Sunday, 21 August 2011

ஆரண்ய காண்டம் - மாமல்லன் கார்த்தி

மாமல்லன் கார்த்தி

தமிழில் ஒரு சிறந்த படத்தை கொடுத்த ஒருவர் அதன் பின் பெரும்பாலும் தொடர்ந்து அந்த தரத்தில் இயங்காமல் போவது ஏன் என்று எனக்கு கேள்வி இருந்ததுண்டு. வெற்றியோ தோல்வியோ தன்னை எப்படியும் நிரூபிக்க வேண்டும் என்று அந்த படத்தில் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி உள்ளார் என்று தோன்றும். அந்த பாய்ச்சலில் அது தன்னையும் மீறி அவரை உயரத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. எதிர்பாராத இந்த வெற்றியே அவரது பின் வரும் முயற்சிகளின் சூத்திரமாக மாறுகிறது. பிறகு நாளடைவில் மெல்ல நீர்த்துவிடுகிறது அல்லது தேக்கம் கண்டு விடுகிறது.இதில் சாமர்த்தியம் உள்ள சிலரே தங்களின் பயணத்தில் சில வியாபார வெற்றிகளின் வழி அவர்களது படைப்பு சார்ந்த போதாமைகளை சமன் செய்வதாக பாவிப்பார்கள்.

இப்படி தொடர்ந்து நீடித்து வரும் சூழ்நிலையில் தான் குமாரராஜாவின் வரவை உற்சாகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த போட்டிகளுக்குள் அவர் இல்லை, தன்னை நிரூபிக்கும் தன்முனைப்பு இல்லை, மாறாக தனது நேசத்திற்குரிய சினிமாவின் வழி, ஒரு சுவாரசியமான சினிமாஅனுபவத்தை கொடுக்க முயன்றுளார். இதுவே மற்றவர்களிடம் இருந்து அவரைவேறுபடுத்திக் காட்டும் முக்கியமான பண்பாக நான் கருதுகிறேன். சினிமாவில் வெவ்வேறு பள்ளிகள் உள்ளன. குமாரராஜா தான் நேசிக்கும் பள்ளியின் அடிப்படை கூறுகளை, அதன் அழகுணர்ச்சிகளை தன்னளவிலான புரிதலோடும், சுய பிரக்ஞையோடும் அவரது முதல் அடியிலேயே பாதி கடந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியை தரக்கூடிய விடயம்.
வணிக சினிமாவின் புரையோடிப்போன சூத்திரங்களுக்கு தன்னை ஒப்புவிக்காமல் தான் விரும்பகிற சினிமாவை சமரசமின்றி படைத்திருப்பது, படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம். தமிழ்சினிமாவின் நடைமுறை இயல்பினை நன்கு அறிந்தவன் என்கிற நிலையில், படம் முடிந்து வெளியேறும் போது எனது ஆச்சர்யம் இன்னும் மிகுந்தது.

படத்தின் டைட்டில் துவங்கும் போதே அவர் பார்வையாளர்களை தயார் படுத்துகிறார். ஒலி அமைப்பு ஏதுமற்ற துவக்கம். முதல் காட்சி- சிங்கப்பெருமாளின் படுக்கை அறையினை நோட்டம் விடுவது போல் அங்கும் இங்கும் கதாபாத்திரங்களோடு கேமரா அலைபாயும் போது, நாம் படத்தின் மனோநிலையுடன் மெல்ல இணைந்து விடுகிறோம்.படத்தின் இழைமம் (Texture) , சூழியல் (atmosphere) , ஒளியமைப்பு ( Lighting ) மூன்றும் அங்கே நிகழும் உறவு சிக்கலை நமக்கு முன்னமே அறிவிக்கிறது, மேலும் படத்தின் ஒட்டுமொத்த இயல்பின் ஓட்டத்தை நுண்மையாக இவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.மறுமலர்ச்சி (Renaissance) கால ஓவிய அழகியலின் பாதிப்பு, குறிப்பாக படத்தின் அகப்புறக் காட்சிகளில் இழைந்திருக்கிறது. இதை விரிவாக கூறுவதற்கு காரணம், இங்கே பலர் காமெராவை வைத்து கொண்டு சர்கஸ் விளையாட்டு காட்டுவார்கள், அது வெற்று பிரமிப்பினையும், அது தொடர்ந்து கொண்டே இருக்கும் போது சலிப்பையும் ஏற்படுத்தும். எந்த முகாந்திரமும் அதற்கு இருக்காது. ஆனால் குமாரராஜா இதனை மிக கவனமாக படம் நெடுகிலும் கையாள்கிறார். அடுத்தது அந்த காட்சியில் வரும் படத்தின் முதல் வசனம்: 'உங்களால முடியலன்னா என்னை ஏன் அடிக்கிறீங்க?' என்று சுப்பு விசும்பியபடி கேட்கிறாள். இந்த வசனத்தின் பின்பு ஒலிக்கும் சிங்கப்பெருமாளின் இயலாமை தான் படத்தின் அடுத்தகட்ட விபரீதங்களுக்கு இட்டுச்செல்லும் துவக்கம். பிணையம் வைக்கப்பட்டுள்ள சுப்பு படத்தின் முதலும் இறுதியுமான வசனங்களை பேசுகிறாள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

அடுத்தது அந்த காட்சியின் ஒலி அமைப்பு. பக்கத்து அறையில் கேட்கும்எண்பதுகளில் வந்த ஒரு பாடல், காட்சி நெடுகும் ஒலிக்கிறது. காட்சியின் தீவிரத்திற்கு முரணான இந்த இசை ஒரு விதமான அபத்த நகைச்சுவை (dark humor) தன்மை கொண்டுள்ளது. அடுத்த காட்சிக்கு கொண்டு செல்ல அந்த இசையே பயன்படுகிறது அல்லது தொடர்புபடுத்தப்படுகிறது என்று சொல்ல வேண்டும்.செவ்வியல் தன்மை இழையோடும் காட்சிப்பதிவும், வெகுஜன பரப்பிலான பாடலும் மற்றும் அது மாதிரி பின்வரும் உரையாடல்களும், இவை யாவும் ஒன்றன் மீது ஒன்று என முரண்பாட்டுக் கோர்வையுடன் பின்னப்படுகிறது. குறிப்பாக சராசரி மனிதர்களின் உணர்ச்சிகளை சொல்லும் இடத்தில் அவர்களின் வாழ்வியலுக்கு முரணான செவ்வியல் இசை ஒலிப்பது, அதே போல் இறுதியில் வரும் வன்முறை காட்சியில் அதன் உணர்வுக்கு எதிரான அழகுணர்ச்சி தரும் வகையில்,அதே செவ்வியல் தன்மை கொண்ட இசை ஒலிப்பது. இவை எல்லாம் பின்நவீனத்துவ கூறுகள் கொண்டவை என்று கருதுகிறேன்.


காட்சியமைப்பு, வசனம், ஒலியமைப்பு, கதாபாத்திரங்களின் பிறழ்வு (Flaw ) இவை அனைத்தும் படத்தின் முதல் காட்சியிலேயே மிக நுட்பமாக நமக்கு வரிக்கப்படுகிறது. இதுவே படம் முழுமைக்குமான அழகியல் கூறுகளாகவும்,கதைப்போக்காகவும் விளங்குகிறது. இங்கே தான் குமாரராஜாவின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். தனது முதல் படத்தில் தனக்கான பாதையை பிரக்ஞை பூர்வமாக, தெளிவுடன் தேர்வு செய்கிறார். மேலும் நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது மொழியினில் புத்திசாலித்தனங்கள் உண்டு, மேதாவித்தனம் இல்லை. சினிமாவை அவர் சினிமாவின் வழி நேசிப்பதில் பாசாங்குகள் இல்லை. தமிழ் சூழலில் இது அரிதான நிகழ்வு என்றே சொல்வேன்.

குமாரராஜாவின் பெரிய பலம் அல்லது அவருக்கு மிக லாவகமாக வருவது உரையாடல் என்பேன். பொதுவாக பாரம்பரிய விவரணைகளில் (conventional narrative) கதைக்கு தேவையான அல்லது கதாபாத்திரங்களின் இயல்பினை தொடரும் வசனங்கள்அதிகம் இடம்பெறும். ஆரண்ய காண்டத்தில் அனேக வசனங்கள் கதைக்கு வெளியே இருப்பதாக நமக்கு தோன்ற வைத்து அவை கதை சூழலுக்குள் பொருந்துவதாக மாறுகின்றன. ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு தன்னிச்சையாக வெளிப்படுவது போல் தோன்றும் வசனம் அதற்கு பின்பான நிகழ்வுகளில் சூட்சமமான் தொடர்பு கொண்டதாக மாறுகிறது. படத்தில் கொடுக்காப்புளி என்கிற சிறுவனின் வசனங்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. அவனுக்கும் அவனது அப்பாவிற்கும் உள்ள உறவு மட்டுமே படத்தினில் அன்பினை பறைசாற்றிடும் இடமாக இருக்கிறது. அவர்களின் வசனங்கள் உணர்வு பூர்வமானவையாக உள்ளன. 'உனக்கு உங்க அப்பாவ ரொம்ப பிடிக்குமா?' என்கிற கேள்விக்கு கொடுகாப்புளியின் பதில்: 'அப்படி இல்ல. ஆனா அவரு எங்க அப்பா'. Gangster வகையறா படங்களில் இது போன்று உறவுப்பிணைப்பை, அதன் இயலாமையை நெகிழ்வோடு சொல்வது என்பது தனித்துவான பண்பாகவே பார்க்கிறேன். இது போன்ற ஒரு படத்திற்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று இங்குள்ள இளம் இயக்குனர்கள் குமாரராஜாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

திரைக்கதையை பொறுத்த வரை அவர்களுடையது பார்வையாளர்களுக்கென்று வடிவமைக்கப்படும் பண்டம்(designed product). அதாவது சூத்திரத்தை (formula)சிதைக்காமல் கையாள்வது (நெஞ்சை நக்க வேண்டிய இடங்களில் அதை செய்துவிடுவது).

குமாரரஜாவின் திரைக்கதை அதற்கு நேர்மாறானது. நாம் விரும்பும் இயல்பு கொண்ட காட்சிகள் இருப்பினும் அவை நம் விருப்பதிற்கேற்றவாறு கட்டமைக்கப்படாது, சினிமா என்பது கதை சொல்லுதலை மீறிய தன்னியல்பு கொண்ட கலை என்றால், அதன் சில தருணங்கள்- மௌனங்களாக, கால இடைவெளிகளாக, உற்பத்தி சினிமா கருதும் தேவையற்ற கவித்துவ சமிக்ஞைகளாக, கிண்டல்களாக-படத்தில் ஆங்காங்கே வந்து போகிறது. இந்த துணிச்சல் நம் சினிமாவின் தற்போதைய தேவை.நாம் இங்கே துணிச்சல் என்கிற பெயரில் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தி போலியான பாவனைகளோடு 'வித்யாசமாக' சுரண்டி விடுவதிலேயே இருப்போம்.

குமாரரஜாவின் துணிச்சல் அவரது படைப்பு சுபாவத்தில் இருந்தும் சினிமாவின் மீதான உண்மையான காதலில் (குறைபாடுகளோடு இருப்பினும்) இருந்தும் எழுவது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாறாக, உணர்ச்சிவசப்பட்டு பாரட்டுவதோ, அதே வேகத்தில் சேற்றைவாரி அடிப்பதோ நம் எதிர்கால சினிமாவிற்கு கேடானது. குமாரராஜா பல வெளிநாட்டு இயக்குனர்களின் பாதிப்பு கொண்டவராக உள்ளார் என்பது படத்தில் வெளிப்படையானது. குறிப்பாக Tarantino (திரைக்கதை, உரையாடல் ), Guy Richie (தொழில்நுட்ப பாணி, உரையாடல்) , Alejandro Gonzalez Inarittu (கதைமாந்தர்களின் உணர்வு இடைவெளிகள், இசை ), Wong Kar Wai (சூழியல் மற்றும் இசை). ஒரு திரை மாணவனாக அவரை பாதித்த படங்களை நன்கு உள் வாங்கி வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது.

உலக சினிமாவின் தாக்கத்தில் இதுவரை வெளியான சமீபத்திய படங்களை எல்லாம் பல மைல்கள் பின்னுக்கு தள்ளிவிடும் அளவுக்கு நல்ல செரிமானத்துடனும் நம் பண்பாடு சூழ்நிலைக்கு தக்கபடியும் ரசனைப்பூர்வமாக படைத்திருப்பது இதன் சிறப்பு. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழியில் இனி அவரது சுயமான தரிசனத்தை (Personal Vision) வழங்குவதில் முயற்சி எடுக்க வேண்டும்

மேலும் குமாரராஜா மிகத் தெளிவாகவே இதை ஒரு திரைமொழி வெளிப்பாடு (Cinematic Expression ) என்கிற அளவில், தான் விரும்பகிற படமாக எடுத்திருக்கிறார். அதாவது, கலை நுட்பம் (Craft) சார்ந்த இயக்கம் அவருடையது. மாறாக, அவரது நோக்கம் கலை சினிமா அல்ல. இதில் உள்ளயதார்த்தம், படத்தினுள் இருக்கும் வாழ்வின் யதார்த்தம் (film reality)அன்றி realist பாரம்பரியத்தில் இல்லை. 'யதார்த்த சினிமாவும்' அல்ல. இதை சொல்ல காரணம், தமிழ் சூழலில் வரும் மொன்னையான புரிதல் கொண்ட சிலவிமர்சனங்கள் தான்.

படத்தின் முக்கிய குறைபாடுகளாக நான் காண்பது. முதலில்: காலம். படத்தின் நிகழ்வுகள் காலை தொடங்கி மாலை முடிந்துவிடுகிறது. அதில் நான்கு கதைச் சரடுகள் பின்னப்பட்டுள்ளன. ஆக, கதையின் காலம் தான் நிகழ் காலம் (real time). இதனை சினிமாவின் காலத்தினுள் (film time) எப்படி செதுக்குவது என்பது தான் சவாலான காரியம். ஏனெனில் படம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் கதை மாந்தர்களை பின்தொடர்கிறது. குமாரராஜா காலத்தை கையாண்ட விதத்தில் சில இடங்களில் சறுக்கி உள்ளார், குறிப்பாக இடைவேளைக்கு பின். பசுபதி தன் மனைவிக்கு ஏற்படப் போகும் சிக்கலில் இருந்து அவளை காப்பாற்ற விரையும் போது, அவன் ஓட்டத்தில் காலநிரனயங்கள் நீண்டும் குறைந்தும் செல்கிறது.

வேகமும் சுவாரசியமும் கூடும் இடமாக இது இருப்பினும், இது ஒரு stylisticதன்மையில் உள்ளதே அன்றி கதாபாத்திர சூழலின் பொருட்டு அது அதன் காலத்தினுள் இருந்து எழவில்லை. இது போன்ற படத்தினில் காலம் மிக முக்கியமான கதாபாத்திரம் போன்றது. காலம் செதுக்கத் தெரிந்த திரைக் கலைஞனே அதனுள் இயங்கும் வாழ்வை நமக்கு ஜீவனோடு கொண்டு சேர்க்க தெரிந்தவன்.குமாரராஜா இதை கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவது, படத்தில் ஆங்காங்கே தேக்கரண்டியில் ஊட்டப்படும் பின் குரல்கள் (voice overs). குறிப்பாக இறுதியில் சப்பை ஏன் அப்படி செய்தான் என்பதற்கு வரும் ஏற்கனவே வந்த 'ஆன்டி' (Aunty) வசனங்கள், இது போன்ற படத்தை பின்னுக்கு தள்ளுகிறது.

மூன்றாவது, அவரது மேற்கத்திய தாக்கங்களை நமது மரபார்ந்த விடயங்களோடும், தற்கால தமிழ் வாழ்வோடும் இயல்பாக ஒன்றிணைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், படத்தின் ஒட்டுமொத்த இயல்புடன் உள்ளார்ந்து கூடி வரவில்லை.இதற்கு அவரது புத்தி கூர்மையே தடையாகிறது என்று நினைக்கிறேன். இது குமாரரஜாவின் முதல் படம் என்கிற அளவில் இந்த குறைபாடுகளை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை. அடுத்த அடுத்த அவரது முயற்சிகளில் மேலும் நன்கு மலர்ந்திடுவார் என்று நம்புகிறேன்.

முழுவதும் ஆண்கள் ஆக்கிரமித்திருக்கும் ஒரு படத்தில் இறுதியில் சுப்புசெய்யும் காரியம், மற்ற படங்களைப் போல் வெறும் சுவாரசியம் அல்ல. வெற்றுத்திருப்பமும் அல்ல. படம் சுப்புவிடம் இருந்தே தொடங்குகிறது, அவளிடம் முடிகிறது. துவக்கத்தில் அவள் சிங்கம்பெருமாளின்(ஆண்களின்) பிடியில் இருக்கிறாள், இறுதியில் அவர்களை சப்பையாக்கிவிட்டு விடுதலை ஆகிறாள். திரைக்கதை அமைப்பில் இந்த தெளிவு இருக்கிறது. முடிவில் அவளது உரையாடலைக் கேட்கும் போது, தமிழ் சினிமா தான் பார்க்கிறோமா? என்று தோன்றியது. இது போன்ற ஒரு முடிவையும் உரையாடலையும் எந்த தயாரிப்பாளரும், கதாநாயகர்களும் இங்கே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதுவும் முதல் படத்தில்!!.

எஸ்.பி.சரணுக்கும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள். படத்திற்கு கிடைத்துவரும் கணிசமான வரவேற்ப்பை வைத்து பார்க்கும் போது 'ஆரண்ய காண்டம்' Cult film (குழு மரபு கொண்ட படம்) என்கிற தகுதியை விரைவில் பெற்றுவிடும் என்ற நம்பிக்கை வலுக்கிறது.

நன்றி : மாமல்லன் கார்த்தி
படப்பெட்டி (திரை இதழ்)


இயக்கம் : தியாகராஜன் குமாரராஜா
வருடம்:2011
ஓடும் நேரம்: 153 நிமிடங்கள்


1 comment:

manjoorraja said...

ஆழமான விமர்சனம். பாராட்டுகள்