Wednesday 5 October 2011

The Forsaken Land (கைவிடப்பட்ட பூமி) திரைப்படத்தை சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் பாரிஸின் திரையரங்கொன்றில் பார்த்தேன். இத்திரைப்படம் என்னைக் கவர்ந்தது. என்னுடைய சில நண்பர்களுக்கும் இதை நிச்சயம் பார்க்கும்படி பரிந்துரை செய்தேன். நான் பரிந்துரைத்தேன் என்பதை விட இப்படத்திற்கு 2005 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) புதிய இயக்குநர்களின் முதலாவது திரைப்படத்திற்கான Camera d’Or, விருது கிடைத்திருந்தது. நண்பர்களுடன் மீண்டும் நானும் இத்திரைப்படத்தைப் பார்க்கச் சென்றோம். படம் முடிந்தவுடன் திரையரங்கிற்கு வெளியே வந்த போது ஒரு நண்பர் மிகுந்த ஆத்திரத்துடன் இது ஒரு போர்னோகிராபி என்று கூறிவிட்டுப் போனார். இன்னொரு நண்பரைச் சந்தித்துப் பேசியபொழுது அமைதியாக இது ஒரு பாதிப் போர்னோகிராபி என்றார். மற்றவர்கள் மௌனம் காத்தார்கள். இத்திரைப்படம் தொடர்பாக இந்த மனோநிலையே பரவலாகக் காணப்பட்டதை உணர்ந்தேன். அத்துடன் இலங்கையில் 3 நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டு நிறுத்தப்பட்ட செய்தியையும் அறிந்தேன். ’மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் கடைசி இதழின் வாசகர் கடிதம் வரை இந்நிலை தொடர்கிறது. இவைகளுக்குப் பின்னர் தான் நான் இதை எழுதுவதற்கு தள்ளப்பட்டேன்.
விமுக்தி ஜெயசுந்தர , அப்பாஸ் கியரஸ்தோமி

இந்தத் திரைப்படம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை முதலில் பார்த்தோமானால்,
1. இது ஒரு போர்னோகிராபி வகையான திரைப்படம்.
2. கதைக்கரு அற்ற திரைப்படம்.
3. மேலைத்தேயப் பார்வையாளர்களுக்கு எமது ரணங்களை வியாபாரப் பொருளாக்குதலை நோக்கமாகக் கொண்ட திரைப்படம்.

உண்மையில் இந்தத் திரைப்படம் போர்னோகிராபி வகையைச்சார்ந்தது எனக் கூறுவது சரிதானா? நேரடியான உடலுறவுக் காட்சிகள் படத்தில இருக்கும் என்றால் அவை எல்லாம் போர்னோகிராபி என்று கூற முடியுமா? அப்படியென்றால உலக சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்கள் என்று கருதப்படுபவர்களில் பலர் போர்னோகிராபி இயக்குநர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அபாயம் ஒன்று இங்கே உள்ளது.
இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ராணுவச் சிப்பாய் ஒருவன் அவசரமாக சைக்கிளில் வந்து, அதை வீசி எறிந்துவிட்டு லதாவுடன் உறவு கொள்வான். இந்தக் காட்சி ஒரு முட்கள் நிறைந்த புதருக்குள், தூரக் காட்சியாக, திரைப்படுத்தப்பட்ட கோணத்திலும் மிகுந்த கவனத்துடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் காட்சிதான் இவர்களைப் போர்னோகிராபி என்றும் It’s very dark and haunting என்றும் கூற வைப்பது.

சேகர் கபூரின் ‘பண்டிற் குவீன்’ திரைப்படத்தில் பிரதான பாத்திரம் வெட்டவெளி வறண்ட நிலத்தில் வைத்து வன் புணர்ச்சி செய்யும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். நான் இந்தக் காட்சியை எனது பதினாறாவது வயதில் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கின்றது. ஆனால் இக்கதாபாத்திரத்தின் உணர்வு நிலையைப் புரிந்து கொள்ளாமல் “அய்யோ! அய்யோ! கலி முற்றிவிட்டது. வன்புணர்ச்சியை திரைப்படத்தில் காட்டுகிறார்கள்.” என்று சொல்லி அதன் அரசியலுக்குள் புகமுடியாதவர்களால்தான் இந்தக் காட்சியை It’s very dark and Haunting என்று கூறமுடியும்.
நம் மத்தியில் உள்ளவர்கள் வேற்று மொழிப்படங்களில் இப்படியான கட்சிகள் வந்தால் அலட்டிக் கொள்வதில்லை. தாம் சார்ந்த கலாச்சாரப் பின்னணி கொண்ட பெண்களின் நிர்வாணத்தை திரையில் காண்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்கள் எதை நம்ப விரும்புகின்றார்கள் என்றால், அவர்கள் வாழும் சமூகத்தில் தம்மைச் சூழவுள்ள பெண்கள் எல்லாரும் அந்தச் சமூகம் யாருடன் உறவு கொள்வதைச் சம்மதிக்குமோ அவர்களுடன் மட்டும் வெட்கத்துடன் விளக்கை அணைத்துவிட்டு போர்வைக்குள் உறவு கொள்ளவேண்டும் என்பதை. யதார்த்தமாக எடுக்கப்பட்ட இவ்வாறான காட்சிகள் இவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிகிறது.

இந்த சினிமா மொழியை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கும், இன்னும் “நவீன ஓவியம் என்ன ஓவியம்? நானும்தான் வரைவேனே, துணிகையையும், துரிகையையும், வண்ணக்கலவைகளையும் தாருங்கள்” என விதண்டாவாதம் பேசுபவர்களுக்கும் நிச்சயம் இந்த சினிமா மொழி புதிரானது தான். சாப்ளின் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு வெறுமே சிரித்துவிட்டுப் போகும் பார்வையாளரின் மனோநிலை போன்றதே.
இத்திரைப்படம் சம்பவங்களூடாக நகரும் மரபான கதைத் தளத்தைக் கொண்டதல்லதான். இப்படத்தில் கையாளப்பட்டிருக்கும் திரைக்கதை உத்தி ஒன்றும் புதிய முயற்சியும் அல்ல. இது போன்ற பல திரைப்படங்களை சர்வதேச சினிமா கண்டுதான் வந்திருக்கிறது. காட்சிகள் மிகப் பூடகமாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நவீன சினிமாவுக்கான அம்சங்களுடன் கூடியது
திரையில் காட்டப்படும் நிலம் எங்கு உள்ளது? இதில் தோன்றும் மனிதர்கள் எல்லாம் எந்தப் பூமிப்பரப்பின் மாதிரிகள்? என்பதே திரைப்படம் வைத்திருக்கும் வினாக்கள். இதற்குப் பதில்தேட எம்மைத் தூண்டுவதே இத்திரைப்படத்தின் நோக்கமாக இருக்க முடியும். வறண்ட பூமி, உள்நாட்டு யுத்தம், இராணுவ வீரனின் காம இச்சை, இராணுவத்தின் அடாவடித்தனம், உயிரற்ற உடல், விரக தாபத்தால் அவதியுறும் ஆண், பாலியல் உறவற்ற நடுத்தர வயதுப் பெண், கணவனால் பாலியல் திருப்திக்கு உள்ளாகாத பெண், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ள சிறுமி, அவளின் எதிர் காலம் என ஒரு நிலத்தின் அரசியல், கலாச்சாரம், பாலியல் பொருளாதாரக் கருதுபொருள்களின் நிலையைப் பிரதிபலிக்கும் நோக்கிலேயே காட்சிகள் நிர்ணயிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.

நம் மத்தியில் ஒரு படைப்பு சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டாலோ அல்லது மேற்குலக மக்களால் பாராட்டப்பட்டாலோ நாம் உடனே இது மேற்குலகத்திற்கான படைப்பு, எமது ரணங்களைப் பெரிது படுத்திக் காட்டி நாம் சார்ந்த சமூகத்தை அவமானப்படுத்துகிறோம் என்று விமரிசனம் கூறிவிடுவோம். உண்மையில் நாம் எமது ரணங்களை மூடிமறைத்து, சீழ்வடிய வைத்தாலும் வைப்போமேயன்றி, அதற்கு மாற்றுகளை எப்போதுமே தேடியதில்லை.

பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த கலாச்சாரம் என்னாவது?
அது வெளியில் தெரிந்தால் எம் கவுரவம் என்னாவது?
நாம் தீக்குளித்தும் நகரத்தை எரித்தும் எம் புனிதத்தன்மையைக் காத்துக்கொள்வோம்.

சினிமா பல தளங்களைக் கடந்து பல சோதனை முயற்சிகளைக் கடந்து பல வெற்றிகளைக் கண்டு நம்முன் பல விம்பங்களை விட்டுச்சென்றிருக்கிறது.

ஆனால் நாம் இன்னும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கத் திரைப்படங்களைத் தேடுகின்றோம். தமிழ்த் திரைப்படங்களில் தொப்புளை tight closeup இல் ஆட்டிக்காட்டும்போது பூரித்துப் போகிறோம். பாடல் காட்சிகளில் உடலுறவுக்கன முத்திரைகள் போல் இடுப்பை இடுப்பை ஆட்டும்போதும், போர்வைக்குள் படுத்துக்கொண்டு ஆளுக்கு மேல் ஆள் புரளும் போதும் நாம் குடும்பத்தோடு இருந்து பார்ப்போம். சிறு பிள்ளைகளை அதைப் போன்று ஆடவைத்து ரசிப்போம்.
இது போன்ற படமெடுப்பவர்கள் இனி 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு என்று கூறாமல் இப்படியான திரைப்படங்களைப் பார்ப்பதற்குரிய வளர்ச்சி அடைந்தவர்கள் மாத்திரம் என்று கூறவேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்.

ஏனென்றால் அரசியல் பொருளாதார கருதுபொருள்கள் குறித்த விசாலமான பார்வையைக் கொண்டிருப்பவர்கள் கூட, கலாச்சாரம், பாலியல் போன்ற கருதுபொருள்களுக்கு வந்து சேருகின்றபோது மிக மோசமான பழமைவாத, பிற்போக்கு அம்சங்களையே வரித்துக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

விமுக்தி ஜெயசுந்தர என்றொரு துரதிர்ஷ்டசாலி சில வருடங்களை புனே பிலிம் இன்ஸ்ரிரியூட்டில் கழித்து உதவி இயக்குநராக பணிபுரிந்து தனது முதல் சினிமாவுக்கே உலகின் சினிமா மேதைகள் அலங்கரித்த மேடையில் விருதைப்பெற்று நின்றதும், அவன் எந்த சமூகத்திற்காக தனது படைப்பைச் செய்தானோ, அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டு, விமரிசகர்களால் அவமானப்படுத்தப்பட்டு, படத்தைப் பார்க்காதீர்கள் என்று ஊடகங்களில் பகிரங்க அறிவித்தல் செய்யப்பட்டு, மிகக் கேவலமாகப் புண்படுத்தப்பட்டு இருக்கிறார்.
நன்றி : உயிர்நிழல் இணைய இதழ் , பிரதீபன்.

பிரதீபன் ரவீந்திரன் – என்வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம், Shadows of Silence குறும் படங்களின் இயக்குநர். ஈழத் தமிழர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.

விமுக்தி ஜெயசுந்தர – புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது இருப்பது பிரான்ஸில்.
இவர் இயக்கிய திரைப்படங்களின் விவரங்களுக்கு:
http://www.imdb.com/name/nm1549797/


The Forsaken Land (2005)
இயக்கம் :விமுக்தி ஜெயசுந்தர
மொழி- சிங்களம். ஓடும் நேரம் :108 நிமிடங்கள்

1 comment:

kumaran said...

மனதினை அள்ளும் அருமையான விமர்சனம்.தந்தமைக்கு மிக்க நன்றி..இப்பொழுதுதான் தங்களது வலைப்பூவை கண்டுக்கொண்டேன்.அதற்கு முதலில் ஒரு மன்னிப்பு..