனிக்கு அங்கீகாரம் கிடைப்பது போலத் தோன்றிய நிலை கண்டு லெனி எதிர்ப்பாளர்கள், குறிப்பாக அமெரிக்க யூதக் குழுக்கள் லெனி மேல் பாய்ந்தன.  பல எதிர் விமரிசனங்கள் இவர்களிடமிருந்து எழுந்தன. நூபா புகைப்படங்களில்  தொடங்கி லெனியின் கலை, ஜெர்மானியர்களின் அழகியல் பார்வை அனைத்தையும் விமரிசித்து  சூசன் சோண்ட்டாக் எழுதிய கட்டுரை  ’Fascinating Fascism’ 1974 இல் வெளிவந்தது. லெனி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலும் பிரச்சினைகள் ஏற்படுத்தினர்.. திரைப்பட விழாக்களில் லெனியின் படங்கள் திரையிடப்படுவது பலமுறை  இவர்களால் தடுத்து நிறுத்தப்ப்ட்டது. 
எழுபத்தி ஓராவது வயதில் ஆழ்கடல் மூழ்கும் பயிற்சி பெற்ற லெனி  கடலின் அற்புதங்களைப் படமெடுக்கத் தொடங்கினார். செங்கடல்., இந்தியப் பெருங்கடல், மாலத் தீவுகள் கடல் பகுதிகளில் படங்கள் எடுப்பது  தொடர்ந்தது. 1978 இல் லெனியின் புகைப்படப் புத்தகம் Coral Gardens வெளியிடப்பட்டது. 2003 இல் லெனியின் ‘Wonders Under Water’ ஆவணப் படம் வெளிவந்தது.  Lowlands வெளியாகி நாற்பத்து ஒன்பது வருடங்களுக்குப் பிறகு  வெளிவந்த  லெனியின் ஒரே படம். 

நூறாவது வயதில் லெனி மீது மீண்டும் விசாரணை. இரண்டாம் உலகப்போருக்கு முன்  Lowlands படத்தில் சிறையிலிருந்த ஜிப்ஸிகள் நடித்திருந்தனர்.  இவர்களில் பலர் நாஸிகளால் ஆஸ்விட்ஸ் முகாமில் பின்னர் கொல்லப்பட்டது லெனிக்கு தெரியாது நடந்த  விசாரணையில் நாஸிகளின் செயலுக்காக வருந்துவதாக லெனி மன்னிப்புக் கோர,  தண்டனையின்றி விடுவிக்கப்பட்டார்.  
லெனியின் உடல் நிலை மோசமாக ஆரம்பித்தது. கென்யா கார் விபத்தும்,  சூடானில் 2000 இல் அவர் செத்துப் பிழைத்த  ஹெலிகாப்டர் விபத்தும் உடலை வெகுவாகப் பாதித்திருந்தன.  2003ஆம் ஆண்டு 101 ஆவது பிறந்த நாள் கழிந்து சில வாரங்களில்  மரணமடைந்தார். 
லெனியைப் பற்றிய முக்கிய விமரிசனம், அவர் ஹிட்லருக்கு பிரச்சார படமெடுத்ததற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்பது.  ஹிட்லரைத் தான் சந்தித்தது பெரும் தவறு. ஹிட்லர் ஒரு அரக்கன் என்பதை அறிவதற்கு முன்பே எடுக்கப்பட்ட Triumph of the Will உம், ஒலிம்பியாவும். அரசியல் நோக்கம் இன்றிக் கலைப் படைப்புகளாகவே தன்னால் உருவாக்கப் பட்டவை. தான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என இறுதிவரை மறுத்துவிட்டார். .

லெனி  ஹிட்லரின் ரகசியக் காதலிகளில் ஒருவர் என உலவிய  செய்தியை வன்மையாக மறுத்தார். கட்சிப் பிரச்சாரப் படங்கள் தயாரித்த நேரங்களில் சந்தித்தது  தவிர பிற சந்தர்ப்பங்களில்  ஹிட்லரை அரிதாகவே சந்தித்திருப்பதாக அவரது சுய சரிதையிலும், நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
லெனி சொல்வது அனைத்தும் பொய் என  லெனியை  விமரிசிப்பவர்கள் கூறுவது உண்டு. இவர்கள் சொல்வது  எந்த அளவு உண்மை என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் லெனிக்கும் ஹிட்லருக்கும் இடையே இருந்த உறவு பற்றி அறிவதற்கான சான்றுகள் இல்லை; சம்பந்தப்பட்டவர்கள் ஜெர்மனியின் தோல்விக்குப் பின் உயிருடன் இல்லை. விசாரணை செய்யப்பட்டு தணடிக்கப்படிருந்தனர்; அல்லது தற்கொலை செய்து இறந்திருந்தனர். பிரஸ்த்ரோய்க்காவிற்குப் பின் ரஷ்ய அரசால் மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பபட்ட கோயபல்ஸின் டயரி லெனிக்கு எதிரான செய்திகள் மீண்டும் பரவக் காரணமானது.. லெனி இவைகளைத் தீர்க்கமாக மறுத்தார். 
ஹிட்லரின் நாஸிக் கும்பல் இழைத்த அநீதிகளுக்கு  ஜெர்மனியும் அதன் மக்களும்  அளித்த விலை மிக அதிகம். போர்க்குறங்களுக்காக மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கப்பட்டது,  நாஸிகள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு   தண்டிக்கப்பட்டனர். நாஸி வேட்டை இன்னும்  தொடருகிறது. தலைநகர் பெர்லின், ரஷ்யாவாலும் அமெரிக்காவாலும் இரு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது.. இடையில் சுவர் வேறு கட்டப்பட்டது. ஜெர்மானிய மக்கள் de Nazify செய்யப்பட்டனர்.  இன்றுவரை பிற ஐரோப்பிய,  அமெரிக்க நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 
லெனியின் படங்கள்  Blue Light, Triumph of the Will, Olympia  மூன்றும் இப்போது சிறந்த முறையில் மறு பதிவு செய்யப்படு  கிடைக்கின்றன.  இவற்றைக் காண்பதற்கு முன் கட்டாயம் பார்க்க வேண்டியது, லெனியின் வாழ்க்கையையும் அவரது படைப்புகளையும்  நடு நிலையுடன் விவரிக்கும் ரே முல்லரின் (Ray Muller) ஆவணப்படம், The Wonderful, Horrible Life of Leni Riefenstahl. 
இந்த உலகம் லெனியிடம் சிறிது கருணையுடனும் இரக்கத்துடனும் இருந்திருக்கலாம்.
இரண்டே படங்கள் , அதுவும் ஒரு பெண், தனியாக, ஆணாதிக்கம் மிகுந்த திரைப்படத் துறையில்,  தனது 36ஆவது  வயதுக்குள் இயக்கி அளித்த படங்கள், திரைப்படச் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. திரைப்படக் கலை உள்ளவரை லெனியின் பெயரைச் சொல்லுவதற்கு அவருடைய படைப்புகள் போதும். 

லெனியின் படைப்புகள்:
2003 - Underwater Impressions (documentary),1954 - Lowlands, 1938 - Olympia Part One: Festival of the Nations (documentary), 1938 - Olympia Part Two: Festival of Beauty. (documentary), 1935 Triumph of the Will (documentary), 1935 - Tag der Freiheit - Unsere Wehrmacht (documentary short), 1933 - Victory of the Faith (documentary), 1932 - The Blue Light
கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
Propaganda and the German Cinema, 1933-1945 by David Welch
World Film Directors Vol 1- 1890 to 1945 Ed by John Wakeman
Historical Dictionary of German Cinema by Robert C Reimer & Carol J Reimer



Monday, 16 April 2018

Wong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா


Wong Kar Wai என்ற ஜென் குரு
தமிழ்சினிமாவில்அழகியல்
காட்சி அழகியலில் நொண்டி அடிக்கும் தமிழ் urban சினிமா


ஒரே படம் என்னுடைய ஒட்டுமொத்த சினிமா பற்றிய பார்வையை தலைகீழாக புரட்டி போட்டதென்றால் அது ‘In The Mood For Love‘. இத்தனை வருடங்களில் அந்த படத்தின் காட்சிகளை பலமுறை திரும்பச்சென்று பார்த்திருக்கிறேன்,அது எப்படி இந்த சினிமா சாத்தியம் என்று பிரம்மித்து போயிருக்கிறேன்.அது ஒரு ஜென் துறவி எடுத்த படமாகத்தான் இருக்கவேண்டும் என தீர்க்கமாக நம்பினேன்.  

நாட்கள் கடந்தோட, அந்த படத்தின் ஒளிப்பதிவு மட்டும் என்னை விட்டு விலகிச்செல்லாமல் மீண்டும் மீண்டும் காட்சிகளை போய்ப்பார்க்க வைத்தது. Christopher Doyle பற்றி தேடித் தேடி படித்தபோது Wongன் பெரும்பாலான படங்களில் அவர்தான் ஒளிபதிவாளர் என்று தெரிந்தவுடன், ஆர்வத்தோடு அந்த படங்களை தேடி, Chunking Express பார்க்க அமர்ந்தேன். இன்னொரு மெதுவாக தியானித்து நகரும் படமாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்தால்,படம் ஓட ஆரம்பித்து ஒரு இருபது நிமிடத்தில் அவ்வளவு நாளாக தேடிகொண்டிருந்த முதல் காதலியின் முகத்தை கண்டடைந்தது போன்ற ஒரு பேரானந்தம். அது ஒரு ஜென் துறவி செய்த படம் போல இல்லை;மாறாக ஒரு kungfu சண்டைக்காரன் வானத்தில் எகிறி மண்டையில் அடித்த படம் போல இருந்தது.ஆச்சரியமோ ஆச்சரியம். எப்படி ஒரு இயக்குனர் ஜென் துறவி போலவும் அவதானிக்கிறான், kungfu சண்டைக்காரன் போலவும் சம்மட்டியடி அடிக்கிறான் யாரடா இவன்? என்று வாய்பிளந்ததுண்டு. அந்த படம் தந்த உணர்வெழுச்சியில் சிறிதாக கலங்கிப்போனேன். Styleற்காக அழவைத்த வெகு சில இயக்குனர்களில் Wongமுக்கியானவர்.

சரி இவருக்கு இருவேறு மனநிலை சாத்தியம் போல என்று அவரின் இன்னொரு படமான Fallen Angels பார்த்தபோதுதான் எனக்கு விளங்கியது. இவன் ஒரு ஜென் மனநிலை கொண்ட kugnfu சண்டைக்காரன் என்று.

https://www.youtube.com/watch?v=vHaAcaAOy-w

இந்த காட்சியை நாம் உடைத்து பார்ப்பதற்கு முன்பு, மெதுவாக தியானித்து தொடங்கும் அந்த shotsஐ கவனியுங்கள், அவன் செய்யப்போகும் ஒரு கொலையை நோக்கி காட்சி பயணிக்கிறது என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் மெல்ல ஒரு கவிதையைப்போல Wongற்கே உரித்தான அந்த styleஓடு நாம் மிதந்துகொண்டே இருக்கும்போது கடைசி முப்பது நிமிடம் பட் பட் பட் என்று துப்பாக்கி தெறித்து அதகளம் செய்து, மீண்டும் ஒரு ஜென் துறவியின் சாந்தத்தோடு காட்சி நிறைவுறும். இதுதான் wong.

Doyle என்ற தெய்வம்:

படத்தின் ஒளிப்பதிவாளர் Christopher Doyle ஒரு கலைஞன் மட்டும் அல்ல நெகிழ்ந்து போகக்கூடிய குழந்தை மனம் படைத்த மனிதன்.கலை என்பது நல்ல மனதில் இருந்துதான் பிறக்க முடியும் என்ற என் நம்பிக்கையை மேலும் வலுவாக்கும் ஒரு ஆத்மா. அவன் ஹாங்காங் மக்களோடு மக்களாக கலந்துவிட்டவன்.அந்த நிலப்பரப்பை தனதாக்கிக்கொண்டவன். அவன் பார்வையில் neon ஒளி விளக்கில் ஹாங்காங்கை பார்ப்பது அலாதியான அனுபவம்.Fallen Angels ஒரு extreme wide ல் செய்யப்பட்ட படம். அவர்கள் வாழும் குறுகிய அறைகள், தெருக்கள், இவைகளில் அந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தனித்து இருக்கின்றன என்பதை, இந்த 14mm லென்ஸ் தரும். சற்றே இழுக்கப்பட்ட(Skewed) கோணத்தை வைத்து காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும்,அதுவே அழகியல் தேர்வாக (Aesthetic choice) படம் முழுக்க ஆகிவிட்டதும் அருமை.இந்த இறுதி காட்சியை பாருங்கள், அவளின் உலகம் எவ்வளவு தனிமையும் ஏக்கமும் நிறைந்தது என்பதையும் அவள் நம் அருகாமையில் இருந்தாலும் விலகியே இருக்கிறாள் என்ற உணர்வை பரிமாற இந்த 14mm extreme wide தரும் கோணம் தான் காரணம் 

https://www.youtube.com/watch?v=T0d5-ge8KmY

wongஒரு visual கவிஞன். அவன் வடிப்பது கதைகளை அல்ல visual கவிதைகளையே.Chunking Express ஒரு கதையில் தொடங்கி அனாமத்தாக வேறொரு கதைக்கு மாறி பயணிக்கும்.கதை நிகழும் அந்த இடமும் சூழலும் தான் Wong சொல்ல வரும் கதையே தவிர பாத்திரங்களுக்குள் இருக்கும் உறவும் முரண்களும் இரண்டாம்பட்சமே. இங்கிருந்துதான் அவனுக்கான திரைமொழி உருவாகிறது.அவன் இடவெளியில்(Space) இருந்ததுதான் கதைகளை சொல்கிறான்.ஒரு கதையை எழுதி ஒப்புக்காக ஒரு இடத்தில் நிகழ்த்துவதில்லை.ஹாங்காங் தான் களம், அந்த மாநகரத்தின் வண்ணமும் ஒளியும்தான் படத்தின் வண்ணமும் ஒளியும். Wong-ற்கென்று திரைமொழி என்ற சில வரையறைகள் இருந்தாலும் அது படத்துக்கு படம் வேறுபாடும். Chunking Expressல் நிறைய காட்சிகள் Long lensல் செய்யப்பட்டு இருக்கும்.படம் முழுக்க முகங்கள்,முகங்கள்,முகங்கள்... அதே நேரத்தில் சட்டென ஒரு wideற்கு செல்ல அவனுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை! எந்த விதியின் படியும் அவன் விளையாடுவதில்லை. உணர்வுகள் ஒன்றே அவனை உந்திச்செல்லும் விதி.

Wongன் ஒவ்வொரு frame-ம் பிரம்மிக்க வைக்க காரணம் அவன் அந்த நகரத்தை முழுவதுமாக உள்வாங்கி உள்ளான். இரவுகளில் அதன் வானம் எவ்வாறு உள்ளது,ஒளியை சாலைகளும் சுவர்களும் எவ்வாறு எதிரொளிர்கின்றன என்பதெல்லாம் அவனில் ஒரு பகுதியாக கலந்து விட்டது. கூடுதலாக ஒளிப்பதிவாளர் Doyle-லும் Honkongநகரத்தில்  ஒருவனாகே மாறிவிட்டதால் அவருடைய படங்கள் ரத்தமும் சதையுமாக பரிமாறப்படுகிறது. doyleஹாங்காங்கின் neon விளக்குகளை கையாண்ட விதம் wongன் அனைத்து படங்களிலும் ஒரு அழகியல் கூறாகவே அமைந்துவிட்டது. இதைப்பற்றி doyleபேசிய இந்த கோப்பு தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.

https://www.youtube.com/watch?v=97GwbI27w10&t=359s


Wong தன்னுடைய visual narrative-ஐ ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மூலாமாக அடைகிறார் என்பதே என்னுடைய புரிதல். ஒளிப்பதிவு எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு கட்சியையும் எவ்வாறு அதீத சிரத்தை எடுத்து அமைக்கிறார்கள் என்பது நாம் படிக்க வேண்டிய பாடம். இந்த கானொளியில், In the mood for love ல் வரும் ஜன்னல் காட்சியை எவ்வாறு தற்செயலாக அமைத்தார் என்பதை doyleவிளக்குவதை கவனியுங்கள். அவர்கள் எவ்வாறு அந்த கால இடவெளியில் இறங்கி அதை புரிந்து சினிமா என்ற கலைக்கு மிக அருகில் வேலை செய்கிறார்கள் பாருங்கள்.அவர்களுக்கானமொழி படிப்படியாக தனித்துவமாக அந்த நொடி, அந்த இடம் அந்த ஒளியில் தீர்மானிக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=iDMRB5cCrzY

4.17 ல் Doyle தன் காமெராவை கையில் வைத்துகொண்டு பம்பரமாக சுற்றிக்காட்டுகிறார் அவரின் அந்த handheld வித்தைகள் உலகப்புகழ் பெற்றவை. அதில் அவர் rhythm பற்றி குறிப்பிடுவது முக்கியம். நான் முன்னரே சொன்னது போல பெரும்பாலும் Wong படங்களின் இருக்கும் rhythm-ற்கு இவரின் காமெரா நகர்வுதான் அடிப்படை.
7.09 ல் பாங்காக் தெருக்களில் பாலியல் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் neon ஒளியைப்புரிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களுடைய ஒப்பனைகளை அமைத்துக்கொள்வதை எடுத்துக்காட்டி, வண்ணங்களைப் பற்றிய புரிதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிறார். ´உற்றுநோக்குதல் தானே கலையின் ஊற்றுக்கண்´. அதில் இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிடுகிறார். ´Cinematography is how a colour suggests certain emotion‘ ஆம் வண்ணங்கள் , காமெராவின் frame, அதன் நகர்வு இதெல்லாம் சேர்ந்தது தான் ஒரு சினிமா தன்னுடைய திரைமொழியை தகவமைத்துகொள்கிறது. 

ஒவ்வொரு காட்சியின் ஒளிச்சட்டகம் (Frame) அமைவது அந்த கதை நிகழும் அறைகளும் அந்த நிலப்பரப்பின் அளவீடுகளுக்குள்ளும் என்பது தெரிந்ததே. Wongன் படங்கள் ஹான்காங் புறநகரில் நெரிசல் மிகுந்த சிறிய அளவிலான அறைகளை கொண்ட குடியிருப்புகளில் நிகழ்பவை. அந்த குறுகிய இடவெளியில் எவ்வாறு doyleதன்னை வருத்தி, குனிந்து, வளைந்து, படுத்து எப்படியெல்லாம் படம்பிடிப்பார் என்று விவரிக்கும் இந்த காட்சி ரசிக்கத்தக்கது.

https://www.youtube.com/watch?v=yGgSaqInamM

ஒரு கலைஞன் எவ்வாறு உருவாகிறான். அவன் செய்யவேண்டிய ஆயத்தங்கள் எவை, அவன் வாழ்கை எவ்வாறு கலையோடு ஒட்டி இருக்கவேண்டும் என்று Doyle மணிக்கணக்கில் பேசியுள்ள ஆவணங்கள் இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன. இந்த பேட்டி அதன் அனைத்து சாராம்சங்களையும் உள்ளடக்கியவை. இதில் ஒன்றிலிருந்தே அவரின் ஒளிப்பதிவு பற்றிய தத்துவங்களை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=kQCkBV6rRcA&t=345s

Wongன் தியானித்து நகரும் எடிட்டிங்:

நன்கு கவனித்தீர்கள் என்றால் Wongன் எடிட்டிங் style எப்போதுமே doyleல் காமெரா நகர்வில் இருந்துதான் பெறப்படுகிறது. doyleஒரு இருப்புக்கொள்ளாத ஆள். அவர் ஒரு இடத்தில் நிற்காமல் நடனம் ஆடிக்கொண்டே இருப்பார் அவரின் நடனத்தின் rhythm தான் பெரும்பாலான Wongன் படங்களில் எடிட்டிங் rhythm. எனக்கு மிகவம் பிடித்தமான இந்த காட்சியை பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=P503l1lKrqA

இங்கு Doyleஒரு அலைபோன்ற மிதவை நகர்வை காட்சி முளுக்க அமைத்துவிட்டார். அது பாத்திரங்களை நெருங்கியும் விலகியும் சென்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அவனை கடந்து செல்லும் பாத்திரங்களை Doyle விலகிச்சென்று பிடிக்கும்போது, அடுத்த காட்சிக்கு மாறுகிறது. இன்னொரு பாத்திரம் அவனைகிடக்கும் போது காமெரா மீண்டும் விலகிச்சென்று அவர்களை பார்க்கிறது. இரண்டு வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அந்த இரண்டாவது கொலை நடக்கப் போகும் இடம் எப்படிப்பட்டது என்ற சூழல் அவனை விட்டு ஒவ்வொருமுறை விலகிச்செல்லும் போதும் புரியவைக்கப்பட்டு விட்டது. அவன் எவ்வாறு அசூகையாக அந்த கொலைகளை செய்கிறான்? என்பதும். அவன் அவனை கடந்து செல்பவர்களால் எவ்வளவு விரும்பப்படுகிறான்? என்பதும். அதை வைத்தே எந்த இடங்களிலும் சிரித்துக்கொண்டே புகுந்து கொலைசெய்கிறான் என்பதும் சரியாக கடத்தப்பட்டு விட்டது. அங்கே நாயகன் மட்டும் பாத்திரமில்லை. அந்த இடத்தை நிரப்பி வாழும் ஏனைய மனிதர்களையும் அந்த காட்சியில் சேர்ப்பது,அவர்களை வைத்தே edit-ஐ நகர்த்துவது. இதெல்லாம் நான் பிரெஞ்சு new wave சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். Fallen Angels, Chunking Express, Happy Together இவை மூன்றும் நேரடி Goddard பாதிப்புகளில் எடுக்கப்பட்டவை என்பது உண்மையே. முக்கியமாக Fallen Angels ஒருபடி மேலே போய் Breathless உருவாக்கிய அந்த jump cut அழகியலை விஞ்சிச்சென்றிருக்கும்.மீண்டும் மீண்டும் இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன் கேமரா அவனை விட்டு நகர்ந்து வேறொரு முகத்தில் போகும் போதெல்லாம் ஒரு கட். அட அட அட... இப்படியும் கூட editற்கான rhythm பிடிக்கப்படலாம் என்பது சிந்திக்கவைக்கிறது. கேமெராவின் அலைபோன்ற ஆட்டம், நகர்வு, விலகிச்செல்லல் இதைவைத்தே edit செய்தது Jump cut வரலாற்றில் ஒரு செவ்வியல் நேர்த்தி.
 

https://www.youtube.com/watch?v=01E5otZCpqw

எடிட்டிங்கில் ஒவ்வொருபடத்திலும் வேறுவேறு உத்தி பயன்படுத்துவதுதான் Wong அணுகுமுறை. Wong என்னுடைய இதயத்தின் உள்ளே சென்றது அவனுடைய soundtrack montagesஐ வைத்துதான். அவன் ஜென் குரு மனநிலையில் செய்த montageகள் நம்மை வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும். அந்த இசையின் ஓசைகளையும் அசைவுகளையும் சரியாக தன்னுடைய எடிட்டிங்கில் பயன்படுத்துவான். அவனுடைய காட்சி தேர்வுகளும் அந்த இசைக்கு ஏற்றார்போல் கச்சிதமாக பொருந்தும். நான் அவனுடைய பல படங்களை இருட்டு அறையில் தனித்து பார்த்த போது என்னையே மறந்து போய் இருக்கிறேன். இந்த பாடலில் Tonyயின் முகத்தில் அணைந்து அணைந்து ஒளிரும் விளக்கைப்பாருங்கள். அது இசைக்கு எவ்வாறு ஒத்துளைக்கிறது என்பதை கவனியுங்கள்.

https://www.youtube.com/watch?v=863Yzl5l2NM

இந்த montage கவித்துவத்தின் உச்சம். இந்த படத்தின் ஆரம்பமும் முடிவும் இதுதான், ஒரே காட்சிதான். ஒரே இசைதான். ஆனால் ஆரம்பத்தில் ஒரு உணர்வையும்... அதே காட்சி படத்தின் உள்ளே சென்று வந்த பின்பு முற்றிலும் வேறு ஒரு உணர்வையும் தரும். wongஇசையில் லயித்துகிடந்தவானாகத்தான் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நான் அவன் தேர்வு செய்த கலைஞர்களை தொடர்ந்து போய் புதிய புதிய இசைகளை கண்டடைந்து வருகிறேன். படங்களைத்தாண்டியும் அவனிடம் கற்க நிறைய உள்ளது.

https://www.youtube.com/watch?v=1NnK77cc8v0
இந்த காட்சி  வரும்போது    இசைக்கோர்வை. அந்த அருவி எங்கேயோ நம் மனதிற்குள்ளேயே ஊற்றுவது போல் ஒரு உணர்வு. யப்பா எங்காய்யா இருக்க!!! அந்த காலை காட்டு தெய்வமே.

https://www.youtube.com/watch?v=09i5JpuZf5U
இது wongஉலகப்புகழ் பெற காரணமாக அமைந்த இரண்டு தங்க நிமிடங்கள், அவர் உன்னத ஜென் குருவாகவே மாறி செய்திருந்த காட்சி. ஓராயிரம் முறை பார்த்தாலும் திகட்டாது. இதுபோன்ற இன்னொரு காட்சியோ இரண்டு நிமிடங்களோ என்னை பாதித்தது இல்லை. கலை கலை கலை!

https://www.youtube.com/watch?v=HzUdtdz2pmY
Wong-இடம் அவதானித்த முக்கியமான ஒரு உத்தி. ஒரு காட்சி ஒரு உணர்வை உருவாக்கும், அது நம்மை ஏதோ ஒரு நிலையில் கொண்டு சேர்க்கும். அப்படி ஒரு உணர்வு நிலையில் நாம் அவனோடு மேலெழும்பி வந்துவிட்டால்,அதை அவன் பொக்கிஷமாக மதிக்கிறான். நம் உணர்வுகளை மத்தித்து அங்கேயே நம்மை சற்று நேரம் ஆழ்ந்திருக்க வைக்கிறான்.அடுத்த காட்சியை திணித்து நம் உணர்வுகளை அவமதிப்பதில்லை.

Wongன் காட்சி அழகியலும்  சினிமாவை அணுகும் பாங்கும் ஒருவேளை   அவருடைய  நாட்டின் தத்துவ மற்றும் போர்முறை மரபுகள் தரும் ஒரு மனநிலையில் இருந்து வருகிறதோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. எதுவாக இருப்பினும் அவர் ஒரு கவிஞன். அவர் ஒரு கலைஞன். Wongதன்னுடைய பின்புலம் , சினிமா பற்றிய பார்வை, வாழ்வியல் , சினிமாவின் தத்துவங்கள் பற்றி பேசிய ஏராளமான பேட்டிகள் இணையம் எங்கும் விரவிக்கிடக்கிறது. இந்த பேட்டி அவரைப் பற்றி தெரிந்தது கொள்ள நல்ல தொடக்கமாக இருக்கக்கூடும்.

https://www.youtube.com/watch?v=7rXZCuo2MVQ

wongசெய்த urban சினிமா தனித்துவமானது. அது அவன் நகரத்தை உள்ளிருந்து வெளியாக நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இரவு நேர ஹாங்காங் எவ்வாறிருக்கும் ,அங்கிருக்கும் மனிதர்கள் எத்தகையவர், அவரின் வாழ்க்கை என்ன, அவர்களின் உலகம் எவ்வாறு தனிமையில் சிக்குண்டிருக்கிறது இவற்றை வெறும் கதைகளால் மட்டும் இல்லை. அந்த இட- காலவெளிக்குள் (Time and Space) நம்மை அழைத்து சென்று வாழவைக்கிறான். 

Wong தவிர்த்துவிடவே கூடாத படிக்கவேண்டிய சினிமாவின் முக்கியமான ஜென் குரு.


இவ்வளவு கதைகளையும் பேசியதற்கு காரணம், தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்த வரை ஒரு உருப்படியான urban சினிமா கூட வரவில்லை. வெற்றிமாறனின் பொல்லாதவன் சரியான இடவெளியில்(Space) செய்யப்பட்டது. ஆனால் அது அரைகுறை நேர்த்தியான படம், குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் அளவு கருதி அது ஊருக்கு ஒதுக்குபுறமாக செய்யப்பட்டது, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உண்மையிலேயே ஒரு நல்ல urban படம் ஆனால் அதில் சிக்கல் என்ன தெரியுமா நம்முடைய தெருக்கள் இன்னும் போதிய அளவிலும் நேர்த்தியாகவும் ஒளியூட்டபப்டவில்லை அதானால் மிஸ்க்கின் ஆங்காங்கே செயற்கை விளக்குகளை வைத்து நிரப்பி இருப்பார். அது ஏற்றுகொள்ளகூடியதே ஆனால் அது தனித்து தெரியும்.
நான் சொல்ல வருவது முழுமையான urban சினமா இன்னும் செய்யப்படவே இல்லை. சென்னையோ நம்முடைய வேறொரு நகரமோ ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு முக்கிய தெருக்கள் பாலங்கள் நினைவுச்சின்னங்களோடு சுருங்கி விடுகிறது என்பதே சோகமான உண்மை. நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த, நீங்கள் தினமும் புழங்குகிற, நீங்கள் உணவு உண்கிற, குடிக்கிற, பயணிக்கிற சென்னை ஏதாவது படத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளதா? சென்னையின் இரவும் பகலும் சரியாக படம் பிடிக்கபட்டு விட்டதா. அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம் தெரிந்துகொள்ளவும் பார்க்கவும் ஆர்வமாக உள்ளேன்.
நம்முடைய நிலப்பரப்பு நகரமாயினும் சரி, கிராமமாயினும் சரி இன்னுமே சினிமாவில் விஸ்த்தரிக்கபடவே இல்லை. நம்முடைய வாழ்வியல் மேம்போக்காக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நம் சினிமா வெறும் நுகர்பொருளாக மாறி பயனற்று போய்விட்டது. நம்முடைய எந்த சினிமாவையும் காட்டி “இதுதான் எங்கள் வாழ்க்கை” என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு படங்களைத் தவிர வேறெதுவும் இல்லாமல் போய் விட்டது. வீழ்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி!
ஒரு பழைய பண்பட்ட சமூகத்தின் வீழ்ச்சிஎன்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

Monday, 5 March 2018

இன்றைய உலக சினிமா - நிலவழகன் சுப்பையா

 இன்றைய உலக சினிமா

நிலவழகன் சுப்பையா



உலக சினிமா என்று குறிப்பிட்டவுடன் அது எந்த நிலத்தை சேர்ந்தது எந்த காலத்தை சேர்ந்தது என்ற கேள்வி கூடவே எழும். இந்தியாவில் இருந்து அழைக்கும் பொழுது அமெரிக்க சினிமாவை தவிர்த்து ஏனையவற்றை உலக சினிமா என்று அழைக்கிறோம். அதைத்தாண்டியும் ஒரு சிலவரைமுறைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. உலக சினிமா என்பது ஒரு சில அழகியல் அம்சங்களை கொண்ட திரைமொழியை குறிகிறது என்பது என் எண்ணம். அத்தகைய திரைமொழி கடந்த நூற்றாண்டு கால சினிமா வரலாற்றில் மாறிக்கொண்டே வந்து இருக்கிறது. சினிமாவில் உலகம் முழுக்க கதைசொல்லலில், திரைமொழியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்ன.சிந்தனைத்தளத்தில் சினிமா எவ்வாறான வளர்ச்சியை அடைந்திருக்கிறது இவற்றை ஆராய்வதன் மூலம்தற்கால சினிமாவைப் புரிந்துகொள்ளலாம்.

பொதுவான ஒரு மாற்றம் என்று கூறவேண்டுமெனில் உலக சினிமா மெதுவாக ரியலிச சினிமாவை நோக்கி நகர்ந்து வந்து விட்டது. ரியலிச சினிமா புதிதாக உருவான மொழியோ தத்துவமோ இல்லை.1940 களில் தொடங்கி இத்தாலிய நியோ-ரியலிச சினிமாக்களும்80 கள் தொடங்கிஇரானிய சினிமாக்களும் உருவாக்கிய ஒரு பாணிதான். ஆனால்அது இன்று சற்றே மாற்றமடைந்து மிகுந்த நேர்த்தியுடன் செய்யப்பட்டு வருகிறது.ரியலிச சினிமா என்றால், கதை நடக்கும் இடம், கதாபாத்திரங்கள்அவர்களின்மனச்சிக்கல்கள், முரண்கள் இவை இயல்புவாழ்க்கைக்கு மிகவும் அருகில் அமைந்திருக்கும். ரசிகனின் மனதில் அந்த கதை உண்மைதான்என்பதுபோன்றஒரு நம்பிக்கையை விதைக்கும். அதன்மூலமாகபடத்தின் உணர்வுகளை சுலபமாக கடத்தி விட முடியும். சிந்தனைதளத்திலும் அரசியல் தளத்திலும் இயல்பான மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும்பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு வரும் போக்கும்கூட தற்கால சினமாவை இவ்வாறு தகவமைத்துக்கொள்ள காரணமாக இருந்திருக்கலாம். 
 

உதாரணமாக இந்த வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட The night I swam (Japan, 2017) இயல்பு வாழ்க்கைக்கு மிக மிக அருகில் நிகழும் ஒரு படம். அடர்ந்த பனி மூடிய அந்த ஜப்பானிய சிறுநகரத்தில் காலையில் விழித்தெழும் சிறுவன் தன்பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதை அறிகிறான். விடிந்திராத அந்த காலையில் தன் அக்காவை எழுப்ப முயன்றுதோற்று பெற்றோரின் படுக்கைக்கு சென்று ஏக்கத்தோடு உறங்கி போகிறான். பிறகு அவர்கள் இருவரும் தானாக கிளம்பி பள்ளி செல்கிறார்கள். ஏதோ தோன்றியவனாக பள்ளியின் வளாகத்தை தாண்டி ரயில் செல்லும் திசையை நோக்கி நடக்கிறான். ஆளுயரபனியில் அவன் ஒரு சிறு எறும்பைப்போல ஊர்ந்து ஏதோ ஒரு திசையை நோக்கி போய்க்கொண்டே இருக்கிறான். எந்த ஒரு இடையூறுமின்றி அவனின் அந்த இயல்பான பயணத்தை கேமரா தள்ளி இருந்து அவதானிக்கிறது. அவனின் பார்வையில் அந்த பனி சூழ்ந்த நிலப்பரப்பும் அதன் அழகும், ஆபத்தும் காட்சிகளாக விரிந்துகொண்டே இருக்கிறது. அவன் எங்கே செல்கிறான் அவனுக்கு ஏதாவது நடந்து விடுமா என்ற பதபதைப்பு மட்டும் நம்மை ஒட்டிகொள்கிறது. அவன்விளையாடிக்கொண்டேஒரு ரயில் நிலையத்தை அடைந்து ரயிலுக்காக குளிரில் காத்திருந்துரயில் வந்தவுடன் அதில்ஏறி தூங்கி போகிறான். கடைசி நிறுத்தத்தில் ரயில் நின்றும் எந்த சலனமும் இன்றிதூங்கிக்கொண்டே இருக்கிறான்.பிறகுஅவனாக விழித்து ரயில்நிலையத்தை தாண்டிதெருக்களை அடைந்து எதையோ தேடுகிறான். ஒருமீன்வண்டிசெல்வதை பார்த்து அதை துரத்த முற்பட்டு தோற்கிறான்.
தான் தூங்கிய பின்பு வீடு திரும்பி, எழும்பும் முன்பே வேலைக்கு சென்று விடும் அவனின் தந்தையை தேடித்தான்இந்த பயணம் என்று நமக்கு சிறுதுசிறிதாக புரிய ஆரம்பிக்கிறது. தந்தை ஒரு மீன் சுத்திகரிக்கும் ஆலையில் வேலை செய்பவர் என்பது மட்டுமே அவனுக்கு தெரியும்.அந்த ஒரு தகவலை வைத்துக்கொண்டுநீண்டதூரம் கடந்து வந்துவிட்ட அவனின் பயணம் நம்மைபதபதைக்கவைக்கிறது.


படம்முழுக்கஅந்தபயணம் எந்த மிகைப்படுத்தலும் இன்றி உண்மையாக நிகழ்வது போலவே இருந்ததுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட. அவனின் சிறிய சிறய செயல்கள், அந்தநிலப்பரப்பின் ஊடாகஅவனுக்கு பயணித்துவர தெரிந்திருக்கிறதுஎன்பது நமக்கு ஆச்சர்யமாகவும்,அவன் பெற்றோரில்லாமல் எத்தனை தனித்திருந்தால் இந்த சிறிய வயதில் இதையெல்லாம் கற்றுகொண்டிருப்பான் என்பதும் ஒரு மென்சோக உணர்வை கிளரும். இந்த படம் முழுக்க ஒரு வசனம் கூட பேசப்படவில்லை. அதற்கான தேவையும் அவனுடைய இந்த தனித்த பயணத்தில் இருக்கவில்லை.
இந்த பயணத்தின் ஊடே ஒரு அங்காடியுள் சென்று அங்கே வைக்கப்பட்டிருக்கும்தண்ணீர்குடுவையில் நீர் அருந்தி விட்டு இயல்பாகநடக்க ஆரம்பிப்பான்.வேறொரு காட்சியில்,ஒரு சந்தேகத்துக்குரிய ஆளைப்பார்த்தவுடன் எச்சரிக்கையாக வேறு திசையை நோக்கி ஓடிவிடுவான். திக்குதிசை தெரியாமல் தனித்துவிடப்பட்டஅந்த நேரத்தில் கடும் பனியும் சேர்ந்து கொட்ட ஆரம்பிக்கும். குளிர் வாட்டி எடுக்க ஆரம்பிக்கும் போது, கார்கள் நிறுத்தப்பட்ட ஒரு பார்க்கிங்கில் இருக்கும் ஒவ்வொரு காராக திறந்து பார்ப்பான். அதிர்ஷ்டவசமாக ஒரு காரின் கதவு திறக்கவே அதற்குள் சென்று அயர்ச்சியில் மீண்டும் உறங்கிப்போய்விடுவான்.

பனிக்காட்டில் தொலைந்து போனவன் தந்தையை கண்டுபிடித்தானா, பலமைல் தூரம் தாண்டி வந்தவன் பாதுகாப்பாக வீடு போய் சேர்ந்தானா. அவன் தந்தையை அன்று இரவாவதுபார்க்கும் வாய்ப்புகிடைதத்தா என்ற கேள்விகள் மேலெழுந்துபடத்தின் இறுதியில் நவீன வாழ்கை குடும்பபங்களை எவ்வாறு சிதைக்கிறது என்ற ஒற்றை உணர்வைநமக்குவிட்டுச்செல்லும்.


இந்தப்படம் ரியலிச சினிமாவாக மாறுவது முக்கியமான மூன்று கூறுகளால்,முதலில், கதைநம்பகத்தன்மையான ஒரு நிலப்பரப்பில்நிகழ்கிறது. இரண்டாவதாக, திரும்ப திரும்ப ஒரே நடவடிக்கை காட்டப்படுகொண்டே வருகிறது. இந்த படத்தில் அவனுடைய பயணமே அந்த நடவடிக்கையாக கொள்ளலாம்.அதுவே படத்தின் முக்கியமான கதைப்பொருளாகவும் பின்னர் மாறுகிறது. அந்த சிறுவனின் இத்தனை அயர்ச்சியான பயணத்தை நீங்கள் பின்தொடர்ந்து வந்ததும்.அவனுடைய உலகத்தில் ஒரு நாள் முழுக்க ஆழ்ந்து இருந்ததுமே இறுதிக்காட்சியில்ஏற்படப்போகும் அந்த மனதைப்பிசையும் பெருஞ்சோகத்திற்கு காரணமாக இருக்கும்.மூன்றாவதாக, படம் முழுக்க முழுக்கஉண்மைக்கும் இயல்புக்கும் ஒத்து இருப்பதற்காக கடினமாக உழைத்திருப்பது. நடிப்பு தொடங்கி, ஒளிப்பதிவு, சப்தம், கதைக்களம்என்று நம்பகத்தன்மையை கூட்ட முயன்றிருப்பது. இவைதான் இன்றைக்கு பெரும்பாலான உலக சினிமாவின் அடிப்படை கூறுகள்.

உண்மைக்கு அருகாமையில் இருப்பதற்காக படங்கள் சுவாரஸ்யமாக இருக்காது என்று அர்த்தம் கொள்ளத்தேவையில்லை. அன்றாட வாழ்க்கை நெருக்கமாக காட்டப்படும்போது அதோடு நாம் சுலபமாக ஒன்றிபோய் விடுகிறோம். அதையே தளமாக பயன்படுத்தி பாத்திரங்களுக்கு நடக்கும் மெல்லிய உணர்வு மாற்றங்களைகூடநம்மால் பல மடங்கு வீரியத்தோடு கடத்தி விட முடிகிறது.இயல்பான நடவடிக்கைகளை தொடர்ந்து ஒரு சிறிய அசாதாரணமானகாட்சி வந்தால் கூட நமக்கு சுவாரஸ்யம் கூடி விடுகிறது. உதாரணமாககடினமானபனிப்பாதை வழியே நடந்து வந்து ரயில் நிலையத்தில் காத்திருக்கும் அவன் தூங்கிபோய் விடுவான். சிறிது நேரம் கேமரா நடைமேடையில் ரயில் வருவதை அவதானித்துக்கொண்டிருக்கும். பயணிகள் தங்குமறையில் தூங்கிப்போய் இருக்கும் அவன் எழும்பி விடுவானா, ரயில்அவனை விட்டு விட்டு சென்றுவிடுமா என்று நாம் பதறும் வேளையில் கடைசி நிமிடத்தில் எழுந்து ஓடி வருவது ஒரு திகிலான அனுபவமாக இருக்கும். இப்படி வாழ்வின்சிறு சிறு நிகழ்வுகள் கூட படத்தில் சுவாரஸ்யமாக அமைவதற்குஇந்த ரியலிச பாணியை ஒத்த திரைமொழிதான் காரணம்.

அதைத்தாண்டிகதைத்தளத்திலும்இன்றையசினிமாவில் புதிய புதிய எல்லைகளை பரிசோதித்து வருகிறார்கள். ஒரு குறுகிய வரையறைக்குள் இன்றைய சினிமாவின் கதைகளை சுருக்கி விட முடியாது எனினும் சில ஒத்த பண்புகள் இருக்கவே செய்கின்றன.மிகை உணர்ச்சியற்றகதைநகர்வு அல்லது திகிலற்ற கதை சொல்லல் முறை ( Anti thriller) என்ற புதிய அணுகுமுறை உருவாகி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை கொண்ட படம்தான் Staying Vertical ( France, 2016)  . ஒரு திரைக்கதை எழுத்தாளன் தன்னுடைய அடுத்த கதையை எழுத முடியாமல்தவிக்கும் ஒரு தருணத்தில்தூரத்து நிலத்திற்கு எழுதுவதற்கானபுத்துணர்ச்சியை தேடிச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அவன் உருவாக்கிக்கொள்ளும் புதிய உறவுச்சிக்கல்கள், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் நடக்கும் அபத்தமான நிகழ்வுகள் என்றுஇந்த படம் நம்முடைய ஒவ்வொரு எதிர்பார்ப்போடும் விளையாடி, அதை உடைத்துகொண்டே செல்லும். நாம் நினைத்தது போல எதுவுமே நடக்காது. ஆனால் திரையில் நிகழும் அபத்தங்களை விலகி இருந்து ரசித்துகொண்டே இருப்போம். நம்மை கதையில் இருந்து விலக்கி வைத்திருப்பதன் மூலமும், நம் முன்முடிவுகளை உடைத்துகொண்டே இருப்பதன் மூலமும். இதுவரை சினிமாவில் இப்படியெல்லாம் காட்டவே கூடாது என்ற வரையறைகளுக்கு எதிர்மறையாகபடம்பிடிப்பதன்மூலமும் வழக்கமாகநமக்கு பழக்கப்பட்ட சினிமாவாக இது தோன்றாது.


அடுத்ததாக,இன்றைய சினிமா நிறையதிருப்பங்களும், சம்பவங்களும் நிறைந்த கதைகளை சொல்லும் இடத்தில் இருந்து நகர்ந்து வந்துவிட்டது.குறைந்த பாத்திரங்களின்அகஉலகத்தைபேசும் போக்கும் அதிகரித்திருக்கிறது. Winter Sleep (Trukey, 2014) ஒரு எழுத்தாளரின் அறச்சிக்கல்களை பேசும் படம். தன்னளவில்எல்லாம் சரி, தன்னுடைய வாழ்கை பற்றிய அறநெறி மேம்பட்டது என்று நம்பும் ஒரு மனிதர். அவரை சுற்றி இருக்கும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை அவருடைய இருப்பு எவ்வாறு பாதிக்கிறது என்பதை அழகாக காட்டும் சினிமா. 
முக்கியமாகஇந்த படத்தில் கதைநடக்கும் புராதான அனடோலியா நிலப்பரப்பும், அவர்கள் வாழ்கையின் வேகமும் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். அவர்களுடைய உரையாடல்கள் தொடங்கி அன்றாட வாழ்க்கை என்று அத்தனையும் விரிவாகசொல்லபட்டுகொண்டே வரும்பொழுது, அனைத்துகதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களையும் நாம் தெளிவாகஉணர்ந்து கொண்டே வருவோம். இந்த முதன்மை எழுத்தாளர் பாத்திரம் தன்னுடைய அதீதமான அறநெறியால்மற்றவர்களை எவ்வாறுமென்மையான அடக்குமுறைக்கு உள்ளக்குகிறார்என்பதைமிக மிக நுணுக்கமாக பேசிய படம். உறவுச்சிக்கல்களை பேசிகொண்டிருக்கும் வேளையில் அந்த ஊரின்சமுதாய படிநிலைகள், அங்குவியாபித்து இருக்கும் வறுமைஎன்று கதையின் ஊடே ஊடுபொருளாக,ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின்வாழ்க்கையை பேசிவிடுவார் இயக்குநர்.

அதேபோல சொல்லப்படும் கதையின் அளவும் தற்கால சினிமாவில் குறைந்து கொண்டே வருகிறது. சம்பவங்கள் குறைக்கப்பட்டு பாத்திரங்களின் அனுபவமும் அவர்களின் இருத்தலும் இன்றைய சினிமாவில் பிரதானமாக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட Hanna (2017, France) மிக முக்கியமான ஒரு படம்.படத்தின் ஆரம்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர்பேசிக்கொள்ளாமல் உணவருந்துகிறார்கள், அவர்களின் முகம் சோகம் தோய்ந்து உற்சாகமற்று இருக்கிறது.பின்பு, கணவரை தானே கொண்டு சென்று ஒரு சிறையில் விட்டு விட்டு வீடு திரும்புகிறார் மனைவி. கணவர் என்ன குற்றம் செய்தார் என்பது படம் முழுக்க சொல்லப்படவே இல்லை. எந்த குற்றமும் நான் செய்யவில்லை, எல்லோரும் அந்த தீங்கான செயலை நான் செய்ததாக நம்புகிறார்கள் என்று மனைவியிடம் ஒரே ஒரு முறை அங்கலாய்கிறார். அதற்க்கு பிறகு படம் அந்த வயதான மனைவியை மட்டுமே சுற்றிநிகழ்கிறது.தன் கணவர் மீதுசுமத்தப்பட்ட குற்றத்தால் தனது சுற்றமும், நட்பும்,சொந்த குழந்தைகளும் கூட அவரைஒதுக்கி வைத்திருப்பதை அறிந்துகொள்கிறோம். தனித்துவிடப்பட்ட மனைவி ஒரு வீட்டில் வேலை செய்து நாட்களை கடினப்பட்டு நகர்த்திக்கொண்டிருக்கிறார். எண்ணற்ற அவமானங்களை, பய உணர்சிகளை , வெறுமையை,உடல் வலியை, மனவலியை படம் முழுக்க அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்.வயதான காலத்தில் தனித்திருப்பதே கடினமானது, அதோடுகுற்ற உணர்ச்சியும், புறக்கணிப்பும் சேர்ந்து கொள்ளும்போது அந்த வயதான பருவத்தில் அவர் படும் அவஸ்தை நம்மை இம்சிக்கும்.

படத்தின் இறுதியில் விரக்தியின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட அவர், சுரங்க ரயில் நிலையத்தின்வழியேவெறுமை சூழ நடந்து செல்வதை கேமரா அவர் பின்சென்று படம்பிடித்துக்கொண்டே இருக்கும். தண்டவாளத்தின் முன்பு ஒரு ரயிலிற்காக காத்து இருக்கும் போது ரயில் வரும் சப்தம் கேட்ட உடனே ஒரு தடுமாற்றதிற்கு உள்ளாவார். ஏதோ அசம்பாவிதம் நடக்கபோகிறதென்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். அங்கு ஒரு பெரியகேள்வியும் நமக்குள் எழும், `அவர்ரயிலில் விழுந்து இறந்தாலும் துன்பமே. வாழ்கையைதொடர்ந்தாலும் துன்பமே´. அவர் எதை தேர்ந்தெடுத்தார்? என்பது படத்தை பார்க்கும் போதுநீங்கள் அனுபவிக்க வேண்டிய உணர்வு.

இந்த படத்தை போலவே பாத்திரங்களின் இன்னொரு பக்கம் சொல்லப்படாமல் இருக்கும் பொழுது, அது நம்மை கதைக்குள் அழைத்து பலவித கற்பனைகளை தூண்டி சினிமாவை வேறுதளத்திற்கு எடுத்து செல்ல உதவுகிறது.அவ்வாறே கதையில் அனைத்தையும் சொல்லாமல் நம்மை பங்குகொள்ள செய்யும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலக சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான மாற்றம் என்பது, அது பேசி வரும் அரசியல். உலகம் முழுக்கவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களுக்காகவும், மறைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தியும் சினிமாக்கள் வந்து கொண்டே இருக்கின்ற. சினிமாவை வெறும் பொழுது போக்கு என்ற இடத்தில் இருந்து பார்க்காமல் அதை ஒரு அரசியல், இலக்கிய செயல்பாடாக கருதும்நிலையும்உருவாகி இருக்கிறது.அரசியல் என்பதை போதனையாக நேரடியாக பேசாமல் ஒரு வாழ்க்கையை காட்டுவதன் மூலம்,பின்னணியில் அந்த வாழ்க்கையை எந்த காரணிகள் பாதிக்கின்றன என்று அழுத்தமாக சொல்லிவிடமுடிகிறது.

Ken Loach இயக்கியI Daniel Blake (2016, UK) சமீபத்தில் வெளியான சிறந்த அரசியல் படம். ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுகாதாரத்துறையை கடுமையாக விமர்சித்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட அதிகாரத்தையோ அமைப்பையோ எதிர்த்து ஏக வசனம் பேசப்பட்டிருக்காது. முன்னணி கதாபாத்திரம் தன்னுடைய உரிமையை கேட்டு மட்டும் போராடிக்கொண்டே இருக்கும். அந்த விடாப்பிடியான போராட்டத்தில் ஒரு சாமானியனை அரசும் அமைப்பும்கைவிடும் பொழுது ஒட்டுமொத்தசுகாதாரத்துறையும் தன் கோர முகம் கிழிந்து அசிங்கப்பட்டு நிற்பது போன்ற தோரணையை ஏற்படுத்தி விடுவார். இந்த இயக்குனரின் ஏனைய படங்களும் வெவ்வேறான அமைப்புக்கு எதிராக கேள்வி கேட்கும் படங்களே. ஆனால் அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வாழ்கையை பேசி அதன் வாயிலாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயல்பவை.

இப்படி கதைகளின் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு கொண்டே இருக்க புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளியும் குறைக்கபட்டுக்கொண்டே வருகிறது. அதே போல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களும் இந்த இடைவெளியை குறைக்க முக்கியமான காரணியாக உள்ளது. ஆவணப்படங்கள் வழமையான சினிமாவின் மொழியை நோக்கியும், புனைவு கதைகளை கொண்ட படங்கள் ஆவணப்படங்களின் மொழியை நோக்கியும் சென்று கொண்டு இருக்கின்றன. இரண்டும் ஒரு இடத்தில் கலந்து ஒரு புது திரைமொழியும் உருவாகிகொண்டு உள்ளது.இந்த இடைவெளியை சுத்தமாக  இல்லாமல் செய்த ஒரு படம் The Last Family (2016, Poland). 
 
உலகப்புகழ் பெற்ற போலந்து சர்-ரியலிச ஓவியர் Zdzislaw Beksinski மற்றும்அவரின் குடும்பத்திற்கு ஒரு அசாதரணமான வரலாறு இருந்தது. அவர்கள் தங்களுடைய கடைசி முப்பது வருட வாழ்கையை வீடியோ படங்களாக எடுத்துவைத்து இருந்தார்கள். அவர்கள் குடும்ப உறவுக்குள் நிகழும் சிறிய பிரச்சனைகள் ஆரம்பித்து மரணம் வரை அனைத்தையும் படம் பிடித்து வைத்து இருந்தார்கள். அதோடு சேர்ந்து அவரின் மகன் ஒரு வாரிசை உருவாக்க முடியாத உடல் சிக்கல் கொண்டவனாக இருக்கப்போக அவர்களின் கடைசி வருடங்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகிறது. மகன் இருப்புகொள்ள இயலாத ஒரு மனநிலையைக் கொண்டவன். இவர்களுக்குள் நடந்த உருக்கமானபோராட்டமே இந்த காவியம். இதுவரை இந்த கட்டுரையில் குறிப்பிட்டபடங்களில் என்னளவில் சிறந்த படம் என்றால் அது இதுதான்.

ஒரு சுயசரிதைப்படம் இத்தனை வீரியமாக சுவாரஸ்யமாகஇருக்க முடியுமா என்பது ஆச்சர்யமே. இந்த படத்தில் கையாண்ட திரைமொழி, நடிப்பு, கலை வடிவமைப்பு, கதை நிகழும் காலகட்டத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவு என்று தற்கால சினிமாவின் மிகச்சிறந்த உதாரணம் என்று இதை சொல்லலாம். தங்களுடைய கடைசி இருப்பை கலையாகவும் ஆவணமாகவும் மாற்ற துடித்த ஒரு குடும்பத்தின்,நெஞ்சை கனக்க வைக்கும் சுயசரிதை.இதைப்போல ஒரு குடும்பத்தை மிகவும் அன்னியமாக அணுகி, அதன் அன்றாட வாழ்கையின் அழகியலையும் முரண்களையும் பேசிய படம் வெகு சிலவே.
உலக சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் வேளையில், வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெண் இயக்குனர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. ஆண்களின் பார்வையில் பேசப்பட்டு வந்த பெண்களின் உலகம் எவ்வளவு உண்மையை விட்டு விலகி இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட்டுகோல்டன் பேர் விருதை வென்றOn Body and Soul ( 2017, Hungary) Ildiko enyedi என்றபெண் இயக்குனர் இயக்கிய படம். இந்த படத்தின் கருவே மிகவும் கவித்துவமானது. உணர்வுகளற்ற ஒரு பெண், தான் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் தன்னை விட வயது முதிர்ந்த ஆணுடன் இணக்கம் கொள்கிறாள். அவர்கள் தங்கள் பரஸ்பர விருப்பத்தை தெரிவித்துகொள்ளவில்லை. ஆனால், இருவரும் கனவில் ஆண்மானாகவும் பெண்மானாகவும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு உள்ளுணர்வில் இந்த மானைப் பற்றிய கனவை ஒருநாள் பகிர்ந்து கொள்கிறார்கள். அது இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்ந்து இருப்பதை கண்டு ஆச்சர்யம் கொள்கிறார்கள். அந்த கனவுக்குப்பின் அவள் இனம்புரியாத உணர்வுகளுக்குள் ஆட்படுகிறாள். அவர்களின் காதலும் உணர்வுகளும் ஒன்றோடொன்று மோதி சிக்குருகிறது. ஒவ்வொரு இரவும் மான்களாக இருவரும் கனவில் சந்தித்து கொள்கிறார்கள். படத்தின் இறுதிக்காட்சியில் நடக்கும் கலவியில் அவர்களின்ஒவ்வொரு தொடுதலையும் ஸ்பரிசத்தையும் நாம் உணர்வோம். உணர்வுத்தளத்தில் இத்தனை ஆழமாக பெண்ணின் அக உலகத்தை ஒரு ஆணால் காண்பிக்கவே முடியாது என்று சிந்திக்க வைத்த படம்.

சினிமா., திரைமொழி, மற்றும் வடிவம் சார்ந்து மாற்றம் அடைவதைப் போலவே, புதிய தொழில்நுட்ப வளர்ச்சியும்சினிமாவில்பெருமளவு மாற்றங்களுக்கு காரணமாக இருந்து வருகிறது. இன்றைய டிஜிட்டல்கேமராக்கள் மிக மிக குறைந்த ஒளியில் கூட படம் பிடிக்கும் சாத்தியங்களைஅளிக்கின்றன. நம் அன்றாட வாழ்கையில் நம் கண்கள் எதை பார்க்கிறதோ அதே துல்லியத்தோடு இயல் ஒளியில் படம் பிடிக்க முடிவதால் இன்றைய படங்கள் சென்ற நூற்றாண்டு படங்களில் இருந்து பார்ப்பதற்கு தனித்து தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. மேலும், சுதந்திரமாககேமராவின் நகர்வையும் பரிசோதித்து பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தோளில் வைத்தே படம் பிடித்து முடிக்கப்பட்ட ஏராளமான படங்கள் வெளிவருகின்றன. சினிமாவின் தொழிநுட்பம் எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பை டிஜிட்டல் புரட்சி ஏற்படுத்தி இருப்பதால் சினிமா ஜனநாயகப்படுத்தபட்டு இருக்கிறது.
 மேற்சொன்ன ரியலிசம் கலந்த திரைமொழி, கதைதளத்தில்பரீட்சார்த்த முயற்சி மற்றும் இயல்பான ஒளிப்பதிவு என்ற சாத்தியங்களோடு சேர்த்து,சினிமாவில் எடிட்டிங்கும் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது.எடிட்டிங்ஒருபுறம் அத்தியாவசியமானஒன்றாக மாறி வரும் சூழல் இருக்கும் போதும் மற்றொருபுறம் அதற்கான தேவையே இல்லாமல் போகச்செய்துகொண்டு இருக்கிறார்கள். ஒருகட் கூட இல்லாமல் இரண்டு மணி நேரம் தொடர்ந்து படம்பிடிக்கப்பட்ட Victoria(2014, Germany) மேற்சொன்னஎல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய படம்.அதிகாலைபெர்லினின் ஒரு இரவு நடன விடுதியில் ஆரம்பிக்கும் படம் இரண்டு மணிநேரம் நிகழ்ந்துவிடியலில் முடியும். இரண்டு மணி நேரத்திற்குள் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் உறவுகளை விஸ்தரித்து, படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பரபரப்பை தொற்றிகொள்ள வைத்து, ஒரு வங்கி கொள்ளையில் கொண்டு போய் நிறுத்தி நம்மைஅப்படியே உறைந்து போக வைப்பார்கள். விக்டோரியா மூன்று மாதங்கள் ஒத்திகை பார்த்து, மூன்றேடேக்கில் எடுக்கப்பட்ட படம். இத்தகைய படங்களை பார்க்கும் பொழுது சினிமாவின்அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. எதிர்காலத்தில் சினிமாவின் சாத்தியங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆவலும் மேலெழுகிறது.


- நிலவழகன் சுப்பையா