Monday, 5 March 2012

மௌனத் திரைப்பட மேதை F.W மொர்னவ்F.W மொர்னவ்-எஸ்.ஆனந்த்-

திரைப்படக் கலையின் பரிணாம வளர்ச்சியின் வேகம் நம்மை பிரமிக்கவைப்பது. சினிமா எனும் கலை வடிவம் தொடங்கிய 1895 இலிருந்தே அதற்கான இலக்கணமும், மொழியும் உருவாக ஆரம்பித்தன. அமெரிக்க இயக்குநர் கிரிஃபித் (D. W. Griffith) போன்றோரின், ஆரம்பகாலக் கதை சொல்லும் முறைகளைத் தாண்டி, அடுத்த கட்டங்களுக்கு முன்னேறிக் கொண்டிருந்த திரைப்படக் கலையின் வளர்ச்சியில் ஜெர்மனிய திரைப்பட இயக்குநர்களின் பங்கு முக்கியமானது. 1920களில் திரைப்படங்களில் ஒளியைப் பயன்படுத்துவதில் ஜெர்மனியில் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களும், கதை சொல்லும் முறைகளும் திரைப்படக் கலையை ஒரு புதிய யுகத்துக்கு கொண்டு சென்றன.

1920கள் ஜெர்மானிய திரைப்படத்தின் பொற்காலம் எனச் சொல்லபடுவது. F.W மொர்னவ். (1888 – 1931) இக்காலகட்டத்தின் முக்கிய இயக்குநர். காமெராவை அதன் கட்டுகளிலிருந்து ‘விடுதலை’ (unchain) செய்தவர் எனப் புகழப்படுபவர். கலைநேர்த்தியும், தொழில்நுட்பமும் சிறப்பாகக் கொண்டு, ஆழமான மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்திரைமேதையின் படைப்புகள், ப்ரிட்ஜ் லாங் (Fritz Lang), G.W. பாப்ஸ்ட் (G.W. Pabst) போன்ற இவரது சமகால இயக்குநர்களின் படைப்புகளை விட உய்ர்வாக மதிக்கப்படுகின்றன.

கிரிஃபித்தின் திரையாக்க விதிமுறைகள், அடுத்து வந்த மொர்னவால் உடைக்கப்பட்டன. உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களில் மொர்னவ் திரைப்படங்களின் பாதிப்பில்லாதவர் மிகச் சிலரே. இன்று உருவாக்கப்படும் திரைப்படங்களிலும் மொர்னவ் ஏற்படுத்திய திரையாக்க முறைகளின் தாக்கத்தைக் காணலாம்.

மொர்னவ், தனது பன்னிரண்டாவது வயதிலிலேயே ஷேக்ஸ்பியரையும், நீட்ஷேயையும் கற்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஹ்ய்டெல்பர்க் பல்கலைக்கழகத்தில், ஒவியக் கலையும் தத்துவமும் பயிலும்போது, பல்கலைக் கழக நாடகங்களில் பங்கேற்றார். பிரபல ஜெர்மன் நாடக இயக்குனர் மாக்ஸ் ரெய்ன்ஹார்ட்டின் (Max Reinhardt) நாடக இயக்கதில் சேர்ந்த மொர்னவுக்கு நடிப்பதுடன் நாடகத்தை இயக்குவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் உலகப்போரில் ஜெர்மன் விமானப்படையில் விமானியாகப் பணியாற்றியபின் ஸ்விட்சர்லாந்தின் ஜெர்மன் தூதரகத்தில் பணியில் சேர்ர்ந்தார். அங்கு ஜெர்மனிக்கு ஆதரவான பிரச்சாரக் குறும்படங்கள் தயாரிக்கும் பொறுப்பு மொர்னவுக்கு அளிக்கப்பட்டது.

1920களில் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக ஜெர்மனியில் பிரபலமாயிருந்த எக்ஸ்பிரஷனிச ஓவியப் பாணியின் தாக்கம், அந்நாட்டுத் திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. முதல் உல்கப்போரில் ஜெர்மனியின் படுதோல்விக்குப்பின, அங்கு நிலவிய வறுமை, பாதுகாப்பின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவை மக்களின் மனநிலையை வெகுவாகப் பாதித்திருந்த நேரம். எக்ஸ்பிரஷனிச ஓவியர்கள் தங்கள் ஆழ் மன உணர்ச்சிகளையும், அனுபவித்த மன அழுத்தங்களையும் ஓவியங்களில் வெளிப்படுத்தினர். மொர்னவின் திரைப்படங்களில் எக்ஸ்பிரஷனிச பாணி சிறப்பாகப் பயன்படுத்தபட்டுள்ளது.

எக்ஸ்பிரஷனிச திரைப்படங்களுக்கு முன்னோடி, ஜெர்மனிய இயகுநர் ராபர்ட் வெய்னின் The Cabinet of Dr. Caligari (1920). இப்படம் முழுவதும் எக்ஸ்பிரஷனிசக் காட்சிகள் வரையப்பட்ட அரங்குகளில் படமாக்கப்பட்டது. மொர்னவ், காமெராவைத் துணையாகக் கொண்டு தனது படங்களில் எக்ஸ்பிரஷனிச அழகியலை வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார்.

மொர்னவின் முதல் முழு நீளத் திரைப்படமான ‘The Boy in Blue’ 1919 இல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து பெலா லகூசி நடித்து அவர் இயக்கிய Dr..Jekyll and Mr.Hyde’ (1920) முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக 1921 வரை வெளிவந்த அவரது திரைப்படங்களின் பிரதிகள் பாதுகாக்கப்படாமல் அழிந்துபோயின. பின்னர் வெளிவந்தவற்றில் தற்போது மறு பதிவு (remaster) செய்யப்பட்டுக் காணக்கிடைக்கும் ஒன்பது திரைப்படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம். அனைத்தும் மௌனத் (Silent) திரைப்படங்கள்.1921 இல் மொர்னவ் இயக்கி அளித்த ‘Haunted Castle’, ஒரு மாளிகையில். வருடாந்திர வேட்டையில் பங்கேற்க விருந்தினர்கள் வந்திருக்கும் நேரம் நடக்கும் சம்பவங்களைச் சொல்கிறது. மாளிகை தலைவியின் தோழி தனது இரண்டாவது கணவருடன் வந்திருக்கிறாள். சொத்துக்காக சகோதரனைக் கொன்றவர் என சந்தேகிக்கப்படும், அவளது முதல் கணவரின் சகோதரரும் அங்கிருக்கிறார். கொட்டும் மழையில் வேட்டை ரத்தாகிறது. வந்திருக்கும் பாதிரியார் ஒருவர் காணாமற் போகிறார். தொடரும் மர்மமான பல நிகழ்வுகளுக்குப்பிறகு, முதல் கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள், தலைவியின் தோழியும் அவளது இரண்டாவது கணவரும் எனும் உண்மை வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத முடிவு. முழுவதும் செப்பியா நிறத்தில் (sepia tone), சிறப்பான காமெரா கோணங்கள், காட்சியமைப்புகள் கொண்டு மாளிகைகுள் நிகழ்பவற்றைக் காட்டும் படம்.

உலகின் முதல் டிரகுலா திரைப்படமான Nosferatu, a Symphony of Horror , 1922 இல் வெளிவந்தது. ‘டிரகுலா’ நாவலைப் படமாக்க அதன் ஆசிரியர் ப்ராம் ஸ்டோக்கரின் மனைவி அனுமதி அளிக்கவில்லை. பெயர்கள், சம்பவங்கள் மாற்றப்பட்டு, ’டிரகுலா’ நாவல், ‘நொஸ்பராத்து’ என்ற பெயரில் மொர்னவால் திரைப்படமாக்கப்ப்டது.

ஒரு மாளிகையை விற்பதற்காக, ப்ரெம்மென் எனும் ஊரிலிருந்து, கர்பாத்தியன் மலைப்பகுதியில வாழும் ஆர்லாக் பிரபுவின் பாழடைந்த அரண்மனைக்கு வந்து சேரும் ஹட்டர், ஹட்டரின் மனைவி எல்லென், ஆர்லாக் பிரபு ஆகிய மூன்று முக்கிய பாத்திரங்கள். எல்லெனின் புகைப்படத்தை ஹட்டரிடம் காணும் ஆர்லக் பிரபு, அவள் மீது மையல் கொள்கிறார். ஆர்லாக் பிரபுதான் ரத்தக் காட்டேரியான நொஸ்பராத்து என அறியும் ஹட்டர் அங்கிருந்து உயிர் தப்பி பிரம்மெனுக்கு திரும்புகிறான்.ஆர்லாக் பிரபு எல்லெனை அடைவதற்காக ஒரு சரக்குக் கப்பலில் ப்ரெம்மன் வந்து சேருகிறார். நொஸ்பராத்துவின் வருகை, ப்ளேக் நோய் மூலம் ப்ரெம்மனுக்கு அழிவைக் கொண்டுவருகிறது. சாவுகள் பல நிகழுகின்றன. ஆர்லாக் பிரபு தன்னைத் தேடி வருவதை எல்லென் உணருகிறாள். ஹட்டர் கொண்டு வந்திருக்கும் புத்தகத்திலிருந்து நொஸ்பராத்து பற்றிய விவரங்களை அறிகிறாள். கதிரவ உதயத்தின் போது இளம்பெண்ணின் ரத்தத்தைக் குடிக்கும் ரத்தக் காட்டேரிக்கு அழிவு நிச்சயம் என அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பின்னிரவில் ஆர்லாக் பிரபு, எல்லெனைத் தேடி வருகிறார். எல்லெனிடம் தன் ரத்த ஆசையை தீர்த்துவிட்டு அவர் புறப்படத் தயாராகும் நேரம், பொழுது விடிகிறது. உதயமாகும் கதிரவனின் ஒளி பட, நொஸ்பராத்துவான ஆர்லாக் பிரபுவின் உடல் பொடிப் பொடியாக சிதைகிறது. அழிவின் பிரதிநிதியான நொஸ்பராத்து அழிந்து போகிறது. எல்லெனின் உயிரும் பிரிகிறது.

நெடிந்து உயர்ந்த , வினோத உருவுடன் திகிலூட்டும் தோற்றத்தில் இப்படத்தில் நாம் காணும் ’நொஸ்பராத்து’ பாத்திரம் இதுவரை வெளிவந்துள்ள ‘டிரகுலா’ பாத்திரங்களிலேயே சிறப்பானதாக விமரிசகர்களால் சொல்லப்படுகிறது. பின்னர் வெளிவந்த பதிப்புகளில் டிரகுலாவாகத் தோன்றிய பெலா லகூசி, ப்ரான்க் லங்கேல்லா, கிரிஸ்டொபர் லீ போன்ற நடிகர்களைவிட, நடிகர் மாக்ஸ் ஷ்ரெக்கின் உருவமும் நடிப்பும் இப்படத்தில் நோஸ்பராத்து பாத்திரத்தின் குரூரத்தையும் மிருகத் தன்மையையும் பலமடங்கு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன.
ஆர்லாக் பிரபுவின் பாழடைந்த அரண்மனையில் ஹட்டர் தங்கும்போது போது அவன் ரத்தத்தை ஆர்லாக் பிரபு குடிக்க முயலும் தருணம், ப்ரெம்மன் நகரில், கனவில் கலவரமடையும் எல்லெனின் கதறல், இங்கு ஆர்லாக் பிரபுவைப் பாதிக்க, அவர் ஹட்டரை விட்டு விலகிச் செல்வது; ஆர்லாக் பிரபு ப்ரெம்மனில் நுழைவதை எல்லென் உணருவது போன்று உணர்வுத் தொடர்புள்ள காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. பகலுக்கு செப்பியா வண்னமும், இரவுக்கு நீல நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இப்படத்தில் கதிரவ ஒளி பட்டு நோஸ்பராத்து அழிவதாகக் காட்டப்படுள்ளது. டிரகுலா நாவலில், டிரகுலாவின் இதயம் ஆழமாகக் குத்தப்படுவதால் டிரகுலா அழிக்கப்படுகிறது. ’நொஸ்பராத்து’ கதையின் பின் பகுதி முழுவதும் ‘டிரகுலா’ நாவலிலிருந்து வேறுபடுகிறது. ஆனால், ப்ராம் ஸ்டோகரின் மனைவி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பபின்படி அனைத்து ‘நொஸ்பெராத்து’ திரைப்படப் பிரதிகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன். அழியாமல் தப்பித்த சில பிரதிகளைக் கொண்டு மறு பதிவு செய்யப்பட்டு ‘நொஸ்பெராத்து” திரைக் காவியம் இன்று நமக்கு பார்க்கக் கிடைக்கிறது.

ஜெர்மனியத் திரை மேதை வெர்னெர் ஹெர்சாக், 1979 ஆம் வருடம், தனது Nosferatu the Vampyre திரைப்படத்தை, அவரது ஆத்மார்த்த இயக்குனர் மொர்னவுக்கு அஞசலியாக அளித்தார். இப்படத்தில் க்ளாஸ் கின்க்ஸ்கி நொஸ்பராத்துவாக நடித்திருக்கிறர்.

நொஸ்பராத்துவுக்கு அடுத்து , 1921 ஆம் வருடம் . வெளிவந்த மொர்னவின் The Phantom, வெளியுலகில் அதிகம் அறியப்படாத திரைப்படம்.. கவிஞனாக முயன்று கொண்டிருக்கும் ஏழை லாரென்ஸ் இதன் கதாநாயகன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அழகிய இளம்பெண் மேரிமீது ஆசைபிறக்க அவன் வாழ்க்கை மாறுகிறது. பணத்துக்காக தனது சொந்த அத்தையை ஏமாற்றும் திட்டத்தில் சகோதரியின் காதலனால் ஈடுபடுத்தப்படு இறுதியில் சிறை செல்கிறான். வித்தியாசமான, கலையழகுமிக்க காட்சியமைப்புகள் கொண்ட திரைப்படம்.The Last Laugh 1924, மொர்னவின் எக்ஸ்பிரஷனிசக் காவியம். தொழில்நுட்பமும், அழகியலும் பிணைந்த திரையாக்க வெளிப்பாடு. கட்டுகளிலிருந்து ‘விடுதலை’ செய்யப்பட்ட (unchained) காமெரா ஒரு பாத்திரமாக மாறிவிடுகிறது. இப்படத்தின் சட்டகங்கள் ஒவ்வொன்றும் அனுபவித்துப் பார்க்கப்படவேண்டியவை.கதாநாயகன், ஒரு நட்சத்திர விடுதியின் சிறப்பு வாயிற்காப்போனாக, பணிச்சீருடையையும் தொப்பியையும் அணிந்து ஒரு மன்னரைப் போல் மிடுக்குடன் பணியாற்றிவருபவர். பல வருடங்களாக நன்கறிந்த வாடிக்கையாளர்களால் மரியாதையுடனும் அன்புடனும் பழகப்படுபவர். வயதான காரணத்தால், நிர்வாகம் அவரது பணியை மாற்றிவிடுகிறது. கழிப்பறை மேற்பார்வையாளராக நியமிக்கப்படுகிறார்.

தினமும் சீருடை அணிந்து, பெருமையுடன் தன் இருப்பிடத்திற்கு சென்றுவந்த கதாநாயகனுக்கு சீருடையை இழப்பது பெரும் அவமதிப்பாகத் தோன்றுகிறது. அதைத் திருடி அணிந்துகொண்டு வீட்டுக்குச் செல்லுகிறார். கழிப்பறை மேற்பார்வையாளராகப் பணி மாற்றப்பட்டுள்ளது அவருக்கு உணவு கொண்டுவரும் பெண்ணால் , அவர் வாழுமிடத்திலுள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. மனமுடைந்து போகிறார்.

தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் இப்படத்தின் சோக முடிவு மாற்றியமைக்கப்பட்டது. இறுதியில், கதாநாயகன் மீது பாசமுள்ள ஒரு வாடிக்கையாளர் தன் சொத்தை அவருக்கு எழுதிவைக்க, ஏழைக் கதாநாயகன் பெரும் பனக்காரராகிறார். அதே நட்சத்திர விடுதியில் விருந்துண்டு, அனைவருக்கும் சன்மானம் வழங்கி பெருமையாகச் செல்கிறர். முடிவின் மாற்றத்தில் மொர்னவுக்கு ஒப்புதல் இல்லையெனினும், அவர் இப்பகுதியைப் படமக்கியிருக்கும் விதம் படத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது. முடிவு மாற்றப்பட்டிருப்பதை எழுத்து மூலம் படத்தில் மொர்னவ் தெரிவிக்கிறார். மற்றபடி எழுத்துப்பகுதிகள் (Title cards) அறவே இன்றி பிம்பங்களைக் கொண்டு மட்டுமே முழுக்கதையும் சொல்ல்லப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பு.சீருடை (Uniform) – ராணுவம், காவல், சர்வாதிகாரம் போன்ற அதிகார மையங்களின் அடையாளம் – இப்படத்தின் குறியீடாகிறது. சீருடையை இழக்கும் கதாநாயகன், தன் வாழ்வு அத்துடன் முடிவடைந்ததெனும் துயரத்திற்கு ஆளகிறான். வழக்கமாக அணியும் சீருடை இன்றி வெளியுலகை எதிர்கொள்ள முடியாத நிலை. சுற்றி வழ்பவர் சீருடை அணியாத தன்னை இகழ்ந்து ஒதுக்குவதாக வருந்தும் கதாநயகனின் மன உணர்ச்சிகள் மொர்னவால் எக்ச்பிரஷனிச பிம்பங்களாக சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.

படத்தின் ஆரம்பமே காமெராவின் விடுதலையை அறிவிப்பதாக அமைந்துள்ளது. கீழிறங்கும் லிப்டில் காமெராவும் நம்முடன் சேர்ந்து இறங்கி, லிப்டின் கதவு வழியே , நட்சத்திர விடுதியின் வரவேற்பறைக்கு வந்து , அப்படியே அடுத்த காட்சியினுள் புகுந்து, சுழலும் வாயிற் கதவுகளை நோக்கிச் சென்று, சுழலும் அந்தக் கண்ணாடிக்க் கதவுகள் வழியே வாயிலில் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருக்கும் கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்கிறது. மகளின் திருமண விருந்தில் குடித்துவிட்டு நிலை தடுமாறும் கதாநாயகனின் பார்வை வழியே அவரைச் சுற்றியிருப்பவற்றைக் காட்டுகிறது.

ஜன்னல் வழியாக போதையில் கதாநாயகன் பார்க்கும்போது ட்ரம்ப்பெட்டை வாசித்துகொண்டிருப்பவர் முன்னும் பின்னும் இசைக்கேற்ப அசைவதாகக் காட்டப்பட்டுள்ள காட்சி, காமராவை ஊஞ்சலில் வைத்து ஆடவிட்டுப் படமாக்கபட்டது. திருடப்பட்ட சீருடையுடன் பணியிறக்கம் செய்ய்ப்பட்டதை நினத்து மறுகி நட்ச்சத்திர விடுதி முன் நிற்கும் கதநாயகனின் பார்வையில், அந்த உயர்ந்த கட்டிடம் மேலிருந்து வளைந்து இறங்கி அவரை அழுத்தவருவது போல் காட்டப்படுகிறது. படம் முழுவதும் உணர்ச்சிகள் காட்சிப் படிவங்களாகக் காட்டப்படுகின்றன. நடிகர் எமில் யான்னிங்ஸ் (Emil Jannings)) வயதான கதாநாயகன் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ’இறுதி மனிதன்’ என ஜெர்மன் மொழியில் அறியப்படும் இப்படம் ’இறுதிச் சிரிப்பு’ என அமெரிக்காவில் வெளியிடபட்டது.

பிரெஞ்சு நாடகாசிரியர் மொலியெரின் நாடகத் தழுவலான டார்டுஃப் – Tartuffe, 1925 இல் வெளிவந்தது. சொத்தை அபகரிக்கத் திட்டமிடும் தாதிப் பெண்ணிடமிருந்து, பாட்டனாரை பேரன் காப்பாற்றும் கதை. திரைப்படத்தினுள் ஒரு திரைப்படமாக விரியும் கதை. பேரன் ’டார்டுஃப்’ திரைப்படத்தை அவருக்காக வீட்டில் திரையிடுகிறான். அப்படத்தில், மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் டார்டுஃப்க்குச் சீடனாகும் செல்வந்தனின் கதை காண்பிக்கப்படுகிறது. தன் சொத்தை டார்டுஃப்க்கு எழுதிக் கொடுத்துவிட முடிவுசெய்யும் செல்வந்தனுக்கு, மனைவியின் முயற்சியால் உண்மை தெரியவர, ’டார்டுஃப்’ விரட்டியடிக்கப்படுகிறான். இப்படத்தைப் பார்ர்க்கும் பாட்டனார் தனது நிலமையை உணருகிறார். அவரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் பணிப்பெண் நீக்கப்பட்டு, சொத்து காப்பாற்றப்படுகிறது. ஆன்மீகத்தின் பெயரால நடைபெறும் மோசடிகளைக் கிண்டல் செய்யும் திரைப்படம்.மொர்னவின் புகழ்பெற்ற ஃபாஸ்ட் – Faust , 1926 இல் வெளிவந்தது. கதே, கிரிஸ்டொபர் மார்லோ இருவரின் ‘ஃபாஸ்ட்’ நாடகங்களிலிருந்தும் இப்படத்திற்கான கதை பெறப்பட்டுள்ளது. தீவிர கடவுள் பக்தரான ஃபாஸ்ட்டை தன் பக்கம் கொண்டுவரமுடியும் என மெப்பிஸ்ட்டோ (சாத்தான்), தேவதூதனிடம் சூளுரைக்கிறான். தொடர்ந்து நிகழும், நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட கதை.

வயோதிக அறிஞரான ஃபாஸ்ட் தன்னச் சுற்றி நிகழும் ப்ளேக் நோய் மரணங்களைத் தடுக்க முடியாது கலங்கும்போது, மெப்பிஸ்ட்டோ (சாத்தான்) குறுக்கிடுகிறான். ஒரு நாள் மட்டும் தன்னிடம் சரணடைந்தால் போதும், அன்று நோயைக் குணமாக்குவதிலிருந்து அவர் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக ஆசை காட்டுகிறான். கலக்கமடைந்திருக்கும் ஃபாஸ்ட் மெப்பிஸ்ட்டோவுடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்.

ப்ளேக் நோயாளிகளைக் குணமாக்கும்போது சிலுவையை எதிர்கொள்ள முடியாத ஃபாஸ்ட் சாத்தானின் பிரதிநிதியென ஊராரால் தாக்கப்படுவதுடன் அவர் வீடும் தீக்கிரையாக்கப்படுகிறது. மெப்பிஸ்ட்டோ ஃபாஸ்ட்டுக்கு இளமையை மீட்டுத் தருகிறான். ஃபாஸ்ட்டை இத்தாலிய இளவரசியிடம் காதல் கொள்ளச் செய்து, அவளிடமிருந்து அவரை ஒரு கொலைக்காக பயந்து ஓடச் செய்கிறான். ’ஒரு நாள் ஒப்பந்தம்’ முடிய, இளமையை இழக்க விரும்பாத பாஸ்ட் தனது வாழ்க்கையையே மெப்பிஸ்ட்டோவிடம் ஒப்படைக்கிறார்.

கிராமத்தில் ஒரு பெண்ணைக் காதலிக்க வைத்து, பின்னர் அங்கிருந்தும் ஒரு கொலைக்காக ஃபாஸ்ட்டை தப்பி ஓடவைக்கிறான். மணமாகாது அவரது குழந்தைக்குத் தாயாகும் அப்பெண், குற்றம் செய்தவளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஊராரால் உயிருடன் எரிக்கப்படுகிறாள். அவள் கதறல் கேட்டு மனமுடையும் ஃபாஸ்ட் தன் இளமையைச் சபிக்கிறார். பழைய வயோதிக உருவத்தை அடைகிறார். எரிக்கப்டும் தன் காதலியை அடைந்து மன்னிப்புக் கோறும் ஃபாஸ்ட், அவளுக்கு மூட்டப்பட்ட சிதையில் அவளோடு சேர்ந்து மரணத்தைத் தழுவுகிறார். இறுதியில் மெபிஸ்ட்டோ தோற்கிறான் . காதல் – அன்பு வெல்கிறது.ஒவ்வொரு காட்சியும் மிக்க கலையுணர்வோடு படமாக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்குப் புதிதான பல காமெரா உத்திகள் இப்படத்தில அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. மெபிஸ்ட்டோவாக எமில் யன்னிங்ஸ் நடித்திருக்கிறார். ஃபாஸ்ட்டின் வெளியீட்டுக்கு முன்பே மொர்னவ் ஹாலிவுட் திரையுலகிற்கு புலம் பெயர்ந்துவிட்டார்.

மொர்னவின் முதல் அமெரிக்கத் திரைப்படம், SUNRISE (1927). Last Laugh திரைப்படதிற்குப்பின் உலகளவில் முக்கியமான இயக்குனராக அறியப்பட்ட மொர்னவை, அமெரிக்க ஃபாக்ஸ் நிறுவனம் (Fox Film Corporation) ஹாலிவுட்டுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேறது. ஹாலிவுட் வரலாற்றிலேயே முதல் முறையாக, மொர்னவுடன் நிபந்தனைகள் ஏதுமற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது., மொர்னவின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் எந்த நிலையிலும் ஃபாக்ஸ் நிறுவனம் தலையிடாது; செலவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. தனது ஊதியத்தையும் அவரே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஹாலிவுட் வரலாற்றில் அடுத்து இச்சிறப்பை பெற்ற ஒரே இயகுநர் ஆர்ஸன் வெல்ஸ் ( Citizen Kane).Sunrise எளிமையான கதையைக் கொண்டது. அழகான மனைவியுடனும், குழந்தையுடனும் கிராமத்தில் வாழும் கதாநாயகன், நகரத்திலிருந்து வரும் ஒரு பெண்ணால் கவரப்படுகிறான். அவளிடம் தன்னை இழக்கிறான். வாழ்க்கை சீர்குலைகிறது மனைவியை படகிலிருந்து ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டுத் தன்னோடு வந்துவிடுமாறு அக்காதலி நச்சரிக்கிறாள். படகில் செல்லும் போது தன்னை ஆற்றில் தள்ள கணவன் முயலுவதை அறியும் மனைவி அதிர்ச்சியடைய, கலங்கும் கணவன் மன்னிப்புக் கேட்டு அழுகிறான்.

இந்த நிகழ்ச்சி கணவன் , மனைவி இருவரின் உறவை மீண்டும் புதுப்பிக்கிறது. புதுக் காதலர்கள் போல் இருவரும் உல்லாசமாக நகரில் சுற்றியலைந்துவிட்டு, படகில் வீடு திரும்புகின்றனர். வழியில் மழையும் புயலும் வலுக்க, படகு கவிழ்கிறது. கதநாயகன் மட்டும் வீடு திரும்புகிறான். அனைத்துக்கும் காரணமான நகரப்பெண்ணைக் கதநாயகன் கோபத்தில் தாக்க, அவள் நகரத்திற்கு ஓடிவிடுகிறாள். கிராமத்தினர் மனைவியை ஆற்றிலிருந்து உயிருடன் மீட்கின்றனர். இரவின் இருள் விலகி கதிரவனின் ஒளிமிக்க உதயத்துடன் படம் முடிவுபெறுகிறது.பெரும் பொருட்செலவில் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட படம். ஒவ்வொரு சட்டகமும் விவரித்து எழுதப்படவேண்டிய அளவு சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.. சன்ரைஸ், உலகளவில் விமரிசகர்களின் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்று சிறந்த படமென ஏற்றுகொள்ளப்பட்டது. சன்ரைஸ் வெளிவந்து சில நாட்களில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பேசும் படமான Jazz Singer வெளிவந்தந்ததால், மௌனப் படமான சன்ரைஸ், வணிக ரீதியாகத் தோல்வியடைந்த்தது.சன்ரைஸுக்கு அடுத்து 1930 இல் மொர்னவ் அளித்த படம், City Girl. நகரத்திற்கு வரும் லெம் (Lem), கேட்டை(Kate ) சந்திக்க இருவரும் காதல் வயப் படுகின்றனர். லெம், கேட்டை மணம்புரிந்து தன் பண்னை வீட்டுக்கு அழைத்து வருகிறான். லெம்மின் தகப்பனுக்கு கேட்டை அறவே பிடிப்பதில்லை. பிரச்சினைகள் தொடங்குகின்றன. லெம்மின் மண வாழ்க்கை கசக்கிறது. அறுவடை ஆரம்பிக்க, பல ஆண்கள் வேலைக்கு வருகின்றனர். மருமகளைச் சந்தேகிக்கும் தகப்பன் அதை லெம்மிடம் சொல்ல, கேட் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பின்னர் நடப்பவை, தகப்பனுக்கு, அவர் தவறை உணரச் செய்கின்றன. லெம் அவளை வீட்டுக்கு திரும்ப அழைத்துவருகிறான். தகப்பன் கேட்டிடம் மன்னிப்புக் கேட்டு அவளை அன்புடன் வரவேறகிறார். கேட்டின் பண்ணை வாழ்க்கை லெம்முடன் இனிதாகத் தொடர்கிறது.லெம்மும் , கேட்டும் பண்ணை வீட்டுக்கு கோதுமை வயல்கள் வழியாக ஆனந்தமாக நடந்தும் ஒடியும் வரும் நீண்ட ‘ட்ராக்கிங் ஷாட்’ (tracking shot)மிகவும் பேசப்படுவது; இன்றுவரை ஏராளமான திரைப்படஙகளில் பின்பற்றப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் காட்சியமைப்புகள், காமெரா கோணங்கள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். Tree of Life போன்ற திரைப்படங்களை அளித்துள்ள தனித்துவமிக்க இயக்குநரான டியரென்ஸ் மாலலிக் (Terrence Malick), மொர்னவின் படங்கள் தன்னிடம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு பற்றிச் சொல்லும் போது இத் திரைப்படத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். அவரது ’Days Of Heaven ’ இல் இப்படத்தின் பாதிப்பைக் காணலாம்.

புகழ்பெற்ற Nanook of the North ஆவணப்படத்தை இயக்கிய ராபர்ட் ஃப்ளாகெர்ட்டியுடன் இணைந்து மொர்னவ் தொடங்கிய திரைப்படம் ‘தபு (Tabu) - (1931). இயற்கை அழகு மிக்க தஹித்தி தீவுகளில் படமாக்கப்பட்டது. இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட ஃப்ளாகெர்ட்டி விலகிக்கொண்டார்.தபு, இளம் காதலர்களின் கதை. கடலில் முத்துக் குளிப்பதில் வல்லவனான மத்தாஹி அங்கு வசிக்கும் ரெரியைக் காதலிக்கிறான். ரெரியை, அவள் குடும்பத்தினர், தங்கள் குலதெய்வத்துக்கு அர்ப்பணித்துவிடுகின்றனர். காதலர் இருவரும் திருமணம் செய்துகொள்வது தெய்வக்குற்றம் எனத் தடுக்கப்படுகிறது. தொலைவில் வெள்ளையர் ஆட்சியிலிருக்கும் தீவுக்கு இருவரும் ஓடிவிடுகின்றனர். இவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ரெரியின் தகப்பன் அவளை ஏமாற்றித் தன்னுடன் அழைத்துச் செல்ல, இறுதியில் காதலர்கள் பிரிக்கப்படுகின்றனர்.

கடலும் இயற்கையும் சூழ்ந்த ரம்மியமான தஹித்தித் தீவுகளில், அங்கு வாழும் மக்களை நடிக்கவைத்துப் படமாக்கப்பட்டிருக்கிறது. பால் ககானின் (Paul Gauguin) ஓவியங்களை நினைவுறுத்தும் காட்சிகள். அற்புதமான ஒளிப்பதிவும், காட்சியமைப்புகளும் கொண்டு மொர்னவ் அளித்த இந்த சோகக் காதல் காவியம் அவரது இறுதிப்படமாக ஆனது. தபுவின் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் மொர்னவ் கார் விபத்தில் மரணமடைந்தார்.சொந்த வாழ்க்கையில் உலக நியதிகள் வற்புறுத்தும் ஒழுக்கக் கட்டுப்படுகளை மொர்னவ் ஏறுக்கொள்ளவிலை. அவரது சொந்த வாழ்க்கை, இறுதி விபத்து ஆகியவை பற்றி பல கதைகள் உண்டு. கலையுலகிலும் மிகவும் தனித்துவமான இயக்குநராக விளங்கினார். அமெரிக்கத் திரையுலக வாழ்க்கை அவருக்கு விருப்பமானதாக அமையவில்லை. வணிக நோக்கம் ஒன்றையே குறியாகக் கொண்ட ஹாலிவுட், Sunrise க்குப் பின் அவரைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.

தனது நாற்பத்தி இரண்டாவது வயதில் மரணமடந்த மொர்னவின் பெயர் திரைப்பட வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது. இருபத்தி இரண்டு படங்கள் இயக்கியுள்ளார். Nosferatu வின் திகிலூட்டும் காட்சியமைப்புகள், Faust இல் வானில் பறக்கும்போது மேலிருந்து பார்க்கப்படும் காட்சிகள், Sunrise இல் கதாநாயகன் நகரத்துக் காதலியைக் காணச் செல்லும் நீண்ட ‘ட்ராக்கிங் ஷாட்’ கொண்ட காட்சி போன்று செலுலாய்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்கற்ற அற்புதக் காட்சிகளைக் கொண்ட இவரது திரைப்படங்கள், திரைப்படக் காட்சியமைப்பு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. திரைப்பட மொழி, இலக்கண வளர்ச்சியில் மொர்னவின் பங்கு முக்கியமானது.

மொர்னவின் திரைப்படங்களில் Nosferatu, The Last Laugh, Faust, Sunrise , City Girl ,Tabu ஆகியவை கட்டாயம் பார்க்கப்பட வேண்டியவை. மொர்னவின் திரைப்படங்கள் அனைத்தும் மௌனப் படங்கள். சன்ரைஸ் , தபு படங்களில் இசைமட்டும் சேர்க்கபட்டது. எழுத்து (title cards) மூலம் மௌனப்படங்களில் இடையிடையே விளக்கம் அளிப்பது கூட இவரது படங்களில் குறைக்கப்பட்டு, The Last Laugh, Tabu ஆகிய இரண்டிலும் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டது. மொர்னவின் சினிமா pure cinema வாகப் பரிணமித்தது.

பிம்பங்களின் அற்புதம் திரைப்படம். ஆழமான கதை சொல்லலுக்குப் , பேசப்படும் வசனங்களை விட, பிம்பங்கள் போதுமானவை என்பதை மொர்னவின் மௌனத் திரைப்படங்கள் உறுதி செய்கின்றன.