Saturday, 5 November 2011

ழான் பியர் மெல்வில்


ழான் பியர் மெல்வில்
எஸ்.ஆனந்த்

நட்சத்திர ஹோடல்களும், மதுக் கூடங்களும், சூதாட்ட விடுதிகளும், சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க, நியான் விளக்குகளின் ஒளியில் மிளிர்ந்துகொண்டிருக்கும் இரவு நேரப் பாரிஸை தனது தனித்துவமான படைப்புகள் வழியே அறிமுகப்படுத்தியவர் ழான் பியர் மெல்வில் (Jean-Pierre Melville). அழகியல் மிக்க குற்றப் பகுப்புப் (crime genre) படைப்புகள் தவிர, ராபெர்ட் பிரெஸ்ஸோன், கார்ள் தியோடோர் ட்ரையர் போன்ற மேதைகள் வியக்கும் வண்ணம் கலைநுட்பமுள்ள படைப்புகளையும் படைத்த மெல்வில், பிரெஞ்சுத் திரையுலகில் தனித்து நின்ற ஆளுமை. அதிகம் அறியப்படாத திரைப்பட மேதை. திரைப்பட அறிஞர்களால் பிரெஞ்சு திரையுலகின் - outsider - வெளியாள் எனக் குறிப்பிடப்படுபவர். நடிகர், புகைப்படக் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர். பிரெஞ்சு புதிய அலை முன்னோடிகளின் ஆசானாக மதிக்கப்பட்டவர். தனக்கே உரித்தான பாணியில் படைப்புகளை உருவாக்கிய இந்த மேதை இறுதி வரை பிரெஞ்சு புதிய அலை போன்ற எவ்விதக் கூட்டு முயற்சிகளிலும் இணையாது தனித்து நின்றவர்.

மெல்வில், 1917 இல் பாரிசில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் புகைப்படங்களுடன் வெளிவந்த நாடகங்கள் கொண்ட புத்தகங்கள் அவரைக் கவர்ந்தன. 9.5 எம் எம் திரைப்படக் காமெராவும் புரொஜெக்டரும் சிறுவனாக இருந்த போது பரிசாகக் கிடைத்தது. முதல் முயற்சியாக சன்னல் வழியே தெரிந்த இடத்தைப் படமாக எடுத்தார். அந்த வயதில் காமெராவை விட புரொஜெக்டர் மிகவும் பிடித்திருந்த்து. அதைக்கொண்டு வாடகைக்குக் கிடைத்த சிரிப்பு, வெஸ்டெர்ன், சண்டைப் படங்களைப் பார்க்க முடிந்தது.

திரைப்படங்களின் மீதான மோகம் மெல்வினை முழுவதுமாக ஆக்கிரமிக்க, பெரும்பாலன நேரத்தை திரைப்பட அரங்குகளில் செலவிடத் தொடங்கினார். பாரிஸில் திரையிடப்பட்ட அமெரிக்கத் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்தார். படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பாரிசின் ரௌடித் தெருக் கும்பல் ஒன்றுடன் இரவுகளைக் கழித்த மெல்விலுக்கு, பாரிசின் இரவு வாழ்க்கையும், அது தொடர்புடைய குற்றங்கள், குற்றவாளிகள் பற்றிய அனைத்து விவரங்களும் அத்துப்படி. அவரது திரைப்படங்கள் பல இந்தப் பாதிப்பில் உருவானவை. அமெரிக்கத் திரைப்படங்களின் பாதிப்பால் எப்போதும் ‘ஸ்டெட்சன்’ தொப்பியும் கறுப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார்.

பதினாறு வயதில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். 1937இல் கட்டாய ராணுவ சேவை. அடுத்து, பிரெஞ்சு விடுதலைப் போராளிகள் இயக்கத்தின் முன்னணிப் போராளியாகப் பங்காற்றினார். 1939 ஆகஸ்டில் ஹிட்லருடன் உடன்படிக்கையில் ஸ்டாலின் கையெழுத்திட்ட போது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறினார். கிடைத்த நேரமெல்லாம் திரைப்படங்களைக் காண்பதில் செலவானது. விடுப்பில் லண்டன் சென்ற மெல்வில், ’சிட்டிசன் கேன்’ உட்பட ஏழு நாட்களில் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருபத்தி ஏழு. அவருக்கு மிகவும் பிடித்த புத்தகமான ’மோபி டிக்’கின் ஆசிரியர் ஹெர்மன் மெல்விலின் பெயரில் உள்ள மெல்வில் அவரது இயற் பெயரான ’ழான் பியரு’டன் இணைந்த்தது.

1945 இல் தனது முதல் திரைப்படத்தை இயக்க முடிவு செய்த மெல்விலுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. சக்திவாய்ந்த பிரெஞ்சு திரைப்படத்துறை யூனியன் அமைப்புகள் தடையாக அமைந்தன. திரைப்படத் துறைக்குப் புதியவரான மெல்வில் பலவாறு முயன்றும் எந்த சங்கத்திலும் அங்கத்தினராக முடியவில்லை. முறைப்படி திரைப்படத் துறையில் நுழையும் வழி மறுக்கப்பட, துணிந்து தனியாக படத் தயாரிப்பைத் துவங்கினார். 1942 இல் அவர் உருவாக்கத்தில் ஒரு சிரிப்புப் படம் குறும்படமாக வெளிவந்தது. 1949 இல், இன்றும் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளும் அவரது முதல் முழு நீளத் திரைப்படம் ’Le Silence de la Mer,’ திரைக்கு வந்த்து.

Le Silence de la Mer, புகழ் பெற்ற போர்க்கால நாவல். இந்நாவலைத் திரைப்படமாக்க முதலில் அனுமதி கிடைக்கவில்லை. கதையின் கருத்தையும் அழகையும் திரைப்படம் சிதைத்து விடும் எனக் கருதிய ஆசிரியர் வோர்காஸுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முடிக்கப்பட்ட திரைப்படத்தை வோர்காஸுடன் முன்னாள் பிரெஞ்சு விடுதலை இயக்கத் தலைவர்கள் அடங்கிய குழு பார்த்தபின், சரியென்று கருதினால் திரையிட அனுமதிக்கப்படும் அல்லது நெகடிவ் அழிக்கப்படும். நிபந்தனையை ஏற்றுக்கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கினார். யூனியன் அட்டை கிடையாது; கச்சா படச்சுருள் வாங்க அனுமதி கிடையாது; பணமும் இல்லை. நாவலில் எழுதப்பட்டிருந்தபடி இக்கதையின் பெரும் பகுதி வோர்காஸின் இல்லத்தில் படமாக்கப்பட்டது.

Le Silence de la Mer, நாற்பதுகளில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பிரெஞ்சு விடுதலை இயக்கம் இயங்கிய நேரம் நடைபெறும் கதை. பிரான்ஸின் சிறு நகர் ஒன்றில் முதியவர் ஒருவரும் அவர் மைத்துணியும் வாழும் வீட்டின் ஒரு பகுதி ஜெர்மனிய ராணுவ அதிகரி வெர்னர் தங்குவதற்காகத் தெரிவு செய்யப்படுகிறது. வெர்னர், வீட்டிலிருக்கும் இருவரிடம் பேசிப் பழக முயலுகிறார். பெரியவரும் அந்தப் பெண்ணும் அவர் பேசுவதை அமைதியாக்க் கேட்டுக்கொண்டிருப்பதுடன் சரி; ஒரு வார்த்தை கூடப் பேசாது, இறுக்கமான முகங்களுடன் எந்த உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாது இருக்கின்றனர். தினமும் வரவேற்பறையில் அமைதியாக அமர்ந்திருக்கும் இருவரிடமும் மனம் திறந்து பல நிமிடங்கள் பேசிவிட்டு மாடிக்குச் செல்லுவது வெர்னரின் வழக்கமாகிறது.வெர்னர் மாதக் கணக்காக இருவரிடமும் மனதிலுள்ள கருத்துக்களைச் சலிக்காது சொல்லிக் கொண்டிருக்கிறார். தான் கறபனை செய்யும், ஜெர்மனிய இசையும் பிரெஞ்சு இலக்கியமும் இணைந்து கொண்டாடப்படும் அமைதியான ஐரோப்பாவைப் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசுகிறார். பாரிஸ் செல்பவருக்கு ஹிட்லரின் உண்மையான முகம் தெரிய வருகிறது. ஹிட்லரின் மனித அழிவுக் கூடங்கள் பற்றி அறிகிறார். பிரெஞ்சு கலாச்சாரத்தையும் மக்களையும் நிர்மூலமாக்குவது ஹிட்லரின் குறிக்கோள் என அறியும் வெர்னர் மனமுடைந்து இருப்பிடத்திற்குத் திரும்புகிறார். பாரிஸில் கேள்விப்பட்டதையும் போர்முனைக்குச் செல்ல முடிவு செய்திருப்பதையும் இருவரிடமும் சொல்லிவிட்டு விடை பெறுகிறார். அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசியிராத அந்தப் பெண் ஒரே ஒரு வார்த்தை - adieu - ‘சென்று வாருங்கள்‘ என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

மெல்விலால் திரைப்படமாக்க முடியாது என இக்கதையின் ஆசிரியர் கருதியதற்கு காரணமுண்டு. படிப்பதற்கு அற்புதமான, ஆனால் திரைப்படமாக்குவதற்கான அடிப்படைகள் அற்ற நாவல். வரவேற்பறையில் இருக்கும் மூன்று பாத்திரங்களில் ஒருவர் மட்டும் பேசிக்கொண்டிருப்பதில் பெரும்பகுதி கழிகிறது. திரைப்படத்திற்கு அவசியம் எனக் கருதப்படும் விறுவிறுப்பான திருப்பமோ, நிகழ்வோ ஒன்றுகூட இல்லாத கதை. சிறு தவறும் இப்படத்தை நாஜிகளுக்கு சாதகமானதாகவோ அல்லது விடுதலைப் போரை கொச்சைப்படுத்துவதாகவோ ஆக்கிவிடும். ஆனால் இக்கதையைச் சிறப்பான திரைப்படமாக உருவாக்க முடியும் என மெல்வில் நம்பினார். நாவலைப் படித்தபோது தான அடைந்த பாதிப்பை படத்தைக் காண்பவர் அடையவேண்டும் என்பது அவர் குறிக்கோள். அதில் வெற்றியும் பெற்றார். Le Silence de la Mer கவிதை போல, ஆழமான பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட திரைக் காவியம்.

ஹிட்லரின் மனித அழிவுக்கான திட்டங்களை அறியும் மிருதுவான மனம் கொண்ட வெர்னர், தானும் போர்முனையில் அழிவதே மேல் என முடிவு செய்து அங்கிருந்து கிளம்புகிறார். மனிதாபிமானமும், கருணையும் எல்லைகளைக் கடந்தவை. முதியவரும், அப்பெண்னும், வெர்னரிடம் பேசாதிருந்தும் இவர்களுக்குள் அன்பும் கனிவும் உருவாகுவதைக் காண்கிறோம். காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள முறை, ஒளிப்பதிவு, சட்டகங்களின் நேர்த்தி, பேசப்படும் வசனங்கள், பின்னணியில் ஒலிக்கும் பாக், விவால்டி செவ்வியல் இசை – ஒவ்வொன்றும் ஆழமாக ரசித்து சிலாகிக்கப் பட வேண்டியவை.

இப்படத்தின் அற்புதமான ஒளிப்பதிவுக்குக் காரணமான ஹென்றி டிகே (Henri Decae) மெல்விலின் ஒளிப்பதிவாளராக அவருடன் இறுதிவரை இணைந்திருந்தவர். மெல்விலின் இயக்கத் திறமை பல முக்கிய திரைப்பட அறிஞர்கள், இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது. கார்ள் தியொடோர் ட்ரையெர், ராபெர்ட் பிரெஸ்ஸோன் போன்ற பேராளுமைகளிலிருந்து பல புதிய இயக்குநர்கள் வரை மெல்விலை பாராட்டியதுடன், இப்படத்தில் அவர் பயன்படுத்தியுள்ள உத்திகளையும் நுட்பங்களையும் தங்கள் படைப்புகளிலும் பயன்படுதியுள்ளனர்.

Le Silence de la Mer திரைப்படத்தைப் பாராட்டிய பிரெஞ்சுக் கவிஞரும், திரைப்பட இயக்குநருமான ழான் காக்து (Jean Cocteau) தனது நாவல் ஒன்றைத் திரைப்படமாக இயக்குவதற்கு மெல்விலுக்கு அழைப்பு விடுத்தார். காக்துவின் முக்கிய புதினமான Les Enfants Terribles, காக்துவின் திரைக்கதையும் மெல்விலின் இயக்கமும் இணைந்து சிறப்பான திரைப்படமாக 1950 இல் உருவானது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பால், அவன் சகோதரி எலிசபெத் இருவரையும் பற்றிய கதை. தந்தையற்ற குடும்பம். நோய்வாய்ப்பட்டிருக்கும் தாய் இறக்க, சகோதரியின் பராமரிப்பில் பாலுடைய வாழ்கை தொடருகிறது. எலிசபெத்தின் தோழி அகதேயும் அவர்களுடன் தங்குகிறாள் குடும்ப மருத்துவரும், பாலுடைய நண்பனின் உறவினர் ஒருவரும் இருவருக்கும் உதவுகின்றனர்.எலிசபெத்துக்குத் திருமணமாகி சில நாட்களில் செல்வந்தனான கணவன் கார் விபத்தில் இறக்க, ஏராளமான சொத்துக்கு அதிபதியாகிறாள். தமையன் தன்னை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக அவன் காதலை முறிக்கிறாள். இறுதியில் பால் தற்கொலை செய்துகொள்வதைத் தாங்க இயலாது தன்னை மாய்த்துக் கொள்கிறாள். மூல நாவலைப் பின்பற்றி மிகச் சரியாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என எழுதியிருக்கும் பிரெஞ்சு இயக்குநரும் விமரிசகருமான ஃப்ரான்ஸ்வா த்ரூஃபோ (François Truffaut), இத்திரைப்படத்தை இருபத்து ஐந்து முறைகள் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மெல்விலின் திரைப்படங்கள் திரைப்படக் கலை மீது ஆர்வம் கொண்டவர்களால் பாராட்டப்பட்டதே தவிர ஒழுங்கான வினியோகத்திற்கு வழியில்லாததால் சரியானபடி ஓடவில்லை. நிறுவனங்களைச் சார்ந்திராததால் அனைத்துப் பொறுப்புகளையும் அவர் ஒருவரே சுமக்க வேண்டியதிருந்தது. திரைப்படத் தயாரிப்பும் அப்படியே. பணம் கிடைத்த போது படப்பிடிப்பு ஒன்றிரண்டு நாட்கள் நடைபெறும்; அடுத்து எப்போது கையில் பணம் கிடைக்கிறதோ அதற்கேற்றபடி சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும். மெல்வில் இருபத்தி நான்கு மணி நேரமும் திரைப்படங்களைப் பற்றிய நினைப்புடனே வாழ்ந்தவர்.

அனைத்து இடர்பாடுகளையும் துணிவுடன் எதிர்கொண்டார். சாதாரண சைக்கிள் ஹாண்டில் பாரில் கையில் எடுத்துச் செல்லும் காமெராவை பிறர் அறியா வண்ணம் பொருத்தி தெருக்களில் படமெடுத்தார். காமெரா டாலிக்குப் (camera dolly) பதிலாக ஊனமுற்றோர் பயன்படுத்தும் சர்க்கர நாற்காலி, கிரேனுக்குப்(crane) பதிலாக எலெவேட்டர்(elevator) என எளிமையான முறைகளைப் பயன்படுத்திப் படமெடுத்தார். உத்திகள் எளிமையானவையே தவிர மெல்விலின் திரைப்படங்களின் ஒவ்வொரு சட்டகமும் பெரிய ஸ்டுடியோக்களில், மிகச் சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களை மிஞ்சும் நேர்த்தியும் அழகும், நிறைவும் கொண்டவை.

1953 இல் வெளிவந்த When You Read This Letter வழக்கத்திற்கு மாறாக அதிக செலவில் உருவாகிய திரைப்படம். மெல்விலின் முதல் பிலிம் நுவார் (Film Noir) வகை குற்றப் பகுப்புத் திரைப்படம் Bob le Flambeur (1956). பாரிசின் இரவு நேர வாழ்க்கையையும், குற்றவாளிகளையும் கொண்ட கதை. பாப் நடுவயது கடந்த முன்னாள் குற்றவாளி. சீட்டாட்டத்தில் தீவிரமான ஈடுபாடுள்ளவர். அனைவரின் மரியாதைக்கும் உரியவர். ஒரு திருட்டைத் திட்டமிட்டு, அதற்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சீட்டாட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். திட்டம் குளறுபடியாகி, காட்டிக் கொடுக்கப்பட்டு போலிசால் கைது செய்யப்படுகிறார். குற்றவாளிக் குழுக்களுக்கே உரித்தான தியாகம், நட்பு, துரோகம், காட்டிக் கொடுத்தல் அனைத்தும் கொண்ட இவ்வகை படைப்புகள் மெல்விலால் தொடர்ந்து உருவாக்கப்படன.

‘Léon Morin, Priest ’ (1961), குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய திரைப்படம். இரண்டாவது உலகப் போரின் போது, இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பிலிருக்கும் பிரெஞ்சுப் பகுதியில் மகளுடன் தனியாக வாழந்துகொண்டிருப்பவள் பார்மி. கணவனை இழந்தவள். தீவிர மார்க்ஸிஸ்ட். மாதா கோவிலினுள் பாவமன்னிப்புக்காகச் செல்வதுபோல் அங்கு அமர்ந்திருக்கும் பாதிரியிடம் சென்று, ‘மதங்கள் மக்களைக் கெடுக்கும் ஓப்பியம் போன்றவை’ என்கிறாள். பாதிரியை அதிர்ச்சியடையச் செய்யும் முயற்சி தோலவியடைகிறது. இளம் கத்தோலிக்கப் பாதிரி லியான் மோரினுக்கும் கடவுளை நம்பாத பார்மிக்கும் படம் முழுக்கத் தொடரும் உரையாடல்களைக் கொண்டு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.இதாலியர்களுக்குப் பின் நாஜிகள் ஆக்கிரமிக்க, பல யூதர்கள் தலைமறைவாகின்றனர். யூத குடும்பத்தைச் சேர்ந்த பார்மி, மகளை தெரிந்தவர் இல்லத்தில் விட்டுவிடுகிறாள். இளம் பாதிரியிடம் மனதைப் பறி கொடுக்கும் பெண்களில் பார்மியும் அடக்கம். பாதிரியோ உடல், மன உணர்வுகளுக்கு இடம் கொடுக்காது அனைவருடனும் நட்புடன் பழகுகிறார். தன்னை அறியாமல் பாதிரி லியோனை அதிகமாக விரும்பத் தொடங்கும் பார்மியும் பாதிரியும் சந்திக்கும் தருணங்கள் ஒவ்வொன்றும் கவிதைபோலப் படமாக்கப்பட்டுள்ளன.

இறுதியில் வேறு கிராமம் ஒன்றுக்கு செல்வதற்கு முன் தன்னைச் சந்திக்க வரும் பார்மியிடம் பாதிரி லியோன் விடை பெறும் காட்சியுடன் படம் நிறைவு பெறுகிறது. ஆன்மீகத்தை வாழ்க்கையுடன் இணைத்து தெளிவாகப் போதிக்கும் பாதிரியாக வெகு இயற்கையாக நடித்திருப்பவர் ழான் பால் பெல்மாண்டோ. கிறித்துவத்தின் அடிப்படையான மனிதத்துவத்தை சிறப்பாக முன்வைக்கும் திரைப்படம். ஹென்றி டிகேயின் ஒளி குறைவான (low key) கருப்பு வெள்ளை ஒளிப்பதிவும், காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும், எடிட்டிங்கும் அற்புதம். திரைப்பட ஆர்வலர்களுக்கு இப்படம் ஒரு பொக்கிஷம்.
பிறர் தயவை எதிர் நோக்காது தனி மனிதராய் அற்புதமான படங்களை உருவாக்கிய மெல்வில் மீது பாரிசின் இளம் இயக்குநர்கள் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். திரைப்படக் கலையையும், திரைப்படங்களையும் பற்றி அவருடன் நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்கலாம். கோதார், த்ரூஃபோ, சாப்ரால் போன்ற இளம் இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட ‘பிரெஞ்சு புதிய அலை’ இயக்கத்திற்கு மெல்வில் ‘ஆன்மீகத் தந்தை’யானார். கோதார் தன் முதல் திரைப்படமான ‘Breathless’ஐ உருவாக்கிய போது மெல்விலிடம் பல முறைகள் ஆலோசனைகள் பெற்றார். விமன நிலையத்தில் பேட்டியளிக்கும் பிரபல நாவலசிரியராக மெல்வில் இப்படத்தில் தோன்றுகிறார். பிரெஞ்சு புதிய அலை இயக்குநர்கள் மெல்விலை ஆசானாக தூக்கி வைத்த போதும், மெல்வில் அவர்களுடன் இணையவில்லை. அவர்களில் பலரைப் படமெடுக்கத் தெரியாத அமெச்சூர்களென்றே குறிப்பிட்டிருக்கிறார்.

Le Doulos - The Finger Man –(1962) மெல்விலின் இரவு நேர பாரிஸ் கதைகளில் ஒன்று. படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஒரு கொலை. திருட்டு ஆபரணங்களைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் வயதான கில்பெர்ட் அப்போது தான் விடுதலையாகி வந்திருக்கும் மாரிஸால் கொல்லப்படுகிறார். நகைகளுடன் பணமும் கைத் துப்பாக்கியும் மாரிஸால் ஓரிடத்தில் புதைக்கப்படுகிறது. மாரிஸின் நண்பனான சிலியன் போலீஸுக்கு தகவல் சொல்லும் முன்னாள் குற்றவாளி. மாரிஸ் மற்றொருவனுடன் திருடச் செல்லும் நேரம் போலீஸ் குறுக்கிட, உடன் வருபவனும், ஒரு போலீஸ் அதிகாரியும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகின்றனர்.சிறிய காயத்துடன் தப்பிவிடும் மாரிஸ் சிலியன் தன்னை காட்டிக்கொடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறான். மாறாக மாரிஸ் தப்பிப்பதற்காக பல உதவிகளை சிலியன் செய்திருப்பது இறுதியில் தெரிய வருகிறது. மாரிஸ் தடுப்பதற்குள், முன்பே திட்டமிட்டபடி மாரிஸின் கையாளால் சிலியன் சுட்டுக் கொல்லப்படுகிறான். இந்த மூலக் கதையுடன் கிளைச் சம்பவங்கள் பல இணைந்து கதை சொல்லப்படுகிறது. மனச்சாட்சியற்ற அழகான பெண்களும், கனவான்களாக நடமாடும் குற்றவாளிகளும் நிறைந்த அந்த விசித்திர உலகத்தில், ஒவ்வொருவருக்கும் பழகுவதற்குப் பயன்படுத்தும் முகம், உண்மை முகம் என இரண்டு முகங்கள்; யார் உணமையானவர் எவர் எதிரி என்பது எவருக்கும் தெரியாது.

1963 இல் வெளிவந்த Magnet of Doom ஐ அடுத்து மீண்டும் குற்றப் பகுப்பில் மெல்விலின் கவனம் செல்ல, Le Deuxieme Souffle (1966) திரைக்கு வந்தது. கு (Gu) என்று அழைக்கப்படும் குஸ்த்தாவ் மின்டா சிறையிலிருந்து தப்பிக்கிறார். காவல் துறை அவருடன் தொடர்புள்ள பிற குற்றவாளிகளையும், அவர்கள் ஈடுபடும் குறங்களையும் பற்றிய தகவல்களை சாமர்த்தியமாக அவரிடமிருந்து பெறுவதுடன் அவரையும் சிறைப்படுத்துவதான கதை. கொடூரமான குற்றவாளியான மிண்டா சக குற்றவாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர். அவர்களால் மதிக்கப்படுபவர். இறுதியில் மதிப்பும் மரியதையும் இழந்து போலீஸால் கைது செய்யப்படுகிறார். லினோ வென்ச்சுரா நடித்து விமரிசகர்களின் பாரட்டைப் பெற்ற இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி அதிக வசூலைப் பெற்றுத்தந்த திரைப்படம்.பிரெஞ்சு விடுதலைப் போராளி ஜோசப் கெஸ்ஸல் 1943 இல் எழுதிய Army of Shadows புத்தகம் 1969 இல் மெல்விலால் திரைப்படமாக்கப்பட்டது. ஜெர்மனிய ஆக்கிரமிப்பைப் பற்றி மெல்வில் இயக்கத்தில் உருவான மூன்றாவது திரைப்படம். பிரெஞ்சு விடுதலைப் போராளிகளின் போராட்டத்தின் இறுதி கட்டம். ஜெர்மனிய உளவுப் படை கெஸ்டெப்போ கைது செய்யும் பிரெஞ்சு விடுதலைப் படையின் பிலிப் கெர்பியெர், கைதி முகாமிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது தப்பிவிடுகிறார். இவர் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களில் ஒருவர். முக்கியமான போராளிகள் பலர் காட்டிக்கொடுக்கப்பட்டு கெஸ்டபோவால் சிறையிலிடப்பட்டு கொல்லப்படுவது அவ்வப்போது நிகழுகிறது.

சக போராளியைக் காட்டிக்கொடுப்பவர் மீண்டும் அச்செயலைச் செய்யாமலிருப்பதற்கான ஒரே வழி, அவர் கொல்லப்படுவதே. இந்தக் கண்டிப்பான விதி முறையுடன் போராட்டக் குழு இயங்குவதைத் தவிர வேறு வழியில்லை. போராட்டக் குழுவின் தலைவர் கணித்தில் புலமை வாய்ந்த தத்துவ அறிஞர் இக்குழுவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் சிரத்தையுடன் சிறப்பான முறையில் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. கெர்பியர் விமானத்தில் சென்று பாராசூட்டில் இறங்க பிரிட்டனின் விமானப்படை உதவுகிறது. போராட்டக் குழுவில், கெர்பியரின் சம தகுதியிலிருக்கும் பெண்போராளி மதில்தே, தன் மகளைக் காப்பாற்றுவதற்கு வேறு வழியின்றி, முக்கிய தகவல்களை கெஸ்டபோவுக்கு அளித்து விடுகிறார். இதன் விளைவு போராட்டக் குழுவை வெகுவாகப் பாதிக்கிறது. இறுதியில் தலைவரும் கெர்பியரும் இன்னும் இருவருடன் காரில் சென்று, காட்டிக்கொடுத்த மதில்தே சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சுட்டுக் கொல்கின்றனர்.வழக்கமான விடுதலைப் போராட்டப் படங்களின் வீரமும் தியாகமும் கொண்ட சாகசமிக்க பாத்திரங்களை முன்வைக்காது, வித்தியாசமான, சோகமயமான பாத்திரங்கள், நிகழ்வுகள் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம். போராட்டத்தின் முடிவு காட்டப்படாது படம் முடிகிறது. தான் கண்களால் கண்டு, நேரில் பங்கு பெற்ற விடுதலைப் போர் அனுபவங்களைப் படமாக்க இது ஒரு வாய்ப்பு என மெல்வில் குறிப்பிடுகிறார். அவர் கைவண்ணத்தில், மர்மம் நிறைந்து, விறுவிறுப்புடன் செல்லும் திரைப்படம். மெல்விலுடனான பிரெஞ்சு புதிய அலை இயகுநர்களின் தேநிலவு இந்நேரம் முடிவுக்கு வந்திருந்தது. Army of Shadows, பிரெஞ்சு விமர்சகர்களின், குறிப்பாக பிரெஞ்சு புதிய அலை திரைப்படப் பத்திரிகையான ’கஹியே து சினிமா’வின் கடுமையான விமரிசனத்திற்கு ஆளானது.

Army of Shadows வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன், 1968 இல் பாரிஸில் நிகழ்ந்த மாணவர் எழுச்சியில் பிரெஞ்சு ஜனாதிபதி டி கால் மிகுந்த அவப் பெயரைப் பெற்றிருந்தார். பிரெஞ்சு புதிய அலை இயக்குநர்களால் மாணவர் எழுச்சி தீவிரமாக ஆதரிக்கப்பட்டது. (இந்த எழுச்சிக்கு ஆதரவாக 1968 ஆவது வருட கான் திரைப்பட விழா தொடர்ந்து நடைபெறமுடியாமல் இவர்களால் நிறுத்தப்பட்டது.) 1942 இல் நிகழந்த கதை கொண்ட Army of Shadows திரைப்படத்தின் ஒரு காட்சியில் விடுதலைப் போராட்ட வீர்ர்களுடன் இணைந்து டி கால் உய்ர்வாகக் காட்டப்படுகிறார். டி காலைக் காட்டியிருக்கும் விதமும், இன்னும் சில விஷயங்களும் முன்வைக்கப்பட்டு, புதிய அலை சினிமா விமரிசகர்களால் ’கஹியே தூ சினிமா’வில் மிக மோசமாக விமரிசனம் எழுதப்பட்டது; அவர்களின் தீவிரமான எதிர்ப்பிற்கும் நிராகரிப்பிற்கும் உள்ளானது.

புதிய அலை இயக்குநர்களின் எதிர்ப்பு, பிற நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்தைத் திரையிடட முடியாத சூழ்நிலையை உருவாக்கியது. மெல்வில் மறைந்து முப்பத்து மூன்று வருடங்கள் கழித்து, Army of Shadows உருவாகி முப்பத்து ஏழு வருடங்களுக்குப் பின் இப்படத்தைப் பற்றிய மறுபார்வை ஒன்று ’கஹியே து சினிமா’வில் வெளியிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அமெரிக்காவில் இப்படத்தின் வெளியீடு சாத்தியமாயிற்று. படத்தின் காமெரா நெகடிவிலிருந்து புதிய பதிப்புகள் உருவாக்கப்பட்டு 2006இல் அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் திரையிடப்பட்டு விமரிசகர்களின் ஏகோபித்த பராட்டுகளைப் பெற்றது. அதைக் காண மெல்வில் உயிருடன் இல்லை. Army of Shadows இன்று பிரெஞ்சு திரைப்பட சரித்திரத்தின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

வார்த்தை தவறாது கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கதா நாயகனை மையமாகக் கொண்ட குற்றப் பகுப்புக் காவியம், Le Samouraï (1967). கூண்டிலிருக்கும் சிறு பறவையுடன் ஜோ காஸ்டெல்லோ தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் அழகான Citroën காரை திருடி ஓட்டிச் சென்று அதன் எண் தகட்டை மாற்றிவிட்டு தான் ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்பை நிறைவேற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறான். கொல்லப்பட வேண்டிய இரவு விடுதி மேலாளர் அவன் கைத்துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகிறார். சுட்டுவிட்டு வெளியேறும் நேரம் பியானோ வாசிக்கும் கறுப்பின அழகி பார்த்துவிடுகிறாள்.

போலீஸ் முற்றுகையிட்டு அனைவரையும் விசாரிக்கிறது. போலீஸால் சந்தேகிக்கப்படும் காஸ்டெல்லொ அடையாளம் காட்டப்படுவதற்காக நிறுத்தப்படுகிறான். இரவு விடுதியில் அவனைக் கண்ட சிலர் குழப்பத்துடன் அவன் இல்லை என மறுக்கின்றனர். உண்மை அறிந்த கறுப்பு அழகியும் அவன் இல்லை என்று சொல்லி விடுகிறாள். காதலியின் வீட்டில் அந்நேரம் தங்கியிருந்ததாக நிரூபிக்கும் காஸ்டெல்லோவை போலீஸால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவனது ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்குகின்றனர்.காஸ்டெல்லோவைப் பயன்படுத்திய கும்பல் அவன் எந்நேரமும் கைதாகலாம் அறிந்தவுடன் அவனைக் கொன்றுவிட முயலுகின்றனர். துப்பாக்கிக் காயத்துடன் தப்பித்துவிடுபவன்,. அடுத்த கொலைக்குத் தயாராகிறான். இரவு விடுதியில், கொல்லப்பட வேண்டிய பியானோ வாசித்துக்கொண்டிருக்கும் கறுப்பபின அழகியிடம் சென்று துப்பக்கியை எடுக்க, ஏன் எனபது போல் பரிதாபமாகப் பார்க்கிறாள். சுடத்தயாராகும் அந்த நொடி, மறைந்திருக்கும் போலீஸ் அதிகாரிகளிடமிருந்து குண்டுகள் சரமாரியாகப் பாய்கின்றன. இறந்து கிடக்கும் காஸ்டெல்லோவின் கைத் துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை. தனக்கு வலை விரிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தும் வாக்கைக் காப்பாற்ற அங்கு வந்து தன்னை பலியாக அளித்துவிடுகிறான்.

இறக்கப்போவதை முன்பே முடிவு செய்தவனாக வெற்றுத் துப்பாக்கியுடன் கறுப்பின அழகியை கொல்லச் செல்லும் காஸ்டெல்லோ உயிரிழப்பது, விமரிசகர்களால் சாமுராய் வீரர் தங்களை மாய்த்துக்கொள்ள மேற்கொள்ளும் சடங்கான ’ஹரகிரி’க்கு ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. கிரைம் திரைப்படப் பகுப்பில் இந்த அளவு அழகியலுடன் உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள் மிகவும் அரிது. வண்ணத் திரைப்படத்தை கருப்பு வெள்ளையாகக் காட்ட முனைந்ததாக மெல்வில் கூறியிருக்கிறார். படம் முழுக்க எளிமை, வெறுமை இரண்டையும் அழுத்தமாக உணர்த்தும் வகையில் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் காட்சியில் சாமுராயின் பாதையைக் குறிக்கும் ‘புஷிதோ’(Bushido) விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகங்கள் திரையில் காண்பிக்கப்படுகின்றன. கதா நாயகன் சாமுராய் வீரனுக்குரிய மன நிலை கொண்டிருப்பவன் என்பதை உணர்த்தும் வகையில் படுக்கையைத் தவிர வெகு சில பொருட்கள் மட்டும் கொண்டு ஏறக்குறைய வெறுமையக இருக்கும் அறையில், செல்லப் பறவை எழுப்பும் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க, முழு உடையணிந்து கட்டிலில் படுத்து புகைத்துக் கொண்டிருக்கும் காஸ்டெல்லோ காண்பிக்கப்படுகிறான். செய்யப்போகும் காரியத்தில் முழுக்கவனம் கொண்டு, வார்த்தைகளை நிதானமாக அளந்து பேசும் காஸ்டெல்லோவாக ஆலன் தெலோன் (Alain Delon) நடித்திருக்கிறார். மெல்விலின் குற்றப் பகுப்புப் படைப்புகளின் உச்சமாக கருதப்படும் இப்படம் தரத்திற்கும், அழகியலுக்கும் உலகத் திரைப்படங்கள் வரிசையில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
1953ஆம் ஆண்டு மெல்வில் தனக்கென்று சிறு ஸ்டுடியோவை உருவாக்கினார். உபயோகத்தில் இல்லாத சிறு தொழிற்கூடம் ஒன்றை ஸ்டுடியோவாக மாற்றிக்கொண்டார். உலகிலேயே தனக்கென்று தனி ஸ்டுடியோ வைத்திருந்த ஒரு சிலரில் மெல்வில் ஒருவர். Studios Jenner என்றழைக்கப்பட்ட இந்த ஸ்டுடியோவின் மேற்பகுதி மெல்வில் வாழும் இடமாக மாற்றப்பட்டது. அவரால எந்த நேரமும் ஸ்டுடியோவுக்குள் மேலிருந்து நேராக இறங்கி வர முடியும். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அன்றைய படப்பிடிப்பிற்கான அரங்க அமைப்பையும் ஒளியமைப்பையும் ஸ்டுடியோவில் சரிபார்த்து வைப்பது வழக்கம் எனத் தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார், படமெடுப்பதைக் காட்டிலும் அவருக்கு மிகவும் பிடித்தது எடிட் செய்வது. மிகச் சிறந்த எடிட்டர். Les Samourai படப்பிடிப்பு முடியும் தருவாயில் 1967இல் ஏற்பட்ட தீ விபத்தில் மெல்விலின் ஸ்டுடியோ முழுவதும் எரிந்து நாசமானது. காஸ்டெல்லோவின் துணையாக படத்தில் காட்டப்படும் கூண்டுப் பறவையும் இந்த தீ விபத்தில் இறந்தது. ஒரு வருடம் கழிந்தபின் அதே இடத்தில் ஸ்டுடியோ மீண்டும் உருவாக்கப்பட்டது.

பெரிய நிறுவனங்களையோ, பணம் முதலீடு செய்யும் வங்கிகளையோ சாராது தனியாக திரைப்படங்களைத் தயாரித்து, இயக்கி வெளியிட்ட மெல்வில் சுதந்திரமாகப் படமெடுப்பதில் (independent film making) சாதனை படைத்தவர்; ஒரு rebel – புரட்சியாளர். அமெரிக்காவில் ராபர்ட் ஆல்ட்மன், ஜாண் காசவெட்டீஸ் போன்றோர் சுதந்திரமாகப் படமெடுக்கும் இயக்கத்தின் முன்னோடிகள். பல வருடங்களாக நமது நாடு உட்பட, உலகெங்கும் சுத்திரமாகப் படமெடுப்போர் – independent film makers- ஆவணப்படங்களையும், திரைப்படங்களையும் உருவாக்கி வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. சுதந்திரமாக திரைப்படத்தை உருவாக்கும் போது. செலவு பல மடங்கு குறையும்; படமெடுப்பவர் பிறர் குறுக்கீடின்றி, சமரசம் செய்யாது தனது கலைத்திறமையை படைப்பின் வழியே முழுமையாக வெளிப்படுத்த முடியும். ஆனால் இம்முயற்சிகளுக்கு எவ்வித ஆதரவும் கிடையாது. இவ்வழியை எளிதில் முயன்று பார்க்க முடியாதவாறு சினிமாத் துறையாலும், தொழிற் சங்கங்களாலும் விதி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நம் நாடு உட்பட உலகெங்கும் இந்நிலை நிவுகிறது. இருந்தும் தொழில் நுட்ப வசதிகள் பெருகி அனைத்தும் டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் சுதந்திரமாகத் திரைப்படமெடுப்பது என்பது ஓரளவுக்கு சாத்தியமாகியிருக்கிறது.

மெல்விலின் திரைப்படங்கள் வழக்கமான குற்றப் பகுப்புத் திரைபடங்களை விட வேகம் குறைவாக, ஆனால் பார்வையாளரை அப்படியே இருக்கையில் கட்டிப்போட்டுவிடும்படியான அழுத்தமான கதை, காட்சியமைப்புகள் கொண்டவை. ஏறக்குறைய நிஜ நேரத்தில் நகரும் வகையில் காட்சிகளைப் படமாக்கியிருப்பார். இசை, ஒளிப்பதிவு, வண்ணம் , சட்டகத்தின் நேர்த்தி அனைத்தும் கதையின் ஆழ்த்திற்கும் வேகத்திற்கும் ஏற்ப சற்றும் மிகையில்லாது ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும்.

கைது செய்யப்ட்டு அழைத்துவரப்ப்டும் வரும் வோகெல் ஓடும் ரயிலிலிருந்து தப்பிப்பதுடன் Le Cercle Rouge (1970) – Red Circle – திரைப்படம் துவங்குகிறது. வோகெல் தபிக்கும் அதே நேரம், கோரி சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறான். இருவரும் சந்திக்கின்றனர். மூன்றாவதாக ஒரு கூட்டாளியைச் சேர்த்துக்கொண்டு பாரிஸின் புகழ்பெற்ற நகைக்கடையைக் கொள்ளையடிகின்றனர். வழக்கமாக திருட்டு நகைகளை வாங்குபவர் தயங்கி மறுக்க, புதியவர் ஒருவர் நகைகளுக்குப் பணமளிக்க முன்வருகிறார். அவர், மாற்று அடையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போலீஸ் கமிஷணர் மாத்தீ. விற்கவரும் இடத்தில் உண்மையை அறிந்து தப்பி ஓடும்போது மூவரும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். மெல்விலின் குற்றப் பகுப்பு படங்களில் முக்கிய பாத்திரங்களான குற்ற்வாளிகள் இறுதியில் தண்டிக்கபடுவதைக் காணலாம். அநேகமாக்க் கொல்லப்படுகின்றனர் அல்லது கைதாகின்றனர்.துவக்கத்தில் தப்பியோடும் வெர்கெலை ஏராளமான போலீஸ் தேடுவது பிரம்மாண்டமான முறையில் காட்டப்படுகிறது. ஒவ்வொரு காட்சியும் மிகுந்த அக்கறையுடன் சிறு விவரத்தை கூட விட்டுவிடாமல் மிகுந்த சிரத்தையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. நகைக்கடை திருட்டை ஒவ்வொரு கட்டமாக நாம் அருகிலிருந்து நேரில் காணுவது போல் உணரும் வகையில் மெல்வில்வில் படமாக்கியுள்ளார். வண்ணங்களைப் பயன்படுத்தியிருப்பதில் இன்று உருவாகும் திரைப்படங்களை மிஞ்சும் அளவு தரமுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.

சிரிக்கும் புத்தர் உருவமும் புத்தர் சொன்னதாக்க் குறிப்பிடப்படும் வாசகங்களும் Red Circle படத்தின் துவக்கத்தில் காண்பிக்கப்படுகின்றன. Le Samouraï யிலும் இவ்வாறு ‘புஷிதோ’ விலிருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வாசகங்கள் துவக்கத்தில் திரையில் ஒடுகின்றன. இந்த வாசகங்கள் மெல்விலால் சொந்தமாக எழுதப்பட்டவை. மெல்விலைப் பொறுத்தவரையில் திரைப்படம் என்பது யதார்த்தமல்ல, முழுக்க முழுக்க கற்பனை, கனவு. அவரது கதைகள் யதார்த்திலிருந்து மிகப்புனைவு நிலைக்கு நகர்ந்துவிடுவது வழக்கம்; இவ்வாறான கனவுலகை உருவாக்குவது அவருக்கு கைவந்த கலை.

Red Circle படத்தில் பெண் பாத்திரம் ஒன்று கூடக் கிடையாது. மெல்விலின் குற்றப்பகுப்புப் படங்களில் பெண்களுக்கான இடம் மிகக் குறைவு. இதனால் மெல்வில் ஆணாதிக்க உணர்வுள்ளவர், பெண்களுக்கு முக்கியமளிக்காதவர் போன்ற விமரிசனங்கள் எழுந்தன. அவரின் முதல் இரண்டு படங்களிலும், தொடர்ந்து வந்த ‘Léon Morin, Priest’இலும் பெண் பாத்திரங்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. மெல்விலுடன் நெருங்கிப் பழகியவரும் Meliville on Melville நூலின் ஆசிரியருமான ருயி நொகேய்ரா (Rui Nogueira) இவ்விமரிசனத்தைப் பற்றிச் சொல்லும் போது, மெல்விலுக்குப் பெண்கள்மேல் விருப்பம் அதிகமே தவிர வெறுப்பு சற்றும் கிடையாது. குற்றப் பகுப்புப் படங்களைப் பொறுத்தவரையில், திரைக்கதை எழுதும் பொறுப்பை அவரே மேற்கொண்டார். பெண் பாத்திரங்களை அவரால் சரியாக உருவாக்க முடிந்ததில்லை. பல முறை பெண் பாத்திரங்களைத் தனது திரைக்கதைகளில் கொண்டுவர முயன்றும் இறுதியில் பாத்திரப்படைப்பு திருப்தியளிக்காது அதைத் தவிர்த்துவிடுவார் அல்லது அதிக முக்கியம் இல்லாத சிறிய பாதிரமாகப் படைப்பார் என்கிறார்.

மெல்வில் ஒரு இரவுப் பறவை. இறுதி நாட்களில் ஊருக்கு வெளியே, வசதியான பெரிய வீட்டில் மனைவியுடனும் செல்லப் பூனைகளுடனும் வாழ்ந்தார். (மெல்விலின் செல்லப் பூனைகளை Red Circle படத்தில் காணலாம். ) பகலில் வீட்டில் ஒளி புகாது தடுப்புகளும் திரைச் சீலைகளும் கொண்டு மறைக்கப்பட்டிருக்கும். மாலை துவங்கும் போதுதான் அவருடைய நாள் துவங்கும். விருந்துகளுக்கும் பார்ட்டிகளுக்கும் போவதைத் தவிர்த்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இரவுகளில் நண்பர்களுடன் பாரிஸின் தெருக்களில் தன்னுடைய பெரிய அமெரிக்கக் காரில் ஜாஸ் இசை ஒலித்துக் கொண்டிருக்க சுற்றிக் கொண்டிருப்பது அல்லது திரைப்படங்களைப் பார்ப்பதும் அவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதும் வழக்கம். அவரது ஸ்டுடியோவில் படம் பார்ப்பதற்கான அழகான அரங்கு இருந்தது.அமெரிக்கத் திரைப்படங்களையும், கார்களையும், வாழ்க்கையையும் நேசித்த மெல்வில் உருவாக்கிய கதாபத்திரங்கள் அமெரிக்க ‘ஃபெடோரா’ தொப்பிகளையும் நீளமான ‘ட்ரென்ச்’ கோட்டுகளையும் அமெரிக்க முறையில் அணிந்துகொண்டிருப்பதை அவர் படங்களில் காணலாம். மெல்விலின் அமெரிக்க மோகம் பற்றி ருயி நொகேய்ரா குறிப்பிடுகையில், மெல்வில் நேசித்த அமெரிக்கா, அவர் வெகுவாக மதித்த இயகுநர்கள் வாழ்ந்த காலத்திய, நாற்பதுகள் ஐம்பதுகளின் அமெரிக்கா; தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்திய, பிற நாடுகளுக்கு உதவிய அமெரிக்கா. இன்றைய அமெரிக்கா அல்ல என்கிறார். மெல்வில் எப்போதும் ஜாண் போர்ட் போன்ற அமெரிக்க இயக்குநர்களின் படங்கள் தன்னைப் பாதித்ததாகச் சொல்லுவார். ஆனால் அவரது திரைப்படஙகள் எவருடைய பாதிப்பையும் வெளிப்படுத்தாது, அவரின் தனித்துவமான படைப்புகளாகவே உருவானவை.

1972 இல் மெல்விலின் இறுதித் திரைப்படம் Un Flic வெளிவந்தது. 1973 ஆகஸ்ட் இரண்டாம் தேதி ஐம்பத்து ஐந்தாவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். ஒரு குறும்படமும் பதிமூன்று முழு நீளத் திரைப்படஙளும் அவர் இயக்கத்தில் வெளிவந்துள்ளன. இந்தக் குறுகிய வாழ்நாளில் அவர் சந்தித்த எதிர்ப்புகளும் சிக்கல்களும் ஏராளம். தனது தனித்தன்மையை எக்காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்காத மெல்வில், பிரெஞ்சு திரைப்பட சரித்திரத்தை மாற்றியமைத்த, முக்கிய ஆளுமைகளில் ஒருவர்.

No comments: