இங்மர் பெர்க்மன் -பகுதி ஒன்று -
எஸ்.ஆனந்த்
“My movies had been mostly conceived in the depths of my soul, in my heart, my brain, my nerves, my sex, and not least, in my guts”
“I’m talking about the depths of the human spirit, going even further into the interiors of men and women”
- Ingmar Bergman
இங்மர் பெர்க்மனின் படைப்புகள் முற்றிலும் புதிய உலகத்திற்குள் நம்மைக் கொண்டுசெல்பவை. வழக்கமான திரைப்படங்களிலிருந்து விலகி நிற்பவை. எண்ணங்களாலும் உணர்வுகளாலும் பயங்களாலும் கனவுகளாலும் ஆனது பெர்க்மனின் உலகம். ஸ்வீடனின் உப்சாலாவில் 1918 ஆம் ஆண்டு பிறந்தார். கண்டிப்பான கிறித்துவக் குடும்பம். தந்தை கிறித்துவப் பாதிரியார். பெர்க்மனின் இளவயது அனுபவங்களின் பாதிப்பு அவர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அவரது பல படைப்புகள் இப் பாதிப்புகளைக் கருவாகக் கொண்டு உருவானவை.
பத்தாவது வயதில் தன் பொம்மை போர்வீரர்களைக் கொடுத்து தமையனிடமிருந்த சிறிய விளையாட்டு புரொஜெக்டரை வாங்கினார். அவரது முதல் புரொஜெக்டர். அசையும் பிம்பங்களுக்கும் அவருக்குமாக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்த உறவு இந்த புரொஜெக்டருடன் தொடங்கியது.
சினிமாவைப் போல சிறு வயதிலிருந்தே நாடகமும் அவருக்குப் பிடித்த துறை. ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பின் இருபத்தி ஆறாவது வயதில் நாடக அரங்க மேலாளராக நியமிக்கப்பட்டார். பல நாடகங்கள் அவரால் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டன. திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய பின்னும் தொடர்ந்து ஸ்வீடனின் புகழ் பெற்ற பல அரங்கங்களில் மேலாளராக இருந்திருக்கிறார்.
திரைக்கதை வசனகர்த்தாவாக 1944 இல் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய பெர்க்மன் 1946 இலிருந்து திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். பெர்க்மனின் படைப்புத் திறன் நம்மை வியக்க வைப்பது. திரைப்படம், ஆவணப்படம், தொலைக்காட்சிக்கான படம் என ஐம்பதுக்கும் அதிகமான படைப்புகள். சிறப்பான முறையில் அவர் இயக்கி உருவாக்கிய நாடகங்கள் ஒருபக்கம். ஆரம்ப காலத் திரைப்படங்கள் அவருக்கு சோதனையாகவே முடிந்தன. எதிர்மறையான விமரிசனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டார்.
1951 இல் இயக்கிய Summer Interlude அவருக்குத் திருப்தியைக் கொடுத்த முதல் படைப்பு எனலாம். கோடையில் நிகழும் ஒரு காதல் கதை.
மனதுக்கு இதமான கோடை காலம். பாலே நடனம் கற்றுக்கொண்டிருக்கும் இளம் பெண் மாரியும், கோடை விடுமுறையைக் கழிக்க ஊருக்கு வந்திருக்கும் ஹென்ரிக்கும் சந்திக்கின்றனர். நட்பு உருவாகிக் காதலாக மலர்கிறது. மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, மாரியுடனிருக்கும் உற்சாகத்தில் ஹென்ரிக் நீரில் குதிக்கும் அந்த விநாடி உடைந்து சிதறிவிடுகிறது. பாறையில் மோதிப் படுகாயமடையும் ஹென்ரிக் உயிரிழக்கிறான். சாதாரண காதல் கதை, பெர்க்மனின் கைவண்ணத்தில், மனதை விட்டு அகலாத திரைக் காவியமாக மாறிவிடும் அற்புதம். Summer Interlude கதையின் பெரும்பகுதி நாடக அரங்கின் ஒப்பனை அறைகளிலும், மாரியும் ஹென்ரிக்கும் வாழும் தீவின் கரைகளிலும் நிகழுகிறது. சட்டகம் முழுவதும் நிறைந்திருக்கும் முகம், கைகள் என பெர்க்மனின் முத்திரையான அருகாமைக் கோணங்களும், அவரது தனிப் பாணியும் இப்படத்திலிருந்து தொடங்குகின்றன.
ஹென்ரிக் இறந்து பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு மாரிக்கு ஹென்ரிக்கின் நாட்குறிப்பு கிடைப்பதுடன் படம் தொடங்குகிறது. உயிருக்குயிராய் காதலித்த ஹென்ரிக்குடன் அலைந்து திரிந்த இடங்களுக்குச் செல்கிறாள். ஹென்ரிக்குடன் காதல் வயப்பட்டிருந்த நேரம் அவள் தங்கியிருந்த மாளிகைக்கு மீண்டும் சென்று உறவினரைச் சந்திக்கிறாள். அவர் மாரியின் தாயை நேசித்தவர். நிறைவேறாத தன் காதலைப் பற்றி பலமுறை அவளிடம் சொல்லியிருக்கிறார்.
அவள் ஹென்ரிக்கைச் சந்தித்தது, காதலித்தது இறுதியில் அவனை இழந்தது வரையான நிகழ்வுகள் flashback ஆகச் சொல்லப்படுகின்றன. உறவுகள் உருவாக்கும் ஆனந்தங்களும் வலிகளும் பாத்திரங்களின் முகங்கள், பார்வைகள், வார்த்தைகள் வழியே நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடுகின்றன.
இளவயதில் ஒரு கோடை விடுமுறையில் சந்தித்த பெண்ணிடம் காதல் வயப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பெர்க்மன் எழுதிய கதை. இப்படத்தைப்பற்றி எழுதிய கோதார், பெர்க்மனை “The last great romantic” எனக் குறிப்பிட்டார். இப்படத்தில், இறப்பைக் குறிக்கும் வலுவான காட்சிகள் உண்டு. இதற்குப் பிந்தைய பெர்க்மனின் திரைப்படங்களில் அநேகமாக இறப்பு பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருக்காது.
ஐரோப்பிய நாடுகளில், கோடையும் வசந்தமும் புத்துணர்ச்சியளிக்கும் உற்சாகமான காலங்கள். கோடை காலத்தைப் பின்புலமாகக் கொண்டு மேலும் இரண்டு படங்கள் பெர்க்மனால் உருவாக்கப்பட்டன. கதிரவனின் ஒளியில் மிளிரும் பசுமை நிறைந்த பகுதிகளில் நிகழும் கதைகள்.
1953 இல் பெர்க்மனின் இரண்டாவது ‘கோடைகால’ படமான Summer with Monika திரைக்கு வந்தது. பதினேழு வயதான மோனிகா ஒரு கோடைப் பொழுதில் காதலனுடன் ஓடிப்போய்விடுகிறாள். பருவங்கள் மாற, காதல் மயக்கத்தில் துவங்கும் வாழ்க்கையும் மெல்ல மாறத்தொடங்குகிறது. மோனிகாவிற்குக் குழந்தை பிறக்கிறது. துடிப்பான இளம் வயதில் தாய்மையின் பொறுப்பு தாங்க இயலாத சுமையாகிறது.
கணவன் மனைவிக்கிடையே உறவு கசக்கத் தொடங்குகிறது. திருமணத்திற்கு முன் வாழ்ந்த கவலையற்ற, உல்லாச வாழ்க்கையை எண்ணி ஏங்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் குழந்தையையும் கணவனையும் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறாள். எந்த வேகத்துடன் தொடங்கியதோ, அதே வேகத்தில் உறவு முடிவுக்கு வந்துவிடுகிறது.
அழகான சிறுகதையைப் படித்துமுடித்த உனர்வை அளிக்கும் படம். மோனிகாவாக நடித்திருப்பவர் ஹாரியெட் ஆண்டர்சன். 1953 இல் அடுத்து வந்த Sawdust and Tinsel பெர்க்மனின் அந்தரங்க உணர்வுகள் தொடர்பான பயங்களை – குறிப்பாக, அவமதிக்கப்படுவதின் வலியை அடிநாதமாகக் கொண்டு பெர்க்மன் எழுதிய கதை. சர்க்கஸ் முதலாளி ஆல்பர்ட், சர்க்கஸில் பணிபுரியும் அவன் காதலி ஆன், அவளைக் கவர முயலும் நாடக நடிகன் ஆக மூன்று முக்கிய பாத்திரங்கள்.
ஆல்பர்ட் திருமணமானவன். மனைவியையும் மகனையும் நிராதரவாக விட்டுவிட்டு சர்க்கஸுடன் போய்க்கொண்டிருக்கிறான். மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்யும் நேரம், மனைவி அவனை நிராகரிக்கிறாள்; ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். சர்க்கஸ் நிகழ்வு ஒன்றில் கூடியிருப்போர் முன் நாடக நடிகனால் ஆல்பர்ட் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் காதலி அந்த நடிகனிடம் சோரம் போனதை அவளே சொல்லக் கேட்கிறான். இனியும் உயிருடன் இருப்பதில் பயனில்லை எனக் கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறான்.
அதிர்ச்சியூட்டும் கிளைக்கதை ஒன்றுடன் படம் தொடங்குகிறது. பெயர் பெற்ற சர்க்கஸ் கோமாளி, தன் மனைவி போதையில் தன்னை மறந்தவளாக ஆடைகளைக் களைந்து படைவீரருடன் கடற்கரையில் ஆடிக்கொண்டிருப்பதை நேரில் காண்கிறான். அவள் ஆடைகள் ஒளித்துவைக்கப்படுகின்றன. படைவீரர் வழிநெடுகக் கேலி செய்து கொண்டிருக்க ஆடையின்றி அப்படியே மனைவியை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவமானத்தால் கூனிக் குறுகிப் போகிறான்.
ஊர் ஊராகப் பயணம் செய்யும் சர்க்கஸ் கலைஞர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் அவமதிப்புகளையும், ஊதியத்திற்கான உத்தரவாதமற்ற நிலையையும், தனிமையையும் விவரிக்கும் திரைப்படம். முடிவில் எப்போதும் போல ஆல்பர்ட் தலைமையில் அவன் காதலி உடன் வர அடுத்த ஊரில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக சர்க்கஸ் குழு பயணத்தைத் தொடருகிறது.
பெர்க்மனுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இப்படத்திலிலிருந்து உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளருள் ஒருவராகக் கருதப்படும் ஸ்வென் நிக்விஸ்ட் (Sven Nykvist) பெர்க்மனுடன் இணைகிறார். சிறப்பான முறையில் மறுபதிவு செய்யப்பட்ட பிரதியை இன்று நாம் காண முடிகிறது. ஆனால் அன்று அவரைச் சற்றும் பிடிக்காத பெரிய விமரிசகர் ஒருவர் ‘பெர்க்மனின் வாந்தி’ என இப்படத்தை எள்ளி நகையாடினார்.
ஸ்வீடனில் பெர்க்மனின் படங்கள் மிகக் கடுமையாகவும், மோசமாகவும் விமரிசிக்கப்பட்டன. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர் கிடைப்பதற்குப் படாத பாடு படவேண்டியதிருந்தது. தொடர்ந்து பணப்பிரச்சினைகள் வேறு. தான் எதிர்கொண்ட அவமானங்கள், வலிகளின் பிரதிபலிப்பாகவே Sawdust and Tinsel இன் கதையை அமைத்திருந்தார்.
அவர் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த’Smiles of a Summer Night’ (1955) இந்த நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது. கான் திரைப்பட விழாவில் பரிசு பெற்று பெர்க்மனுக்கு உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. Smiles of a Summer Night சிரிப்பும், கேலியும் கலந்து சொல்லப்படும் கதை. ஸ்வீடனுக்கு கான் விருது பெற்றுக் கொடுத்த பெர்க்மன் மனதாரப் பாராட்டப்பட்டார். 1982 இல் வெளிவந்த உடி ஆலெனின் ‘A Midsummer Night’s Sex Comedy’ இப்படத்தைத் தழுவியது.
முந்தைய இரு ‘கோடை காலப்’ படங்களைப் போலன்றி இப்படம் நாடக பாணியை அதிகம் பின்பற்றியிருப்பதாகச் சிலரால் விமரிசிக்கப்பட்டது. பெர்க்மனின் அடுத்த படமான ஏழாவது முத்திரை- The Seventh Seal (1957) இக்குறையை நிவர்த்தி செய்தது. திரைப்படக் கலையின் உச்சத்தை நோக்கிய பெர்க்மனின் படைப்பாக்கப் பயணம் Seventh Seal இலிருந்து துவங்குகிறது.
இச்சமயத்தில் அவர் தனது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அத்துடன் Summer Interlude இலிருந்து அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இளம் நடிகை ஹாரியட் ஆண்டெர்சனுடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். பெர்க்மனின் முதல் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்திருந்தன. பெர்க்மனின் வாழ்க்கை, அவரது திரைப்படங்களின் கதைகளைப் போலவே உணர்ச்சிமிகுந்த உறவுகளால் பின்னப்பட்டது. ‘Wood Painting’ என்ற பெயரில் நாடக மாணவர்களுக்காக பெர்க்மனால் எழுதப்பட்ட குறு நாடகம் பின்னர் ஏழாவது முத்திரையாக உருவானது. இப்படத்தில் விளையாடப்படும் சதுரங்க விளையாட்டும், புகழ்பெற்ற இறுதிக்காட்சியான மரணத்துடனான நடனமும் முக்கியமான கிறித்துவ மதக் குறியீடுகளைக் குறிப்பிடுபவை.
ஒரு கிறித்துவக் கோயிலில் அவர் கண்ட 14 ஆம் நூற்றாண்டு சுவர் ஓவியத்தை அடிப்படையாகக்கொண்டு சதுரங்க விளையாட்டுப் பகுதியின் காட்சிகளை அமைத்துள்ளார். தன்னைப் பாதிக்கும் பயங்களில் மரணத்தைப் பற்றிய பயத்திற்கு முதலிடம் என்பார். அவரின் வாழ்க்கையைப் பாதித்தவற்றில் மதம், கடவுள், மரணம் இம்மூன்றும் முக்கியமானவை. இப்பாதிப்புகளின் தாக்கத்தில் உருவானது ஏழாவது முத்திரை. மரணம் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரம்.
மதப்போர்கள் (Crusades) பற்றிய குறிப்புடன் ‘ஏழாவது முத்திரை’ துவங்குகிறது. (ஜெருசலேம் சார்ந்த கிறித்துவர்களின் புனித பூமியை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்பதற்காகப் ஐரோப்பிய கிறித்துவ நாடுகளின் படைகளும், தாங்களாகவே முன்வந்த கிறித்துவ வீரர்களும் இணைந்து போரிட்டனர். பதினொன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய Crusades என்றழைக்கப்படும் இந்த மதப்போர்கள் இருநூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்தன.)
ஏழாவது முத்திரை, தனக்காகக் காத்திருக்கும் மனைவி காரினிடம் திரும்பிச் செல்லும் பிரபு (knight) அந்தோனியஸ் ப்ளாக்கின் பயணத்தை விவரிக்கிறது. மரணத்தை நோக்கிய அவர் பயணம் எனவும் சொல்லலாம். பத்து வருடங்கள் மதப் போர்களில் கழித்த பிறகு, பிரபு அந்தோனியஸ் ப்ளாக்கும் அவர் உதவியாளன் ஜான்ஸும் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பக் காட்சியில் மனித உருவில் கருப்பு அங்கியணிந்து கம்பீரமாக தோன்றும் மரணத்தை பெர்க்மன் அறிமுகப்படுத்துகிறார். தன்னை அழைத்துப் போக வந்திருக்கும் மரணத்துடன் பிரபு ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளுகிறார்; சதுரங்க ஆட்டத்தில் தோல்வியுற்றால் மட்டுமே மரணம் அவரை அழைத்துச் செல்லலாம். மரணத்துடனான சதுரங்க ஆட்டம் தொடங்குகிறது.
நாடு முழுவதும் பிளேக் நோய். உலகம் முடியும் நேரம் வந்துவிட்டதாக மக்கள் அஞ்சுகின்றனர். பிரபுவும் ஜான்ஸும் பயணத்தைத் தொடர்கின்றனர். மரணம் உடன் தொடர்கிறது. வழியெல்லாம் சாவின் நெடி. வித்தைகளும் வேடிக்கைகளும் செய்து பிழைக்கும் ஜோசப்பும், அவன் மனைவி மியாவும் கைக்குழந்தையுடன் பிரபுவுடன் பயணத்தில் இணைகின்றனர். ஜான்ஸ் தனக்கு ஒரு பெண் துணையைத் தேடிக்கொள்கிறான்.
ப்ளேக் நோய் ஒருபக்கம், மதத்தின் இறுக்கமான பிடிகள் ஒருபக்கம். பதினான்கு வயதுப்பெண் கடவுளை மறுக்கும் சூனியக்காரி எனச் சித்திரவதை செய்யப்பட்டு நெருப்பிலிடப்படுகிறாள். ஜோசப்பும் மியாவும் வழியில் தங்கிவிட, மீதி இருப்பவர்களின் பயணம் தொடர்கிறது. இறுதியில் பிரபுவின் மாளிகையை அடைகின்றனர். அங்கு மரணம் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.
பிரபுவின் மாளிகையில் அனைவரும் கூடியிருக்கும் நேரம், அவர் மனைவி காரின், ஏழாவது முத்திரை திறக்கப்பட்ட உடன் உலகின் முடிவும் மனித குலத்தின் மீது கடவுளின் நியாயத்தீர்ப்பும் தொடங்கும் என்று பைபிளில் ஏழாவது முத்திரை பற்றி சொல்லப்பட்டிருக்கும் பகுதியை அனைவரும் கேட்க வாசிக்கிறாள்.
வழியில் மனைவியுடன் தங்கிவிட்ட ஜோசப், தன்னைச் சுற்றி அற்புதமாகக் காட்சியளிக்கும் இயற்கையைக் கண்டுகொண்டிருக்கும் நேரம், தொலைவில், மலை மீது ஒரு விசித்திரமான காட்சியைக் காண்கிறான். அவனுடன் பயணம் செய்த அனைவரும் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். மரணம் அவர்களுடன் கை கோர்த்து ஆடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை அறிமுகமாகாத புதிய பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அடுத்தடுத்து வரும் பிம்பங்கள் சுவராஸ்யமாக கதையைச் சொல்லிகொண்டு போகின்றன. ‘ஏழாவது முத்திரை’ வாழ்க்கை, கடவுள், மரணம், உலகின் முடிவு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளை முற்றிலும் புதிய கோணங்களில் அணுகுகிறது.
இரண்டாவது உலகப் போர், அதைத் தொடர்ந்த பனிப்போர், ஆயுத அதிகரிப்பு, அணு ஆயுதங்களுக்கான போட்டி போன்றவற்றால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மக்களின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ‘ஏழாவது முத்திரை’ தற்கால உலகின் அழிவை நோக்கிய பயணத்தை உணர்த்தும் படமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கான் திரைப்பட விழாவில் பரிசளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
‘ஏழாவது முத்திரை’ உலகின் முதல், முழுமையான இருத்தலியல் திரைப்படம் எனத் திரைப்பட அறிஞர்களால் புகழப்படுவது. இப்படம் வெளிப்படுத்தும் இருத்தலியல் தத்துவக் கூறுகளை சார்த்தரின் Being and Nothingness நூலின் கருத்துகளுடன் ஒப்பிட்டு ஐரோப்பாவில் உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அமிலம் தோய்ந்த எழுத்துகளால் விமரிசித்துக் கொண்டிருந்த ஸ்வீடன் விமரிசகர்களின் பிடியிலிருந்து நழுவி பெர்க்மன் எங்கோ உயரச் சென்றுவிட்டார்.
மரணத்தையும் நரகத்தையும் பற்றிப் பேசிய முந்தைய படைப்புகளில் Faust நாடகத்தையும், அதன் திரை வடிவத்தையும், முக்கியமானதாகச் சொல்லலாம். ஏழாவது முத்திரையின் திரைக்கதை உருவானபோது ஜெர்மானிய ஓவியர் துரெரின் (Durer) ‘Knight, Death and Devil’ செதுக்குருவப் படத்தையும். பிக்காசோவின் Family at Saltimbanques ஒவியத்தையும் மனதில் கொண்டிருந்ததாக பெர்க்மன் குறிப்பிட்டுள்ளார்.
அதிக சிரமங்களின்றி, எளிதாக உருவாக்க முடிந்த திரைப்படம் என்று சொல்லியிருக்கிறார். உலகின் முக்கியமான திரைப் படைப்புகளில் ஒன்றான ‘ஏழாவது முத்திரை’ முப்பத்து ஐந்து நாட்களில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெர்க்மன் எழுதிய இப்படத்தின் பிரசித்தி பெற்ற திரைக்கதை, தமிழில் வெங்கட் சாமிநாதன் மொழிபெயர்ப்பில் தமிழினியால் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஸ்வீடனின் நாடக உலகிலும் பெர்க்மன் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தார். அவரது மூன்று நாடகங்கள் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டிருந்தன. நடிகை பிபி ஆண்டெர்சனுடன் இந்த நேரத்தில் புதிதாகத் தொடங்கியிருந்த உறவு சொந்த வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. சொந்தப் பிரச்சினைகளாலும், ஓய்வில்லாது தொடர்ந்த உழைப்பாலும் உடலும் மனநிலையையும் பாதிக்கப்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Wild Strawberries படத்தின் திரைக்கதை, கரோலின்ஸ்கா மருத்துவ மனையில் அவர் இருந்த போது எழுதியது. மருத்துவ உயர் கல்வித் துறை பட்டம் அளித்து மரியாதை செய்யும் விழாவிற்கு வயதான மருத்துவர் ஐசக் போர்க் மேற்கொள்ளும் பயணத்தை மையமாகக் கொண்ட கதை.
மூத்த இயக்குநர் விக்டர் சியஸ்த்ரம் (Victor Sjostrom) இப்படத்தின் நாயகர். இவர் சிறந்த நடிகரும் கூட. சக மனிதரை நம்ப மறுக்கும், வாழ்க்கையை எப்போதும் எதிர்மறையாக நோக்கும் வயதான மருத்துவராக அற்புதமாக நடித்திருகிறார்.
Wild Strawberries, எழுபத்தி ஆறு வயதான ஐசக் போர்கின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நாளைச் சொல்கிறது. மரணம் பற்றிய கனவில் துவங்கும் அந்த நாள், வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்ட கசப்புகளையும், குறைபாடுகளையும் மன்னித்தவராக, வாழ்க்கையின் உன்னதங்களை உணருபவராக ஐசக் போர்க் மாறுவதுடன் முடிவடைகிறது.
விழிப்பதற்கு முன் அதிர்ச்சியளிக்கும் கனவு ஒன்றை அவர் காண நேருகிறது. குதிரைகள் இழுத்துவரும் சாரதியில்லாத சவ வண்டியிலிருந்து நழுவி விழும் சவப்பெட்டியில் மாலை விழாவுக்கான உடையில் தன்னைக் காண்கிறார். அன்று காலை மருமகள் மாரியன் உடன் வர விழா நடக்கும் நகருக்கு காரில் பயணம்.
வழியில் சிறுவயதில் கோடைகாலங்களைக் கழித்த வீட்டிற்குச் செல்கிறார். இளவயது நினைவுகள் கண் முன் விரிகின்றன. கடந்த காலத்திற்குள் சென்றுவிடுகிறார். அவர் காதலித்த சாரா, இளம் பெண்ணாக காட்டு ஸ்ட்ராபெர்ரிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் விருந்து நடந்துகொண்டிருக்கிறது. நிகழ் காலமும் கடந்த காலமும் இடைவெளியின்றி இணைகின்றன.
கனவுகள் தொடருகின்றன. மாரியன் காரை ஓட்ட, அவர் கண்ணயரும்போது அடுத்த கனவு வருகிறது. முதலில் காட்டு ஸ்ட்ராபெர்ரி செடிகள் வளரும் இடத்தில் அவரைச் சந்திக்கும் சாரா, அடுத்து அவரைக் கேள்விகள் கேட்டு சோதிக்கும் ஆல்மன், இறுதியில் முப்பது வருடங்களுக்கு முன் இறந்த மனைவி காரினின் ரகசியம் என நீண்ட கனவு.
மென்மையான கவிதையாக நம்மை ஆட்கொள்ளும் திரைப்படம். கனவுகளைக் கொண்டு நுட்பமாக ஒரு பாத்திரத்தின் காதலையும் ஏமாற்றங்களையும் கடந்த கால வலிகளையும் பார்வையாளரை உணரச் செய்வதில் இத்திரைப்படத்தை மிஞ்சிய படைப்பு இதுவரை உருவாக்கப்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது.
வழியில் தாயின் வீட்டுக்குச் செல்கிறார். அவரின் இளவயதுக் காதலி சாரா பெயர் கொண்ட இளம் பெண்ணும் அவளின் இரு ஆண் தோழர்களும் பயணத்தில் இணைந்து இறுதிவரை உடன் வருகின்றனர். ஓயாமல் சண்டையிடும் ஆல்மன் தம்பதிகள் சற்றுநேரம் உடன் வருகின்றனர். இப்பயணத்திற்குப்பின் மாரியன் அவரிடம் தன் சொந்தத் தந்தையைப் போல் அன்பு செலுத்தத் தொடங்குகிறாள்.
பரிசளிக்கும் விழா முடிந்த அன்று இரவு உறக்கத்தில் அவர் காண்பது இறுதிக் கனவு. சாரா, காட்டு ஸ்ட்ராபெர்ரிகள் முடிந்துவிட்டதாகச் சொல்லிவிட்டு குழந்தையைத் தாலாட்டச் செல்கிறாள்; தொலைவில், தாயுடன் கரையிலமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தந்தை; தன்னைப் பார்த்துக் கையசைக்கும் தந்தையைக் காண்கிறார். தந்தை மீதிருந்த கோபங்கள் நீங்கி மனம் இலகுவாகிறது. கண்விழிக்கும் போர்க்கை, அவருடன் பயணம் செய்த சாராவும் நண்பர்களும் வீட்டிற்கு வெளியிலிருந்து அன்புடன் வாழ்த்தி விடை பெறுகின்றனர்.Wild Strawberries பார்த்து முடிக்கும் போது நம் மனமும் போர்கினுடையதைப்போல இலகுவாகுகிறது. பெர்க்மனின் படங்களில் நம் அனைவருள்ளும் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் நம் கண்முன்னே விரிந்து அசுரநிலையை அடைகின்றன. விவரிக்க முடியாத ஆழ்ந்த சுய அனுபவங்களுக்குள் பார்வையாளரை அழைத்துச் செல்வது பெர்க்மனின் கதை சொல்லும் பாணியின் சிறப்பு. இருபது வருடங்கள் சரியான பேச்சுவார்த்தையில்லாதிருந்த அவர் தந்தையுடனான உறவு இந்நேரம் சுமுகமானது. இப்படத்தைப் பார்த்த பெர்க்மனின் தந்தை விக்டர் சியஸ்த்ரமுக்கு பாராட்டுக் கடிதம் எழுதினார்.
இலக்கியத் தகுதியை சினிமாவுக்குக் கொண்டுவந்த முக்கியமான படங்களில் ஒன்றாக Wild Strawberries மதிக்கப்படுகிறது. பெர்க்மனை கடுமையாக விமரிசிப்பவர்களாலும் பாராட்டப்படும் திரைப்படம். ‘ஏழாவது முத்திரை’ போலவே மரணத்தையும், கடவுளையும் பற்றிப் பேசும் பயணக் கதை. இந்த இரண்டு திரைக் காவியங்களும் ஒரே வருடத்தில் – 1957 இல் வெளியானவை.
மாக்ஸ் வான் சைடோ (Max von Sydow) மந்திரவாதி வோல்கர் ஆகவும், குனார் ப்யாந்த்ஸ்ராந்த் (Gunnar Bjarnstrand) பாதிரியாகவும் சிறப்பாக நடித்திருக்கும் படம் The Magician (1958). The Face என்ற பெயரிலும் அறியப்படுவது. இந்த இரு நடிகர்களும் பெர்க்மனின் நாடகங்களில் நடித்தவர்கள். ஏழாவது முத்திரையிலிருந்து பெர்க்மனின் படங்களில் இவர்களின் பங்களிப்பு இறுதிவரை தொடர்ந்தது.
Sawdust and Tinsel படத்தில் சர்க்கஸ் குழு எதிர்கொள்வது போன்று, மந்திரவாதியும் அவர் குழுவும் பலமுறை அவமதிக்கப்படுகின்றனர். அனைத்து அவமதிப்புகளுக்கும் ஈடு செய்வது போல், இறுதியில் அரண்மனையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வருகிறது.
1960 இல் பெர்க்மனின் வாழ்வில் இரு முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்தன. ஒன்று, அவர் மால்மோ நகர நாடகக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியது; இரண்டாவது, அவருக்குப் புது வாழ்வு கொடுத்த அடுத்த திருமணம். அவர் இயக்கத்தில் தொலைக்காட்சிக்காக ஒரு படமும், இரு திரைப்படங்களும் இவ்வருடம் வெளிவந்தன. இவற்றில் The Virgin Spring குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய படம்.
ஒரு நிலக்கிழார் குடும்பம். மாதா கோவில் சிறப்புப் பிரார்த்தனைக்கு கன்னிப்பெண் மூலமாக மெழுகுவர்த்திகளைக் கொடுத்தனுப்புவது வழக்கம். மெழுகுவர்த்திகளை கோவிலுக்கு எடுத்துச்செல்லும் நிலக்கிழாரின் கன்னிப்பெண் காரின், ஆடு மேய்க்கும் சகோதரர் இருவரால் வழியில் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். அவர்களைத் தன் கையால் கொன்று நிலக்கிழார் பழிதீர்த்துக் கொள்கிறார். மகள் கொல்லப்பட்ட இடத்தில் புனித ஆலயம் ஒன்றை எழுப்புவதாக அவர் பிரார்த்தனை செய்யும் சமயம், அந்த இடத்திலிருந்து ஊற்று பெருகி தண்ணீர் ஓடத் தொடங்குகிறது.
இப்படத்தின் ஒளிப்பதிவும், காட்சிகளை பெர்க்மன் அமைத்திருக்கும் விதமும் சிறப்பானவை. காரின் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்படும் காட்சி நம்மை உலுக்கிவிடுவது. இசையை பெர்க்மன் அளவோடு பயன்படுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மகளைக் கொன்ற கொலையாளிகள் தந்தையால் கொல்லப்படும் காட்சி எந்த இசையுமின்றிக் காட்டப்படுகிறது. மௌனத்தின் ஆழம் நம் அச்சத்தை அதிகரிக்கிறது. நம்மை அதிர வைக்கும் காட்சி அது.
உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பைப் பெற்ற The Virgin Spring கான், ஆஸ்கர், கோல்டென் க்ளோப் விருதுகளையும் பெற்றது.
அடுத்து மூன்று திரைப்படங்கள் பெர்க்மனின் கைவண்னத்தில் – metaphysical trilogy யாக (முப்படத் தொகுப்பாக) உருவாகின. முதலாவது படம் Through a Glass Darkly (1961). இதன் கதாநாயகி காரின் அப்போதுதான் மனநல சிகிச்சை முடிந்து சகோதரனின் இல்லத்துக்கு வந்திருக்கிறாள். ஒரு தீவில் தனியாக இருக்கும் வீடு. கனவனும், புகழ்பெற்ற எழுத்தாளரான அவள் தந்தையும் உடனிருக்கின்றனர். காரினின் மனம் பல திசைகளில் செல்லத் தொடங்குகிறது.
சகோதரன் மீதும் தந்தையின் மீதும் வக்கிரமான எண்ணங்களும் பயங்களும் உருவாகின்றன. உதவ முடியாத நிலையில் கணவன் இருக்கிறான். காரினின் எண்ணங்கள் தறிகெட்டு ஓடத் துவங்குகின்றன. மனதில் கடவுளை, தன்னை ஊடுருவி வலைக்குள் இழுத்துக் கொள்ளும் ராட்சத சிலந்தியாக உருவகிக்கிறாள். மீளமுடியாத மனஆழத்துக்குள் சென்றுவிடுகிறாள்.
இரண்டாவது படம் Winter Light (1962). இப்படத்தின் பெயருக்கேற்ப குறிப்பிட்ட வெளிப்புற ஒளியில் படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரமான, குளிர் மிகுந்த நாளில் நடைபெறும் நிகழ்வுகள். லுத்தரன் பாதிரி தாமஸ் எரிக்சன், கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக மனது உடைந்து போயிருக்கிறார். அவரிடம் மனஅமைதிக்கு வழிகேட்டு வரும் யோனாஸுக்கு அவரால் உதவ முடிவதில்லை. யோனாஸ் தற்கொலை செய்து கொள்கிறான்.
முன்னாள் ஆசைக்கிழத்தி மார்த்தாவுடன் பாதிரியால் மீண்டும் அன்புடன் இருக்க முடிவதில்லை. இறுதியில் நடைபெறும் கோவில் ஆராதனை அவருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை அளிப்பதாக அமைகிறது. ஆளில்லாத அந்தக் கோவிலில் அவரும் மார்த்தாவும் ஆர்கன் வாசிப்பவரும் மட்டும் பங்கு பெறும் ஆராதனையுடன் படம் முடிகிறது.
மூன்றாவது படம் The Silence (1963). ஸ்வீடனில் புயலைக் கிளப்பிய படம். அங்குள்ள தணிக்கை முறை இப்படத்தை முழுமையாக திரையிட அனுமதி அளித்தது. பிற நாடுகளில் சில காட்சிகள் நீக்கப்பட்டன. அன்னா, அவளின் பத்து வயது மகன் யோஹான், சகோதரி எஸ்தர் மூவரும் ரயிலில் அந்த ஊருக்கு வந்து சேருகின்றனர். எஸ்தருக்கு உடல்நலம் சரியில்லாததால் பயணத்தைத் தொடர முடியாமல் பழங்கால பெரிய ஹோட்டல் ஒன்றில் தங்குகின்றனர்.
சகோதரிகள் இருவரும் முற்றிலும் எதிர்மறையான மனநிலை கொண்டவர்கள். உடல்நலமின்றிப் படுக்கையிலிருக்கும் எஸ்தரும், அவள் அறிய ஆடவர்களுடன் பழகி உடலுறவு கொள்ளும் ஆனாவும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
ஹோட்டலில் தங்கியிருக்கும் குள்ளர்கள் யோஹானிடம் நட்புடன் இருக்கின்றனர். கருணை உள்ளம் கொண்ட ஹோட்டல் மேலாளர் எஸ்தரைக் கவனித்துக் கொள்கிறார். ஹோட்டலில் எஸ்தரை தனியாக விட்டுவிட்டு ஆனும் யோஹானும் பயணத்தைத் தொடருகின்றனர்.
இந்த மூன்று திரைப்படங்களும் கடவுள் பற்றிய தன்னுடைய ஆழமான கேள்விகளுக்கு பதிலைப் பெறும் முயற்சி என பெர்க்மன் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று படங்களிலும் பாத்திரங்களின் முகங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. Winter Light இல் ஏழு நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மார்த்தாவின் தனிமையுரை (monologue) குறிப்பிடத்தக்கது. அருகாமைக் காட்சியாக மார்த்தாவின் முகம் சட்டகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. நம் கண்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும் மார்த்தாவின் கண்களையும் முகத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது அவள் பேச்சை ஆழமாக உள்வாங்குகிறோம்.
பெர்க்மனின் படங்களில் ஒளிப்பதிவின் சிறப்பு பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பெர்க்மன் பிம்பங்களின் வலிமையை நன்கு அறிந்தவர். அவருடன் இறுதிவரை ஒளிப்பதிவாளராக இருந்த ஸ்வென் நிக்விஸ்ட்டும் அவரும் ஒளியின் மகத்துவத்தைப் பற்றி ஒத்த கருத்துடையவர்களாக இருந்ததைப்பற்றி தன்னுடைய “Magic Lantern” புத்தகத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறுபதுகளில் ஐரோப்பாவில் உருவான எதிர் கலாச்சார அலை பற்றியும் பெர்க்மன் தொடர்ந்து இயக்கிய திரைப்படங்களைப் பற்றியும் அடுத்த இதழில் காணலாம்.
இங்மர் பெர்க்மன் -பகுதி 2
நன்றி : தமிழினி