Monday 6 February 2012

அஞ்சலி - தியோ ஏஞ்செலோபவுலோஸ் 1935 -2012



தியோ ஏஞ்செலோபவுலோஸ்
Theo Angelopoulos
(1935–2012)

நாற்பது வருடங்களாக குறிப்பிடத்தக்க திரைப்படங்களை அளித்துவந்த கிரேக்க இயக்குநர் தியோ ஏஞ்செலோபவுலோஸ் ஜனவரி 24, 2012 அன்று ஒரு விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது எழுபத்து ஆறு. இறக்கும்போது தனது அடுத்த திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தர்.

ஏதென்ஸ் நகரில் 1935 இல் பிறந்த தியோ ஏஞ்செலோபவுலோஸ் இரண்டாம் உலகப்போர், நாஜி ஆக்கிரமிப்பு, தொடர்ந்து 1946 இலிருந்து 1949 வரை நிகழ்ந்த கிரேக்க உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர். இந்தப் பாதிப்புகளுடன், கிரீஸின் அரசியல் நிலை, ஐரோப்பிய அரசியல் நிலைப்பாடு ஆகியவை மீதான விமரிசனங்களும் இணைந்து அவர் திரைப்படங்களின் கதைகளாக விரிகின்றன.

பரந்த நிலப்பரப்புகள், நீண்ட பயணங்கள், எல்லைகளைக் கடந்து செல்லும் தேடல்கள் கொண்ட தனித்துவமான படைப்புலகு அவருடையது. புலம் பெயர்தலையும், அதன் அவலங்களையும் வலிகளையும், அவர் அளவு கவித்துவத்துடனும் ஆழத்துடனுன் திரையில் அளித்தவரை நாம் அறியோம். தத்துவார்த்தமான உருவகங்களும், குறியீடுகளும் கொண்டு, மெதுவான வேகத்தில் சொல்லப்படும் கவிதைகளாக மலர்பவை தியோவின் திரைப்படங்கள். மனிதமும், அன்பும், நம்பிக்கையும் இவர் கதை மாந்தர்களை இடர்பாடுகளையும், துயர்களையும், கடந்து செல்லச் செய்கின்றன.

The Travelling Players (1975), Voyage to Cythera (1984), Landscape in the Mist (1988), Ulysses’ Gaze (1995), Eternity and a Day (1998), The Weeping Meadow (2004) ஆகியவை தியோ ஏஞ்செலோபவுலோஸின் படைப்புகளில் முக்கியமானவை.

அற்புதமான ஒரு கிரேக்க கதை சொல்லியை இழந்துவிட்டோம். அவருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலி.

No comments: