அகிரா குரொசாவா
பகுதி இரண்டு
எஸ்.ஆனந்த்
பகுதி இரண்டு
எஸ்.ஆனந்த்
ஜப்பானிய திரைப்பட மேதை அகிரா குரொசாவா ஐம்பதுகளில் இயக்கிய திரைப்படங்களில் பெரும்பாலானவை அவரின் சிறந்த படைப்புகளாக குறிப்பிடப்படுபவை. திரைப்படங்களை இயக்கும் போது ஸ்டுடியோக்களுடன் தொடர்ந்த கருத்து வேறுபாடுகளும், தயாரிப்பு செலவு தொடர்பான பிரச்சினைகளும், அவரை ஆயாசமடையச்செய்திருந்தன. சொந்தமாகத் திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அவரது படைப்பாக்க பயணத்தின் இரண்டவது கட்டம் அறுபதுகளில் தொடங்குகிறது.
குரொசாவாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம், "The Bad Sleep Well"(1960). அதிகார துர்ப்பிரயோகம், குற்றங்கள் செய்பவருக்கு அனைத்து பாதுகாப்புகளையும் அளித்து, அவர்கள் நிம்மதியாக உறங்க உதவுகிறது என்பதைக குறிப்பதான தலைப்பைக்கொண்ட இப்படம், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜப்பானின் அரசியல், பொருளாதார குற்றங்கள், வணிகங்களில் நிலவிய ஊழல்கள் ஆகியவற்றை கதையாகச் சொல்லுகிறது.

’யொஜிம்போ’வின் இரண்டாவது பகுதியாக தொடர்ந்து வெளிவந்த சஞ்சுரோ - Sanjuro (1962)வுக்கு அடுத்து .’High and Low’ (1963) திரைக்கு வந்தது. எட் மக்பெய்னின் (Ed McBain) துப்பறியும் மர்மக் கதையை தழுவி உருவாக்கப்பட படம். காலணிகள் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் கோன்டோவின் புதல்வனை தான் கடத்தியிருப்பதாக தொலைபேசியில் பணம் கேட்டு ஒருவன் அவரை மிரட்டுகிறான். ஆனால் கடத்தப்பட்டிருப்பது அவர் காரோட்டியின் மகன்.

தொடர்வது, நான்கு நிமிடங்கள் நம்மை இருக்கையின் முனையில் அமரச் செய்யும் ’புல்லட்’ரயில் காட்சிகள். குறிப்பிட்ட இடத்தில் கோன்டோ பணப் பெட்டியை ரயிலிருந்து வீசி எறியவேண்டும். பணப் பெட்டி எறியப்படும்போது ஓடும் ரயிலிருந்து அந்த இடம் போலீஸ் காமெராக்களால் பதிவு செய்யப்படுகிறது.. கிடைக்கும் தடயங்களைக் கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சிறுவன் விடுவிக்கப்படுகிறான்.

விறுவிறுப்பும், திகிலும் கொண்டு சிறப்பாகப் படமாக்கப்ட்டிருக்கும் இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம் குரொசாவா சித்தரிக்கும் மனிதாபிமானம். கடத்தப்பட்டது காரோட்டியின் மகன் என அறிந்தபின் கோன்டோ வாளா இருந்திருக்கலாம். தனது பண உதவியின்றி காரோட்டியின் மகனை உயிருடன் மீட்பது அரிது என உணரும் கோன்டோ, ஈட்டிய செல்வம் அனைத்தையும் இழக்க நேரிடும் நிலையிலும், சக மனிதனுக்கு உதவ முன்வருவது மிக அழகாகச் சொல்லப்படிருக்கிறது.
ஒளிப்பதிவிற்கு டெலிபோட்டோ (telephoto lens) லென்ஸ்கள் குரொசாவாவினால் அதிகம் பயன்படுத்தப்பட்டன.டெலிபோட்டோ லென்ஸ்களை கொண்டு தொலைவிலிருந்து ஒளிப்பதிவு செய்ய முடிவதால், நடிகர்கள் காமெரா இருக்கும் உணார்வு இன்றி இய்ற்கையாக நடிக்கமுடிகிறது என்பதற்காக இநத லென்ஸ்களை பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டெலிலென்ஸ்கள் நீண்ட குவிதூரம் (long focal length ) கொண்டவை. இவற்றைக் கொண்டு படமெடுக்கும் போது பதிவாகும் பரப்பளவு குறைவு. இதனால் ஒளிப்பதிவின் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதைத் தவிர்க்க, ஒன்றுக்கும் மேற்பட்ட காமெராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்றில் தவறு நேரும்போது மற்றொன்றில் எடுக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோண்டோ மாளிகை வரவேற்பறையில் நிகழ்பவற்றைப் படமாக்குவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காமெராக்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால், ஒரே அறையில் நிகழும் காட்சிகளை நாம் பல கோணங்களில் திரையில் காண்கிறோம்; அதிக நேரம் காட்டப்படும் காட்சிகள் வேகமாக நகர்வதாக உணருகிறோம்.
குரொசாவா படமெடுத்து எடிட் செய்யும் முறை வழக்கத்திற்கு மாறுபட்டது.. ஸ்கிரிப்ட்டில் எழுதப்பட்டுள்ளபடி முதல் காட்சியிலிருந்து வரிசைக் கிரமத்தில் (chronological order) ஒவ்வொரு காட்சியாகப் படமெடுப்பார். ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சிகள், அன்றன்றே எடிட் செய்யப்பட்டுவிடும். இறுதியில், தேவையான ஒரு சில மாற்றங்களை செய்தபின் படத்தை முழுமையாக இணைக்க வேண்டியதுதான். எடிட்டிங்கில் அவர் மன்னர். படத்தின் வளர்ச்சியை அறிந்து செயல்படுவதற்கு இம்முறை பெரிதும் உதவுவதாகச் சொல்லுவார்.
அடுத்து வந்த ‘Red Beard ‘ (1970) இல் இளம் மருத்துவ மாணவன் யசுமோத்தோ ‘சிவப்புத் தாடி’ என அழைக்கப்படும் மருத்துவர் நிதேயிடம் பயிற்சி மாணவனாகப் பணிபுரிய வருகிறான் சேரிவாழ் ஏழை மக்களும், பாலியல் தொழிலளர்களும் மருத்துவ உதவி பெறும் அந்த இடம் முதலில் அருவருப்பை அளிக்கிறது; தொடர்ந்து பணியாற்றுவதில் விருப்பமில்லை. ‘சிவப்புத் தாடி’ மருத்துவரின் பணியை அருகிலிருந்து தொடர்ந்து கவனிக்கநேருபவனின் மனம் மாறுகிறது. ஏழைகளுக்காக முழு மனதுடன் பணியற்றும் மருத்துவனாக மாறுகிறான். இத்துடன் அங்கு நடப்பதாகச் சில கிளைக்கதைள் சொல்லப்படுகின்றன.

‘சிவப்புத்தாடி’ யாக நடித்த, முக்கிய நடிகர் தொஷிரோ மிஃபூனேயுடன் பதினேழு வருடங்களாகத் தொடர்ந்த கூட்டணி இப்படத்துடன் முடிவடைகிறது. படம் உருவாகிக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து, உறவு மோசமாகியிருந்தது. படப்பிடிப்பு முடியும் வரை, இரண்டு வருடங்கள் தாடியுடன் இருக்க வேண்டியிருந்த மிஃபூனே, அந்த நேரத்தில் பிற படங்களில் நடிக்க முடியாமற் போனதால் கோபமடைந்ததும் இதற்கான காரனங்களில் ஒன்று.
குரொசாவா இயக்கிய திரைப்படம் என்றாலே மிஃபூனேயின் நினைவு மனதில் வருவது தவிர்க்க முடியாதது. குரொசாவாவின் பல திரைப்படங்கள் இவருக்காகவே உருவாக்கப்பட்டவை என்று நினைக்கத்தோன்றும். இருவரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். மிஃபூனே வாட்சணடை குதிரை சவாரி அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர். குரொசாவா படங்களில் உண்மையான வாட்களைக் கொண்டே சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன, ரஷொமோனிலிருந்து ஒவ்வொரு படத்திலும் மிஃபூனே வாட்களைப் பயன் படுத்தியிருக்கும் விதம் பிரமிப்பூட்டுவது. நடிப்பும் அப்படியே. குரொசாவா படங்களில் நடிப்பவர்கள் ஒரு குடும்பம் போல தொடர்ந்து அவருடைய படங்களில் பங்கேற்று வந்தனர். இந்தப் பிரிவைத் தொடர்ந்து மேலும் பல பின்னடைவுகளை குரொசாவா சந்திக்க நேர்ந்தது.

ஜப்பானிய ஸ்டுடியோக்கள் அவரின் அடுத்த திரைப்படத் தயாரிப்புக்கு நிதியளிக்க மறுத்துவிட்டன. வேறு வழியின்றி அமெரிக்க திரைப்பட நிறுவனங்களை அணுகினார். ’Runaway Train ’ என்ற தனது திரைக்கதையை அமெரிக்காவில் படமாக்க முயற்சித்தார். முடியவில்லை. (’Runaway Train ’ ரஷ்ய இயக்குநர் கான்ச்லோவ்ஸ்கியால் இயக்கப்பட்டு, அமெரிக்கத் தயரிப்பாக 1985 இல் வெளியிடப்பட்டது.).
அமெரிக்க ஃபாக்ஸ் திரைப்பட நிறுவனம் (Fox Film Corporation) ’தோரா, தோரா, தோரா’ – Tora,Tora,Tora (1970) திரைப்படத்தின் ஜப்பானிய பகுதியை இயக்க குரொசாவாவை ஒப்பந்தம் செய்தது. படமெடுப்பதில் அவருக்கும் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே பல பிரச்சினைகள். குரொசாவா ஜப்பானுக்கு திரும்பிவிட்டார். மன நலம் பாதிக்கப்படிருந்ததால் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டார் என ஃபாக்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்வற்றைச் செயல்படுத்த மறுத்த ஃபாக்ஸ் நிறுவனம், தன் விருப்பத்தை மீறி தன்னை பணி நீக்கம் செய்ததாக குரொசாவா தெரிவித்தார்.
குரொசாவாவின் மேதமையை நன்கறிந்த சக இயகுநர்கள் கோபயாஷி, கோன் இச்சிக்காவா கினோஷித்தா ஆகியோர் குரொசாவாவுக்கு கை கொடுக்க முன்வந்தனர். குரொசாவாவுடன் இணைந்து இவர்கள் தொடங்கிய கூட்டு தயாரிப்பு நிறுவனம் Yonki no Kai - (Four Musketeers). இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக குரொசாவா இயக்கிய ‘Dodesukaden’ (1970) தோல்வியைத் தழுவிய போதிலும், குரொசாவாவிற்கு மறு நம்பிக்கையைக் கொடுத்த படம். அவரின் முதல் வண்ணப்படம். இருபத்தெட்டு நாட்களில் படமாக்கப்பட்ட இப்படத்தை தன் மனநிலை ஆரோக்கியத்துடன் இருப்பதை நிரூபிப்பதற்காகவே தான் உருவாக்கியதாக குரொசாவா குறிப்பிட்டுள்ளார். கூட்டு தயாரிப்பு முயற்சியும் முடிவுக்கு வந்தது. இடையே தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை இயக்கினார்.
1971 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி குளியலறையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த குரொசாவாவை, தற்செயலாக அங்கு வந்த பணிப்பெண் கண்டதால் மருத்துவ மனைக்கு உடனடியாகக் கொண்டு சென்று காப்பாற்ற முடிந்தது. கத்தியால் கழுத்து, தோள், கைகள் பகுதிகளில் இருபத்தி இரண்டு இடங்களில் குத்தி, தன் உயிரைப் போக்க முயன்றிருந்தார். உலகம் முழுவதிலிமிருந்து தந்திகளும், கடிதங்களும் குவிந்தன. தங்களிடம் உள்ள பணம் அனைத்தையும் அவருக்கு படமெடுக்க கொடுத்துவிடத் தயாராக இருப்பதாக பள்ளிச் சிறுவர் கடிதம் எழுதியிருந்தனர்.
ஓளி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக வெளி உலகுக்குத் தெரியும் திரையுலகத்தின் மறுபக்கம் இருள் நிறைந்த கதைகள் கொண்டது. கணக்கிலா அளவில் பணம் புழங்கும் திரையுலகம், பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட வியாபரிகளால் ஆளப்படுவது. ஜப்பான் என்றல்லாது நம் நாடு உட்பட உலகெங்கும் இந்நிலைதான். சிறந்த படைப்பாளிகள் பலர், இருந்த இடம் தெரியாமல் காணாமற் போயிருக்கிறார்கள். குரொசாவா போன்ற மேதைகள், எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது, இடர்களையும் இழப்புகளையும் எதிர்கொண்டு, போராட்டத்துடன் திரைப்படக் கலையை முன்கொண்டு சென்றவர்கள்.

ரஷ்யாவின் மங்கோலிய எல்லை பகுதியில் வாழும் தெர்ஸு உஜாலாவுக்கு வீடு என்று ஒன்றும் கிடையாது. தன் வயது என்னவென்று தெரியது. மனைவியையும் குழந்தைகளையும் பல வருடங்களுக்கு முன் அம்மை வியாதிக்குப் பலிகொடுத்தபின் நாடோடியாக காட்டில் வேட்டையாடி உண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார். இயற்கையுடன் ஒன்றிப்போன வாழ்க்கை.
1902 ஆம் ஆண்டு , ரஷ்ய மங்கோலிய எல்லைப்பகுதியின் வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ குழுவின் தலைவரான அர்சனீவை காட்டில் தற்செயலகச் சந்திக்கும் தெர்ஸு, அவர் குழுவுக்கு வழிகாட்டியாக சற்றுகாலம் பணிபுரிகிறார். அவருக்கும் அர்சனீவுக்கும் இடையே மரியாதை கலந்த ஆழமான நட்பு உருவாகிறது. மீண்டும் ஐந்து வருடங்கள் கழித்து அந்தக் காட்டுப்பகுதியில் தெர்ஸுவைச் சந்திக்கும் அர்சனீவ், அவரைத் தன்னுடன் வாழ அழைத்துச் சென்றுவிடுகிறார்.
எவ்விதமான கால அட்டவணைக்கும், ஒழுங்குக்கும் கட்டுப்படாமல் காடுகளில் இயற்கையுடன் இணைந்து வழ்ந்த தெர்ஸுவுக்கு அர்சனீவின் இல்லத்தில் வாழ முடிவதில்லை. வேட்டைக்காக அர்சனீவ் அன்பளிப்பாக அளிக்கும் நவீன துப்பாக்கியோடு மீண்டும் காட்டிற்கு, தன் இறுதிக் காலத்தை கழிக்கத் திரும்புகிறார். அர்சனீவ் அடுத்த முறை தெர்ஸுவின் உயிரற்ற உடலைத்தான் காண முடிகிறது. வைத்திருந்த நவீன துப்பாக்கிக்காக தெர்ஸு கொல்லப்பட்டிருக்கிறார். அவர் உடலை அடையாளம் காட்டுவதற்காக வரும் அர்சனீவ் அந்த கட்டுப்பகுதியில் அவர் உடலைப் புதைப்பதுடன் படம் முடிவடைகிறது.

குரொசாவா வருடத்திற்கு இரண்டு படங்கள் இயக்கிய காலம் போய், அடுத்த படத் தயாரிப்புக்கு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1978 ஆம் வருடம் இத்தாலிக்குச் சென்று மகளையும், பேரக் குழந்தையையும் பார்த்துவிட்டு அமெரிக்கா சென்றவர், அவரை மானசீக குருவாக கொண்ட இயக்குநர்கள் கொப்போலா, ஜார்ஜ் லூக்காஸ் இருவரையும் சந்த்தித்தார்.
இந்த இருவரின் முயற்சியால் குரொசாவாவின் அடுத்த திரைப்பட தயாரிப்பில் அமெரிக்க 20th Century Fox நிறுவனம் ஜப்பானின் தொஹோ ஸ்டுடியோவுடன் இணைந்தது. ஆறு மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மாண்ட தயரிப்பு காகேமூஷா (1980) Kagemusha. முதல் திரையிடலில் மட்டும் வசூல் பத்து மில்லியனைத் தாண்டிவிட்டது. கான் திரைப்பட விழா பரிசு முதல் உலகம் முழுவதிலுமிருந்து பரிசுகளும் பராட்டுகளும் குவிந்தன.

எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி தலைவன் இறந்துவிடுகிறான். தன் இறப்பை மூன்று வருடங்களுக்கு ரகசியமாக வைக்கவேண்டும் என்பது இறக்கும்போது அவன் இடும் உத்தரவு. காகேமூஷாவை அரசனாக நடிக்க வைக்கின்றனர். இந்த ஏற்பாட்டை அறவே வெறுக்கும், தலைவனுக்கு முறையின்றி பிறந்த வாரிசான கத்சுயோரி, போலி அரசன் பற்றிய ரகசியதை உடைக்க, காகெமூஷா அவமானப்படுத்தப்ட்டு வெளியேற்றப்படுகிறான்.


குரொசாவா, பெர்க்மன், ஃபெலினி மூவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. இதற்காக ரோம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிற்கு குரொசாவா வராது இருந்துவிட்டார். ஃபெலினியும், பெர்க்மனும் மிகப் பெரிய ஆளுமைகள்; இவர்களூடன் இணைந்து படமெடுக்கும் அளவு தனக்குத் தகுதியிருப்பதாகக் கருதவில்லை என்று நிக்வெஸ்ட்டை சந்த்தித்தபோது சொல்லியிருக்கிறார்.

காகேமூஷா படம் எடுப்பதற்கு முன்பே, இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படத்தின் story boardக்காக அவர் கைவண்ணத்தில் நூற்றுக்கணக்கான வண்ண ஓவியங்கள் உருவாக்கப்படிருந்தன. குறைந்துகொண்டே வந்த குரொசாவின் கண் பார்வை படம் எடுக்கப்பட்டபோது மிகவும் மங்கிய நிலையை அடைந்திருந்தது. ரான் படத்திற்கான அரங்க நிர்மாணங்கள், காட்சியமைப்புகள், ஒளிப்பதிவுக் கோணங்கள் அனைத்தும் இந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டன.
ஃப்யூஜி மலைப்பகுதியில் அரச குடும்பத்தினர் பங்குபெறும் காட்டுப்பன்றி வேட்டையுடன் ’ரான்’ துவங்குகிறது. வயதான அரச வம்ச தலைவர் ஹிதெத்தோரா, தன் மூன்று புதல்வர்களில் மூத்தவனுக்கு முக்கிய அதிகாரங்களையும் மற்ற இருவருக்கும் குறைந்த அதிகாரமுள்ள சில பொறுப்புகளையும் பிரித்துக் கொடுத்துவிட்டு பெயரளவில் தலைவனாக ஆட்சியை தொடர்கிறார். இந்த ஏற்பாட்டை எதிர்க்கும் இளையவர்களில் ஒருவனான சபுரோ குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுகிறன்.

’ரான்’ திரைப்படம் கான் திரைப்பட விழா முதல் பல உலகத் திரைப்பட விழாக்களில் பரிசுகள் பெற்றது. உடல் நலம் குன்றியிருந்த குரொசாவாவின் மனைவி ரான் படப்பிடிப்பின் போது மரணமடைந்தார். குரொசாவாவின் இயக்கத்தில் தொடர்ந்து Dreams (1990) - , Rhapsody in August (1991) வெளிவந்தன. Madadayo (1993), அவர் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த படம்.

லாங்வா பாலத்தினருகில், துணிகளை துவைத்துக்கொண்டிருக்கும் பெண்களிடம் வான்கோ எங்கிருக்கிறார் எனக் கேட்டு ஓவியத்தினுள் அவரை தேடிச் செல்கிறான். கதிரவனின் முழு ஒளியில் காதில் கட்டுடன். நின்றுகொண்டிருக்கிறார் வான்கோ. ”சக்தி மிக்க கதிரவன் என்னை வரையுமாறு கட்டாயப்படுத்தும்போது என்னால் நேரத்தை வீணாக்க முடியாது” என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். வான்கோவின் வண்ண நிலப்பரப்புகளில் அவரது துரிகைச் சுழிப்புகளின் வழியே நடந்து ‘காகங்கள் ‘ ஓவியத்திற்கு வந்து சேருகிறான். வான்கோ தன்னை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளும் ஒலி கேட்கும் அதிர்ச்சியில் ஓவியத்திலிருக்கும் காகங்கள் கலைந்து, மிகுந்த ஒலியெழுப்பி ச்ட்டகத்திற்கு வெளியே பறக்கின்றன. மெய் சிலிர்க்க வைக்கும் பகுதி.
இந்த மேதையின் இயக்க திறமை நீர்த்துப் போய்விட்டது என்று எப்படி சொல்ல முடியும்? 80 வயதான குரொசாவாவின், மேதமையைப் பறை சாற்றுவதற்கு 9.50 நிமிடங்கள் ஓடும் இந்தப் பகுதி ஒன்று போதும் பின்னணியில் Chopin இன் செவ்வியல் இசை. வான்கோவாக அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸெஸி நடித்திருக்கிறார்.. ’ட்ரீம்ஸ்’ படத்தின் The Blizzard, The Tunnel, Mount Fuji in Red, The Weeping Demon பகுதிகளும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருப்பவை.

குரொசாவாவின் கதைகளில் மனிதத்துவத்திற்கே முதன்மையான இடம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட அரசியல் கோட்பாடு எதையும் அவர் தன் படங்களில் முன்வைத்ததில்லையே தவிர, அவர் படங்களில் அரசியல் இல்லை என்று கூற முடியாது. ஷேக்ஸ்பியர் நாடங்களின் தழுவலாக இருந்தபோதிலும், Throne of Blood, ரான் திரைப்படங்கள் பதினாறாம் நூற்றாண்டு ஜப்பானின் சரித்திர நிகழ்வுகளோடு இசைந்து சொல்லப்பட்ட கதைகளைக் கொண்டவை கபூகி, நோ போன்ற ஜப்பானிய செவ்வியல் கலைகளின் பாதிப்பை அவருடைய பல படங்களில் காணலாம்.
குரொசாவா மீது ’மேற்கத்திய’ பாணியில் படமெடுப்பவர் போன்ற எதிர்மறை விமரிசனங்களைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்கள், புதிய அலை சினிமா இயக்கத்தைச் சேர்ந்த தீவிர இடதுசாரி இயக்குநர்கள். ’பிரெக்ட்’ (Brecht)டிய பாணியைத் தூக்கிப் பிடித்த இவர்களும் மேற்கத்திய பாணியைப் பின்பற்றியவர்களே. குரொசாவாவின் மனிதத்துவ பார்வையும் இவர்களால் தீவிர விமரிசனத்துக்குள்ளானது. குரொசாவா அளவுக்கு ஜப்பானியக் கலாச்சாரத்தை இவர்களில் எவரும் உலகறியச் செய்ததில்லை..
‘ரான்’ திரைப்படத்தில், புதல்வர்களால் புறக்கணிக்கப்பட்டு, சொந்த நாட்டில் அநாதையாக அலையுமறு கைவிடப்பட்ட அரசன் ஹிதெத்தோராவின் பாத்திரத்தை தன்னைப் பிரதிபலிக்கும் பாத்திரமாகவே குரொசாவா உருவாக்கியுள்ளார். ஸ்டுயோக்களின் புறக்கணிப்புகளும், தொடர்ந்த எதிர்மறை விமரிசனங்களும் அந்த அளவு அவரைப் பாதித்திருந்தன. குரொசாவாவுக்கும் ஹிதெத்தோரா பாத்திரத்திற்குமான ஒற்றுமை பற்றி பல விமரிசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திரைப்பட்ங்களில் இசை (music), ஒலி (sound) இவற்றின் பங்கு பற்றி மிகத் தெளிவான கருத்துகளைக் கொண்டிருந்தார். அவர் படங்களின் தொடக்கத்தில் காண்பிக்கப்படும் எழுத்துக்களுடன் முழு இசையையும் கேட்கலாம். அதன் பிறகு தொடரும் படத்தில் மிகவும் தேவையான சில இடங்களில் மட்டும் குறைவான அளவில் இசை பயன் படுத்தப்ட்டது. இசையை இரண்டாம் பட்சமாக தேவைக்கு ஏற்றவாறு மிகச் சரியாக பயன் படுத்தவேண்டும் என்பார்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவகையில், அவருக்கு சத்யஜித் ராய் மீது மிகுந்த மதிப்பிருந்தது. ராய் இறந்தபோது மிகவும் கலங்கிப்போனார்.
குரொசாவா பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் வெளிவந்துள்ள புத்தகங்களில் ஜப்பானில் வாழ்ந்து குரொசாவை நேரில் அறிந்த டொனால்டு ரிச்சி, ஜோஆன் மெலன் போன்ற விமரிசகர்களின் எழுத்துக்கள் முக்கியமானவை. பீட்டர் கோவீ போன்ற திரைப்பட அறிஞர்கள் அவர் படங்களைப் பற்றி எழுதவும், அவர் படங்களின் டிவிடிக்களில் விளக்க உரைகள் அளிக்கவும் செய்திருக்கின்றனர். குரொசாவா எழுதிய சுயசரிதை ’Something like an Autobiography’ என்ற புத்தகமாக 1982 இல் வெளிவந்துள்ளது.
‘கிரைட்டீரியன்’ நிறுவனம் குரொசாவா இயக்கிய திரைப்படங்கள் அனைத்தையும் மறு பதிவு செய்து மிகச் சிறப்பாக வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. ஒவ்வொரு படத்தின் டிவிடியும் அப்பட உருவாக்கத்தில் தொடர்புள்ள ஆவணப்படங்கள், அப்படத்தில் பங்காற்றியவர், குரொசாவா - இவர்களின் நேர்காணல்களுடன், விளக்க உரை (commentary) சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட துணைவரிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
1998 ஆம் வருடம் செப்டம்பர் ஏழாம் தேதி சினிமாவுக்காகவே வாழ்ந்த இந்த மேதை டோக்கியோவில் மரணமடைந்தார். இறுதிவரை அவர் தன் வாழ்நாளில் இயக்கி அளித்த படைப்புகள் முப்பத்து ஒன்று. இவருடைய படைப்புகள் உலகம் முழுவதும் ஏராளமான புதிய படைப்புகளுக்கு மூலகாரணமாக இருந்துவருவதைக் காண்கிறோம்.
திரைப்படங்களைத் தனது தத்துவார்த்த தேடல்களுக்கான களமாகவே அவர் பயன்படுத்தினார் சமரசங்களுக்கு அவரிடம் இடமில்லை. குரொசாவாவை அவரது படைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது; ஒவ்வொரு படைப்பும் அவரது ஆன்மாவின் வெளிப்பாடு.
My films come from my need to say a particular thing at a particular time. The beginning of any film for me is this need to express something. It is to make it nurture and grow that I write my script- it is directing it that makes my tree blossom and bear fruit.
The characters in my films try to live honestly and make the most of the lives they’ve been given. I believe you must live honestly and develop your abilities to the full. People who do this are the real heroes.
–Akira Kurosawa
