Saturday, 6 February 2021

லெனி ரைபென்ஸ்தால்




லெனி ரைபென்ஸ்தால்

எஸ்.ஆனந்த்


புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர், நடிகை, அழகி,  திரைப்படக்கலையின் இலக்கணத்திற்கும், அழகியலுக்கும் வளம் சேர்த்த முன்னோடி, லெனி ரைபென்ஸ்தால் (Leni Riefenstahl).  
லெனியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ’கௌண்ட்டர் பன்ச்’ (Counter Punch) இதழில் ‘என்றும் சாகாத நாஸி’, என்று கட்டுரை வெளியானது. 
லெனி ரைபென்ஸ்தால்  ஜெர்மனியர்.  ஹிட்லரையும், பிரச்சார மந்திரி கோயபல்ஸையும் நெருக்கமாக அறிந்தவர். ’Triumph of the Will ’  நாஸி பிரச்சாரப்படத்தை  இயக்கியவர். இக் காரணங்களால்  இரண்டாம் உலகப் போருக்குப் பின் சபிக்கப்பட்டு  ஒதுக்கப்பட்டவர்.  இருந்தும் இன்றுவரை  ஒரு உண்மையை யாராலும்  மறுக்க   முடிய வில்லை. லெனி ஒரு மேதை; திரைப்பட மேதை. 
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால்  ’ஒதுக்கப்பட்ட’ நாடானது. லெனி மீதான எதிர்மறை விமரிசனங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன, விமரிசனங்களைத் தாண்டி   திரைப்படக் கலையை ஆராதிக்கும் ஆர்வலர்கள் பலரால்  லெனி   கொண்டாடப்பட்டு வருவதையும்,  உலகின் மிகச்சிறந்த பெண் இயக்குநர்களில் முதலிடம் வகிப்பவராக மதிக்கப்படுவதையும்,  காண்கிறோம். 

லெனியின் கலை முயற்சிகள் பல்கலைக் கழகங்களின் திரைப்படப் பாடங்களில் இடம்பெற்றுள்ளன. ’ டைம்’ பத்திரிகை 20ஆவது நூற்றாண்டின் நூறு முக்கிய கலைஞர்களில் ஒருவராக லெனியைக் குறிப்பிட்டுள்ளது. ஹாலிவுட்டால் புறக்கணிக்கப்பட்ட லெனிக்கு, வாழ்நாள் சாதனைக்கான விருதை  அமெரிக்காவில்  1997 ஆம் வருடம் சினிகான் (Cinecon ) லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வழங்கியது. 2003 ஆவது வருடம் மரணமடையும் வரை லெனிக்கு ரசிகர் கடிதங்கள் வந்துகொண்டிருந்தன.  லெனியை நாஸி என இறுதிவரை  நிரூபிக்க முடியவில்லை.  
லெனியை ஹிட்லரின்  பிரச்சார இயக்குனர் என ஒதுக்குவது சரியா? அல்லது கலைத் தாயின் குழந்தை எனக் கொண்டாடுவது சரியா? இந்த விவாதங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. லெனியை எவ்வாறு எதிர் கொள்வதாயினும், லெனி ரைபென்ஸ்தால் என்ற பெண்ணின் வாழ்வையும்,  படைப்புகளையும் பற்றி முதலில் அறிவது அவசியம்.  
சினிமா தோன்றி ஏழு வருடங்களில், 1902 இல் பெர்லினில் பிறந்த லெனியின் சிறுவயது  தேவதைக் கதைகளைப் (Fairy tales) படிப்பதிலும் அக்கதைகள் சொல்லும் கற்பனை உலகில் வாழ்வதிலுமாகக் கழிந்தது. விடுமுறை நாட்களில் பெர்லினுக்கு அருகில் ஒரு ஏரிக்கரையோரம் இருந்த வீட்டிலும், மரங்களும் காடுகளும் அடர்ந்த்த அதன் சுற்றுப்புறங்களிலும் தனிமையில் காலம் கழிப்பது பிடித்த பொழுது போக்காக இருந்தது.   இயற்கையின் மீதான லெனியின் மோகம்  இறுதி வரை குறையவில்லை.
நடனமும் , ஓவியமும் கற்றுக் கொண்டிருந்த லெனி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார். மொர்னவ் போன்ற பல முக்கிய ஜெர்மானியத் திரைப்பட இயக்குனர்களின்  உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஜெர்மானிய  நாடக இயக்குனரும் , தயாரிப்பாளருமான மாக்ஸ் ரெயின்ஹார்ட் (Max Reinhardt)  லெனியைத் தனது நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொண்டார். விரைவில்  நடன நிகழ்ச்சிகளுக்காகப் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பபட்டார். பிரபலமடைந்து வரும் வேளை ஒரு விபத்தில் முழங்காலில் அடிபட  நடன வாழ்வு முற்றுப்பெற்றது. 
லெனி முழங்கால் வலியுடன் இருந்த நேரத்தில் ஒரு திரைப்பட அரங்கைக் கடந்து  செல்ல வேண்டியதிருந்தது. வலியையும் மீறி சினிமா ஈர்க்க, உள்ளே சென்ற லெனியை, அந்தத்   திரைப்படம் முழுமையாக ஆட்கொண்டது.. அத்திரைப்படம் புவியியலாளரும்  மலை ஏறும்  நிபுணருமான  ஆர்னால்ட் பான்க்கின் (Arnold Fanck) ‘மலை’ படங்களில் (Mountain films) ஒன்று. அனைத்துத் திரைப்படங்களும் ஸ்டுடியோக்களில் தயாராகிக் கொண்டிருந்தன. அதற்கு நேர்மாறாக  மலை ஏற்றம், பனிச்சறுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட நடிகர்கள், காமெரா நிபுணர்கள் கொண்டு முற்றிலும் இயற்கையுடன் இணைந்த மலைப் பகுதிகளில் பான்க் தனது படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது திரைப்படங்கள்   பிரம்மாண்டமான மலைகளில் நடைபெறும் சாகசம் நிறைந்த கதைகளைக் கொண்டிருந்தன.   
இயற்கை விரும்பியான  லெனி பான்க்கின் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.. பான்க்கின் இயக்கத்தில் லெனி நடித்த  முதல் படம் ‘The Holy Mountain’  1926 இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.  மலை ஏற்றம். பனிச்சறுக்கு போன்றவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற லெனி , தனக்குப் பிடித்த இயற்கை எழில் சூழ்ந்த மலைகளில் சாகசங்கள் நிகழ்த்தும் கதாநாயகியாகத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். வழக்கமான சரித்திர, குடும்பத் திரைப்படங்களுக்கு மாறாக அழகான இளம் லெனியுடன்,  இயற்கையையும் , உடல் வலிமையையும்  முன்னிறுத்திய இப்படங்கள் பெரிதும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன. 
லெனி ஜெர்மனியின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அறியப்படலானர். ஜெர்மனிய இயக்குனர் F.W.மொர்னவின் ஃபாஸ்ட் (FAUST) திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும்  வாய்ய்பு மயிரிழையில் தவறியது.  ஜெர்மனியில் லெனிக்குப் போட்டியாக இருந்தவர்  எனச் சொல்லக்கூடிய  ஒரே நடிகை,  மயக்கும் விழிகளுடன் ஐரோப்பா முழுவதும் ரசிகர்களைத் தன்  பிடியில் வைத்திருந்த மார்லீன் டெய்ட்ரீக் (Marlene Dietrich). 
நடிப்பதை விடப் படங்களை இயக்குவதில் லெனிக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. சொந்தத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ‘ரைபென்ஸ்தால் ஸ்டுடியோ பில்ம்ஸ்’  இதற்குள்  உருவாகிவிட்டிருந்தது. அவர்  இயக்கி, கதாநாயகியாக நடித்த Blue Light (1932)    திரைப்படமும், அவர் இயக்கிய Triumph of the Will,  Olympia ஆகிய இரு ஆவணப்படங்களும் லெனி ரைபென்ஸ்தால் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவராக அறியப்படுவதற்குக்  காரணமாயின.
லெனியின் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம்  Blue Light    ஹங்கேரிய திரைப்படக் கோட்பாட்டாளர் பெலா பலாஸுடன் (Béla Balázs),  இணைந்து உருவாக்கிய படம்.    இத்தாலிய டோலமைட் மலைப் பகுதியில் நிகழும் கதை. வெகுளியான  இளம் பெண் ஜுண்ட்டா மலை  மீதுள்ள குடிலில் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்துபவள்.  அருகிலிருக்கும்  கிராமத்தினர் அவளைச்  சூனியக்காரி என  ஒதுக்கி வைத்திருக்கின்றனர். 
பவுர்னமி இரவுகளில் மலையின் மேலிருந்து வெளிப்படும்  நீல நிற ஒளியில்  அந்தக் கிராமமே முழுகிவிடுகிறது. ஒளி வரும் இடத்தை  அடைய முயன்ற  பல இளைஞர்கள் தவறி விழுந்து மரணமடைகின்றனர். வியன்னாவிலிருந்து வரும் ஒரு இளம் ஓவியன் அந்தக் கிராமத்து விடுதியில்  தங்குகிறான். 
ஜுண்ட்டாவை சந்திக்கும் ஓவியன் விரைவில் அவளுடனே தங்கிவிடுகிறான். இருவரின் பேசும் மொழிகள் வேறு. சைகைகளால் பேசிக்கொள்ளுகின்றனர். பவுர்னமி இரவில் ஜுண்ட்டா மலை மீது ஏறுவதைக் கண்டு பின் தொடருகிறான். நிலவொளியை நீல வண்ணத்தில் பிரதிபலிக்கும் அற்புதக் கற்கள் எராளமாக இறைந்து கிடக்கும்  மலைப்பகுதியில் மெய்மறந்து ஜுண்ட்டா அமர்ந்திருப்பதைக்  காண்கின்றான்

ஓவியனுக்குப் பவுர்னமி இரவின் நீல வண்ண ஒளி, மாய ஒளியல்ல; விலை மதிப்பற்ற கற்களால் பிரதிபலிக்கப்படும் நிலவின் ஒளியெனப் புரிகிறது.  கிராம மக்களிடம் அதைச் சொல்கிறான். பேராசை கொண்ட அந்த மக்கள் மலையிருந்த  விலைமதிப்பற்ற கற்களை விற்பதற்காக எடுத்து வந்துவிடுகின்றனர். இதை அறியாத ஜுண்ட்டா, மீண்டும் பவுர்னமியன்று நீல ஒளியைத்தேடி மலை மீது ஏறும் போது இருளில் வழி தெரியாது தவறி விழுந்து இறந்துவிடுகிறாள். 
மலைகளில், இயற்கையாக எடுக்கப்பட்ட படம். சில முக்கிய நடிகர்கள் தவிர நடித்தவர் அனைவரும் அந்த மலையகக் கிரமத்து மக்கள். பிற்காலத்தில் இத்தாலியில் உருவான ’நியோ ரியலிச’ பாணியை ஒத்து அமைந்திருக்கும். படம். அற்புதமான   ஒளிப்பதிவும் லெனியின் திறமை யான எடிட்டிங்கும் கொண்ட  Blue Light     லண்டனிலும் , பாரிசிலும் சிறப்பான  வரவேற்பைப் பெற்றது. வியன்னா திரைப்பட விழாவில் வெள்ளிப்பதக்கம் பரிசு பெற்றது. 
ஜெர்மனியின் பொருளாதார நிலை மோசமான நிலையை அடைந்திருந்தது. முதல் உலகப் போரில் படு தோல்வியடந்த பின் சரியான ஆட்சியில்லாமல் நாடு எங்கோ போய்க்கொண்டிருந்தது குழப்பமான அரசியல் சூழ்நிலை வேறு.   நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்த பணவீக்கம், திருட்டுச் சந்தை, உணவுத் தட்டுப்பாடு,  விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசின் மீது  மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்திருந்திருந்தனர்.
ஜெர்மனியை மீட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல வல்லவரான ஒரு தலைவருக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். 1930களில் ஜெர்மனியில்  தேசியப் பொதுவுடமைக் கட்சியின் (National Socialist Party) தலைவர்களில் ஒருவரான ஹிட்லர், ஜெர்மனியை உலகின் முதன்மையான நாடாக மாற்றுவது பற்றிய தனது அனல் பறக்கும் பேச்சுக்களால் மக்களை ஈர்த்துக்கொண்டிருந்தார், இவரது பேச்சுக்காகவே பலர் இக்கட்சியில் சேர்ந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. தேசியப் பொதுவுடமைக் கட்சி வளர்ந்து,  ஜெர்மானிய அரசியல் அரங்கின்  முக்கிய அங்கமான ’நாஸிக் கட்சி’யாக ஆனது.  
லெனி ஹிட்லரின் தீவிர விசிறியானார்.  அனறைய அனைத்து ஜெர்மனிய மக்களைப் போல, ஹிட்லரை ஜெர்மனியை மீட்க அவதரித்த தலைவனாக ஏற்றுக்கொண்டார். ஹிட்லரின் பேச்சை நேரில் கேட்டபின்  எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து கடிதம் எழுத,  ஹிட்லரிடமிருந்து உடனே அழைப்பு வந்தது. 
1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன்,  கட்சிப் பிரச்சாரப் படங்கள் தயாரிப்பதற்கு லெனியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. நாஸிக் கட்சிக்காக லெனி தயாரித்த முதல் பிரச்சார ஆவணப்படம் 1933 நியூரம்பர்க் கட்சி மாநாடு பற்றிய ’Victory of Faith’. கட்சிப் பிரச்சினைகளால் இப்படம் வெளியே காட்டப்படாமல் நிறுத்தப்படது. அடுத்த வருடம், 1934 இல்  நியூரம்பர்க்கில் நடக்கப்போகும் நாஸிக் கட்சி மாநாட்டை படமெடுக்கும்படி லெனி கேட்டுக்கொள்ளப்பட்டார். விளைவு, என்றும் பேசப்படும் அளவில் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட Triumph of the Will. 

வானில் பறந்துகொண்டிருக்கும் ஹிட்லரின் விமானத்திலிருந்து காணும் மேகங்களுடன்  Triumph of the Will   தொடங்குகிறது. நியூரெம்பர்க் நகரின் மேல் வரும்போது ஹிட்லரின் விமான நிழல் நகரின் மேல் நகர்ந்து செல்வதும், ஹிட்லர் விமானத்தில் நியூரெம்பெர்க்கில் இறங்குவதும்,    ஒரு கடவுள் வானிலிருந்து பூமிக்கு இறங்கி வருவது போல் காட்டப்படுகிறது. வழி நெடுக மக்களின் ஆரவாரத்துடன் நீண்ட வாகன அணிவகுப்பு. வழியிலிருக்கும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள், சிறுவர், வயதானவர் – எனக் காமெரா இவர்களை அருகாமை கோணங்களில்  இடையிடையே காட்டிக்கொண்டே ஹிட்லரைத் தொடருகிறது. 
இரவு ஹிட்லர் தங்கும் விடுதியின்  முன் கலை நிகழ்ச்சிகள். மறுநாள் ஹிடலர் பார்வையிடும் அணிவகுப்புகள். இரண்டு லட்சம் பேர்களின் இறுக்கமான அணிவகுப்பை லெனி படமாக்கிருக்கும் விதம் பிரமிப்பை அளிக்கிறது. ஹிட்லரின் அடுத்த நிலையிலிருக்கும் ருடால்ப்ஃ ஹெஸ் ஆரம்பித்து வைக்க, முக்கிய தலைவர்களின் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகள் ஆரம்பிக்கின்றன. ஹிட்லரின் பேச்சு  மெதுவாக ஆரம்பித்து உணர்ச்சியின் உச்சத்தில் முடிகிறது. யூதர்களைத் தாக்கும் இனவெறிப்பேச்சுகள் இந்த சொற்பொழிவுகளில் இல்லை. மாறாக ஹிட்லரின் பேச்சில்  ஜெர்மனிக்கும் உலகுக்கும் தேவையான அமைதி பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. 
விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்து மரியாதை செய்கின்றனர். ஹிட்லர் நிகழ்த்தும் உரை முடிந்தபின். நடக்கும்  இரவு வாண வேடிக்கைகள் மிகச்சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாஸிக் கட்சியின் பிரிவுகள் அனைத்துமே ராணுவம் போல சீருடைகளுடனும், விதிமுறைகளுடனும் இயங்குவதைக் காண்கிறோம். இறுதி நாளன்று ஹிட்லரின் உரை முடிந்த பின் ”ஹிட்லர் தான் ஜெர்மனி , ஜெர்மனி தான் ஹிட்லர் ” எனும் ருடால்ப்ஃ  ஹெஸ்ஸின் முழக்கத்துடம் படம் முடிகிறது. 
மிகவும் நெருக்கமான அருகாமை கோணங்களும், மிகத் தூரக் கோணங்களும் (extreme long shots) சிறப்பாகப் படம் முழுக்கப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றன, தலைமை நிலையை வலியுறுத்தும் வகையில்  ஹிட்லரைப்  பெரும்பாலும் தாழ்கோணங்களில் கீழிருந்து படமாக்கிருக்கின்றனர்.  அணிவகுத்து நடப்போரை வானிலிருந்து காமெரா கொண்டு  அவர்களின் நிழல்களுடன் மேலிருந்து காட்டுவது போன்று படம் முழுவதும் சிதறிக்கிடக்கும் ஒளிப்பதிவு அற்புதங்கள். ஒளிப்பதிவுக்கலையும், காட்சி அமைப்புக் கலையும் புதிய உயரங்களுக்குக்  கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 
இப்படத்தின் பாதிப்பு இன்றும், இனிவரும் காலங்களிலும் தொடருவதைத் தவிர்க்க முடியாது. அன்று  ஆர்சன் வெல்ஸின் ‘சிட்டிசன் கேன்’ படக் காட்சிகள் இப்படத்தின் காட்சிகளுடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டன. பின்னர் தொடர்ந்து   வந்த ஏராளமான  திரைப்படங்களில் இப்படத்தின் காட்சியமைப்புகளும் காமெரா கோணங்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. ஜார்ஜ் லூக்காஸ், ரிட்லி ஸ்காட், ஸ்டீவென் ஸ்பீல்பெர்க், எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.  
அழகியலையும், சிறப்பான  உத்திகளையும் மட்டும் கொண்டு  ஒரு படம் சிறப்பானது எனக் கணிப்பது தவறு. அப்படத்தின் சாரம் - உள்ளடக்கம் – என்னவெனக் காண்பது அவசியம். அப்படிப் பார்க்கையில் ஒலிம்பியா நாஸிகளையும் ஹிட்லரையும்  முன்வைக்கும் படம். இதைப் பற்றிப் பேசுவதே தவறு என எதிர்ப்புகள் ஒருபக்கம் .
இது ஒரு கட்சியின் மாநாட்டையும் அக்கட்சியின் தலைவரையும் காட்டும் படமேயன்றி எதிர்மறையாக எதையும் சொல்லும் படமல்ல. சினிமா எனும் கலைவடிவத்திற்கு உரம் சேர்க்கும் நுட்பங்கள் பல கொண்ட படம் . இப்படத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள  பல புதிய உத்திகள் திரைப்பட வளர்ச்சிக்கு  இன்றியமையாதவை. எனப் பாராட்டுகள் ஒரு பக்கம். 


லெனியின் மீதான கடுமையான எதிர்ப் பிரச்சாரம் இப்படத்துடன் தொடங்குகிறது. Triumph of the Will லெனியின் திறமைகளை உலகறியச் செய்த படம். அதே சமயம் லெனிமீது இறுதிவரை அழிக்கமுடியாத கறை படியச் செய்த படமும் கூட. சக ஜெர்மானியரைப் போல, ஜெர்மனியைக் காக்கவந்த  மானுட தெய்வமாக ஹிட்லரை நம்பிய லெனியால் எடுக்கப்பட்ட இப்படம், ஹிட்லரின் உண்மையான முகம் வெளிப்பட்டபின், லெனி  புறக்கணிக்கபடுவதற்கு முக்கிய  காரணமானது. வாழ்நாள் முழுவதும் லெனியின் மீதான இந்தப் பழியும் புறக்கணிப்புகளும் தொடர்ந்தன.
Triumph of the Will லெனிக்கு ஜெர்மனியில் புதிய அங்கீகாரத்தை அளித்தது. அடுத்து  1936 பெர்லின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் படமெடுக்கும் பொறுப்பு  லெனிக்கு அளிக்கப்பட்டது. லெனியின் மேதமையை முழுமையாக வெளிப்படுத்தும் படம் ’ஒலிம்பியா’. நாலாயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற பத்தொன்பது விளையாட்டுகளின் 129 நிகழ்வுகள் (events)  செலுலாய்ட் கவிதைகளாக நம் கண்களின் முன் திரையில் விரிகின்றன. விளையாட்டுகளின் விறுவிறுப்பும், வேகமும்  சற்றும் குறையாது காட்டப்படுள்ளன. ஒலிம்பியா இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. 
முதற்பகுதி – Festival of the Nations .  ஒரு இசைக் காவியத்தின் prelude போலத் தொடங்குகிறது. கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக்ஸ் ஆரம்பித்த காலத்தை நினவுறுத்துவதாக, இன்று சிதிலமடந்து கிடக்கும்  பண்டைய  கிரேக்க  அரண்மனைகள், கட்டிடங்கள் வழியாகத் தொடங்கும்  காமெராவின் பயணம், கிரேக்க  அரீனாவின்  நீண்டுயர்ந்து நிற்கும் தூண்கள் இடையே தெரியும்  வானையும் மேகஙளையும் அடைவதுடன்,  பண்டைய மனித உருவங்களுக்கு மாறுகிறது. ஆண்களில் ஆரம்பித்துத் தொடர்ந்து கவித்துவமான ஒவியங்கள் போலக்  காட்டப்படும் பெண்களின் உடல்கள். தொடரும் காட்சிகளில்   ஒலிம்பிக் தீப் பந்தத்தைக் கையில் ஏந்தி ஓடிவரும் பண்டைய விளையாட்டு வீரன் நவீன தீபத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வீரனாக மாறுகிறான்.  இந்தப் பன்னிரண்டு நிமிட முன்னுரையின் -prologue -  முடிவில்  ஒலிப்பிக் தீபம் அரங்கில் ஏற்றப்படுகிறது.
அனைத்து நாடுகளின் அணிவகுப்பு முடிந்தவுடன் போட்டிகளின் ஆரம்பம். ஆண் பெண் இரு பாலர்க்கும்  போட்டிகள் தொடர்கின்றன. பாலே நடனம் போல நாம் காணும் உயரத் தாண்டுதல் (high jump), நிழல்களாகக் காணும் வாட்சண்டைப் போட்டி, அவ்வப்போது மெதுவான வேகத்திற்கு (slow motion) மாறும் ஓட்டப்பந்தயங்கள், பிரமிப்பூட்டும் தாழ் கோணங்களில் காட்டப்படும் காட்சிகள் எனத் தொடர்ச்சியாகப் பந்தயங்கள் கலையுணர்வோடு அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன.  
முதல் பகுதியின் உச்சம் மாரத்தான் ஓட்டப்பந்தயம். காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் முறை நம்மையும் ஓடுபவர்களில் ஒருவராக்கி விடுகிறது.  ஓடிக்கொண்டிருக்கும் கால்கள், இறுகும் கால் தசைகள், ஓடுபவர்களின் நிழல்கள்  என ஒவ்வொரு சட்டகத்திலும் ஓட்டதின் வேகத்தையும் , சக்தியையும் உணரமுடிகிறது.  இந்த முதல் பகுதியின் கதா நாயகன் நான்கு தங்கப் பதக்கங்களைத் தட்டிச் செல்லும் அமெரிக்க கருப்பின ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்ஸி  ஓவன்ஸ்.
இரடாவது பகுதி – Festival of Beauty-  ஒலிம்பிக் வீரர்கள் தங்குமிடங்களில் இயற்கையோடு இணைந்து கலையழகோடு  எடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் உடல்கள் காட்டப்படும் காட்சிகளுடன் தொடங்குகிறது. ஹாக்கி, கால்பந்தாட்டம், குதிரை ஓட்டம், எனத்  தொடரும் பந்தயங்கள். இறுதியில் உச்சமாகக் காட்டப்படுவது தண்ணீரில் குதிக்கும் (diving ) போட்டிகள். மேலிருந்து குதிப்பவர் தண்ணீரில் மூழ்கி நீரினடியில் சென்று மேலே எழும்பி வரும் வரை காமெரா தொடர்கிறது. ஒவ்வொருவரும் குதிக்கும் பலகைகளிலிருந்து மேலெழுவதை  கீழிருந்து காணும்போது பறவைகள் பறக்கத் தொடங்குவது போல நாம் காண்கிறோம். அடுத்தடுத்த காட்சிகளாக இக்காட்சிகள்  காட்டப்பட்டுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
வெகு சில இடங்களில் ஹிட்லர் காட்டப்படுகிறார். அதுவும், இறுக்கமாகப் பதட்டத்துடன் போட்டிகளைப் பர்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு வெற்றிக்குப் பின் அமெரிக்க தேசிய கீதத்துடன் அமெரிக்கக் கொடி அருகாமையில் காட்டபடுகிறது. அமெரிக்க வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அதிகம் காட்டப்பட்டிருக்கிறார். ஜெர்மனி குறைவாகவே காட்டப்பட்டிருக்கிறது.
ஒலிம்பிக் அரங்கத்தில்  முன்கூட்டியே படப்பிடிப்புக்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒளிப்பதிவிற்கான பல புதிய உத்திகள் இந்தப் படத்திற்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்டன. பதினாறு நாட்கள் நடந்த விளையாட்டுப் போட்டிகள் முப்பதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்களால் படமாக்கப்பட்டன. ஒலிம்பியா படக்குழுவில் மொத்தம் முன்னூறூ பேர்களுக்கு மேல் இருந்தனர். அதி நவீன லென்ஸ்களுடனான காமெராக்கள் உபயோகப்படுத்தப்பட்டன.  தாழ்கோண காட்சிகள் தோண்டப்பட்ட  குழிகளிலிருந்தும், உயர் கோணக் காட்சிகள்  இரண்டு உயர் கோபுரங்கள் மேலிருந்தும் படமாக்கப்பட்டன.. ஓட்டப்பந்தயங்கள் , படகோட்டம் நீச்சல் முதலியவை அதே வேகங்களில்  நகர்த்த்தப்பட்ட கேமராக்களால் படமாக்கப்பட்டன.  
இறுதியில் காட்டப்படும்  தண்ணிரில் குதிக்கும் (diving) போட்டிக் காட்சிகளை  மேலிருந்து ஒன்று; கீழிருந்து ஒன்று, தண்ணீருக்கடியில் ஒன்று என மூன்று காமெராக்களுடன் மூன்று கோணங்களில் ஒளிப்பதிவாளர்கள்  படமாக்கினர். படமெடுப்பதற்கான ஒவ்வொரு கோணமும், காமெராக்களில் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு லென்ஸும் லெனியினால் முடிவுசெய்யப்பட்டது. மொத்தம் எடுக்கப்பட்ட 250 மணி நேரம் ஒடும் படச் சுருள்களைப் பார்த்து முடிப்பதற்கு  லெனிக்கு மூன்று மாதங்களானது. இப்படத்தை லெனி எடிட் செய்வதற்கு ஆன காலம் ஒன்றரை வருடங்கள். 1938 இல் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டது.

விளையாட்டு நிகழ்ச்சிகள்  பற்றிய  ஆவணப் படங்களில் லெனி ரைஃபெந்த்தலின் ஒலிம்பியா முதன்மையானதாகக் கருதப்படுகிறது.  ஒலிம்பியாவுக்காக  லெனியால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல புதிய  எடிட்டிங், இயக்க உத்திகளும்,  ஒளிப்பதிவு நுட்பங்களும் இன்றைய திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக் காட்சி விளம்பரங்கள், எடுக்கப்படும் முறைகளில் இரண்டறக் கலந்துவிட்டவை;   என்றும் பயன்படுத்தக்கூடிய அளவு நவீனமானவை. ஒலிம்பியாவுக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பத்து வருடங்கள் கழித்து சர்வதேச ஒலிம்பிக் குழு இப்படத்திற்காக லெனிக்கு  தங்கப்பதக்கம் வழங்கியது.  1955 இல்  உலகின் மிகச்சிறந்த பத்து படங்களில் ஒன்றாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டது. 
1938 இல் ஒலிம்பியாவை அறிமுகப்படுத்த அமெரிக்காவிற்கு சென்ற லெனி  அங்கு வால்ட் டிஸ்னியின் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஜெர்மனிக்குத் திரும்பியபின் ஆரம்பித்த திரைப்படம்  Lowlands,     பல முறை தடைபட்டு , 1944 இல் முடிக்கப்பட்டது. வெளிவருவதற்கு மேலும் பத்து வருடங்கள் ஆயின. இதற்கிடையில் 1944 இல் ஒரு ராணுவ உயர் அதிகாரியுடன் நடந்த லெனியின் திருமணம் இரண்டு வருடங்களில் விவாகரத்தில் முடிந்தது.   
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப் பிறகு, லெனி மூன்று வருடங்கள் சிறையிலிருந்தார். லெனியிடமிருந்த படமெடுக்கும் கருவிகளும் திரைப்படங்களும் பிரெஞ்சு அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய சொந்த வீடுகளையும் இழந்தார்.  சில நாட்கள்  மன நிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நாஸிகளுடன் ஒருவராக விசாரணை செய்யப்பட்டார். 
லெனி நாஸிக் கட்சி உறுப்பினரல்ல. படமெடுக்கும்போது காண நேர்ந்த நாஸிக் கட்சிக் கூட்டங்களைத் தவிர  எந்த நாஸி கட்சிக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை. நாஸிகள் நடத்திய இனப் படுகொலைகளில் அவருக்குப் பங்கில்லை. யூத இன வெறுப்புப் பிரச்சாரத்திலும் பங்கில்லை. இந்த விவரங்கள் நேச நாடுகளின் விசாரணைகளில் நிரூபணம் ஆன பின் லெனி ஒரு நாஸி அல்ல ஆனால் நாஸி அனுதாபி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு  விடுதலை செய்யப்பட்டார். 
விடுதலைக்குப் பின் தாயுடன் பெர்லினில் அடுக்கு  மாடிக் குடித்தனப் பகுதி ஒன்றில் வாழ்ந்தார். 1952ல் பின்லாந்து ஒலிம்பிக் பந்தயங்களைப் படமாக்கக்  கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டார். 1953 இல் பறிமுதல் செய்யப்பட்ட படங்களும், காமெரா, எடிட்டிங் உபகரணங்களும் திருப்பி அளிக்கப்பட்டன. 1954 இல் Lowlands திரைக்கு வந்தது. லெனியின் மேதமையை நன்கறிந்த  பிரெஞ்சு கவிஞரும் இயக்குநருமான ழான் காக்தூ (Jean Cocteau) அவ்வருடக் கான் திரைபட விழாவில் (Cannes Film Festival)  அப்படத்தை  இடம்பெறச் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. 
ழான் காக்தூ, Blood of a Poet (1930) , Beauty and the Beast (1946), Orpheus(1960) போன்ற முக்கிய திரைப்படங்களை அளித்திருப்பவர். லெனி அவருடன் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டிருந்த  வால்ட்டேரின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்  1963 இல் காக்தூவின் மறைவினால் நின்றுபோனது. தொடர்ந்து  கென்யாவின் அடிமை வணிகம் பற்றி  ஆவணப் படமெடுக்கச் சென்ற லெனி  கார் விபத்தில் படு காயமடைந்தார். அந்தப் படபிடிப்பும் நிறுத்தப்பட்டது.
திரைப்படங்களை எடுக்க லெனி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பிறாரால் தடுக்கப்பட்டன அல்லது இடையில் நிறுத்தப்பட்டன. லெனி புகைப்படக் கலைக்கு திரும்பினர். 1962 இல் சூடானிலிருந்த நூபாவுக்கு(Nuba) ஜெர்மன் ஆய்வுக் குழு ஒன்றுடன் சென்றவர், மீண்டும் அங்குள்ள பழங்குடிகளை புகைப்படம் எடுப்பதற்காகச் சென்று அவர்களுடன் பல மாதங்கள் தங்கினார்.  அவர்களின் மொழியையும் , வாழ்க்கை முறைறைகளையும் அறிந்தார். முற்றிலும் இயறகையோடு இணைந்திருந்த நூபிய மக்களின் வாழ்க்கை லெனி வாழ விரும்பிய வாழ்கையோடு ஒத்திருந்தது. 

நூபா பழங்குடிகளின் புகைப்படங்கள் அடங்கிய லெனியின் முதல் புத்தகம் The Last of the Nuba, 1972 இல் வெளிவந்து.  Africa, People of Kau என வரிசையாக லெனியின் புகைப்படப் புத்தகங்கள் வெளிவந்தன.  புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராக அறியப்படலானர். சூடான் அவருக்குச் சிறப்புக் குடியுரிமை அளித்துக் கவுரவித்தது.  லெனியிடம் வெளிப்படையாகத் தொடர்பு கொள்வதை பலர் தவிர்த்த போதிலும் சில முக்கிய கலைஞர்கள், இயக்குனர்கள்,  திரைக்கலை அறிஞர்கள் துணிந்து அவரது திறமைகளை வெளிப்படையகப் பேசினர், பழகினர்.  பிரான்ஸின் புதிய அலை சினிமா இதழ் ‘Cahiers du Cinéma ‘1965 செப்டம்பரில்  லெனியின் பேட்டியை வெளியிட்டது. ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ குழுப் பாடகர் மிக் ஜாகர் போன்ற பிரபலங்கள் அவருடைய இல்லத்திற்கு  விருந்தினராகச் செல்ல ஆரம்பித்தனர். 
கலையுலகில் நிலவிவந்த வெறுப்பு நீங்கி, லெனிக்கு அங்கீகாரம் கிடைப்பது போலத் தோன்றிய நிலை கண்டு லெனி எதிர்ப்பாளர்கள், குறிப்பாக அமெரிக்க யூதக் குழுக்கள் லெனி மேல் பாய்ந்தன.  பல எதிர் விமரிசனங்கள் இவர்களிடமிருந்து எழுந்தன. நூபா புகைப்படங்களில்  தொடங்கி லெனியின் கலை, ஜெர்மானியர்களின் அழகியல் பார்வை அனைத்தையும் விமரிசித்து  சூசன் சோண்ட்டாக் எழுதிய கட்டுரை  ’Fascinating Fascism’ 1974 இல் வெளிவந்தது. லெனி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், புகைப்படக் கண்காட்சிகளிலும் பிரச்சினைகள் ஏற்படுத்தினர்.. திரைப்பட விழாக்களில் லெனியின் படங்கள் திரையிடப்படுவது பலமுறை  இவர்களால் தடுத்து நிறுத்தப்ப்ட்டது. 
எழுபத்தி ஓராவது வயதில் ஆழ்கடல் மூழ்கும் பயிற்சி பெற்ற லெனி  கடலின் அற்புதங்களைப் படமெடுக்கத் தொடங்கினார். செங்கடல்., இந்தியப் பெருங்கடல், மாலத் தீவுகள் கடல் பகுதிகளில் படங்கள் எடுப்பது  தொடர்ந்தது. 1978 இல் லெனியின் புகைப்படப் புத்தகம் Coral Gardens வெளியிடப்பட்டது. 2003 இல் லெனியின் ‘Wonders Under Water’ ஆவணப் படம் வெளிவந்தது.  Lowlands வெளியாகி நாற்பத்து ஒன்பது வருடங்களுக்குப் பிறகு  வெளிவந்த  லெனியின் ஒரே படம். 

நூறாவது வயதில் லெனி மீது மீண்டும் விசாரணை. இரண்டாம் உலகப்போருக்கு முன்  Lowlands படத்தில் சிறையிலிருந்த ஜிப்ஸிகள் நடித்திருந்தனர்.  இவர்களில் பலர் நாஸிகளால் ஆஸ்விட்ஸ் முகாமில் பின்னர் கொல்லப்பட்டது லெனிக்கு தெரியாது நடந்த  விசாரணையில் நாஸிகளின் செயலுக்காக வருந்துவதாக லெனி மன்னிப்புக் கோர,  தண்டனையின்றி விடுவிக்கப்பட்டார்.  
லெனியின் உடல் நிலை மோசமாக ஆரம்பித்தது. கென்யா கார் விபத்தும்,  சூடானில் 2000 இல் அவர் செத்துப் பிழைத்த  ஹெலிகாப்டர் விபத்தும் உடலை வெகுவாகப் பாதித்திருந்தன.  2003ஆம் ஆண்டு 101 ஆவது பிறந்த நாள் கழிந்து சில வாரங்களில்  மரணமடைந்தார். 
லெனியைப் பற்றிய முக்கிய விமரிசனம், அவர் ஹிட்லருக்கு பிரச்சார படமெடுத்ததற்காக மன்னிப்புக் கேட்கவில்லை என்பது.  ஹிட்லரைத் தான் சந்தித்தது பெரும் தவறு. ஹிட்லர் ஒரு அரக்கன் என்பதை அறிவதற்கு முன்பே எடுக்கப்பட்ட Triumph of the Will உம், ஒலிம்பியாவும். அரசியல் நோக்கம் இன்றிக் கலைப் படைப்புகளாகவே தன்னால் உருவாக்கப் பட்டவை. தான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என இறுதிவரை மறுத்துவிட்டார். .

லெனி  ஹிட்லரின் ரகசியக் காதலிகளில் ஒருவர் என உலவிய  செய்தியை வன்மையாக மறுத்தார். கட்சிப் பிரச்சாரப் படங்கள் தயாரித்த நேரங்களில் சந்தித்தது  தவிர பிற சந்தர்ப்பங்களில்  ஹிட்லரை அரிதாகவே சந்தித்திருப்பதாக அவரது சுய சரிதையிலும், நேர்காணல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.
லெனி சொல்வது அனைத்தும் பொய் என  லெனியை  விமரிசிப்பவர்கள் கூறுவது உண்டு. இவர்கள் சொல்வது  எந்த அளவு உண்மை என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் லெனிக்கும் ஹிட்லருக்கும் இடையே இருந்த உறவு பற்றி அறிவதற்கான சான்றுகள் இல்லை; சம்பந்தப்பட்டவர்கள் ஜெர்மனியின் தோல்விக்குப் பின் உயிருடன் இல்லை. விசாரணை செய்யப்பட்டு தணடிக்கப்படிருந்தனர்; அல்லது தற்கொலை செய்து இறந்திருந்தனர். பிரஸ்த்ரோய்க்காவிற்குப் பின் ரஷ்ய அரசால் மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பபட்ட கோயபல்ஸின் டயரி லெனிக்கு எதிரான செய்திகள் மீண்டும் பரவக் காரணமானது.. லெனி இவைகளைத் தீர்க்கமாக மறுத்தார். 
ஹிட்லரின் நாஸிக் கும்பல் இழைத்த அநீதிகளுக்கு  ஜெர்மனியும் அதன் மக்களும்  அளித்த விலை மிக அதிகம். போர்க்குறங்களுக்காக மக்கள் சார்பில் மன்னிப்புக் கேட்கப்பட்டது,  நாஸிகள் அனைவரும் விசாரணை செய்யப்பட்டு   தண்டிக்கப்பட்டனர். நாஸி வேட்டை இன்னும்  தொடருகிறது. தலைநகர் பெர்லின், ரஷ்யாவாலும் அமெரிக்காவாலும் இரு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது.. இடையில் சுவர் வேறு கட்டப்பட்டது. ஜெர்மானிய மக்கள் de Nazify செய்யப்பட்டனர்.  இன்றுவரை பிற ஐரோப்பிய,  அமெரிக்க நாடுகளால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 
லெனியின் படங்கள்  Blue Light, Triumph of the Will, Olympia  மூன்றும் இப்போது சிறந்த முறையில் மறு பதிவு செய்யப்படு  கிடைக்கின்றன.  இவற்றைக் காண்பதற்கு முன் கட்டாயம் பார்க்க வேண்டியது, லெனியின் வாழ்க்கையையும் அவரது படைப்புகளையும்  நடு நிலையுடன் விவரிக்கும் ரே முல்லரின் (Ray Muller) ஆவணப்படம், The Wonderful, Horrible Life of Leni Riefenstahl. 
இந்த உலகம் லெனியிடம் சிறிது கருணையுடனும் இரக்கத்துடனும் இருந்திருக்கலாம்.
இரண்டே படங்கள் , அதுவும் ஒரு பெண், தனியாக, ஆணாதிக்கம் மிகுந்த திரைப்படத் துறையில்,  தனது 36ஆவது  வயதுக்குள் இயக்கி அளித்த படங்கள், திரைப்படச் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. திரைப்படக் கலை உள்ளவரை லெனியின் பெயரைச் சொல்லுவதற்கு அவருடைய படைப்புகள் போதும். 

லெனியின் படைப்புகள்:
2003 - Underwater Impressions (documentary),1954 - Lowlands, 1938 - Olympia Part One: Festival of the Nations (documentary), 1938 - Olympia Part Two: Festival of Beauty. (documentary), 1935 Triumph of the Will (documentary), 1935 - Tag der Freiheit - Unsere Wehrmacht (documentary short), 1933 - Victory of the Faith (documentary), 1932 - The Blue Light
கட்டுரைக்கு உதவிய நூல்கள்:
Propaganda and the German Cinema, 1933-1945 by David Welch
World Film Directors Vol 1- 1890 to 1945 Ed by John Wakeman
Historical Dictionary of German Cinema by Robert C Reimer & Carol J Reimer