கெஞ்சி மிசோகுச்சி
எஸ்.ஆனந்த்
மிகையுணர்ச்சி – melodrama - கதைகளை நவீன திரைக் காவியங்களாக வழங்கிய இயக்குநர்களில் உலகளவில் குறிப்பிடத்தக்கவர் இருவர் . ஒருவர் நமது நாட்டைச் சேர்ந்த ரித்விக் கட்டக் - நம்மவர்களால் புறக்கணிக்கப்பட்டு, மறக்கப்பட்டவர். மற்றொருவர் ஜப்பானை சேர்ந்த கெஞ்சி மிசோகுச்சி (Kenji Mizoguchi) .ஜப்பானியர்களால் உயர்வாக மதிக்கப்படும் இயக்குநர். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய திரைப்பட மேதைகளில் ஒருவர். 1922 இல் உதவி இயக்குநராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய மிசோகுச்சி, இறுதி நாள் வரை சினிமாவுக்காக வாழ்ந்தவர்.
ஜப்பானில் திரைப்படக் கலை மரியாதைக்குரிய கலையாக ஏற்றுகொள்ளப்பட்டது. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களிலிருந்து அனைத்து வர்க்கத்தினரும் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து பொது மக்களுடன் சேர்ந்து திரைப்படங்களைக் கண்டனர். திரைப்படங்களுக்கென தனி அரங்கங்கள் ஜப்பானில் முதன் முதலாக உருவாக்கப்பட்டன.
ஜப்பானிய திரைப்படத்துறையின் ஆரம்பகாலம் சில எதிர்மறையான பாதிப்புகளை கொண்டிருந்த்து. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படத்துறையில் நாடகத் துறையைச் சேர்ந்தவர் பெருமளவில் இருந்தனர். சினிமா, நாடகக்கலையின் தொடர்ச்சி என தவறாகக் கருதப்பட்டது. சினிமாவில் பெரும்பாலும் நாடகத் துறை உத்திகள் பயன்படுத்தப்பட்டன.
மவுனப்படங்கள் திரையிடப்பட்டபோது பார்வையாளர்களுக்கு கதை சொல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த பென்ஷி(Benshi) எனும் கதை சொல்லிகள், தங்களின் தனித்துவமான கதை சொல்லும் முறைகளால் மக்களிடம் பிரபலமாகியிருந்தனர். பென்ஷி சொல்லும் கதை கேட்காமல் திரைப்படத்தை காண முடியாது எனும் நிலை. திரைப்படத்தைக் காண்பது பார்வையாளரின் நேரடி அனுபவமாக இல்லாமல் போனது.
இந்த பாதிப்புகளை ஒதுக்கிவிட்டு, ஜப்பானில் நவீன சினிமாவின் தொடக்கதிற்கு வித்திட்ட இயக்குநர்களில் முக்கியமானவர் கெஞ்சி மிசோகுச்சி. மிசோகுச்சி 1898 இல் டோக்கியோவில் பிறந்தார். சகோதரியை கெய்ஷாவாக விற்க வேண்டிய அளவு வறுமை நிலவிய குடும்பச் சுழ்நிலை. மிகுந்த இடையூறுகளுக்கிடையே டோக்கியோவில் ஓவியக் கலையைக் கற்று முடித்து, நிக்காத்சு ஸ்டுடியோவில் உதவி இயக்குனராக 1922 இல் சேர்ந்தார். மிசோகுச்சியின் முதல் திரைப்படம் ‘The Resurrection of Love’, 1923 பெப்ருவரியில் வெளிவந்தது. தொடர்ந்து அதே வருடத்தில் மிசோகுச்சி இயக்கத்தில் பத்து திரைப்படங்கள் வெளிவந்தன. திரைப்படக்கலையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட ஆரம்பித்திருந்த நேரம். ஜப்பானில் 1921 இல் ஜெர்மனிய எக்ஸ்பிரஷனிச திரைப்படம் "The Cabinet of Dr. Caligari" திரையிடப்பட்டது. புதிய திரைப்பட நுட்பங்களைப் பயன்படுத்துவதில் மிசோகுச்சி ஆர்வமுடனிருந்தார். அவரது ஆரம்பகால திரைப்படங்களில் சில எக்ஸ்பிரஷனிச பாணியில் எடுக்கப் பட்டவை. மார்க்சிய சிந்தனைகளின் தாக்கமும் அவரது படைப்புகளில் காணப்பட்டது.
மிசோகுச்சி இயக்கிய திரைப்படங்களின் எண்ணிக்கை, தொண்ணூற்று நான்கு. இருபத்தி ஐந்து வயதில் மவுனப் படங்களை இயக்க தொடங்கிய மிசோகுச்சி, முப்பத்து எட்டு வயதிற்குள் அறுபது படங்களை இயக்கியிருந்தார். 1936க்கு முன் அவர் இயக்கிய மவுனப்படம் ஒன்று கூட இன்று இல்லை; சரியாக பாதுகாக்கப்படாமல் அழிந்துவிட்டன. காணக்கிடைத்த மிசோகுச்சியின் திரைப்படங்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
மிசோகுச்சியின் திரைப்பட வரிசையில் முக்கிய திருப்பத்தைக் குறிக்கும் திரைப்படம், ’ஒசாகா எலெஜி’ --Osaka Elegy (1936). பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அசாய். மனைவி எப்போதும் நச்சரித்துக்கொண்டிருப்பவள். தன் தந்தையால் எடுத்து வளர்க்கப்பட்டு, தந்தையின் நிறுவனத்திற்கு அதிபதி ஆக்கப்பட்டதை அவள் சொல்லிக்காட்டாத நாள் இல்லை. அவருக்கு குடும்ப வாழ்க்கை கசக்கிறது. அலுவலக்த்தில் பணிபுரியும் அழகான இளம் பெண் அயக்கோவை அடையவேண்டும் என அளவு கடந்த ஆசை.
அயக்கோ . தன்னுடன் பணிபுரியும் சுசுமுவை விரும்புகிறாள். அவள் வருமானத்தில் வேலையற்ற தந்தையும், பள்ளியில் படிக்கும் தங்கையும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சகோதரன் வெளியூரில் படிக்கிறான் பணிபுரிந்த இடத்தில் கையாடல் செய்த்தற்காக அவள் தந்தை கைது செய்யப்படும் நிலையில் உதவி செய்து காப்பாற்றும் அசாய், அயக்கோவை தன் காமக்கிழத்தியாக வாழ நிர்ப்பந்திக்கிறார். தந்தையிடம் கோபம் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறும் அயக்கோ, அசாயின் காமக்கிழத்தியாக வாழத் தொடங்குகிறாள். ஒருமுறை அயக்கோவுடன் அவ்ரை மனைவி பார்த்துவிட, அவரது நண்பர் ஃப்யுஜியானா அவரை காப்பாற்றுகிறார். அயக்கோவுக்கு அந்த நண்பருடனும் உறவு ஏற்படுகிறது. அவரிடம் ப்ண உதவி பெறுகிறாள்.. இரண்டாவது முறை அசாய்க்கு அதிர்ஷ்டமில்லை. மனைவி அயக்கோ தங்குமிடத்திற்கே வந்து அவரை கையும் களவுமாக பிடித்துவிடுகிறாள்.
அயக்கோ இனி தான் விரும்பும் சுகுமுவை மண்ந்து நிம்மதியாக வாழ்லாம் என முடிவு செய்து அவனை வீட்டுக்கு வரவழைக்கிறாள். எதிர்பாராவிதமக ஃப்யுஜியானோ அங்கு வர நிலமை மோசமாகிறது. ஆசைக்கு இணங்க மறுக்கும் அயக்கோவை, தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக ஃப்யுஜியானோ புகார் செய்ய, அவளையும் சுகுமுவையும் காவலர் கவல் நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.
ஏமாற்றுதல், விபச்சாரம் ஆகிய குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் கடுமையான விசாரணை தொடர்கிறது. பதிரிகைச் செய்தியாக வெளிவருகிறது. சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் அயக்கோவை ஏற்பார் யாருமில்லை. தகப்பனுக்கும், சகோதரனுக்கும் தேவையான பணத்துக்காக வாழ்வை இழந்து நிற்கும் அயக்கோ அவர்களால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள்.
அயக்கோவாக இசுசு யமதா நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் வீட்டை விட்டு கோபம் நிறைந்தவளாக, மனதில் உறுதியுடன் நம்மை – காமெராவை - நோக்கி தீர்க்கமான பார்வையுடன் வரும் அயக்கோவைக் காண்கிறோம். அப்படியே அவள் பிம்பம் திரையை விட்டு வெளியேறுகிறது. மிசோகுச்சியின் தனித்துவமான பாணியும் இறுதிவரை நிலைத்த திரை வசனகர்த்தா யொஷிக்காதா யோதாவுடனான (Yoshikata Yoda) கூட்டும் இப்படத்திலிருந்து தொடங்குகிறது.
வஞ்சிக்கப்பட்டு வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் பெண்கள் மிசோகுச்சியின் முக்கிய கதாபாத்திரங்கள். கெய்ஷாக்கள், பாலியல் தொழிலாளர்களின் பரிதாபமான மறுபக்கத்தை தன் படைப்புகளில் வெளிக்கொணருகிறார். சிறு வயதில் அவரது சகோதரி, தந்தையால் கெய்ஷாவாக விற்கப்பட்டது, மனதில் ஆழ தைத்த வலியாக இறுதி வரை இருந்தது. தந்தை மீது அவருக்கிருந்த கோபத்தின் விளைவாக தனது படங்களில் தந்தை கதாபாத்திரங்களை கொடுமையானவர்களாகவே சித்தரித்திருக்கிறார்.
பதினேழாம் நூற்றாண்டில் பிறந்த கெய்ஷா கலாச்சாரம் ஆணாதிக்க ஜப்பானிய சமுதாயத்தின் ஒரு அங்கமாக விளங்கியது. கெய்ஷா என்ற பெயரில் விபச்சாரம் கலையாக வளர்க்கப்படது. கெய்ஷாக்கள், நடனம், இசை, விருந்தோம்பல் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆண்களுக்கு ஓய்வு நேரத்தைக் கழிக்க உதவுபவர்களாக உயர் மட்ட விருந்துகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் அனுப்பப்பட்டனர். நடனக்கலை, இசை அனைத்திலும் சிறப்பாக விளங்கினாலும் அடிப்படையில், வாடிக்கையாளரைப் படுக்கையில் மகிழச் செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்களாகவே இவர்களைச் சொல்லலாம்.
கெய்ஷாவான மிசோகுச்சியின் சகோதரி மேல் ஆசை கொண்ட ஒரு செல்வந்தர் அவரை முறையாகத் திருமனம் செய்துகொண்டார். இயக்குநரான நேரத்தில் மிசோகுச்சிக்கு அந்த சகோதரியால் பண உத்வி செய்ய முடிந்தது. இன்றைய ஜப்பானில் கெய்ஷா கலாச்சாரம் நலிந்துபோன பழைய கதையாகிவிட்டது.
மிசோகுச்சியின் சில படங்களில் மட்டுமே ஆண்கள் கதாநாயகர்களாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளனர். Story of the Late Chrysanthemums (1939) அத்தகைய ஒன்று. தான் நேசிக்கும் கபுகி நாடக நடிகன் நடிப்பில் வெற்றிபெற்று வாழ்வில் உயர தன்னை அர்ப்பணிக்கும் பெண்னின் கதை. புகழ் பெற்ற கபுகி நடிகரின் மகன் கிக்கு சரியாக நடிக்க முடியாது தவிக்கும்போது. பணிப்பெண் ஒட்டொக்கு அவனை ஊக்குவிக்கிறாள். ஒட்டொக்குவுடன் கிக்கு பழகுவதை அவன் பெற்றோர் விரும்பாத்தால் வேலையை விட்டு நிறுத்தப்படுகிறாள்..
கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறும் கிக்கு, ஒட்டொக்குவை அழைத்துக்கொண்டு ஒசாகா செல்கிறான். உறவினரின் நாடகக் குழுவில் சிறிதுகாலம், ஊர் ஊராக நாடகங்கள் நடத்தும் குழுவில் சிறிதுகாலம் என வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. வசதியற்ற வாழ்க்கை. ஆனால் கிக்குவின் நடிப்பில் சிறப்பான மாற்றம் தெரிகிறது.
தன்னுடன் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து கிக்கு இன்னலுறுவதைத் தாங்கமுடியத ஒட்டொக்கு, அவன் தந்தையின் குழுவில் மீண்டும் இணைய வழி செய்கிறாள். அதற்கு விலையாக கிக்குவைப் பிரிந்து செல்கிறாள். உடனிருப்போர் கிக்குவின் மனதை மாற்றி தந்தையின் குழுவுடன் நடிக்கச் செய்கின்றனர். கிக்குவிற்குப் பெயரும் புகழும் குவிகிறது. ஜப்பானின் மிகப் பிரபலமான கபுகி நடிகனாகிறான்.
நாடகக் குழு ஒசாகா வரும் பொழுது மரணத்தருவாயில் படுக்கையிலிருக்கும் ஒட்டொக்குவை கிக்கு சந்திக்கிறான். அன்று நகர மக்கள் நடிகர்களை வரவேற்பத்ற்காக நாடகக் குழுவின் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டொக்கு, கிக்குவைக் கட்டாயப்படுத்தி ஊர்வலத்தில் பங்குபெறச் செய்கிறாள். மக்களின் ஆரவாரத்துடன், மனம் கலங்கும் கிக்கு ஊர்வலத்தில் சென்றுகொண்டிருக்க, ஆரவார ஒலியை கேட்டுகொண்டு படுக்கையிலிருக்கும் ஒடெக்குவின் உயிர் பிரிகிறது.
மனதை உருக்கும் இறுதிக் காட்சிகள். ஊர்வலத்துடன் கேட்கும் ஆரவாரம் தான் நாம் கேட்கும் சப்தம். வேறு பேச்சு இல்லை. இப்படத்தில் மிசோகுச்சி வழக்கத்துக்கு மாறாக ஆண் பாத்திரத்தை முதன்மைப்படுத்தியிருகிறார். கபுகி நடிப்பை நன்கறிந்த நடிகர் இதில் கதாநாயகன். இருந்தும் இப்படத்தின் பெண் பாத்திரம் ஒட்டொக்கு, ஆணைவிட சக்தி மிக்கதாக, ஆணை வழிநடத்தும் கருவியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கபுகி நாடக அரங்குகள் எவ்வாறு அமைக்கபட்டிருந்தன என்பதற்கு இப்படம் ஒரு ஆவணம் போன்றது. மிக நேர்த்தியான அரங்க நிர்மாணம்.
அதிராத பின்னணி இசையுடன், நாடகத்தனமான வசனங்களின்றி பார்ப்பவர் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிகளை அளிப்பதில் மிசோகுச்சி வல்லவர். அறுபது வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய Miss Oyu,(1951) திரைப்படம் பெண்பார்க்கும் படலத்துடன் தொடங்குகிறது. மணப் பெண்ணின் மூத்த சகோதரியைப் பார்த்துவிட்டு அவள் மேல் காதலுறும் கதா நாயகன்; தன்னை விட தன் சகோதரியை மணமகனுக்குப் பிடிக்கிறது என அறியும் மணப் பெண்; விதவையாக கணவனின் பெற்றோருடன் வாழும் அந்த மூத்த சகோதரி, மூவரும் ஆழமான உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆசாரமான கட்டுப்பாடுகள் கொண்ட சமுதாயச் சூழ்நிலை. சிக்கலான கதை. ஆனால், மிசோகுச்சி வசனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பிம்பங்களைக் கொண்டே இலகுவாகக் கதையை நகர்த்திச் செல்கிறார்.
மிசோகுச்சி 1930களிலிருந்தே ஜப்பானில் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர். அவரை விட வயதில் சில வருடங்களே இளையரவரான குரொசாவா, திரையுலக அனுபவத்தைப் பொறுத்தவரையில் மிசோகுச்சிக்கு மிகவும் இளையவர். குரொசாவாவின் ரொஷோமோன் 1951 இல் வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசுபெற்று குரொசாவா பாராட்டப்பட்டது மிசோகுச்சியைப் பாதித்தது. தன்னால் முடியாததா என ஒரு வேகம் அவருள் பிறந்தது. 1952 ஆம் வருடத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் மிசோகுச்சியின் திரைப்படங்கள் வெனிஸ் திரைப்பட விழவில் பரிசுகளைத் தட்டிச் சென்றன.
வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக பரிசு பெற்ற மிசோகுச்சியின் திரைப்படம், ‘ஒஹருவின் வாழ்க்கை” – Life Of Oharu (1952) . பதினேழாம் நூற்றாண்டில் நடக்கும் கதை. பாலியல் தொழிலாளியாக நமக்கு அறிமுகமாகும் ஐம்பது வயது கடந்த ஒஹரு, தன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறாள். ஒஹரு உயர் குலத்தைச் சேர்ந்தவள். இளவயதில் சாமுராய் குல இளைஞனைக் காதலித்த குற்றத்திற்கு குலத் தண்டனையாக குடும்பத்துடன் அந்த சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறாள். சாமுராய்க்கு மரணதணடனை.
அப்பகுதியை ஆளும் தாய்மியோ பிரபுவின் வாரிசை உருவாக்க ஒரு இளம் பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அரசிக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. ஒஹரு தேர்ந்தெடுக்கப் படுகிறாள். பெற்றோர் அவளை கட்டாயப்படுத்தி அனுப்புகின்றனர். அரண்மனையில் ஒஹருவுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை அரசியால் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒஹரு திருப்பியனுப்பப்படுகிறாள். பெற்றோர் அதிர்ச்சியடைகின்றனர்.
அரண்மனையிலிருந்து பணம் கிடைக்குமெனும் நம்பிக்கையில் ஏராளமாகக் கடன் வாங்கியிருக்கும் தந்தை அதற்கு ஈடுகட்ட ஒஹருவை ஒரு கெய்ஷா விடுதிக்கு விற்றுவிடுகிறார். அங்கிருந்து வெளிவரும் ஒஹரு ஒரு வியாபாரியின் வீட்டில் பணிப்பெண்ணாகச் சேருகிறாள். அலங்கார விசிறி வியாபாரி ஒருவன் அவளை விரும்பி மணம் செய்துகொள்கிறான். அந்த மகிழ்ச்சி நீடிப்பதில்லை. கொள்ளையரால் அவன் கொல்லப்பட, ஒஹரு விதவையாகிறாள்.
மன அமைதி தேடி புத்த விகாரில் பணிப்பெண்ணாகக் காலம் கழிக்கிறாள். அங்கு வரும் பழைய முதலாளி ஒருவரால் அவள் நிர்ப்பந்தப்படுத்தப்படும்போது கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப் படுகிறாள். புத்த விகாரின் வாசலில் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருக்கும்போது அரச ஊர்வலம் போகிறது. அவள் ஈன்ற பிரபுவின் மகனை ஒரு வினாடி பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. மனமுடைந்து அழுதுகொண்டிருபவளை. அங்கு வரும் பாலியல் தொழிலாளர் இரக்கம் கொண்டு தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடத் துவங்குகிறாள். இந்த இடத்தில் ஒஹருவை முதலில் திரையில் சந்திக்கிறோம்.
ஒஹருவுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு வருகிறது. ஆட்சிக்கு வரும் பிரபுவின் மகன், தாயை தன்னுடன் வைத்துப் பேண விரும்புகிறான். ஆவலுடன் அரணமனைக்குச் செல்லும் ஒஹருவை அங்குள்ள மூத்த தலைவர்கள் இடை மறிக்கின்றனர். பாலியல் தொழிலாளியான் பென் அரண்மனைக்குள் வாழ்வது முறையல்ல; தேவையான பணத்துடன் எங்காவது வாழ வசதி செய்து தருவதாகச் சொல்கின்றனர். ஒஹரு மகனைத் தொலைவிலிருந்து நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.. பின்னர் எங்கு சென்றாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. இறுதியில் ஒரு புத்த விகாரில் துறவியாக அவளைச் சந்திக்கிறோம்.
சிறப்பாக வாழ்ந்த ஒஹருவின் வாழ்க்கை படிப்படியாக சிதைக்கப் படுகிறது. ஜப்பானிய உயர் சமுதாயத்தில் நிலவிய குலக் கட்டுப்பாடுகளும், பேராசைகளும் பெண்களின் வாழ்வைப் பாழாக்குவதை மிசோகுச்சி காவியமாக வடித்திருக்கிறார். ஒளிப்பதிவும் இசையும் கதையின் ஆழத்தை மேலும் அதிகப் படுத்துகின்றன. ஒஹருவாக நடிக்கும் கினுயோ தனாகா ( Kinuyo Tanaka ). மிசோகுச்சியின் முக்கிய படங்களின் கதா நாயகி. அவருடன் நெருக்கமாக இருந்த தனாகா, இயக்குநராகவும் பனியாற்றியிருக்கிறார். அடுத வருடம் 1953 இல் வெளிவந்த . ‘உகெத்சு’ , சிறந்த உலகத் திரைப்படங்களின் பட்டியல்கள் அனைத்திலும் இடம் பெறும் முக்கிய திரைப்படம். வெனிஸ் திரைப்பட விழாவில் ’உகெத்சு மொனோகட்டாரி’(Ugetsu monogatari) பரிசுபெற்ற பின் மிசோகுச்சியின் பெயர் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மிகவும் பிரபலமானது
பீங்கான் பாத்திரங்களைச் செய்யும் கெஞ்சிரோவும் , அவன் சகோதரனும், அதிகமாகப் பணம் ஈட்டவேண்டுமெனும் பேராசை கொண்டவர்கள். உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் நேரம். கெஞ்சிரோ மனைவியையும் மகனையும் ஊரில் விட்டுவிட்டு, பாத்திரங்களுடன், சகோதரன் தொபேயையும் அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு தொலைவிலுள்ள சந்தைக்கு செல்கிறான். சாமுராயாக விரும்பும் தொபே அங்கிருந்து நழுவிவிடுகிறான். அவனைத் தேடிச் செல்லும் மனைவி வழியில், அங்கு போர் வீரர்களால் கற்பழிக்கப்படுகிறாள்.
ஒரு அரசகுல மங்கையும் அவளது செவிலியும் கெஞ்சிரோவின் கடைக்கு வருகின்றனர். தெரிவு செய்த பாத்திரங்களுடன் தங்கள் மாளிகைக்கு அவனை அழைத்துச் செல்கின்றனர். சிதிலமடைந்து கிடக்கும் அந்த மாளிகை அழகான புதிய இடமாகிறது. அரசகுமாரி ஒகாசாவுடன் நடனமும் பாட்டும், கொண்டாட்டமுமாக நேரம் கழிகிறது. அழகான நதிக்கரையில் குலவி மகிழ்கின்றனர். நடப்பதெல்லம் கனவாகத் தெரிகிறது.மறுநாள் மீண்டும் அரசகுமாரியின் மாளிகைக்கு செல்லும் வழியில், ஒரு பிக்கு கெஞ்சிரோவைத் தடுத்து நிறுத்துகிறார். ஆவியால் அவன் தன்னிலை இழந்திருப்பதை அறியும் அவர், அரசகுமாரி ஒகாசா என்றோ கொல்லப்பட்டதைச் சொல்கிறார். அந்த மாளிகை தீ வைக்கப்படு அரச குடும்பத்தோடு அடியோடு அழிக்கப்பட்டதையும் சொல்கிறார். அவனை மந்திரித்து அனுப்புகிறார்.
நேரம் கழித்து வரும் கெஞ்சிரோவை ஒகாசா கடிந்து கொள்கிறாள். அவனத் தொடும்போது. புரிந்து விடுகிறது. உடம்பு முழுவதும் பிக்கு எழுதியிருக்கும் மந்திரங்களை அழித்துவிட்டு தன்னுடன் வாழவேண்டுமென ஆணையிடுகிறாள். கெஞ்சிரோ மறுக்கிறான். வாளை வீசி அவர்களை அப்புறப்படுத்திக் கொண்டே பின்னே நகர, மாளிகையின் வெளியே விழுந்து நினைவை இழக்கிறான். கண் விழிக்கையில், மாளிகை அங்கில்லை. என்றோ எரிந்துபோன இடத்தினருகில் கிடகிறான். . ஊர் திரும்புகிறான்.
கெஞ்சிரோ மனதை மயக்கும் அனுபவங்களில் மூழ்கியிருக்கும் நேரம், ஊரில் போர் வீரர்கள் மனைவியைக் கொன்றுவிடுகின்றனர். சந்தையிலிருந்து பிரிந்து செல்லும் சகோதரன் கொபே, ஓரிடத்தில் ஏமாற்றிப் பெற்ற வெகுமதியுடன், ஊருக்குத் திரும்புகிறான். வழியில் பாலியல் தொழிலாளியாக வாழும் மனைவியைச் சந்திக்கிறான். மனம் நொந்து மன்னிப்புக் கேட்டு அவளுடன் ஊருக்குத் திரும்புகிறான்.
சோர்வுடன் வீட்டை அடையும் கெஞ்சிரோவை மனைவி அன்புடன் வரவேற்கிறாள். அருந்த சேக்கும், சுவை மிகுந்த உணவும் பரிமாறுகிறாள். மகனைக் கண்டபின், உறங்கிவிடுகிறான். மறுநாள் காலை மனைவி கொல்லப்பட்டதை அறிகிறான். முதைய இரவில் . ஆவியாக வரவேற்று அன்புடன் உணவளித்த மனைவியை நினத்துக் கொள்கிறான். சகோதரனுடன் சேர்ந்து தன் தொழிலை மீண்டும் செய்யத் தொடங்குகிறான். வாழ்க்கை தொடருகிறது.
ஆவியுலகு சார்ந்த நிகழ்வுகள் கதையுடன் இணைகின்றன. கெஞ்சிரோ ஆவியாகச் சந்திக்கும் அரசகுமாரி ஒகாசா, பேராசை மிகுந்த அவனது ஆழ் மன எண்ணங்களின் வெளிப்பாடு என ஒரு விளக்கம் உண்டு. அவன் நல்வாழ்வை என்றும் விரும்பும் மனைவியின் ஆவி, கணவன் அமைதியான வாழ்க்கைகுத் திரும்புவதை, மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக இறுதியில் காண்பிக்கப்படுகிறது. ஒகாசா கெஞ்சிரோவுக்காக மாளிகையில் பாடி நடனமாடும் காட்சி நோ’ (Noh) நாடக பாணியில் படமாக்கப்ட்டுள்ளது. ஒகாசாவாக நடிப்பது குரொசாவாவின் ரஷோமோனில் கதா நாயகியாக நடித்த மிச்சிக்கொ கியோ. ஜப்பானில் பிரபலமான நடிகை.
பிரான்ஸ் நாட்டின் புதிய அலை இயக்குநர்களான த்ரூஃபோ , கோதார் போன்றவர்களால் மிசோகுச்சியின் உகெத்சு, ஹோமரின் காவியங்களுடன் ஒப்பிட்டு பேசப்பட்டது. மனித வாழ்வின் வலிகளையும் அற்புதங்களையும் ஒரு சேர முன்வைக்கும் மிசோகுச்சியின் படைப்புகள் உலகம் முழுவ்தும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டன. மனிதத்துவத்தை மிகச் சிறப்பாக திரையில் வடித்த இயக்குனர்களில் மிசோகுச்சி முக்கியமானவர்.
“Sansho the Bailiff‘’ க்காக அவருக்கு மூன்றாவது முறையாக 1954 இல் வெனிஸில் பரிசு கிடைத்தது. ஓவியத்தன்மையுடன் கூடிய ஒளிப்பதிவு கொண்ட இப்படத்தில், ஒளிப்பதிவுக் கோணங்களின் மரபு விதிகள் துல்லியமாகப் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். காமெராவின் ஒவ்வொரு நகர்வுக்கும் அர்த்தம் உண்டு.
சில நூறு வருடங்களுக்கு முன் நிலவிய ஜப்பானில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் பிரபுக்களும் மேற்குடியினரும் ஒருபக்கம்; சாமானிய மக்கள் ஒருபக்கம். பஞ்சம் பட்டினி என சாதாரண மக்கள் அவதியுறும் போதும், பிரபுக்களின் குடும்பங்கள் வசதியாக வாழுகின்றன. மக்களிடமிருந்து ஏராளமாக வரி வசூலிக்கப்படுகிறது. அவ்வப்போது நிகழும் உள்நாட்டுப் போர்களில் சாமனிய மக்கள் ராணுவத்தில் சேர்ந்து போரிட வேண்டுமென அரசு ஆணை பிறப்பிக்கிறது. பலர் உயிரிழக்கின்றனர்.
ஒரு மாகாணம் மட்டும் மனித உணர்வுகளை மதிக்கும் நேர்மையான ஆளுநரால் ஆளப்படுகிறது. அந்த மாகாண மக்களை ராணுவத்தில் சேர்த்து போருக்கு அனுப்பும். உத்தரவை ஆளுநர் செயல்படுத்த மறுக்கிறார். தண்டனையாக பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார். அவர் மனைவியும் இரு குழந்தைகளும் செவிலியுடன் சொந்த ஊருக்குப் புறப்படுகின்றனர். வழியில் ஒரு பெண் உதவி செய்வது போல ஏமாற்றி அவர்களை கடத்தல்காரர்களுக்கு விற்றுவிடுகிறாள். தாயும் குழந்தைகளும் பிரிக்கப்படுகின்றனர். தாய் விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து தப்பிக்கையில் பிடிபட்டு முடமாக்கப்படுகிறாள்
மகனும் மகளும் சான்ஷோ எனும் அமீனாவால் விலைக்கு வாங்கப்பட்டு அவனிடம் அடிமைகளாக வேலை செய்கின்றனர். தப்பி ஒடுபவருக்கு பழுக்கக் காய்ச்சிய இரும்பால் சூடு வைக்கப்படுவது அங்கு வழக்கமான தண்டனை. இரக்கமற்ற அந்த இடத்தில் சான்ஷோவின் மகன் அவர்களைத் தேற்றுகிறான். குழந்தைகள் பெரியவர்களாகின்றனர். மகன் ஜுஷியோ முரடனாக, சான்ஷோவுக்கு வலது கையாக மாறிவிடுகிறான். மகள் அஞ்சு எப்போதும் பெற்றறோர்களை நினத்துக் கொண்டிருக்கிறாள். சாக்ககிடக்கும் அடிமை பெண் ஒருத்தியை காட்டில் எறிந்துவிட்டுவர ஜுஷியோ. செல்லும்போது அஞ்சுவும் உடன் செல்கிறாள். அவன் மனதை மாற்றி அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு தப்பி ஓடச்செய்யும் அஞ்சு, திரும்பிச் செல்லாது அருகிலுள்ள ஆற்றில் மூழ்கி தன்னை அழித்துக் கொள்கிறாள்.
ஜுஷியோ , அந்தப் பெண்ணுடன் ஒரு புத்த மடத்தை அடைகிறான். தலைமை பிக்கு ஜுஷியோவை நன்கறிந்த சான்ஷோவின் மகன். அவர் உதவியால் தன் தந்தையை சந்திக்க முயலும்போது, அவர் உயிருடன் இல்லை எனத் தெரிய வருகிறது. எதிர்பாராத நிகழ்வாக தந்தையின் பதவி ஜுஷியோவுக்கு அளிக்கப்படுகிறது. மாகாண ஆளுநராகிறான். அடிமைத் தொழிலை ஒழிக்கிறான். பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் சான்ஷோவும், அடியாட்களும் கைது செய்யப்பட்டு, அங்குள்ள அடிமைகள் விடுவிக்கப்படுகின்றனர்.
பின்னர் ஆளுநர் பதவியைத் துறக்கும் ஜுஷியோ, மக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்கிறான். தாயையும் கண்டடைகிறான். முடமாயிருக்கும் தாய் கண்பர்வையும் இழந்திருக்கிறாள். தாயும் மகனும் தந்தையையும் அஞ்சுவையும் நினத்து அழுகின்றனர். புதியதொரு வாழ்வுக்குத் தயாராகின்றனர்.
இக்கதையின் பாத்திரங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்போடு இணைந்து காட்டப்படுகின்றனர். ஆறு, கடல், மலை, காடு என இயற்கையுடன் இணைந்து சொல்லப்படும் கதை. அஞ்சு ஆற்றில் மெதுவாக ஒவ்வொரு அடியாக வைத்து இறங்கி மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்லும் காட்சி வார்த்தைகளால் சொல்ல முடியாத, ஆழமான கவித்துவத்துடன் காட்டப்படுகிறது. தாயாக கினுயோ தனாகா நடித்திருக்கிறார். மனிதாபிமானமற்ற ஜப்பானிய ராணுவம், ஜப்பானை நாசமாக்கிய இரண்டாம் உலகப் போர் – இவைகளை, மிசோகுச்சி சரித்திர காலக் கதைளைச் சொல்லும் தன் திரரைப்படங்களைக் கொண்டு விமரிசிக்கிறார். அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில் வேறு வழியில்லை. பல கட்டுப்பாடுகள், தணிக்கைகள். 1930 களிலிருந்து இரண்டாம் உலகப் போரில் தோற்கும் வரை ஜப்பானிய ராணுவத்தால் மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. ராணுவத்தின் வன்முறை, உலகப் போர் இவற்றால் ஏராளமன ஜப்பானிய குடும்பங்கள் சிதைந்தன, உறவுகள் சிதறிப்போயின.
மிசோகுச்சி 1956 இல் தனது ஐம்பத்து எட்டாவது வயதில் உடல் நலம் குன்றி மரணமடைந்தார். சாகும் வரை தனது திரைபடத்திற்கான வேலைகைளில் ஈடுபட்டிருந்தார். திரைப்பட வேலைகளில் மிகவும் நேர்த்தியை எதிர்பார்த்தவர். படமெடுக்கும் போது, வசனம் அவருக்குத் திருப்தியாகும் வரை பலமுறை மாற்றப்பட்டது. படங்களில் கதை நடக்கும் காலத்துக்கு தகுந்தவாறு மிகச் சரியான முறையில் அமைக்கப்பட்ட அரங்கங்களும், ஆடை அணிகலன்களும் பயன் படுத்தப்பட்டன.
.
ஏராளமான இடையூறுகள், குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் தான் நினத்தவாறு திரைப்படங்களை எடுத்து முடித்தவர். ஓவியக்கலை கற்றிருந்த மிசோகுச்சி ஒவ்வொரு சட்டகமும் ஓவியமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார். இரு படங்களைத் தவிர, இயக்கிய அனைத்தும் கருப்பு வெள்ளைப் படங்கள். அருகாமைக் கோணங்களைத் தவிர்த்து, தூர அல்லது நடுக் கோணங்களில் காட்சிகளை அமைத்தார். நடை, பாவனைகள், அசைவுகளுடன் பாத்திரங்களை முழு அளவில் பார்வையாளர் காணும் வகையில் காமெரா கோணங்கள் அமைவதை விரும்பினார். மிசோகுச்சியின் திரைப்படங்கள் திரைப்படக் கலை கற்பவர்களுக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் பாடமாகும் அளவு சிறப்பான காட்சியமைப்புகளைக் கொண்டவை.
மிசோகுச்சியின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியை அவரது உதவி இயக்குநர் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்: மிசோகுச்சி, திரைப்பட ஆக்கங்கள் தொடர்பாக கதாசிரியர் யோதாவுடன் பாலியல் தொழிலாளர் வாழ்ந்த சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு பல முறை சென்றிருக்கிறார். இறப்பதற்கு முன் இயக்கிய "Street of Shame" படத்திற்காக யோதாவுடன் சென்றிருந்த நேரம் அங்கிருந்த பாலியல் தொழிலாளர் அவரை அடையாளம் கண்டு கூடிவிட்டனர். அவர்களுக்காக ஓரிரு வர்த்தைகள் பேசும்படி கேட்டுக் கொண்டனர். ”இந்த இடத்தில் நீங்கள் வாழ்வதற்குக் காரனம் இந்த உலகின் ஆண்மக்கள். நானும் அவர்களில் ஒருவன் “ பேசியது அவ்வளவே. கலங்கிய கண்களுடன், குனிந்த தலையுடன் அங்கிருந்து விடை பெற்றார்.
சிறந்த மனிதாபிமானியாகவும் சக மனிதரின் வலியை உணர்ந்தவராகவும் வழ்ந்தவர் மிசோகுச்சி. இயகுனர்களின் இயக்குனர் என ஜப்பானில் அறியப்படும் இந்த மேதையின் படங்களில் இங்கு குறிபிடப்பட்டுள்ள ஆறு படங்களைத் தவிர, "Street of Shame" , "The Taira Clan”, “Crucified lovers” போன்றவை முக்கியமானவை. இயக்குனர் ஷிண்டோவின் ஆவணப்படம் ” Kenji Mizoguchi – Life Of a Film director”, இந்த மேதையின் வாழ்க்கையையும் அவரது மேதமையையும் பற்றி அறிந்துகொள்ள உதவும்.