Sunday, 12 February 2012

கார்ள் தியோடர் ட்ரெயர்

கார்ள் தியோடர் ட்ரெயர்

எஸ்.ஆனந்த்வெற்றிகரமான திரைப்படங்களை அளித்த பல இயக்குநர்களில் ஒருவராக இருப்பதைவிட, சினிமா எனும் உன்னதக் கலையை வெனற வெகு சிலரில் ஒருவராக இருப்பதே எனக்குப் போதுமானது - கார்ள் தியோடர் ட்ரெயர்


ஐரோப்பாவின் மிகச்சிறிய நாடான டென்மார்க் திரையுலகுக்கு அளித்திருக்கும் பரிசு, கார்ள் தியோடர் ட்ரெயர் (Carl Theodor Dreyer). ட்ரெயர் என்றவுடன் நினைவுக்கு வருவது, அவரது’ The Passion of Joan of Arc” , முதல் பத்து சிறந்த உலகத் திரைப்படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் திரைக் காவியம்

கார்ள் தியோடர் ட்ரெயரின் திரையாக்கங்கள், சினிமாவுக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகளைக் கடந்து, மனித வாழ்வின் அகத் தேடல்களையும், தீவிர ஆன்மீக விசாரங்களையும் முன்னிறுத்துபவை.. ட்ரெயர், இவ்வகையில், தார்க்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky), ராபர்ட் ப்ரெஸ்ஸான் (Robert Bresson) போன்ற திரைமேதைகளுக்கு முன்னோடி. தனது காலத்துக்கு முந்திய தனித்துவமான, கலைப்படைப்புகளை உலகுக்கு அளித்தவர். திரைப்படக்கலைக்கு புதிய மொழியையும் இலக்கணங்களையும் அறிமுகம் செய்த முக்கியமான திரை மேதைகளில் ஒருவர்.

டென்மார்க்கின் கோபென்ஹாகென் நகரில் 1889 ஆம் ஆண்டு மணமாகாத தாய்க்குப் பிறந்த ட்ரெயர், சில காலம் அனாதை விடுதிகளில் வளர்ந்தார். பின்னர் ஒரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். அந்தக் குடும்பப் பெயரான ’ட்ரெயர்’ அவருடைய பெயரில் இணைந்தது. பள்ளிப்படிப்பை முடித்த உடன் அந்தக் கண்டிப்பான குடும்பச் சூழ்நிலையிலிருந்து வெளியேறினார். ட்ரெயரின் படைப்புகளில் அவரது இளவயது வாழ்வின் மனக் காயங்களின் பாதிப்பைக் காணலாம்.

அலுவலக எழுத்தராகவும், பத்திரிகையாளராகவும் வாழ்க்கையை ஆரம்பித்த ட்ரெயருக்கு கோபென் ஹாகெனின் நார்டிஸ்க் திரைப்பட நிறுவனத்தில் திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து, திரைப்படங்களை எடிட் செய்ய ஆரம்பித்தார். எடிட்டிங் அனுபவம் திரைப்படக் கலையை எப்படிச் சரியகப் பயன்படுத்தவேண்டும் என்பதை அவர் அறிந்துகொள்ளத் துணையாக இருந்தது

ட்ரெயர் திரைப்படத்துறையில் காலடி வைத்த 1910கள் , டென்மார்க் திரைப்படத்துறையின் பொற்காலமாகக் கருதப்பட்ட நேரம். முதல் உலகப்போர் ஐரோப்பாவைப் பாதிக்கும் வரை இந்தச் சிறிய நாடு திரைப்படத் தயாரிப்பில் தனியிடம் பெற்றிருந்தது. டென்மார்க்கின் பொருளாதார நிலை முதல் உலகப்போருக்குப்பின் சீர்குலைய, திரைப்படத் தொழில் நசிக்க ஆரம்பித்தது. இற்க்குமதி செய்யப்பட்ட அமெரிக்கத் திரைப்படங்கள் ஐரோப்பாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

ஐந்து வருட எடிட்டிங் அனுபவத்திற்குப் பிறகு, 1917 இல் ட்ரெயர் இயக்கிய முதல் திரைப்படம், ’ த பிரசிடெண்ட்’ . முதல் படத்திலிருந்தே தனது பாணியைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார். நடிகர்கள் அல்லாதவர்களை நடிக்கவைத்தார். ட்ரெயரின் படங்களில் நடிகர்களுக்கு ஒப்பனை செய்வது வெகுவாகக் குறைக்கப்பட்டு, இயற்கையான நடிப்பு வலியுறுத்தப்பட்டது.

ட்ரெயரின் இரண்டாவது படம், ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட நகைச்சுவை நிறைந்த ’ பாதிரியின் விதவை’ (The Parson's Widow). ஒரு தேவாலயத்தின் பாதிரியார் இறப்பதால், அப் பணிக்கு இளம் கதநாயகன் சொப்ரென் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவ்வூர் வழக்கப்படி , பாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் , முன்பிருந்த பாதிரியின் விதவையைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்! சொப்ரென் வேறு வழியின்றி அந்த வயதான விதவை, மார்கரெட்டின் நான்காவது கணவனாகிறான்.

சொப்ரெனும், அவன் காதலி மேரியும் வயதான மார்கரெட் விரைவில் இறந்துவிடுவார் எனக் காத்திருக்கின்றனர். சொப்ரென், தன் காதலி மேரியைச் சகோதரி எனச் சொல்லி தன் வீட்டில் தங்கவைத்துக் கொள்கிறான். வீட்டில் கடுமையான கெடுபிடி. இரு காதலர்களுக்கும் மார்கரட் மீதான வெறுப்பு அதிகரிக்கிறது. மேரி ஒரு நாள் காலை உடைத்துக் கொள்கிறாள். மார்கரட் அவளை சொந்த மகளைப்போல் கவனித்து , தேற்றி பழைய நிலைக்குக் கொண்டுவருகிறார்.

சொப்ரானுக்கும், மேரிக்கும் மார்கரெட் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் ஏற்படுகிறது. தாங்கள் காதலர்கள் என்பதைச் சொல்லிவிடுகின்றனர். ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக்கொள்ளும் மார்கரெட், இள வயதில் , தானும், தன் காதலரான முதல் கணவரும் இதே நிலையை எதிர்கொண்டதை சொல்லி மகிழ்கிறார். சில நாட்களில் இறந்துவிடுகிறார். இப்படம் நகைச்சுவையாகத் தொடங்கி இறுதியில் மனித உணர்வுகளின் மேன்மையை உணர்த்துவதாக முடிகிறது.,

மௌனப்படங்களில் பேச்சு இல்லையென்பதால், சொல்ல வேண்டியவற்றை ஆழமாக உணர்த்துவதற்கு கைகள், கண்களின் மிகையான அசைவுகள் பயன்படுத்தப்பட்டன. ட்ரெயர் இந்த மிகையைத் தவிர்த்து, இயற்கையான நடிப்பைத் தன் படங்களில் கொண்டுவந்தார்.

’ பாதிரியின் விதவை’க்குப் பின் 1924 வரை வெளிவந்த ட்ரெயரின் நான்கு திரைப்படங்களில், மைக்கேல் (Michael) முக்கியமான படம். 1925 இல் அவர் இயக்கிய ‘இல்லத் தலைவர்’. (Master of the House). பெண்ணுரிமை பற்றி எண்பது வருடங்களுக்குமுன் கேள்விகளை எழுப்பிய குடும்பப் படம். எப்போதும் சிடுசிடுவெனக் கடுமையாக, மனைவியை ஏவிக்கொண்டிருக்கும் கணவன் ஜாண். பயந்து அடங்கி கணவனுக்குப் பனிவிடை செய்யும் மனைவி மேரி. மூன்று குழந்தைகள் கொண்ட இவர்களின் குடும்பம். தினமும் வந்து , குடும்பத்தில் ஒருவரக வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வயதான தாதி நானா இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரம்.

வீட்டில் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் ஜாணை சரிசெய்ய தாதி நானா முடிவு செய்கிறார். வீட்டுக்குத் தேவைப்படும் பணத்துக்காக்க இரவில் செய்யும் தையல் வேலையினாலும், பகலில் ஒழியாத வீட்டு வேலைகளினாலும் உடல் நலம் பாதிக்கப்படும் மேரியை, மருத்துவரின் ஆலோசனையின்படி, தாயாருடைய வீட்டுக்கு ஓய்வெடுக்க அனுப்பிவிடுகிறார்.

நானா ஜாணை சிறுவயதிலிருந்து வளர்த்த தாதி. நானாவிடம் ஜாணின் பிடிவாதஙகள் வேலையாகாது போக, படிப்படியாக வழிக்கு வருகிறான். மேரியின் அருமை புரிகிறது. மேரி திரும்பி வரும் வரை வீட்டில் நடப்பவையும், மேரி இல்லாமல் ஜாண் படும் கஷ்டங்களும், ஜாணை சரிசெய்ய நானா மேற்கொள்ளும் குறும்புத்தனமான செய்கைகளுமாக விறுவிறுப்பாகச் செல்லும் கதை. இறுதியில் ஜாண் மேரியை மீண்டும் தன் வீட்டில் சந்திப்பது அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

இந்தப் படம் இரண்டு குறுகிய அறைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான காமெரா கோணங்கள் கொண்டு படமாக்கப்பட்டது. பாத்திரங்களின் முகங்கள் காட்டும் மெலிதான உணர்ச்சிகளை காமெரா அழகாகப் பதிவுசெய்திருக்கிறது. ஐரோப்பா முழுவதும் வெற்றிகரமாக ஓடிய படம். இப் படத்தின் வெற்றிக்குப் பின் ட்ரையரை பல ஐரோப்பிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் அணுகினர்.

இயக்குனராகியபின். ஏழு வருடங்களில் எட்டு திரைப்படங்கள் இயக்கி அளித்த ட்ரெயர், இந்தப்படத்திற்குப் பின் தான் வாழ்ந்த 42 வருடங்களில் இயக்கியது, அரசுத் துறைகளுக்கான சில பிரச்சாரக் குறும்படங்களும் ஐந்து முழு நீளத் திரைப்படங்களும் மட்டுமே. இந்த ஐந்து படங்களும் ட்ரெயரின் பெயர் திரைப்பட வரலாற்றில் அழிக்கமுடியாத இடத்தைப் பெறக் காரணமாயின.

ட்ரெயரின் ’ஜோன் ஆப் ஆர்க்கின் பாடுகள்” ‘’ The Passion of Joan of Arc” (1928) பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அவமதிப்புகளையும், வலிகளையும் ஏற்றுக்கொண்டு சிலுவையில் இயேசு கழித்த இறுதி நேரங்கள் கிறித்துவத்தில் பாடுகள் - Passion - என்று சொல்லப்படும். அந்தப் பதமே ஜோன் ஆப் ஆர்க்கின் விசாரணையையும் , தண்டனையையும் விவரிக்கும் இப்படத்தின் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரெஞ்சு வீராங்கனையும், புனிதருமாகப் போற்றறப்படும் ஜோன் 1412இல் பிரான்ஸின் கிராமப்பகுதியில் பிறந்த எளிமையான பெண். பிரானஸைக் கைப்பற்ற, படையெடுத்து முன்னேறிக்கொண்டிருந்த. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டபோது கைது செய்யப்பட்டாள். பாரிஸ் வரை இடங்களைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், ஜோனை பிரெஞ்சு கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடத்திலிருந்த குருமாரிடம் விசாரணைக்கு ஒப்படைத்தனர்.

தெய்வ நிந்தனை செய்தவள் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஜோன் உயிருடன் எரிக்கப்பட்டாள். இறக்கும்போது ஜோனின் வயது பத்தொன்பது. விசாரணையின் போது ஜோனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் , ஜோனின் பதில்களும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டு எந்த மாற்றங்களுமின்றி அப்படியே இத்திரைப்பட வசனங்களாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ட்ரெயர் , பல நாட்கள் நடந்த விசாரனைகளை ஒரு நாளில் நடப்பதாக சுருக்கி படமாக்கியிருக்கிறார்.ஜோனின் விசாரணைகள் பதிவு செய்யப்பட்ட 1431 ஆம் வருட ஆவணத்தின் பக்கங்கள் காண்பிக்கப்படுவதிலிருந்து படம் தொடங்குகிறது. அடுத்து, விசாரணை நடக்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். நீதிபதிகளாக விசாரணைக்கு அமர்ந்திருக்கும் பிரெஞ்சு கத்தோலிக்க மத குருக்களின் முகங்களை வரிசையாக மிக அருகாமையில் காட்டியபடியே இடமிருந்து வலமாக காமெரா மெதுவாக நகருகிறது. மறுபக்கம் ஆங்கிலேய சிப்பாய்கள். ஜோன் அழைத்துவரப்படுகிறாள். விசாரனை தொடங்குகிறது.

தொடக்கதிலிருந்தே ஒரு புதுமையான பார்வை அனுபவத்திற்குள் நுழைவதை உணருகிறோம். காரணம், மிக அருகாமையில் நாம் காணும் முகங்கள். முகங்களின் அருகாமை இன்றுவரை எந்தத் திரைப்படத்திலும் இந்த அளவு ஆழமாகக் காட்டப்படதில்லை. முகப்பரப்பும், கண்களும் கதை சொல்லுவதற்கு அற்புதமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. பல திரையாக்க விதிகளை ட்ரெயரின் இந்த புது முயற்சிகள் உடைத்தன.ஜோனின் பாத்திரத்தில் நடிப்பதற்கு, ஆழமான மிகையற்ற முகபாவங்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வல்ல முக அமைப்புள்ள நடிகையை ட்ரெயர் தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாடகத்தில் நடித்துகொண்டிருந்த மரியா ஃபால்க்கொனெட்டியின் (Maria Falconetti) முகம் அவரைக் கவர்ந்தது. ட்ரெயரின் கண்டுபிடிப்பு வீண்போகவில்லை. ஃபால்க்கொனெட்டி ஜோனின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கும் விதம் ட்ரெயர் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக அமைந்துள்ளது.

ஜோன், தான் கடவுளின் அருள் பெற்றவள் என்பதும், கடவுள் தனக்கு இட்டுள்ள கட்டளையின்படி , அவர் உதவியுடன் போரில் ஆங்கிலேயரைத் தோற்கடித்து பிரான்ஸ் வெற்றி பெற இறுதிவரை போராடப் போவதாகச் சொல்லுவதும் தெய்வக்குற்றமாகவும், தெய்வ நிந்தனையாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டு, குற்றம் சுமத்தப்படுகிறது. ஜோன் குற்றங்களை ஒப்புக் கொண்டு, கதோலிக்கத் திருச்சபையின் விதிகளை மீறியதற்காக மன்னிப்பு கேட்க்கவேண்டும் என வற்புறுத்தப்படுகிறாள்.அவள் அணிந்திருக்கும் ஆண்களுக்கான உடையை மாற்றச் சொல்லி வற்புறுத்துகின்றனர். எதற்கும் உடன் படாத ஜோனை . சித்திரவதை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். தொடரும் விசாரனையில் ஜோன் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகச் சொல்வதால் சாவிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. திடீரென ஜோன் தான் சொன்னது தவறு என உணருகிறாள். தான் அவர்களின் குற்றச்சாட்டை மறுப்பதாகச் சொல்லி, தண்டனை வழங்குமாறு கேட்கிறாள். இறுதி பிரார்த்தனைகள் செய்யப்பட்டு சாவுக்கு தயாராக்கப்படுகிறாள்.

ஜோன் எரிக்கப்படுவதைக் காண திருவிழா போன்று கூட்டம் கூடியிருக்கிறது. எரியும் சிதையில் சாவைத் தழுவுகிறாள். மக்கள் அழுது அவளுக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். கலவரம் வெடிக்கிறது. காவலாளிகள் மூர்க்கமாக மக்களைத் தாக்கி அப்புறப்படுத்துகின்றனர். ஜோன் எரிந்துகொண்டிருக்கும் சிதை நெருப்புடன், அருகிலுள்ள ஆலயத்தின் சிலுவை தெரியும் இறுதிக்காட்சியுடன் படம் முடிவு பெறுகிறது.

திரைப்படக் கலையின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் ட்ரெயரின் அற்புதமான கலை வெளிப்பாட்டைக் காணலாம். திரைப்பட வரலாற்றில் முக்கியமான ஒரு கலைச் சாதனையாக மதிக்கப்படும் இந்தத் திரைப்படம், பார்க்கும் ஒவ்வொருமுறையும் புதிய பார்வை அனுபவங்களுக்குள் நம்மைக் கொண்டு செல்லுகிறது.
பல புதிய திரைப்பட நுணுக்கங்கள் இப்படத்தில் கையாளப்பட்டுள்ளன. இப்படத்திற்காக பிரம்மாண்டமான அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டபோதும், அவற்றை படத்தில் ஒன்றிரண்டு இடங்களில் மிகக் குறைவான நேரமே காணுகிறோம். படத்தின் அதிகமான பகுதி அருகாமைக் கோணங்களில் (Close up) படமாக்கப்பட்டுள்ளது. தோண்டப்பட்ட குழிகளில் ஒளிப்பதிவாளர் காமெராவுடன் இருந்து தாழ் கோணக் காட்சிள் படமாக்கப்பட்டன. படம் முழுவதும் ட்ரெயரின் அற்புதமன எடிட்டிங் திறமையையும் பார்க்கலாம்.

கலையுலக அறிஞர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் பாராட்டுகளும் புகழ் மாலைகளும் குவிந்தன. கவிஞரும், திரைப்பட இயக்குனருமான ழான் காக்தூ (Jean Cocteau )போன்ற பிரெஞ்சு அறிஞர்கள் ட்ரெயரின் இப்படத்தையும், செர்கெய் ஐசென்ஸ்டைனின் ’பாட்டில் ஷிப் பொட்டெம்கின்’னையும் ஒரே தட்டில் வைத்து சிலாகித்தனர். இந்தக் கருத்துக்குப் பதில் சொல்வது போல, ஐசென்ஸ்டைன், இப்படத்தைப் பார்த்துவிட்டு, இது ஒரு சாதாரணமான புகைப்படத் தொகுப்பு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவ்வளவுக்கும் இப்படத்தின் இறுதி கலவரக்காட்சிகளில் சிலவற்றை, ட்ரெயர் தான் மிகவும் மதித்த ஐசென்ஸ்டைனின் ‘பாட்டில்ஷிப் பொட்டெம்கின்’இல் வரும் ’ஒடெஸ்ஸா படிகள்’ காட்சிகளை நினைவுறுத்தும் வகையில் படமாக்கியிருந்தார். வெளிநாட்டவரான ட்ரெயரைக் கொண்டு பிரெஞ்சு சரித்திரத்தில் முக்கியமாகக் கருதப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கின் கதையை படமெடுக்க வைத்ததற்கு பிரான்ஸில் எதிராக விமரிசனங்கள் எழுந்தன.

ஜோன் ஆப் ஆர்க் திரைப்படம் 1928 இல் வெளியிடப்படுமுன் தீவிர தணிக்கைக்குள்ளாக்கப்பட்டது. இங்கிலாந்தில் முதலில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் முதல் நெகட்டிவ் பிரதி தீக்கிரையாகியது. ட்ரெயர் சிரமப்பட்டு உருவாக்கிய இரண்டாவது நெகட்டிவ் பிரதியும் அழிந்துபோனது. பல காலம் இப்படத்தின் மோசமான பிரதிகளே திரையிடப்பட்டு வந்தன. ட்ரெயரின் இறப்புக்குப் பின் 1981 இல் மனநல மருத்துவமனை ஒன்றில், நல்ல நிலையில் ஒரு நெகடிவ் பிரதி தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டது. சிறப்பான முறையில் மறு பதிப்பு செய்யப்பட்டு தற்போது டி வி டி யாகப் பார்க்கக் கிடைக்கிறது.

’ஜோன் ஆப் ஆர்க்கின் பாடுகள்’ இல் கடவுள், மதம் என்று ஆழமாகச் சென்ற ட்ரெயர் அடுத்த படத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ரத்தக்காட்டேரிகளின் உலகத்துள் சென்றுவிட்டார். ட்ரெயரின் ’ரத்தக்காட்டேரி’ - Vampyr (1932) , முழுவதும் கனவுத்தன்மையும், எக்ஸ்பிரஷனிசமும் கலந்த திரைப்படம். ஆவியுலகையும், ரத்தக்காட்டேரிகளையும் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள கதாநாயகன் ஆலன் க்ரே, யதார்த்தத்திற்கும், மாயக் கனவு உலகிற்கும் இடையிலான மனநிலையில் காணும் காட்சிகளைக் கொண்டு கதை சொல்லப்படுகிறது.ஆலன் க்ரே, பாரிஸ் நகரின் எல்லைப்புற கிராமமொன்றிற்கு ஆய்வு செய்யச் செல்லும்போது, ஒரு பழைய மாளிகையில் அமைந்துள்ள விடுதியில் இரவு தங்க நேருகிறது. ஒரு பெண் அழுதுகொண்டிருக்கும் சப்தத்தைக் கேட்ட அதிர்ச்சியில் விழிப்புறும் ஆலனின் அறைக் கதவு மெதுவாகத் திறக்க, சப்தமின்றி உள்ளே வரும் வயதான கனவான், ஒரு புத்தகப் பொட்டலத்தை மேஜை மீது வைத்துவிட்டுச் செல்கிறார். அதில் ‘ என் சாவுக்குப்பின் திறக்கவும் ‘ என எழுதியிருக்கிறது. அவர் அந்த மாளிகையின் உரிமையாளர்.கேட்ட அழுகுரலைப் பின் தொடர்ந்து அறையிலிருந்து வெளியே செல்லும் ஆலன் காண்பது அனைத்தும் கனவுகள் போலக் காட்டப்படுகிறன. ஒன்றன் பின் ஒன்றாக மனப் பிரமைகளாகத் தொடரும் காட்சிகள். நிழல்களாகக் காட்டப்படும், நடனமாடும் தம்பதியர், ஒற்றைக்கால் காவலாளி என வந்து போகும் பல நிழல் உருவங்கள்.

ரத்தக்காட்டேரியின் பிடியில் சிக்கியிருக்கும்,. மாளிகை உரிமையாளரின் இரு பெண்களில் ஒருத்தி. ரத்தமிழந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறாள். ஆலனின் ரத்தம் அவளுக்கு ஒரு மருத்துவர் மூலம் செலுத்தப் படுகிறது. அந்த மருத்துவரும் இன்னும் சிலரும் ரத்தக்காட்டேரிக்கு உதவுபவர்கள்.ரத்தக்காட்டேரி யாரெனத் தெரிந்துகொள்ளும் மாளிகை உரிமையாளர் கொல்லப்படுகிறார். அவர் விட்டுச் சென்ற புத்தகத்தில் ரத்தக் காட்டேரியைக் கொல்லும் முறைகளைப் பற்றி எழுதியிருப்பதை ஆலனும் , அங்குள்ள பணியாளரும் படிக்கின்றனர். இறுதியில் அவர்களால் ரத்தக் காட்டேரி அதன் கல்லறையில் அழிக்கப்படுகிறது. அத்துடன் ரத்தக்காட்டேரியின் உதவியாளர்களும் அழிகின்றனர்..

ட்ரெயர் இப்படத்தில் காட்சிகளை முதன்மைப்படுத்தியுள்ளார். கதைக்கு இரண்டாவது இடம். ஒலி பின்னர் பதிவு (dub) செய்யப்பட்டது. காட்சிகள் போலவே கனவு நிலையை வலியுறுத்தும் வகையில் பேச்சு மிகக் குறைவாக, வேறுபட்ட தொனிகளுடன் பதிவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை ட்ரெயர் வழக்கத்துக்கு மாறான புதிய பாணியில், வித்தியாசமான காட்சியமைப்புகளுடன், கொண்டு செல்கிறார். சவப்பெட்டியைப் பார்க்கும் ஆலன், அதில் தான் பிணமாகப் படுத்திருப்பதாக உணருகிறான். அப்பெட்டி எடுத்துச் செல்லப்படும்போது பெட்டியினுள்ளிருந்து வெளியிலுள்ள காட்சிகளை நாம் பர்க்கிறோம். தொடரும் இவ்வகை காட்சிகளுடன் சிறப்பாகக் கதை சொல்லப்பட்டுள்ளது. ராபர்ட் வெய்னின் புகழ்பெற்ற எக்ஸ்பிரஷனிச திரைப்படம் "The Cabinet of Dr. Caligari"யின் ஒளிப்பதிவாளரால் காட்சிகள் படமாக்கப்படுள்ளன.

அற்புதமான காட்சிகளைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்ப்ட்ட இப்படத்தை ,அன்று மக்களால் சரியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்றும் அதே நிலைதான். சினிமா ரசனையைப் பொறுத்தவரை பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. சினிமா என்ற பெயரில் வெளிவரும் வணிகக் கேலிக்கூத்துகள் மக்களுக்கும் திரைப்பட ரசனைக்கும் உள்ள இடைவெளியை மிகவும் அதிகப்படுத்திவிட்டன.

1936 இல் பெயர் குறிப்பிடப்படாமல் ஒரு படம்; 1942 இல் ஒரு ஆவணப்படம் எனக் குறைவான அளவில், மிகச் சாதாரன திரைப்பட வேலைகளே ட்ரெயருக்குக் அடுத்து கிடைத்தன. ஏழு வருடங்கள் கழிந்தபின் ட்ரையரின் ‘தண்டனையின் நாள்’ திரைப்படம் வெளிவந்தது.

’தண்டனையின் நாள்’ (Day of Wrath), 1943இல் ட்ரெயரால் படமாக்கப்பட்டபோது டென்மார்க் நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளாயிருந்தது. வெளிப்படையாகச் சொல்லமுடியாத, நாஸி ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் கட்டுப்பாடு; அந்த அதிகாரம் வரையறுத்த ஒழுங்குகள்; சுதந்திரதை இழந்து, தண்டனைகளுக்குப் பயந்து அச்சத்துடன் வாழ்ந்த டென்மார்க் மக்களின் நிலை, ஆகியவற்றின் உருவகமாக, இத்திரைப்படத்தின் கதை அமைந்திருக்கிறது.1643 இல் டென்மார்க்கில் நடப்பதாகச் சொல்லப்படும் கதை. கிறித்துவ ப்ரோத்தெஸ்த்தாந்து எழுச்சி (Reformation) முடிந்து நூறு வருடங்கள் கடந்த பின்னும் , தீவிர மதவாதிகளின் கை ஓங்கியிருக்கும் காலம். கடுமையான மதக் கட்டுப்பாடுகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மதவாதிகளால், சாத்தானை வணங்கும் சூனியக்காரர் என்று குற்றம் சாட்டப்பட்டு உயிருடன் எரிக்கப்படும் பயத்துடன் சாதாரண மக்கள் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டியதிருக்கிறது.

வயதான பாதிரி அப்சலானின் தாய் அவரின் இரண்டாவது இளம் மனைவி ஆன் மீது வெறுப்பைப் பொழிகிறார். பாதிரியாரின் வாலிப மகன் மார்ட்டின் வந்து சேருகிறான். அன்புக்கும், காதலுக்கும் ஏங்கும் ஆனும், இளம் மார்ட்டினும் காதல் வயப்படுகின்றனர்.

இவர்களுக்கு நன்கு பரிச்சயமான வயதான பெண்மணி மார்ட்டே, சாத்தானின் கையாள் எனக் கைது செய்யப்படுகிறாள். தன்னைக் காப்பாற்றுமாறு அப்சலான் பாதிரியிடம் அவள் வேண்டிக் கொள்வது பயனற்றுப் போகிறது. விசாரணைக்குப் பின் உயிருடன் எரிக்கப்படுகிறாள். பாதிரி மிகுந்த குற்ற உணர்வுடன், விரைவில் இறந்து விடுவோம் எனும் பயத்துடன் நாட்களைக் கழித்துகொண்டிருக்கிறார்.ஒருநாள், அப்சலானுடன் கோபத்துடன் பேசும்போது, தனக்கும் மார்ட்டினுக்குமான உறவை வெளிப்படையாகச் சொல்லும் ஆன், தான் வெறுக்கும் இந்த அன்பும் காதலுமற்ற வாழ்க்கையிலிருந்து, வயதான அப்சலானின் சாவுதான் விடுதலையைத் தரும் எனத் தன் மனதிலுள்ளவற்றைக் கொட்டிவிடுகிறாள்.அதிர்ச்சியுறும் அப்சலோன் கீழே விழ, அவர் உயிர் பிரிகிறது. இந்த சாவுக்குக் காரணம் ஆன் என பழிசுமத்தப்பட்டு, அவள் சூனியக்காரி என விசாரணையில் முடிவு செய்யப்படுகிறது. ஆனை உயிருடன் எரிக்க சிதை மூட்டப்பட்டு , பாடல்கள் பாடப்படுவதுடன் படம் முடிகிறது.படம் முழுவதும் காணக் கிடைக்கும் யதார்த்தமான நடிப்புடன், மனித உறவுகளையும், உணர்ச்சிகளையும் திரையில் சொல்லுவதில் ட்ரையர் புதிய உத்திகளைப் பயன் படுத்தியுள்ளார்.. வலிமையான ஒளி அமைப்பு, காட்சிப்பதிவுகளுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஒப்பனைகள் சிறுதுமின்றி, ஒவ்வொரு நடிகரும் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படம்.சில நண்பர்களின் முயற்சியால், 1952 இல் கோபென்ஹாகெனின் புகழ்பெற்ற டாக்மெர் தியேட்டரின் பொறுப்பாளராக ட்ரெயர் நியமிக்கப்பட்டார். அந்த ஊதியம் இறுதிவரை ட்ரெயரின் குடும்ப வாழ்க்கைக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த படத்தை இயக்குவதற்கு ட்ரெயர் பன்னிரண்டு வருடங்கள் காத்திருந்தார். அதுவரை அரசு நிறுவனங்களுக்காக சில குறும்படங்கள் தயாரித்தோடு சரி.. 1955 இல் ட்ரெயரின் ‘வார்த்தை ‘ (The Word) திரைப்படம் வெளிவந்தது. கிறித்தவ லுத்தரன் பாதிரி ஒருவர் எழுதிய பிரபலமான நாடகத்தின் கதை.

சமய சம்பிரதாயங்களில் ஈடுபாடற்ற ட்ரெயரை இந்த நாடகம் கவர்ந்தது. போர்கள், பஞ்சங்கள், அரசியல் மாற்றங்கள் அனைத்தும் மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்து கொண்டிருந்த காலம். ’ வார்த்தை ‘ நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் படம். ட்ரெயர் மனித வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்.

டென்மார்க்கின் ஜட்லாந்து பகுதியில் விவசாயம் செய்து வாழும் வசதியான குடும்பம் போர்கனுடையது. போர்கனின் மகன் ஜோஹான்ஸ் மனநிலை சரியில்லாது , தன்னை ஏசு கிறிஸ்து எனச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இரண்டு சகோதரர். மூத்தவன் மனைவி இங்கர் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய். மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கிறாள். இளையவன் ஆர்னெஸ், தன் காதலி ஆனாவை மணமுடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.மகன் ஆர்னஸின் திருமணத்திற்காகப் பேச போகும் போர்கனுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. தீவிர நம்பிக்கையுள்ள தங்கள் மதக் குழுவைச் சாராத போர்கனின் மகன் ஆர்னஸ், தன் மகளை மணம் செய்யமுடியாதென பெண்ணின் தந்தை சொல்லிவிடுகிறார். அவ்வப்போது ஜோஹான்ஸ் வீட்டை விட்டு எங்காவது சென்று விடுகிறான். ஒவ்வெரு முறையும் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு நாள் வீட்டைவிட்டுப் போன ஜோஹான்ஸ் திரும்பி வரவேயில்லை.

இங்கருக்குப் பிரசவ நேரம். மருத்துவர் வருகிறார். குறைப்பிரசவம். சற்றுநேரத்தில் இங்கரும் இறந்துவிடுகிறாள். இறுதிச்ச்சடங்குகளுக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது ஜோஹான்ஸ் மன நிலை சரியடைந்தவனாகத் திரும்பி வருகிறான். இங்கரின் சவப்பெட்டியை மூடும் முன் அங்கு வந்து நிற்கும் ஜோஹான்ஸ், கடவுளின் பெயரால் ஆணையிடுகிறான். இங்கெரின் விழிகள் திறக்கின்றன. உயிர் திரும்பப் பெற்றவளாகக் கணவனின் அரவனைப்பில் இறுதியில் அவள் சொல்லும் இரண்டு வார்த்தைகளுடன் படம் நிறைவுபெறுகிறது – ”வாழ்க்கை , வாழ்க்கை.”அந்த விவசாய நாட்டுப்புறத்தில், மக்கள் தங்கள் மத நம்பிக்கைளைப் பற்றி உயர்வாக வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டு, ஒருவர் மீது ஒருவர் வெறுப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு சிறு பெண்ணின் அசைக்க முடியாத நம்பிக்கை இறுதியில் அதிசயம் நடப்பதற்கு காரணமாகிறது. சித்தம் பிழன்றவன் என ஒதுக்கப்படும் ஜோஹான்ஸ் இந்த அற்புதத்தை நிகழ்த்துகிறான். இங்கரின் சிறு பெண், முழு நம்பிக்கையுடனும், முகத்தில் சிரிப்புடனும் ஜோஹான்ஸிடம் தன் தாய்க்கு உயிர் கொடுக்கக் கடவுளிடம் கேட்கச் சொல்லுவது மிக அழகான காட்சி.

படத்தில், குறைப்பிரசவத்தில் இங்கர் இறப்பது போலவே நிஜ வாழ்வில், ட்ரெயரின் தாயார் இறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ட்ரெயர் பிறந்து சில வருடங்களில் அடுத்த குழந்தையைக் கருத்தரித்த அவரது மணமாகாத தாய், கருவைக் கலைக்க முயன்றபோது பரிதாபமாக இறந்தார். இந்த நிகழ்வின் வேதனை ட்ரெயரை இறுதிவரை பாதித்திருந்தது.

மேலோட்டமாக இப்படத்தைப் பார்த்த மதவாதிகளால் ’வார்த்தை’யின் முடிவை ஏற்க முடியவில்லை. . ஆனால் தீவிர நாத்திக விமரிசகர்கள் உட்பட, பல முக்கிய விமரிசகர்களால் இப்படம் மிகவும் பாராட்டப்பட்டது. Mis en Scene –காட்சியமைப்புகளைப் பொறுத்த வகையில் ’வார்த்தை’ உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இயேசுவின் வரலாறு பற்றி தனித்துவமான ஒரு படம் எடுப்பது ட்ரெயரின் நீண்ட நாள் கனவு. தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தார். இப்படத் திற்கு கதை வசனம் எழுதுவது பல வருடங்கள் தொடர்ந்தது. இதற் கிடையில், 1964 இல் அவர் இயக்கத்தில் ‘கெர்ட்ருட்’ திரைப்படம் வெளிவந்தது. ’வார்த்தை’ திரைப்படம் வெளிவந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் தனது எழுபத்தி நான்காவது வயதில் ட்ரெயர் இயக்கிய படம் ‘கெர்ட்ருட்’. ட்ரெயரின் படங்களில் கடினமான திரைப்படம் எனச் சொல்லப்படுவது. என்னைப் பொறுத்தவரையில் அவரது சிறந்த படங்களில் ஒன்று. அனபையும், காதலையும் பற்றிய தியானமாகக் குறிப்பிடப்படும் திரைப்படம். ட்ரெயரின் இறுதிப் படமும் இதுவே.

’கெர்ட்ருட்’ ஒரு ஸ்வீடிஷ் நாடகத்தின் திரைவடிவம். 1909 இல் நடக்கும் கதை. கெர்ட்ருட் ஒரு ஆப்பெரா பாடகி. அரசியல் ஆர்வமுள்ள கஸ்தாவ்வை மணந்துகொள்ளும் கெர்ட்ருட் , திருமன வாழ்வு நிறைவற்றதாக நிம்மதியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் எதிர்பார்ப்பது, நிபந்தனையில்லா அன்பும் காதலும்.கெர்ட்ருட்டின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. கணவரிடம் தான் ஒரு இளம் பியானோ கலைஞரை காதலிப்பதைச் சொல்லி விவாகரத்து கோருகிறாள். பாலியல் தொழிலார்களை நாடிச் செல்லும் பழக்கமுள்ள அந்த பியானோ கலைஞன், அப்பழக்கத்தை விட்டுவிடுவதாகச் சொல்வதோடு சரி. திருமணத்திற்கு முன் நெருக்கமாக இருந்த நண்பர் கெர்ட்ருட்டை தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறார். கெர்ட்ருட்டின் வாழ்வில் நெருக்கமாகும் ஆண்கள் அவளுக்கு ஏமாற்றத்தையே அளிக்கின்றனர்.

அனைவரையும் விட்டு வந்து தனியாக வாழ்கிறாள். படத்தின் இறுதிப் பகுதியில் வயதான ஆனால் தெளிவுடன் காணப்படும் கெர்ட்ருடைச் சந்திக்கிறோம். சந்திக்க வரும் பழைய நண்பர் ஆக்ஸெல்லிடம் தனிமையான வாழ்வுதான் தனக்குச் சரியானது எனக் கூறும் கெர்ட்ருட், , காதலையும் அன்பையும் வாழ்வில் கண்டறிந்தாக நிறைவுடன் சொல்கிறாள். பதினாறு வயதில் தான் எழுதிய காதல் பற்றிய கவிதை ஒன்றைப் படித்துக் காண்பிக்கிறாள். ஆக்ஸெல் விடைபெற, தனியாகத் தன் அறைக்குள் சென்று கதவை கெர்ட்ருட் தாளிட்டுக் கொள்வதுடன் படம் முடிகிறது.படம் முழுவதும் நீண்ட உரையாடல்களுடனான காட்சிகள், மிகக் குறைவான காமெரா நகர்வுகளுடன் காட்டப்படுகின்றன. சிக்கனமாக, தேவையான அளவு மட்டும் எடிட்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1964 டிசம்பரில் பாரிசில் நிகழ்ந்த ‘கெர்ட்ருட்’ திரைப்படத்தின் உலக வெளியீட்டு விழாவில் , ட்ரெயர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட, த்ரூஃபோ, கோதார் போன்ற ’பிரெஞ்சு புதிய அலை’ இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு 1968 இல் ட்ரெயர் மரணமடைந்தார். தார்க்கொவ்ஸ்கி, அந்தோனியோனி, லார்ஸ் வான் ட்ரெயர் என அன்றிலிருந்து இனறு வரை, ட்ரெயரின் படங்களின் பாதிப்புக்குள்ளான இயக்குனர்களின் பெயர்களைச் சொல்லிகொண்டே போகலாம்.

சரியான ஒளியுடன் பிம்பங்களைப் பதிவு செய்வதிலும், கச்சிதமான அரங்க நிர்மாணங்களைப் பயன் படுத்துவதிலும் ட்ரெயருக்கு நிகரான இயக்குனர்கள் மிகக் குறைவு. கதை வசனம் எழுதுவதில் மட்டுமின்றி , ஒளிப்பதிவிலும், எடிட்டிங் நுட்பங்களிலும் திறமை மிக்க ட்ரெயர் . புழக்கத்திலிருந்த திரையாக்க விதிகளை மீறி பல புதிய எல்லைகளுக்குத் தன் படைப்புகளைக் கொண்டு சென்றார். இதனால் திரைப்படம் பாதிக்கப்படுமென அச்சமடைந்து குறுக்கிட்ட தயாரிப்பாளர்களுடன் ட்ரெயருக்கு அடிக்கடி பிணக்கங்கள் ஏற்பட்டன. இவரது முதல் இரண்டு படங்கள் தவிர, மீதி ஐந்து மௌனப்படங்களும் ஐந்து வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்டவை.

ட்ரெயரின் சமரசம் செய்யாத பிடிவாத குணம் பற்றியும், நடிகர்களிடம் வேலை வாங்கும் முறைகள் பற்றியும் பிரசித்தி பெற்ற கதைகள் உண்டு. ஒருமுறை ட்ரெயரின் படத்தில் நடித்தவர் மறுமுறை அவருடைய படத்தில் நடிக்கமாட்டார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், நடிகர்கள், தங்கள் நடிப்பை ட்ரெயர் எந்த அளவு உயரக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதை படம் முடிந்த பின்னர் கண்ட பிறகு மறுமுறை ட்ரெயரின் படத்தில் பங்கு பெறுவதை பெருமையாகவே கருதினர்.

ட்ரெயரின் திரைப்படங்கள் அனைத்தும் பெண்களின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளையும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டவை. ஆணாதிக்க சமுதாயத்தில் எதிகொள்ளும் பிரச்சினைகள் தவிர, பெண்களின் ஆன்மீக, தத்துவ எதிர்கொள்ளல்களையும் ட்ரெயர் தனது திரைப்படங்களில் ஆழமாக அணுகியுள்ளார். ‘நவீனத்துவம்’ .(Avant-garde), ’கலைப்படம்’ என்றெல்லாம் தன் படங்களுக்கு முத்திரைகள் குத்தப்படுவதை ட்ரெயர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிம்பங்களைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கதை சொல்பவராகவே தன்னை முன்னிறுத்தினார். திரைப்படக்கலையை மிக உயர்ந்த கலையாக முன்வைக்கும் ட்ரெயர், திரைப்படங்களை, இசையும், எழுத்தும் பாதிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பார். அதனல் அவரது ‘ஜோன் ஆப் ஆர்க்’ திரைப்படம் முதலில் வெளியிடப்பட்டபோது, அவர் உட்பட, சம்பந்தப்பட்டோர் பெயர்கள் (Credits) இன்றி, இசையும் இன்றி வெளியிடப்பட்டது. மௌனப்படங்களுக்குப் பின் வந்த அவரது படங்களில் தேவைக்கு ஏற்ப மிகக் குறைவான அளவே பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரெயரின் திரைப்படங்களில் உங்கள் தொகுப்பில் கட்டாயம் இடம் பெறவேண்டியவை The Passion of Joan of Arc, Vampyr, Day of Wrath ,Ordet, Gertrud. ஆகியவை. Carl Th. Dreyer: My Métier’ ஆவணப்படமும் முக்கியமானது.

ட்ரெயரின் தனித்துவமான படமாக்கும் முறைகள் அனைவராலும் பாராட்டப்படபோதிலும், வெகு சில தயாரிப்பாளர்களே அவருடைய திறைமைகளைப் பயன்படுத்தத் தயாராக இருந்தனர். இருபது வருடங்களாக படமாக்கக் காத்திருந்த இயேசுவின் கதையை தயாரிக்க டானிஷ் அரசு 1968 இல் ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்தமாதம் ட்ரெயர் மரணமடைந்தார்.

நிராகரிப்புகளும் புறக்கணிப்புகளும் ட்ரெயருக்கு இளவயது முதல் பழக்கமானவையாகவே இருந்தன. தனது படைப்புகளை சிறப்பாக வெளிக்கொணருவதற்கு வருடக் கணக்கில் காத்திருந்ததில் இந்த மேதை இறுதிவரை சோர்வடையவில்லை.
நன்றி : தமிழினி