Tuesday 22 November 2011

தார்க்கோவ்ஸ்கி - பகுதி 1


தார்க்கோவ்ஸ்கி
எஸ்.ஆனந்த்

பகுதி ஒன்று

’மக்களைத் தேடும் கலைஞன் - ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி’ எனும் சிறு நூல் எண்பத்து ஏழில் சென்னை பிலிம் சொசைட்டியால் வெளியிடப்பட்டது. ’மக்களைத் தேடும் கலைஞன்’ எனும் தலைப்பு தார்க்கோவ்ஸ்கி எனும் மகத்தான கலைஞனை மிகச் சரியாக ஒரே வரியில் சொல்லிவிடுகிறது. தார்க்கோவ்ஸ்கி என்றாலே ஏதோ அறிவு ஜீவிகளுக்கான திரைப்படங்களை உருவாக்கியவர் எனும் பொதுவான நினைப்பை நிராகரிக்கும் தலைப்பு.

இன்னல்களையும் தடைகளையும் மீறி திரைப்படத்தை உன்னதக் கலை வடிவமாக எடுத்துச் சென்றவர் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி. ஐஸென்ஸ்டைனைப் போல உலகெங்கும் அறியப்படும் ஒரே ரஷ்ய திரைப்பட மேதை. தனக்கென தனிப்பாணியை உருவாகியவர். இவர் வழியில் இயக்குநர்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருப்பது, இவரது கலை என்றும் வாழும் என்பதற்கு சாட்சியமாகிறது.

முப்பது வருடங்களுக்கு முன் வரை தார்க்கோவ்ஸ்கி என்பது வெளியுலகில் அதிகம் அறியப்படாத பெயர். ரஷ்யாவில் அரசியல் கலாச்சார மாற்றங்களுக்கு வித்திட்ட ‘பிரஸ்த்ரோய்க்கா’விற்குப் பின் ரஷ்ய அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, எண்பதுகளில் முக்கிய ரஷ்ய இயக்குநர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதற்கும் காணக்கிடைத்தன. எண்பத்து ஆறில் வண்ணத் தொலைக்காட்சி அறிமுகமானபோது தூர்தர்ஷன் ஒளிபரப்பிய ‘ஸ்டாக்கர்’ (Stalker) நான் கண்டு பிரமித்த முதல் தார்க்கோவ்ஸ்கி திரைப்படம்.

திரைப்படக் கலையின் வளர்ச்சியில் ரஷ்ய இயக்குநர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. திரைப்பட உருவாக்கத்திற்கான ’மாண்ட்டாஜ்’ கோட்பாட்டை முன்வைத்த செர்கேய் ஐஸென்ஸ்டைன், குலெஷோவ், புதோவ்கின் ஆகிய ஆரம்ப கால ரஷ்ய இயக்குநர்கள் திரைப்படக் கலையின் தூண்களாக மதிக்கப்டுபவர்கள். தெசிகா வெர்ட்டோவ் போன்ற பல அற்புதமன படைப்பாளிகளை அளித்த நாடு ரஷ்யா.

தார்க்கோவ்ஸ்கி 1932 ஆம் வருடம் ஏப்ரல் 4ஆம்தேதி மாஸ்கோவின் அருகிலுள்ள ஜவராச்சியில் பிறந்தார். பிறந்து ஐந்து வருடங்களில் அவர் தந்தை குடும்பதை விட்டுப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வாழச் சென்று விட்டார். தார்க்கோவ்ஸ்கி பள்ளிப்படிப்புடன் ஏழு வருடங்கள் இசை கற்றார். மூன்று வருடங்கள் ஓவியக் கல்வியும் தொடர்ந்த்து. 1951இல் அரபு மொழி கற்பதற்காக மொழியியல் கல்லூரியில் சேர்ந்தவர், கல்விக்காலம் முடியும் முன்பே புவியியல் ஆய்வுக்குழு ஒன்றுடன் 1953 இல் சைபீரியா சென்று ஒருவருடம் அங்கு தங்கினார்.

தந்தையிடம் தார்க்கோவ்ஸ்கி மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். தாயை விட தந்தையிடம் நெருக்கமாக இருந்தார். தந்தை பிரிந்து சென்றதற்கு தாய்தான் காரணம் என்பது அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது. தந்தை ஆர்சனேவ் தார்க்கோவ்ஸ்கி கவிஞர்; மகனுக்கு தன்னுடைய கவிதைகளை படித்துக்காட்டுவார். தாயாரின் முயற்சியால் சிறுவயதிலிருந்து இலக்கியமும், பிற கலைகளும் அறிமுகமாகத் தொடங்கின. ஓவியனாகவோ, கவிஞனாகவோ ஆகவேண்டும் எனும் எண்ணம் மனதில் இருந்தது.

திரைப்பட இயக்கம் கற்பதற்காக 1954 இல் அரசு திரைப்படக் கல்லூரி (VGIK) யில் சேர்ந்தார். அதுவரை நிலவிவந்த ஸ்டாலின் அரசின் அதீத கட்டுப்பாடுகள், அடுத்து வந்த குருச்சாவ் காலத்தில் சற்று தளர்த்தப்பட்டிருந்த நேரம். திரைப்படக் கல்லூரி முற்றிலும் சுதந்திரமான இடமாக இருந்தது. உலகின் அனைத்து முக்கிய இயக்குநர்களின் படைப்புகளையும் அங்கு காண முடிந்தது. தார்க்கோவ்ஸ்கியின் ஆசிரியரான மூத்த. இயக்குநர் மிக்காயெல் ராம், தார்க்கோவ்ஸ்கிக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார்.

தார்க்கோவ்ஸ்கி முன்மாதிரியாக எடுத்துக்கொண்ட இயக்குநர்கள் மிசோகுச்சி, குரொசாவா, பெர்க்மன் , புனுவல் ஆகியோர். அவர் மிகவும் மதித்த இயக்குநர் ராபெர்ட் ப்ரெஸ்ஸொன். பிடித்த ஒரே ரஷ்ய இயக்குநர் தொவ்ஷென்க்கோ (Dovzhenko). உடன் படித்த ஆந்த்ரேய் கான்ச்லோவ்ஸ்கி அவர் நண்பரானார். மற்றொரு நெருங்கிய நண்பர் செர்கேய் பரஜ்னோவ் (பின்னாளில் Shadows of Forgotten Ancestors, Color of Pomegranates போன்ற அற்புதமன படைப்புகளை அளித்தவர்). படிக்கும் போதே 1957 இல் தன்னுடன் படித்த இர்மாவை திருமணம் செய்துகொண்டார். 1962 இல் மகன் அர்செனேய் பிறந்தான்.

திரைப்படக் கல்லூரியில் உடன் படித்த இருவருடன் இணைந்து இயக்கிய The Killers (1956), தார்க்கோவ்ஸ்கியின் முதல் மாணவக் குறும்படம். பத்தொன்பது நிமிடங்கள் ஓடுவது. ஹெமிங்வேயின் சிறுகதை ஒன்றின் தழுவல். தார்க்கோவ்ஸ்கி சிறு வேடத்தில் தோன்றுகிறார். சகமாணவர் ஒருவருடன் இணைந்து இயக்கிய 45 நிமிடங்கள் ஓடும் இரண்டாவது மாணவக் குறும்படம் There Will Be No Leave Today (1959) . போருக்குப் பின் ராணுவக் குழு ஒன்று வெடிக்காத குண்டுகளை அகற்றி ஒரு சிறு நகரைக் காப்பாற்றும் கதை.1961 இல் திரைப்படக் கல்லூரியின் பட்டச் சான்றிதழுக்குக்காக கான்ச்லோவ்ஸ்கியுடன் சேர்ந்து எழுதிய திரைக்கதை கொண்டு அவர் தனியாக இயக்கியது The Steamroller and the Violin. வயலின் கற்கும் சிறுவன் சாஷாவும், அவனை எப்போதும் துன்புறுத்திக்கொண்டிருக்கும் சிறுவர்களிடமிருந்து காக்கும் நண்பனான ரோடு ரோலர் ஓட்டும் செர்கெய்யும் இரு முக்கிய பாத்திரங்கள். சாஷாவின் பார்வையில் சொல்லப்படும் இக் கதையில், தார்க்கோவ்ஸ்கி சிறுவயதில் இசை கற்ற அனுபவம் சாஷா வயலின் கற்கும் கிளைக்கதையாக இணைகிறது. கலைக்கும் தொழிலுக்கும் இடையேயான உறவு பற்றிய உரையாடலை முன்வைக்கும் இப் படைப்பு, சிறந்த மாணவப்படைப்புக்கான அமெரிக்க விருதைப் பெற்றது.

தார்க்கோவ்ஸ்கியின் முதல் முழு நீள திரைப்படம் Ivan’s Childhood இன் படப்பிடிப்பு 1961 இல் மாஸ்பிலிம் (Mosfilm) ஸ்டுடியோவில் துவங்கியது. ரஷ்யாவின் அனைத்து ஸ்டுடியோக்களும், ஓர் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இயங்கின. முதலில் திரைப்படத்தின் களக்கதை – ஸ்கிரிப்ட்- அங்கீகரிக்கப்படவேண்டும். அதற்கு சில நேரங்களில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும். படமெடுக்கும்போது களக்கதையில் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் மீண்டும் அனுமதி பெற வேண்டும். தயாரிப்பின் ஒவ்வொரு கட்டமும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. முடிக்கப்பட்ட திரைப்படம் உயர் அதிகாரிகளால் பார்க்கப்ட்டு, விவாதிக்கப்ட்டு ஆட்சேபனைக்குரியதாக கருதப்படும் காட்சிகள் மாற்றப்பட்டபின் அல்லது அகற்றப்ட்டபின் திரையிட அனுமதி அளிப்படும்.

திரைப்படம் எவ்வாறு இருக்கவேண்டும் என மனதில் உருவாக்கிவைத்திருந்த வழியில் Ivan’s Childhood ஐ தார்க்கோவ்ஸ்கி படமாக்கினார். 12 வயது சிறுவன் இவானின் குழந்தைப்பருவம் உலகப்போரால் சிதைக்கப்படுவதை Ivan’s Childhood விவரிக்கிறது. தாய் ஜெர்மனிய ராணுவ குண்டுக்குப் பலியாகிறாள். இருப்பிடம் தரைமட்டமாக்கப்படுகிறது. இவான் ஜெர்மனியரைப் பழிவாங்கும் உணர்வுடன் ரஷ்ய ராணுவத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறான். சிறுவனாகையால், பெரியவர்கள் புக முடியாத் இடங்களுக்குள், எளிதில் ஊடுருவிச்சென்று தகவல் சேகரிக்க அவனால் முடிகிறது. ஒரு ராணுவ அதிகாரிக்குரிய மரியாதையுடன் நடத்தப்படுகிறான். ஒரு கர்னல் உட்பட நான்கு ராணுவ அதிகாரிகள் அவனை சொந்த மகனைப் போலக் கவனித்துக் கொள்கின்றனர்.இவானை ராணுவ அகதெமிக்கு அனுப்பவேண்டும் என கர்னல் ஆனையிடுகிறார். மறுப்பவனை அவன் விருப்பப்படி மீண்டும் எதிரிகளின் எல்லைக்குள் செல்ல அழைத்துச் செல்கின்றனர். பெர்லினில் ஜெர்மனி சரணடைந்தபின் சோவியத் ராணுவம் வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருப்பதை அடுத்து காண்கிறோம். தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட கோயபல்ஸ் குடும்பத்தின் எரிந்துபோன உடல்களைக் காண்கிறோம். இவானுடனிருந்த ரஷ்ய அதிகாரி கால்த்செவ், ஜெர்மனிய ஆவணக் காப்பகத்தில் ரஷ்ய கைதிகளின் கோப்புகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது இவானின் புகைப்படம் உள்ள கோப்பை கண்டெடுக்கிறான். இவான் தூக்கிலடப்பட்டதை அறிகிறோம்.

தார்க்கோவ்ஸ்கி சக்திமிக்க காட்சிப்படிமங்களைக் கொண்டு கதையைக் கொண்டு செல்கிறார் படம் கனவில் துவங்கி கனவில் முடிகிறது; நான்கு கனவுகள். கனவுலகு நிழல்களின்றி நிர்மலமாக, ஒளிமிகுந்து இருக்க, நிஜ உலகு அழுக்கும் சகதியும் குண்டுவீச்சால் தரைமட்டமான, சாவும் நாசமும் நிறைந்த நிலப்பரப்பாக விரிந்திருக்கிறது. முதல் இரண்டு கனவுகள் இவானின் தாய் கொல்லப்படுவதை பிரதிபலிப்பதாக முடிகின்றன. கனவில் சிறுவனுக்கே உரித்தான சிரிப்புடனும் உற்சாகத்துடனும் இருக்கும் இவான், நிஜ உலகில் இருக்கமான முகத்துடன் வெறுமையான விழிகளுடன் எதிரிகளை பழிவாங்குவதை எப்பொதும் மனதில் கொண்டவனாக காணப்படுகிறான்.
தர்க்கோவ்ஸ்கியின் படைப்புகளில் கனவுகளுக்கும் நனவுலக நிகழ்வுகளுக்கும் இடைவெளிகள் இல்லை. இந்த இடைவெளியை பகுத்துணர்வதற்கு பார்வையாளரின் பங்கேற்பு அவசியம். கனவுப்பகுதிகள் அவரும் கான்ச்லோவ்ஸ்கியும் பின்னர் எழுதிச் சேர்த்தவை. களக்கதையில் நான்கு கனவுப்பகுதிகள் இணைக்கப்பட, போரின் யதார்த்தை விட, பாதிக்கப்பட்ட சிறுவன் இவானின் மன நிலையை ஆழமாக உணர்த்தும் கவிதையாக Ivan’s Childhood உருவானது. அற்புதமான காட்சிகளும் ஒளிப்பதிவும் கொண்ட இப்படத்தை தார்க்கோவ்ஸ்கி எட்டு மாதங்களில் எடுத்து முடித்தார்.

மூலக்கதைப்படி படத்தில் போரை காட்டாதையும், கனவுக் காட்சிகளையும், பிர்ச் மரக் காட்டில் தாதி மாஷாவுக்கும் அதிகாரி கோலினுக்கும் இடையே நிகழும் காதல் காட்சிகளையும் கதையின் ஆசிரியருடன் மேற்பார்வைக் குழுவில் இருந்த பலர் ஆட்சேபித்தனர். அனுமதி பெறுவதற்கு பதிமூன்று வெவ்வேறு கூட்டங்களில் இப்படம் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டதாக விதா ஜாண்சனும் கிரஹாம் பெத்ரீயும், தார்க்கோவ்ஸ்கி திரைப்படங்கள் பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிடுகின்றனர்.

திரைப்பட மொழி பற்றி ரஷ்ய திரைப்பட படைப்பாளிகள் நடத்திய கருத்தரங்கில் Ivan’s Childhood வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1962 வெனிஸ் திரைப்பட விழாவில் Ivan’s Childhood தங்க சிங்கம் பரிசு பெற்றபின் தார்க்கோவ்ஸ்கி உலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரானார். இபடத்தைப்பற்றிய இத்தாலிய இடதுசாரிகளின் கடுமையான விமரிசனத்திற்கு பதிலாக ழான் பால் சார்த்தர், தார்க்கோவ்ஸ்கியின் ‘சோசலிச சர்ரியலிஸம்’ குறித்து இத்தாலிய L'Unita பதிரிகைக்கு எழுதிய கட்டுரை இணையத்தில் ஆங்கிலத்தில் படிக்க கிடைக்கிறது . Ivan’s Childhood சோவியத் சினிமாவில் நிகழ்ந்த முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

தார்க்கோவ்ஸ்கி Andrei Rublev, Mirror, இரு திரைப்படங்களையும் தனது மிக முக்கியமான படைப்புகளாக சொல்லுவார். கான்ச்லோவ்ஸ்கியுடன் இணைந்து ’ஆந்த்ரேய் ருப்ளேவ்’ படத்தின் களக்கதையை எழுதி முடிக்க இரண்டு வருடங்கள் ஆகின. 1964 இல் களக்கதை அச்சில் வெளிவந்தது இலக்கிய வெளியீடாகவே கருதப்பட்டது. அக்கால ரஷ்ய மக்களின் வாழ்க்கை அரசியல், கலை, இறையியல் அனைத்தையும் பிரதிபலிக்கும் எட்டு பகுதிகளாலான கதை.ஆந்த்ரேய் ருப்ளேவ் பதிநான்காம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வாழ்ந்த புகழ்பெற்ற உருவ ஓவியர் (icon painter). முன்னுரையாக காட்டப்படும் காட்சியில் மாதாகோவிலை சுற்றி சண்டையும் சப்தமுமாக இருக்க, கோபுரத்திலிருந்து ஒருவன் தோலும் துணிகளும் கொண்டு உருவாக்கப்பட்ட பலூனில் பறக்கத் தொடங்குகிறான். சற்றுநேரம் கழித்து பலூன் வேகமாக இறங்கி தரையில் மோதுகிறது.

பகுதி ஒன்று: ’கோமாளி’ (வருடம் 1400). ட்ரினிடி மடாலயத்திலிருந்து துறவிகள் ஆந்த்ரேய் ருப்ளேவ், தானியெல், கிரில் மூவரும் புனித உருவங்களை வரைவதற்காக மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருக்கின்றனர். மழைக்காக ஒதுங்குமிடத்தில் ஆடியும் பாடியும் அங்கிருப்போரை சிரிக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒருவனை அரச சிப்பாய்கள் பிடித்துச் செல்கின்றனர்.

இரண்டு: ’கிரேக்க ஓவியர் தியொபேன்ஸ்’ (வருடம் 1405). சந்திக்கவரும் கிரிலை தியொபேன்ஸ் தன்னுடன் பணிபுரிய அழைக்கிறார். மடாலயத்திற்கு நேரில் வந்து அழைக்கவேண்டும் என கிரில் சொல்லிடுகிறார். கிரிலை அழைக்க வருவது ருப்ளேவ். மடத்தை விட்டு செல்லப்போவதாக கோபமாக பேசும் கிரில் மடாலய தலைவரால் வெளியேற்றப்படுகிறார்.

மூன்று- Andrei Passion – (1406) - ஆந்த்ரேயின் உணர்வுகள். பனிபடர்ந்த காட்டுப்பகுதி வழியாக ஆந்த்ரேயும் அவர் உதவியாளனும் நடந்து செல்லும் பொது தியொபேன்ஸை சந்திக்க, அவர்களுள் ஆன்மீகம் பற்றிய உரையாடல் நிகழ்கிறது. பனியில் சிலுவை சுமந்து செல்லும் ரஷ்ய கிறிஸ்து சிலுவையில் அறையப்படுகிறார். இன்னல்களை தொடர்ந்து எதிர்கொள்ளும் ரஷ்ய மக்களைப் பற்றி ருப்ளேவ் உருக்கமாக பேசுகிறார்.

நான்கு: ’விருந்து’ 1408. ருப்ளேவ், தானியெல், போமா மூவரும் படகில் விளாடிமீர் சென்றுகொண்டிருக்கும் வழியில், கரையில் தங்குகின்றனர். காடுகளின் மறைவுகளில் இயறகை வழிபாட்டாளர் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியுடன் உறவு கொண்டு இருக்கின்றனர். ஆடையின்றி இயாற்கையாக வரும் ஒரு பெண்ணின் பின் தன்னை மறந்து செல்லும் ருப்ளேவ் பிடித்துவைக்கப்படுகிறார். அந்தப்பெண் அவரை விடுவித்து முத்தமிட்டு அனுப்புகிறாள் துரத்தும் காவலரிடமிருந்து தப்பி அப்பெண் ஆற்றில் நீந்திச் சென்றுகொண்டிருப்பதை படகில் செல்லும் ருப்ளேவும் மற்றவர்களும் காண்கின்றனர்.

ஐந்தாவது: ”இறுதித் தீர்ப்பு’ (The Last Judgment) - 1408. விளாடிமீர் கதீட்ரலில் வேலை துவங்கமுடியாத மனத்தடையுடன் இருக்கும் ருப்ளேவுக்கும் தானியேலுக்கும் இடையே நிகழும் ‘இறுதித் தீர்ப்பு’ ஓவியம் வரைவதுபற்றிய விவாதம். மனநிலை குன்றிய ஊமைப் பென் தோர்ச்கா வந்து சேர்கிறாள். அவளுக்காக ’இறுதித் தீர்ப்ப்பை’ விருந்தாக வரையப் போவதாக ருப்ளேவ் சொல்கிறார். பிரபுவின் ஆலயத்தை சிறப்பாக கட்டி முடித்து ஊருக்கு திரும்பும் கொத்தர்களின் கண்கள் குருடாக்கப்படுகின்றன.

ஆறாவதான ’சூறையாடல்’ (1408) பகுதியில் விளாடிமீர் தேவாலயம் தார்த்தார்களால் சூறையாடப்படுகிறது. அங்கு ஒளிந்திருப்பவர் கொல்லப்படுகின்றனர். தோர்ச்காவை கற்பழிக்க வருபவனை ருப்ளேவ் கோடாரியல் கொன்றுவிடுகிறார்.

அடுத்தது ’அமைதி’ (1412). செய்த கொலைக்குப் பரிகாரமாக பேசா நோனபை மேற்கொள்ளும் ருப்ளேவும், தோர்ச்காவும் மடாலயத்தில் வாழ்கின்ரனர். திடீரென வரும் தார்த்தார்கள் அவளை அழைத்துச் சென்றுவிடுகின்றனர். தாங்கொண்ணா பஞ்சம். மடாலயத்திற்கு வரும் கிரில் தலைவரால் மன்னித்து சேர்த்துக்கொள்ளப்படுகிறார். ருப்ளேவ் மீண்டும் வரையத் தொடங்கவேண்டும் என கிரில் மன்றாடுகிறார்.எட்டாவது பகுதி – ஆலயமணி (1423). உலோக மணியை வார்ப்பதன் ரகசியத்தை மறைந்த தந்தை தனக்கு சொல்லியிருப்பதாக கூறி ஆலய மணி செய்யும் பொறுப்பை போரிஸ்கா ஏற்றுக்கொள்கிறான். மணி உருவாகுவதை ருப்ளேவ் பார்த்துக்கொண்டிருக்கிறார். மிகப் பெரிய ஆலய மணி சிறப்பாக உருவாகிறது. மத குருக்கள் இளவரசர் முன் அதை ஆசீர்வதிக்கின்றனர். தந்தை எந்த ரகசியத்தையும் தன்னிடம் பகிரவில்லை என போரிஸ்கா அழுது புலம்புகிறான். இனி ஆலயங்களில் தான் வரைய, அவன் மணிகள் செய்ய, இருவரும் இணைந்து பணியாற்றலாம் என ருப்ளேவ் அவனைத் தேற்றுகிறார்.

முடிவுரை (வண்ணத்தில்): ருப்ளேவின் ஓவியங்கள் காட்டப்படுகின்றன தொடர்ந்து ஆற்றங்கரையில் மழையில் நின்றுகொண்டிருக்கும் நான்கு குதிரைகள் காண்பிக்கப்படுவதுடன் திரைப்படம் நிறைவு பெறுகிறது.

உன்னதமான பார்வை அனுபவத்திற்குள் அழைத்துச்செல்லும் திரைப்படம். ஒவ்வொரு சட்டகமும் மனதில் ஆழப்பதியுமாறு உருவாக்கப்பட்டுள்ள காவியம். துவக்கத்தில் பலூனில் செல்லும் முயற்சியும், அதற்கு வெளிப்படும் எதிர்ப்பும், கலைப் படைப்புகள், முக்கியமாக ஓவியம், திரைப்படக் கலை இரண்டிலும் தனித்துவமான புதிய முயற்சிகளுக்கு நிலவும் ஆதரவற்ற நிலையையும் எதிர்ப்புகளையும் மீறி உண்மைக் கலைஞன் செயல்படவேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது.

முதல் பகுதியின் இறுதியில் கம்ப்பீரமாக வரும் குதிரை ஒன்று ஆறங்கரையில் தரையில் உருண்டு எழுகிறது. ஆறாவது பகுதியில் தார்த்தார்கள் தேவாலையத்தை சூறையாடிச் சென்றபின் கதவு வழியே ஒரு குதிரை உள்ளே வருகிறது. குதிரைகள் முழு சுதந்திரத்தின் அடையாளமாக அவர் படைப்புகளில் காண்பிக்கப்படுகின்றன. Ivan’s Cildhood இல் குதிரைகள் கடற்கரையில் விழுந்து கிடக்கும் ஆப்பிள்களை தின்று கொண்டிருக்கின்றன. மீண்டும் மீண்டும் தார்க்கோவ்ஸ்கியின் படங்களில் இம்மாதிரியான காட்சிகள் இடம்பெறுவதைக் காணலாம்.

அவர் படைப்புகளில் இயற்கை கொண்டாடப்படுகிறது.. தண்ணீர், தரை, மணல், சேறு, செடிகொடிகள், மரங்கள் பனி, மழை அனைத்தும் பாத்திரஙளுக்குரிய முக்கியத்துவதைப் பெறுகின்றன. தண்ணீர் தேங்கி நிற்பதும், ஓடிக்கொண்டிருப்பதும், தரைப்பகுதிகளும் நம்மை மெய்மறக்கச் செய்யும் வகையில் ஓவியத் தன்மையுடன். உயர் கோணத்திலுருந்து காட்டப்டுவது இவரது குறும்படத்திலிருந்து அனைத்து படைப்புகளிலும் தொடர்கிறது.

முதல் காட்சியில் காமெரா உயர் கோணத்திலிருந்து பலூன் எழும்புவதையும் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதியையும் காண்பிப்பது பிரமிக்கவைக்கும் காட்சி. படமுழுக்க சிறப்பான ஒளிப்பதிவை சொல்வதற்கு பல இடங்கள் உண்டு. ரஷ்ய நிலப்பரப்பும் பனியும் மக்களும் கருப்பு வெள்ளையில் அற்புதமாக பதிவுசெய்யப்ப்ட்டுள்ளன.

காட்சிகளை அர்த்தப்படுத்தி விவரிப்பதை தார்க்கோவ்ஸ்கி கடுமையாக எதிர்த்தார். தனது படைப்பை அவ்வாறு அணுகுவது தவறு; தான் உள் அர்த்தங்கள் இன்றி பிம்பங்கள் வழியே நேராக படைப்பை வெளிப்படுத்துபவன் என்றார். இருந்தும் திரைப்படக் கட்டுப்பாட்டு மையத்தால் இப்படத்தின் பல பகுதிகள் அரசுக்கு எதிரான அர்த்தம் தருபவையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கட்டடம் கட்டிய கொத்தர்களின் கண்கள் குருடாக்கப்படுவது ரஷ்யாவில் படைப்பாளிகள் எதிர் கொண்ட அடக்குமுறை, கைது, சிறை, நாடுகடத்தல் போன்றவற்றைக் குறிப்பதாக பார்க்கப்பட்டது.

உலகின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றான ’ஆந்த்ரேய் ருப்ளேவ்’ திரைப்பட மையத்தின் ஆட்சேபனைகளுடன், சோவியத் நாட்டின் பெருமையைச் சொல்லாத, சோசலிச நாயகனைக் காட்டாத, ஆன்மீகத்தைப் பேசும் திரைப்படம் என அப்போதைய அரசால் திரையிட அனுமதி மறுக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கிடப்பில் போடப்பட்டது. இப்படத்திலிருந்து தார்க்கோவ்ஸ்கியிற்கு பிரச்சினைகள் அதிகரிக்கலாயின.

1969 இல் கான் திரைப்பட விழாக் குழுவின் வற்புறுத்தலினால் ரஷ்ய அரசின் அனுமதியுடன் கானில் திரையிடப்பட்டது. அங்கு அதற்கு பரிசு வழங்கப்பட்டது ரஷ்ய அரசுக்கு தர்மசங்கடமானது. 1971 இல் தணிக்கை செய்யப்பட்ட பிரதி ரஷ்யாவிலும், 1973க்குப் பிறகு அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் திரையிடப்பட்டது. 205 நிமிடங்கள் ஓடும் சரியான முழுப்பதிப்பு தற்போது கிரைட்டீரியன் பதிப்பில் கிடைக்கிறது.

தார்க்கோவ்ஸ்கியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. முதல் மனைவி இர்மா Ivan’s Childhood இல் இவானுடைய தாயாகவும், ஆந்த்ரேய் ருப்ளேவில் மனநிலை குன்றிய தோர்ச்காவாகவும் நடித்திருக்கிறார். 1970 இல் லாரிஸ்ஸாவை மணந்தார். இவரும் தார்க்கோவ்ஸ்கியின் The Mirror இல் நடித்திருக்கிறார். தார்க்கோவ்ஸ்கிக்கு முதல் திருமணம் மூலம் ஒரு மகனும் இரண்டாவது திருமணம் மூலம் ஒரு மகனும் உண்டு.

’ஆந்த்ரேய் ருப்ளேவ்’ திரையிடலுக்கு காத்திருந்த காலத்தில் அடுத்த படமான ‘சோலாரிஸ்’ எடுப்பதற்கு அனுமதி பெற்றிருந்தார். ’சோலாரிஸ்’ ஸ்டானிஸ்லா லெம் எழுதிய அறிவியல் புனைகதை. சோலாரிஸ் விண் தளத்திலிருந்து அவசர செய்தி வருகிறது. மனோதத்துவ நிபுணர் கெல்வின் சோலாரிஸுக்கு அனுப்பப்படுகிறார். அங்கிருந்த மூவரில் யார் இடத்திற்கு மாற்றாக அனுப்பப்பட்டாரோ அவர் இறந்திருக்கிறார். விண்கலம் ஆய்வு செய்யும் சோலாரிஸ் பெருங்கடல் கலத்தினுள் இருப்பவர் மன நிலையைப் பாதிக்கிறது . மனதின் ஆழத்திலிருக்கும் ஆசைகள் உருவங்களாக வெளிப்பபட்டு அவர்களுடன் இருப்பதை கெல்வின் அறிகிறார்.அவருக்கும் அவ்வாறே நிகழ்கிறது. ஏழு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மனைவி ஹரி கெல்வினிடம் வருகிறாள். விண்கலத்தில் அடைத்து விண்வெளிக்கு அனுப்பியபின்பு மீண்டும் வருகிறாள். சோலாரிஸ் பெருஙகடலின் ஊடுருவும் சக்தி, விண்தளத்திலிருந்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஹரி வருவதில்லை. வீட்டிற்கு செல்லும் கெல்வின் தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். அவர்களை நாம் காண்பது சோலாரிஸ் பெருங்கடலின் தீவில் எனபதை காமெரா பின்னே நகரும்போது உணர்கிறோம்.

சோலாரிஸ் திரைப்படத்திற்கு அனுமதி பெற வழக்கம் போல பிரசினைகள். கதையில் அவர் தந்தை தாய் மனைவி தொடர்பான காட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. கதையை சிதைத்துவிட்டதாக ஸ்டானிஸ்லா லெம் கடுமையாக ஆட்சேபித்தார். முப்பத்து ஐந்து இடங்களில் மாற்றங்கள் வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது. ஒருவழியாக 1972இல் ரஷ்யாவில் திரைக்கு வந்த்தது. கான் திரைப்பட விழாவில் 1973 இல் பரிசுபெற்றது.

சோலாரிஸ். அறிவியல் புனை கதையானபோதும் மனிதாபிமான உணர்வுகளை அடிப்படையாக கொண்டு அன்பு, மனச்சாட்சி, மன்னிப்பு ஆகிய தளங்களில் இயங்கும் கதை. மனதைப் பாதிக்கும் சிக்கலான கேள்விகளைக் கொண்ட கதை. கதாநாயகன் கெவினின் தந்தை மகனுக்குச் சொல்வது :
’உங்களை பூமிக்கு வெளியே அனுப்புவது அபாயகரமானது’ .

உலகை கெடுத்து இயற்கையை அழித்துக் கொண்டிருப்பதுபோல் விண்ணைப் பாழ்படுத்துவதற்கு அனுமதிக்கலாகாது என்பது அவர் மகனிடம் அழுத்தமாக சொல்வது.

ஒழுக்க நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இன்றி அறிவியல் பயன்படுத்தப்படுவது, நம்மை சுற்றி இருப்பவற்றை வலுவற்றதாக்குவதுடன் நம்மையும் வலுவற்றவர்களாக ஆக்கிவிடும். அண்டத்தை அறிவதற்கு முன் நமது ஆன்மாவின் ஆழ்வெளியை உணர முயலுவதின் அவசியத்தை தார்கோவ்ஸ்கி வலியுறுத்துகிறார் என ’Andrei Tarkovsky’ நூலில் ஷான் மார்ட்டின் குறிப்பிடுகிறார்.

தார்க்கோவ்ஸ்கியின் கலை, அடுத்து உருவாக்கிய படைப்புகள், புலம் பெயர்வு, அரசியல் அனைத்தையும் அடுத்த பகுதியில காணலாம்.
-------------------------------------------------------------------------
Ivan’s Childhood பற்றி சார்த்தர் Unita பதிரிகைக்கு எழுதிய கட்டுரை:
http://people.ucalgary.ca/~tstronds/nostalghia.com/TheTopics/Sartre.html

தார்க்கோவ்ஸ்கி - பகுதி 2



No comments: