Saturday, 7 November 2009

திரைப்படத்தின் உன்னதக் கலைஞன் : மசாகி கோபயாஷி - 1

எஸ்.ஆனந்த்

1

உலகின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞராக, மனிதாபிமான இயக்குனராகப் போற்றப்படத் தக்கவர் மசாகி கோபயாஷி. இன்று மறுவாசிப்பு செய்யப்படும் திரை மேதைகளில் மிக முக்கியமானவர். ஜப்பானின் தனித்துவமிக்க இயக்குனரான கோபயாஷியின் திரைப்படங்கள் தற்போது மறுபதிப்பு செய்யப்பட்டு பார்க்கக் கிடைக்கின்றன. இவை திரைப்பட அழகியலின் உச்சங்களைத் தொடும் படைப்புகள். மனித நுண் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவை.

கோபயாஷி தீவிர போர் எதிர்ப்பாளர். மிகச் சிறந்த மனிதாபிமானி. கொள்கைகளில் எவ்வகையான சமரசமும் செய்துகொள்ளாதவர். தான் ஈடுபட நேர்ந்த, அருகிலிருந்து கண்டு அனுபவித்த போரின் கொடூரங்களையும், மனித உரிமை மீறல்களையும் திரைக் காவியங்களாக வடித்தவர். தனது உறுதியான படைப்பு நிலைக்காக பல நிராகரிப்புகளைக் கண்டவர்.

காலம் காலமாக ஜப்பானில் நிலவி வந்த அதிகாரக் கட்டுப்பாடுகளின் அவலங்களை மக்களுக்கு உணர்த்தியதில் கோபயாஷியின் திரைப்படங்களின் பங்கு முக்கியமானது. ஜப்பானியர் மறக்க விரும்பிய, குற்றங்கள் நிறைந்த போர்க்காலத்தையும், ஜப்பானிய சமூகத்தின் குறைகளையும் வெளிப்படையாகத் தன் படைப்புகள் மூலம் விமரிசித்தார். சமரசம் செய்துகொள்ளாத கொள்கைப் போக்கும், ஜப்பானிய நிலப்பிரபுச் சமுதாயத்தின் மீது இவரது திரைப்படங்கள் எழுப்பிய கேள்விகளின் உக்கிரமும் - கோபயாஷியின் படைப்புகள் ஜப்பானில் உரிய அங்கீகாமும் இன்றி, உலகளவில் பரவலாகத் திரையிடப்படும் வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டதற்குக் காரணங்களாயின. இந்த முதலிட இயக்குனரின் திரைப்படங்கள், அகிரா குரோசாவா, கென்ஜி மிசோகுச்சி, யஜீசுரோ ஒசூ போன்ற ஜப்பானிய இயக்குனர்களின் திரைப்படங்கள் பெற்ற அளவில் சிறிதுகூட உலக கவனம் பெறமுடியாதபடி ஆக்கப்பட்டது உலக சினிமாவின் இழப்பு.
கோபயாஷியின் திரைப்படங்கள் பற்றிய தகவல்களோ எழுத்துகளோ பரவலாக வெளிவரவில்லை. மிகச் சில மேற்கத்திய திரை அறிஞர்கள் தவிர, தீவிர திரைப்பட ஆர்வலர்களால் மட்டுமே அறியப்பட்டிருந்த கோபயாஷியின் கய்தான், ஹரகிரி, சாமுராய் கலகம் போன்ற முக்கிய திரைப்படங்கள், தற்போது அனைவருக்கும் காணக் கிடைப்பதற்கு, இன்றைய டிஜிடல் புரட்சிக்கு நன்றி சொல்ல வேண்டும். இவரது மகோன்னதப் படைப்பான ‘ஹ்யூமன் கண்டிஷன்' திரைப்படத் தொகுப்பு இன்று அமேசானின் இணைய விற்பனையில் கிடைக்கிறது. ‘ஹ்யூமன் கண்டிஷன்' மூன்று திரைப்படப் பகுதிகளாக, ஒன்பது மணி நேரம் ஓடும் தொகுப்பு. கோபயாஷியின் திரையாக்கத்தின் உச்சம் இத்திரைப்படத் தொகுப்புதான்.

மசாகி கோபயாஷி பிறந்தது 1916 இல் ஜப்பானின் வட கோடியிலிருக்கும் ஹொக்கைய்தோ தீவின் அழகான துறைமுக நகரமான ஒட்டாரோவில். பள்ளிப்படிப்பை முடித்தபின், டோக்கியோவின் புகழ்பெற்ற வசேதா பல்கலைக்கழகத்தில் ஆசியக் கலை வரலாறும் தத்துவமும் கற்றார். 1941 இல் ஷொச்சிக்கு (Shochiku) வின் ஒபுனே (Ofuna) படப்பிடிப்பு நிலையத்தில் தவியாளர் பணியில் சேர்ந்தார். சேர்ந்து எட்டு மாதங்களில் போர் ஆரம்பித்தது. கட்டாய ராணுவசேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த மஞ்சூரிய போர்முனைக்கு அனுப்பப்பட்டார்.

கட்டாய ராணுவப் பணி, கோபயாஷிக்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது. மன்னரின் பெயரால் ஜப்பானியப்படை நிகழ்த்திய வன்முறைகளையும் கொடூரங்களையும் மிக அருகிலிருந்து பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்; ராணுவத்தின் அதிகார வன்முறைக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம். போரை வெறுத்த கோபயாஷி, பதவி உயர்வை மறுத்து, இறுதிவரை கடைநிலை வீரராகவே பணிபுரிந்தார். 1944 இல் தெற்கிலுள்ள ரையுக்யூ தீவிற்கு மாற்றப்பட்டார். அங்கு ரத்த ஆறு ஓடிய, இறுதிக் கட்டப் போரின் போது அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு, போர்க் கைதியாக ஒரு வருடம் ஒக்கினாவாவில் சிறை வைக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியப்படை பர்மா, மலேசியா, சிங்கப்பூர் வரையான கிழக்காசியப் பகுதிகளை ஆக்கிரமித்து முன்னேறி வந்திருந்தது. போர்க் கைதிகளும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்களும் ஜப்பானிய ராணுவத்தால் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறைகளில் துன்புறுத்தப்பட்டனர். ஜப்பானின் மீதான அமெரிக்காவின் 1945 ஆகஸ்ட் அணு ஆயுதத் தாக்குதல்கள் இவை அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தன. ஹிரோஷிமா, நாகசாகி - இந்தப் பெயர்கள் மனித நாகரீகத்தின் அதிகொடூரமான, துயரமான குறியீடுகள். இத்தாகுதல்களுக்கு முன்பே ஜப்பானின் பல நகரங்கள் நேச நாடுகளின் விமானப்படைகளால் குண்டுமாரி பொழியப்பட்டு நாசமடைந்திருந்தன.

ராணுவப் பணிக்கால அனுபவங்கள் கோபயாஷியை மிகவும் பாதித்திருந்தன. ஜப்பானிய இயக்குனர்களில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டவர், போரின் அவலங்களை அதிகம் அனுபவித்தவர் கோபயாஷி.

போருக்குப் பின் 1946இல், பழம் பெரும் இயகுனரான கீசுகே கினோஷிடாவின் உதவி இயக்குனரானார். 1952இலிருந்து தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். கினோஷிடாவிடம் பணியாற்றிய ஆறாண்டு கால அனுபவம், கோபயாஷியின் ஆரம்பகாலத் திரையாக்கப் பணிக்கு உதவியாக இருந்தது. 1953 இல் வெளியான கோபயாஷியின் மூன்றாவது திரைப்படமான ‘கனத்த சுவருள்ள அறை' (Thick walled room)அவரது தனித்துமான திரைப் படைப்புகளின் ஆரம்பம் எனலாம். இத்திரைப்படம் கோபயாஷி பின்னர் சந்திக்க நேர்ந்த தடங்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஒரு ஆரம்பமாகவும் ஆனது.

‘கனத்த சுவருள்ள அறை' ஜப்பானிய ராணுவக் கைதிகளின் ரகசிய நாட்குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட உண்மைத் தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை. போர்க் காலத்தில், ராணுவ விதிகளை மீறிய கட்டளைகளை நிறைவேற்றியதற்காகத் தண்டனை பெற்ற கீழ்ட் ஜப்பானிய ராணுவ வீரர்களையும், தண்டனை ஏதும் பெறாமல் சொகுசாக வாழ்ந்த, இக் கட்டளைகளுக்குக் காரணமான மேலதிகாரிகளையும் பற்றிய படம். ஜப்பானிலிருந்து அப்போதுதான் வெளியேறியிருந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையின் மேலதிகாரிகள் மனம் புண்படும் என அரசு கருதியதால், இத்திரைப்படத்தின் வெளியீடு தடை செய்யப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பின்னரே இப்படம் வெளியிடப்பட்டது.

கோபயாஷி 1957க்குள் மேலும் நான்கு படங்களை இயக்கினார். 1956 இல் வெளியான ‘ஐ வில் பை யு' ஜப்பானில் பிரபலமான அமெரிக்க விளையாட்டான ‘பேஸ் பால்' விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் நிலவி வந்த ஊழல்கள் பற்றியது.

1957 இல் இவரது ‘கருப்பு நதி' ( Black River) வெளியானது. ‘கருப்பு நதி' போருக்குப் பின் ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த ஒரு தளத்தைச் சுற்றி வாழ்ந்த ஜப்பானிய மக்களைப் பற்றிய கதை. இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் தத்சுயா நகதாய் (Tatsuya Nakadai) நடித்திருந்தார். கோபயாஷியின் பாத்திரப்படைப்புகளுக்குப் பொருத்தமான நடிப்பாற்றல் கொண்ட நகதாய் கோபயாஷியின் படங்களில் தொடர்ந்து நடிக்கலானார்.

போர்க்காலத்திலும் அதன் பின் அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும் முடங்கிக் கிடந்த ஜப்பானிய சினிமா, பின்னர் புத்துணர்ச்சி பெற்றது. போருக்குப் பின் வெளிவந்த பல திரைப்படங்கள், ஜப்பானின் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மீதான விமரிசனங்களைக் கொண்டிருந்தன. இவற்றில் கோபயாஷி அளவு தீவிரமாக ஜப்பானிய சமுதாயத்தின் மீதான விமரிசனங்களை முன்வைத்த இயக்குனர் எவரும் இல்லை. ஜப்பானில் அமெரிக்க, ஆக்கிரமிப்புத் தளங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை கோபயாஷி மட்டுமே திரைப்படமாகப் பதிவு செய்துள்ளார்.

‘கருப்பு நதி'யின் முதல் சில நிமிடங்களில் அமெரிக்கத் தளத்தைச் சுற்றி ஜப்பானியர் வாழும் பகுதி நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. அமெரிக்க விமானமொன்று சுற்றுப்புறம் அதிரும் ஓசையுடன் வானில் போய்க்கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தளத்திலிருந்து லாரிகளும், சைரன் ஒலியுடன் ஜீப்களும் வேகமாக, மண் சாலையில் தூசு பறக்கப் போய்க் கொண்டிருக்கின்றன. ஜப்பானியப் பெண்களுடன் அங்கங்கே உல்லாசமாக பேசிக்கொண்டிருக்கும் அமெரிக்க சிப்பாய்கள். சுற்றி அமெரிக்கப் பெயர்களைக் கொண்ட மதுக்கூடங்களும் கேளிக்கை விடுதிகளும். ஒருபக்கம் அங்கிருக்கும் பாலியல் தொழிலாளர்களும் அவர்களின் தரகர்களும். மற்றொரு பக்கம் குடித்துக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் இருக்கும் கருப்புச் சந்தை, கடத்தல் அடியாட்களின் கூட்டம்.
இங்கு மாட்டுக் கொட்டடி போன்ற தடுப்புகள் கொண்ட குடியிருப்பு ஒன்றின் சிறு அறையில் கல்லூரி மாணவனான நஷிதா தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறான். அருகிலுள்ள உணவு விடுதியில் பணி புரியும் ஷிசுக்கோவை சந்திக்கிறான். அவனிடம் புத்தகங்களை இரவல் வாங்க அவனது அறைக்கு வருவதாக ஷிசுக்கோ சொல்லுகிறாள்.

நஷிதாவின் அறைக்கு புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள ஷிசுக்கோ செல்லும் வழியில், அடியாள் தலைவன் ஜோவின் கும்பலால் கடத்தப்படுகிறாள். பலவவந்தப்படுத்தி மயக்கமடையவைத்து ஜோ அவளை அடைகிறான். அதன் பின் படிப்படியாக ஜோவின் அச்சுறுத்தல்களால், அவனது அடிமையாக ஷிசுக்கோ மாறுகிறாள். ஜோவின் தலையீட்டால், அவளை நஷிதா சந்திக்க முடியாமல் போகிறது. ஷிசுக்கோ தன்னை ஜோவிடம் இழந்து கொண்டிருந்த போதும், அவள் மனம் நிஷிதாவை நாடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
‘கருப்பு நதி'யில், ஜோவாக நகதாய் நடிக்கிறார். வெள்ளை சூட்டும் கருப்புக் கண்ணாடியுமாக அமெரிக்க அடியாளை நினவுறுத்தும் தோற்றம். நஷிதா பாத்திரத்தில் ஐம்பதுகளில் அங்கு பிரபலமாயிருந்த புமியோ வாதானாபே. கதாநாயகியாக இனெக்கோ அரிமா.

ஜப்பானிய மாஃபியாவான ‘யசூக்கா' (Yazuka) வைச் சேர்ந்த குரோக்கி, ஜோவின் உதவியுடன் அங்கு நஷிதாவின் குடியிருப்பில் தங்கியிருப்பவர்களை காலிசெய்ய வைத்து, குடியிருப்பை இடித்துவிட்டு அமெரிக்கத் துருப்புகளுக்கான கேளிக்கை விடுதி ஒன்று கட்டுவதற்கான திட்டத்துடன் அக்குடியிருப்பின் சொந்தக்காரியை அணுகுகிறான்.
ஜோவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு நிஷிதா அழைக்கப்படுகிறான். நிஷிதாவும் ஷிசுக்கோவும் ஜோவுக்குத் தெரியாமல் ஒருமுறை சந்திக்கும் போது ஜோவின் பிறந்த நாள் விழாவை நிஷிதா தவிர்க்குமாறு அவள் வேண்டுகிறாள். தன்னை முற்றிலும் ஆக்கிரமித்துள்ள ஜோவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, அவனைத் தான் அன்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறாள்.

அவளது எச்சரிக்கையை மீறி, ஜோவின் பிறந்த நாள் விருந்துக்கு நிஷிதா வருகிறான். அன்று நிஷிதா வாழும் குடியிருப்பு தகர்க்கப்படும் நாள். ஷிசுக்கோ, ஜோ, நிஷிதா, ஜோவின் பழைய காதலி அனைவரும் மது அருந்த ஆரம்பிக்கிறார்கள். ஜோவுக்கும் நிஷிதாவுக்கும் பேச்சு முற்றுகிறது. நால்வரும் போதையில் சாலையில் நடக்கத் தொடங்குகிறார்கள். சாலையில் அமெரிக்க லாரிகள் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன.

தள்ளாடிக்கொண்டே சாலையின் நடுவில் ஷிசுக்கோவை இழுத்துக்கொண்டு போகும் ஜோ, வேகமாக வரும் ஒரு பெரிய லாரியின் முன் நிலை தவறி விழ, அதன் சக்கரங்களில் சிக்கி அங்கேயே அவன் உயிர் பிரிகிறது. வேகமாக வந்துகொண்டிருந்த லாரியின் முன் ஜோவை சற்றும் எதிர்பாராத நேரத்தில் தள்ளி, தன் சபதத்தை ஷிசுக்கோ நிறைவேற்றிக் கொள்ளுவதை, அந்த சில நொடிகளில் காமெரா நமக்குக் காண்பிக்கிறது. ஜோவின் பழைய காதலி ஓடிவந்து அவன் உடலின் மீது விழுந்து கதறி அழுகிறாள். ஷிசுக்கோ சாலையின் எதிர்ப்புறம் ஒடிக்கொண்டிருக்க, தூரத்தில் வந்துகொண்டிருந்த நிஷிதா அப்படியே அதிர்ந்து நிற்க படம் முடிவடைகிறது .
‘கருப்பு நதி' அமெரிக்க ஆக்கிரமிப்பைச் சாதகமாக்கி பணம் ஈட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அப்பகுதியில் வாழ்ந்த, தன்னலமும் பண வெறியும் கொண்ட ஜப்பானிய மக்களைப் பற்றியது. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் அமெரிக்கர்கள் காட்டப்படுகின்றனர். மிக மோசமான அந்தக் குடியிருப்பில் வாழ்ந்த கடைநிலை மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை அருகிலிருந்து காண்கிறோம். தாங்கள் எதிர்கொள்ளும் அவலமிக்க வாழ்க்கையை மாற்றவோ, விட்டு விலகிச் செல்லவோ வாய்ப்பற்ற ஒரு சமூகத்தைக் காண்கிறோம்.

கோபயாஷியின் படங்கள் அவரது சமகால ஜப்பானிய இயக்குநர்களின் படைப்புகளிலிருந்து மாறுபட்டவை. இவரது திரைப்படங்களில், தங்களைப் பணயம் வைத்து அநீதியையும் அதிகாரத்தையும், எதிர்க்கும் பாத்திரங்கள் அடக்கப்படுகின்றனர்; தூக்கி எறியப்படுகின்றனர். நியாயத்துக்காகப் போராடும் இவர்கள், நியாயங்கள் எதுவுமற்ற இந்தச் சமுதாயத்தில் கரைந்து போகிறார்கள். கோபயாஷியின் திரைப்படங்கள் கனத்த, இருண்ட முடிவுகளைக் கொண்டவை. பாத்திரங்களின் ஆற்றாமையும், கையறுநிலையும் பார்ப்பவரின் மனதில் தாம் வாழும் சமுதாயத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றன.

கருப்பு நதிக்குப் பிறகு 1959 இலிருந்து 1961 வரை, மூன்று வருடங்களில், ‘ஹ்யூமன் கண்டிஷன்' தொகுப்பின் மூன்று படங்கள் வெளிவந்தன. இவை கோபயாஷியின் படைப்பாற்றலின் உச்சங்கள். தொடர்ந்து வெளிவந்த கோபயாஷியின் படைப்புகளில் ஹரகிரி, சாமுராய் கலகம், கய்தான் போன்றவை உலக கவனம் பெற்ற முக்கிய திரைப்படங்கள்.

1962 இல் கோபயாஷியின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘ஹரகிரி' வெளிவந்தது. உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின்னர் மறக்கப்பட்ட இத்திரைப்படம், இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மிக முக்கியத் திரைப்படங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இதன் திரைக்கதை, வசனத்தை எழுதியவர் ஷினொபு ஹஷிமோத்தோ. குரோசாவாவின் ரஷொமோனுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்.

ஹ்யுமன் கண்டிஷன் ராணுவத்தின் கொடுமைகளை அடக்குமுறைகளை விமரிசித்தது. ஹரகிரி நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்விரண்டு வகை அதிகாரங்களும் மனித வாழ்வின் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் நாசப்படுத்துவதை கோபயாஷியின் இத்திரைப்படங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஹரகிரியின் கதை இது:
1630 ஆம் வருடம் . மே 13. இடோவிலுள்ள இயி வம்ச மாளிகைக்கு நடுவயது கடந்த, அனுபவமிக்க சாமுராய் ஒருவர் வருகிறார். பெயர் ஹன்ஷிரோ சுகுமோ. ஹிரோஷிமா நகரிலிருந்த ஒரு பிரபுவின் சாமுராய் காப்பாளர் குழுவின் முக்கியப் பணியிலிருந்தவர். இவரது தலைவரின் ஆட்சி முடிவுக்குள்ளாக, சுகுமோ இடோவுக்கு வந்து வாழ்கிறார்.
வீரமிக்க சாமுராய் போராளிகளின் குலத்தில் வந்த சுகுமோ ஆசாரம் மிக்க நன்நெறிகளைக் கடைப்பிடிப்பவர். சிறப்பான வாட் பயிற்சி பெற்றவர். ஜப்பானில் அக்காலகட்டத்தில் நிலவி வந்த உள்நாட்டுப் போர்கள் ஓய்ந்து, பல ‘தாமியோ' பிரபுக்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததால் அவர்களின் கீழிருந்த சாமுராய் குழுக்கள் கலைக்கப்பட்டன. எங்கும் அமைதி நிலவியதால், போராளிகளான இந்த சாமுராய் வீரர்கள் வேறு பணிகளில் தங்களை இணைத்துக்கொள்ள முடியாமல் வறுமையில் உழன்று கொண்டிருந்தனர்.

இயி குல மாளிகைக்கு வந்த சுகுமோ, மாளிகைக் காப்பாளரிடம் தான் அங்கு ஹரகிரி செய்துகொள்ள அனுமதி கோருகிறார். உணவுக்கு வழியின்றி, தாங்க முடியாத வறுமையில் வாழ்வதை விட, ஹரகிரி மூலம் தன்னை மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார்.
ஜப்பானில் ‘ஹரகிரி', உயிரை மாய்த்துக்கொள்ளுவதற்கான புனிதமான முறையாகக் கருதப்பட்டது. ஹரகிரி என்பதை விட ‘செப்புகு' என்பது ஜப்பானிய மொழியில் இதற்குப் பொருத்தமான பெயராகச் சொல்லப்படுகிறது. ‘ஹரகிரி' திரைப்படம் ஜப்பானில் ‘செப்புகு' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. ஹர என்றால் ஜப்பானிய மொழியில் வயிறு. கிரி என்றால் இரண்டாக்குவது. ஹரகிரி மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்கவேண்டிய கடுமையான விதிமுறைகள் உண்டு. தன்னை மாய்த்துக்கொள்ளுவதை, ஜப்பானிய தேநீர் வைபவத்தில் (Tea Ceremony) கடைப்பிடிப்பது போல் ஒவ்வொரு காரியமாக, நிதானமாகச் செய்து முடிக்க வேண்டும். அவசரம் கூடாது. அடிவயிற்றை இதற்கான சிறு வாளைக் கொண்டு இடமிருந்து வலமாக ஆழமாகக் கிழித்துக்கொள்ள வேண்டும். பின்னர் சரியான நேரத்தில் இதற்கு உதவுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் வாளால் தலையை வெட்டி இறப்பைத் துரிதப்படுத்துவது வழக்கம். சிலர் இந்த உதவியின்றி, அப்படியே உட்கார்ந்த நிலையில், உதிரம் போய்க்கொண்டிருக்க, சாவை மெதுவாக அடைவதும் உண்டு. ஹரகிரியை மேற்கொள்ளுவது மிகவும் மனஉறுதி வாய்ந்தவர்களால் மட்டுமே முடியும். மன்னர் அல்லது தங்கள் தலைவரின் இறப்பு, போரில் தோல்வி, சமூகத்திலோ குடும்பத்திலோ ஏற்படும் மான அவமான நிகழ்வுகள் போன்றவை ஹரகிரியைத் தேர்ந்தெடுத்து வாழ்வை முடித்துக்கொள்ளுவதற்கான காரணங்களில் சில.சுகுமோ பணத்திற்காக வந்திருக்கலாம் எனக் கருதும் அங்கிருக்கும் மூத்த தலைவரான ஒமோகாதா, அவரைத் திருப்பி அனுப்ப முயலுகிறார். ஹரகிரி செய்வதாகச் சொன்னால், இரக்கப்பட்டு பணம் கொடுத்து அனுப்பிவிடுவார்கள் என அங்கு வந்த மோத்தோமே என்ற சாமுராய் எப்படி கட்டாயமாக ஹரகிரி செய்யவேண்டியதாயிற்று என சுகுமோவிற்கு விவரித்துச் சொல்லுகிறார். சாமுராயின் வாள் மிகுந்த மரியாதைக்குரியது. அந்த சாமுராயின் இரு வாள்களின் மடல்களும் மூங்கிலினாலானவை எனக் கண்டறிந்தபோது, தண்டனையாக அந்த மூங்கில் வாள்களைக் கொண்டே அச் சாமுராயை ஹரகிரி நிறவேற்ற வைத்த கதையைச் சொல்கிறார். மூங்கில் வாளால் குரூரமாக நிறைவேற்றப்பட்ட மொத்தோமேயின் ஹரகிரியை நாம் பார்க்கிறோம்.

ஹரகிரியின் மூலம் தன் உயிரைப் போக்குவதற்கே அங்கு தான் வந்திருப்பதாக சுகுமோ கூறுவதால், ஹரகிரிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இயி மாளிகையிலுள்ள அனைத்து சாமுராய் காப்பாளர்களும் இந்த ஹரகிரியைக் காண, தலைவர் ஒமோகாதாவுடன் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். சுகுமோ தான் தேர்ந்தெடுப்பவரை தனக்கு உதவியாளராகக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறார். சுகுமோ கேட்ட சாமுராய் வீரர் அன்று உடல்நலம் சரியில்லையெனப் பணிக்கு வரவில்லை. இப்படியே சுகுமோ கேட்கும் மூன்று சாமுராய் வீரர்களும் அன்று அங்கு இல்லை. இந்த மூவரில் யாராவது ஒருவரை அழைத்துவர ஆளனுப்பப் படுகிறது. காத்திருக்கும் இந்த நேரத்தில் தலைவரின் அனுமதியுடன் தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார் சுகுமோ.வேலையிழந்து, மனைவியையும் இழந்த சுகுமோ தன் மகளுடன் ஹிரோஷிமாவிலிருந்து இடோவுக்கு வந்து குடியேறுகிறார். இந்நேரத்தில் இவரது நெருங்கிய சாமுராய் நண்பர் தனது உயிரை ஹரகிரி மூலம் மாய்த்துக் கொள்ளுகிறார். அவரது மகன் மோத்தோமேயை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை சுகுமோ ஏற்க வேண்டியதாகிறது.

சுகுமோவின் வறுமையைப் பயன்படுத்தி, அருகிலிருக்கும் ஒரு பிரபுவிடமிருந்து அவரது அந்தப்புரத்தில் வாழ சுகுமோவின் மகளைக் கேட்டு ஆளனுப்பப் படுகிறது. சுகுமோ காலம் தாமதியாமல் மோத்தோமேக்கு, தன் மகளைத் திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை பிறக்க வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருநாள் சுகுமோவின் மகள் காசநோயால் பீடிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அடுத்தாற்போல குழந்தை கிங்கோ நோய்வாய்ப்படுகிறான். மருத்துவரிடம் போகப் பணமில்லை. தனக்குத் தெரிந்த ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி வருவதாகப் போன மோத்தோமே திரும்பி வரவேயில்லை. மோத்தோமே, இயி மாளிகையில் மூங்கில் வாளைக் கொண்டு ஹரகிரி செய்த சாமுராய் என்பதை அறிகிறோம்.வறுமையில் உழன்றுகொண்டிருந்த சில சாமுராய்கள் ஹரகிரி செய்துகொள்ளுவதாக அனுமதி கேட்டபோது, இரக்கமுள்ள பிரபுக்கள், அதைத் தவிர்க்க பணம் கொடுத்து அனுப்பினர், அல்லது தங்களிடம் பணியில் அமர்த்திக்கொண்டனர். தனக்கும் இவ்வகையில், உதவி கிடைக்கலாம் என்றே இயி மாளிளைகையில் மோத்தோமே ஹரகிரி செய்துகொள்ள அனுமதி வேண்டுகிறான். ஆனால் இங்கு அவன் உயிரிழக்க வேண்டியதாகிறது. தனது நிஜ வாள்களை எற்கனவே குடும்பத்தின் மருத்துவச் செலவுக்காக விற்றிருந்தான். மோத்தோமேயின் இறப்பிற்குப் பிறகு, நோய்வாய்பட்டிருந்த சுகுமோவின் பேரன் கிங்கோவும், தொடர்ந்து அவர் மகளும் இறந்துவிடுகிறார்கள்.

சுகுமோ தன் மருமகனின் இறப்பிற்குப் பழிவாங்க வந்திருப்பது தெரிகிறது. சுகுமோவின் கதை சொல்லும் படலம் இடையில் ஒருமுறை தடைப்படுகிறது. சுகுமோ உதவிக்குக் கேட்ட மூன்று பேரும் மூங்கில் வாளைக்கொண்டு மோத்தோமே ஹரகிரி செய்ய வற்புறுத்தியவர்கள். கதை சொல்லி முடிக்கும் சுகுமோ, மூவரின் உச்சிக் குடுமிகளை அனைவரின் முன் வீசி எறிகிறார். இங்கு வருவதற்கு முன் மோத்தோமேயை அவமானப் படுத்திய அந்த மூவரையும் தனித்தனியாக வாட் சமரில் சந்தித்து, அவர்களைக் கொல்லாமல், தலைக் குடுமியை மட்டும் அறுத்துக் கொண்டு வந்திருந்தார். குடுமியை இழப்பது மிக அவமானகரமாக சாமுராய்களால் கருதப்படும்.

அர்த்தமற்ற, காலாவதியாகிப் போன சாமுராய் கட்டுப்பாடுகளின் அதிகாரத்தை சுகுமோ எள்ளி நகையடுகிறார். மிகுந்த அவமானமடைந்த பிரபு சுகுமோவைக் கொல்ல உத்தரவிடுகிறார். உக்கிரமான வாட் போர் நடக்கிறது. சுகுமோ நான்கு பேரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தி, அந்த சாமுராய் குலத்தின் குறியீடாக இயி குலத்தால் வனங்கப்பட்ட குலதெய்வ உருவத்தை இழுத்து எறிந்து சிதைக்கிறார். அந்தக் குலம் என்றும் மறக்கமுடியாத அளவு அவமதிக்கப் படுகிறது. இதன் பின்னர் படுகாயமடைந்த சுகுமோ தனது வாளைத் தன் உடலில் பாய்த்து தன்னைக் கொன்றுகொள்கிறார்.

ஹரகிரியின் முதல் காட்சியில் இயி குலம் வணங்கும் சாமுராய் வீரர்களின் போர்க் கவசத்தினாலான உருவம் காட்டப்படுகிறது. கட்டுப்பாடுகளையும் , கேள்வியற்ற கீழ்ப்படிதலையும் வலியுறுத்தி மனித உணர்வுகளை அறவே புறக்கணித்த விதிமுறைகளைக் கொண்ட, சாமுராய்கள் அடிபணிந்த வெற்று அதிகாரத்தின் படிமமாக இவ்வுருவம் காட்டப்படுகிறது.

ஹரகிரியின் கதை இயி குலவரலாற்றுப் பதிவேட்டின் அன்றைய குறிப்புகளிலிருந்து தொடங்குகிறது. இறுதியில், சூறாவளியாக அந்த இடத்தை நிலைகுலைத்த சுகுமோவுடனான வாட் சமரின் முடிவுக்குப் பின், பதிவேட்டில் அன்றைய நிகழ்வுகள் தலைவர் ஓமோகாதாவின் ஆணைப்படி பதிவு செய்யப்படுகிறது. சுகுமோ தன் விருப்பப்படி ஹரகிரி செய்து மடிந்தததாகவும், சுகுமோவால் கொல்லப்பட்ட நான்கு சாமுராய்களும் இயற்கையாக நோய்வாய்பட்டு மரணம் அடைந்ததாகவும், காயப்பட்டோர் உடல்நலமின்றி விடுப்பில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் நாட்குறிப்பில் பதிவு செய்யப்படுகிறது. சுகுமோவால் குடுமிகள் அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மூன்று சாமுராய் வீரர்களில் ஒருவன் ஹரகிரி செய்துகொள்கிறான். மீதி இருவரும் ஹரகிரி செய்து இறக்குமாறு ஓமோகாதாவால் கட்டளை இடப்படுகிறது. இந்த மூன்று சாவுகளும் இயற்கையான சாவுகள் என நாட்குறிப்பில் பதிவு செய்யவேண்டும் என்பது ஓமோகாதாவின் உத்தரவு. அந்த இடம் ரத்தக்கறைகள் கழுவப்பட்டு, சரிசெய்யப்பட்டு அன்று நடந்தவற்றின் சுவடுகள் அழிக்கப்படுகின்றன. இயி குல மரியாதையும் நற்பெயரும் என்றும் போல் பெருமையுடன் தொடர்கின்றன.

நியாயத்துக்காகவும், விடுதலைக்காகவும் எழும் போராட்டங்களும் உயிர்த் தியாகங்களும், அதிகாரத்தால் சுவடுகள் ஏதுமின்றி முற்றிலுமாக அழிக்கப்படும் அவலம் உலகெங்கும், இன்று ஈழத்திலும் தொடர்வதைக் கண்டுவருகிறோம்.

ஜப்பானில் வீரமிக்க மரியாதைக்குரிய செயலாகக் கருதப்பட்டுவந்த ஹரகிரி முறையின் குரூரத்தையும் அர்த்தமின்மையையும் மிகத் துணிவுடன் இப்படத்தில் எடுத்துக்காட்டுகிறார். பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இயி குல விதிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குவதைக் காட்டுவது மூலம், சமுதாயத்திலும், ஆளும் குழுக்களிலும் குவிக்கப்படுள்ள அதிகாரங்கள் தனிமனித சுதந்திரத்தைப் பல காலங்களாகக் கட்டுப்படுத்திவரும் அவலத்தின் மீதான எதிர்ப்பை உணர்த்துகிறார். ஜப்பானிய சமுதாயத்தின் அடுக்குமுறை அதிகார அமைப்பு (Hierarchy) கோபயாஷியின் படைப்புகளில் கடுமையான விமரிசனங்களுக்கு உள்ளாகிறது.
ஹரகிரி திரைப்படத்தில் இந்த எதிர்ப்புக் குரலின் வீரியத்தை நகதாயின் அற்புதமான நடிப்பிலும் , சுகுமோவாக அவர் கதை சொல்லும் போது பேசப்படும் ஒவ்வொரு வசனத்திலும் உணரலாம். ஹஷிமோத்தோ எழுதிய ஆழமான வசனங்கள், மிக அழகாகவும், சரியாகவும் ஆங்கிலத் துணை வரிகளாக்கப்பட்டுள்ளன. நகதாய் சுகுமோவாக, ஹரகிரி செய்ய அமர்ந்து, அழுத்தமான குரலில் கம்பீரமாகத் தன் கதையைச் சொல்லுகிறார். நகதாய் தவிர வேறு யாராலும் இப்பாத்திரத்தில் இந்த அளவு ஒன்றி நடித்திருக்க முடியாது. மிக யதார்த்தமான நடிப்பு. நகதாய் சிறந்த நடிகர். ஜப்பானிய ‘புது நாடக இயக்க'த்தில் இயங்கியவர். ஹரகிரி கதையை முதலில் கேட்டபோது, இந்தப் பாத்திரத்தில் நடிக்கத் தயங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹரகிரி கருப்பு வெள்ளைத் திரைப்படம். கருப்பு வெள்ளை இப்படத்திற்குத் தேவையான, அழுத்தமான உணர்வை அளிக்கிறது. மிகச் சரியான அளவு ஒளி பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு சட்டகமும் ஓவியம் போல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இயி வம்ச மாளிகைச் சுவர்கள், அறைகள், முற்றம் அனைத்தும் அப்பரம்பரையின் இறுக்கமான, வளையாத விதிமுறைகளைப் பிரதிபலிக்கும் முறையில், சரிமட்ட நேர் கோடுகளாலான அமைப்பைக் கொண்டவையாகக் காட்டப்பட்டுள்ளன. காமெரா அசைவுகளும்,கோணங்களும், மிக்க நய உணர்வுடன் கையாளப்பட்டுள்ளன. காட்டப்படும் ஒவ்வொரு காட்சியிலும் பாத்திரங்கள் அமர்ந்து அல்லது நின்றிருக்கும் இடம் அவர்களது அதிகார நிலையைக் குறிக்கும்படியான, கதைக்கேற்ற, மிகத் தெளிவான காட்சியமைப்பு.
ஒரு சட்டகம் கூட அதிகமாகவோ, குறைவாகவோ இல்லை எனச் சொல்லுமளவு நேர்த்தியான எடிட்டிங்கும், படத்தின் ஆரம்பம் முதல் காட்சிகளோடு ஒன்றி ஒலிக்கும், ஜப்பானிய செவ்வியல் இசையும் குறிப்பிட வேண்டியவை. வழக்கமான சம்பரா, சாமுராய் திரைப்படங்களின் அதிவேக வாட் சண்டைக் காட்சிகள் போல் அல்லாமல் , ஹரகிரியில் வாட் சண்டைகள், மெதுவாக அதேசமயம் ஆக்ரோஷமிகுந்ததாகக் காண்பிக்கப் படுகின்றன. குறிப்பாக இறுதியில் வரும் இரண்டு உச்சிரமான சண்டைகள் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இச் சண்டைக் காட்சி அமைப்புகள் கடந்த பல வருடங்களாக உலக முழுவதும் பல திரைப்படங்களில் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளன.
‘ஹரகிரி' முன்வைக்கும் சமுதாய விமரிசனங்கள் இன்றைய சமுதாயத்துக்கும் பொருத்தமானவை. கோபயாஷியின் நீதிக்கான குரல் அவரது படங்கள் மூலம் என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.திரைப்படக் கலையின் அதிகபட்சமான அனைத்து சாத்தியங்களையும் தாண்டி, தனது தனித்த உலகை உருவாக்கும் அற்புதப் படைப்புகள் கோபயாஷியின் படங்கள். கற்பனையின், மொழி ஆற்றலின் உச்சத்தில் தன் கலையை நிறுத்தும் காவியகர்த்தாவோடு திரைக்கலைஞன் தன் காட்சிச் சட்டகத்தின் குறைத்திறத்தால் போட்டியிட முடியாது என்பது பொது விதி. கோபயாஷி என்ற மகாகலைஞன் தன் படைப்பாற்றலால் அந்த ஊடகத்தையே உயர்தளத்துக்கு நகர்த்துகிறான்.

நன்றி: தமிழினி
http://www.tamizhini.com/

No comments: