Wednesday, 23 November 2011

தார்க்கோவ்ஸ்கி - பகுதி 2


தார்க்கோவ்ஸ்கி

பகுதி இரண்டு

எஸ்.ஆனந்த்
Link

கம்யூனிச நாடு என்பதால் ரஷ்யாவை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பரம எதிரியாக எதிர்கொண்டன. ரஷ்யா என்றாலே ஒருவித அலட்சியம் நிறைந்த பார்வை இருந்தது. அதற்கேற்ப சோவியத் ரஷ்யாவில் ரஷ்ய படைப்பாளிகளின் படைப்புகள் அவ்வப்போது தீவிர தணிக்கைகளுக்கும் தடைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருந்தன. தார்க்கோவ்ஸ்கி ரஷ்யாவில் இயக்கிய திரைப்படங்கள் சரியான முறையில் வெளியுலகிற்கு அறிமுகமாகவில்லை. முதன் முதலாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் திரையிடப்பட்டவை சரியான துணைவரிகள் இன்றி, ரஷ்ய தணிக்கை அதிகாரிகளால் பகுதிகள் வெட்டப்பட்ட முழுமையற்ற பிரதிகளே.

அவர் படைப்புகளில் மனதைப் பறிகொடுப்பவர் ஒருபக்கம்; காலங்காலமாக கண்டு வரும் திரைப்படங்களிலிருந்து வேறுபடும் அவர் படைப்புகள் ’புரிவதில்லை’ என்பவர் ஒருபக்கம். பெர்க்மன், ப்ரெஸ்ஸோன் போன்ற இயக்குநர்களின் படைப்புகளை விட தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்கள் அணுகுவதற்கு சிரமமானவை எனும் அபிப்பிராயம் நிலவத் தொடங்கியது. அமெரிக்க விமரிசகர்கள் சிலருக்கும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் தார்க்கோவ்ஸ்கி என்றாலே ஆகாமற்போயிற்று.

‘திரைப்படத்தை புத்தகம் போல படிப்பது எப்படி’ போன்ற மேற்கத்திய வழிகாட்டி புத்தகங்கள் சொல்பவற்றையும், திரைப்பட உருவாக்கத்திற்கும், ரசனைக்குமாக நிலவிவரும் கோட்பாடுகளையும் விதி முறைகளையும் மட்டுமே வேதவாக்கியங்களாக கொண்டு திரைப்படங்களை அணுகப் பழகிய ஒரு சாராரால், அவ் விதிகளை மீறும் தார்க்கோவ்ஸ்கி போன்ற தனித்துவமான இயக்குநர்களின் படைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாமற் போகிறது. அவர்களின் படைப்புகள், ’இந்த பழம் புளிக்கும்’ என இவர்களால் வெற்று பரிசோதனை முயற்சிகளாக நிராகரிக்கப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலோரால் அங்கீகரிக்கப்படுவது மரபான கதை சொல்லல் மட்டுமே.

கோட்பாடுகளையும், விதிகளையும் கொண்டு கலையின் வளர்ச்சியை கட்டிப்போட்டுவிட முடியாது. உண்மையான படைப்பாளி குறிப்பிட்ட வட்டத்திற்குள் இயங்குபவன் அல்ல; விதிகளையும், எல்லைகளையும் மீறுபவன். புதிய உயரங்களுக்குச் சென்றுகொண்டிருப்பவன். இப்பக்கங்களில் எழுதப்படும் அனைத்து மேதைகளும், நிறுவப்பட்ட விதிகளை மீறியவர்கள்; சமரசத்திற்கு இடம் கொடாதவர்கள். நிராகரிப்புகளையும் அவமதிப்புகளையும் கடந்து திரைப்படக் கலையை முன்கொண்டு சென்றவர்கள். இத்தகைய மகத்தான படைப்பாளிகளின் பங்களிப்பின்றி திரைப்படக் கலையின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்க முடியாது.
தனது திரைப்படங்கள் பிம்பங்களால் நேராக சொல்லப்படும் திறந்த படைப்புகள் என்பதை தார்க்கோவ்ஸ்கி வலியுறுத்தினார். அவர் படங்களில் ஏன் அடிக்கடி மழை பெய்கிறது என்றால், ரஷ்யாவில் அவ்வாறு மழை பெய்வது வழக்கம் என்பார். தனது திரைப்படங்கள் அர்த்தம் கூறப்பட்டு விளக்கப்படுவதை வன்மையாக எதிர்த்தார். எதற்கும் பயனில்லாமல் போனது. ஆளுக்கொரு அர்த்தம் கற்பித்து, அவர் திரைப்படங்களைப் பற்றி பேசவும், எழுதவும், விமரிசிக்கவும் செய்துகொண்டிருந்தனர். தனது திரையாக்க முறைகளையும், அழகியலையும், பிறருக்கு தெளிவாக்கும் அவசியத்தை உணர்ந்த தார்க்கோவ்ஸ்கி, Sculpting In Time நூலை எழுதினார்.

The Mirror திரைப்படம், ஒழுங்கற்ற வரிசையில், நினைவுப் பாதை (stream of consciousness) நடையில், நினைவுகளையும், கனவுகளையும், ஆழ் மன உணர்வுகளையும் கொண்டு சொல்லப்பட்டுள்ள அவர் சுய சரிதம். இரு தலைமுறைகளின் - அவருடையதும், அவர் பெற்றோருடையதுமான- வரலாற்றை சொல்லும் நிகழ்வுகளுடன், ரஷ்ய, ஐரோப்பிய சரித்திர நிகழ்வுகளை இணைத்து கவிதையாக கட்டமைக்கப்பட்டுள்ள திரைக்காவியம்.
அலெக்சியின் தாய் தனியாக வேலியின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் காட்சியிலிருந்து தனித் தனி அத்தியாயங்களாக காட்சிகள் தொடர்கின்றன. வழிகேட்டு வரும் மருத்துவர், ராணுவ பயிற்சியில் தவறிழைக்கும் சிறுவன், முகம் திரையில் தெரியாது மகன் யாரிடம் வளரவேண்டும் என்பதற்காக முன்னாள் மனைவியிடம் பேசும் கணவர் என தொடர்ந்து செல்லும் காட்சிகள். இவற்றில் மூன்று கனவு பகுதிகள்.

ஸ்பானிய உள்நாட்டுப் போர், 1934 ரஷ்ய பலூன் சாதனை, ப்ராஹா(Prague ) நகரை விடுவிக்க வரும் சோவியத் டாங்குகள், ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்பு, சீனாவில் மாவோவின் கலச்சாரப் புரட்சி, தமன்சஸ்கி தீவில் ரஷ்ய, சீன எல்லைப் பிரச்சினை போன்ற சரித்திர நிகழ்வுகளின் கருப்பு வெள்ளை ஆவணப் படப்பகுதிகள் கதைப் பகுதிகளுடன் இணைந்துள்ளன.
தந்தை பிரிந்திருக்க, கலங்கிய மனநிலை கொண்ட தாயின் கவனிப்பில் வளரும் சிறுவன்; தன் முனைப்புடன் வளரும் மகனுடன் தன்னை இணைத்துக்கொள்ள இயலாத நிலையில் தொலைவிலிருக்கும் தந்தை - இருவரின் நினைவுகளையும், கனவுகளையும் கொண்டு, இடையிடையே வாசிக்கப்படும் ஆர்சனேவ் தார்க்கோவ்ஸ்கியின் கவிதை வரிகளுடன் அடுக்குகளாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்பில்லாததாகத் தோன்றும் தனிப் பகுதிகள் ஒரு அற்புதமான கொலாஜ் (Collage) ஓவியத்துக்குரிய அழகுடன் இணைந்து முழுமையான படைப்பாகிறது.

வீட்டின் அருகில் பண்ணைக் கொட்டியில் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்க மரியாவும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டிருப்பது, கனவில் வீட்டைச் சுற்றியிருக்கும் செடிகளும் மரங்களும் நிறைந்த காட்டில் காற்றின் நர்த்தனம், மீண்டும் கனவில் மரியா கூந்தலைக் கழுவி உலர்த்தும் நேரம் கூரை, சுவர்களிலிருந்து பூசப்பட்ட பகுதிகள் உரிந்து விழுவது, கண்ணாடியில் அவள் பிம்பம் மூதாட்டியாக தெரிவது என்று இத்திரைப்படத்தின் அற்புதமான காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

தேர்ந்த ஓவியனின் படைப்பைப் போன்று, தார்க்கோவ்ஸ்கியின் கைவண்ணத்தில் ஒவ்வொரு சட்டகமும், அதன் ஒளி, நிழல், வண்ணம் அனைத்தும் மிகக் கச்சிதமாக பதிவாக்கப்பட்டு உருப்பெற்றுள்ளது. எவ்வாறு பார்வையாளரை இயற்கையை உணரச் செய்கிராரோ அதே அளவில் காட்சிகளை நேரம் எடுத்து மெதுவாக நகரச் செய்வதன் மூலம் பாத்திரங்களை சுற்றியிருக்கும் இடங்களின் தன்மையையும் உணரச்செய்கிறார். தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் சட்டகத்தின் ஒவ்வொரு அங்குலமும் கதை சொல்லலில் பங்கேற்கிறது.துவக்கத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹிப்னாட்டிசத்தால் குணமாக்கப்படும் திக்குவாய் இளைஞன், ‘ என்னால் பேச முடியும்’ என்று சொல்வதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டன. அரசின் கட்டுப்பாடுகளை மீறி படைப்பாளி உணமையை உரத்துச் சொல்ல தயராகிவிட்டான் என்பதாகவும் அர்த்தம் கொள்ளப்பட்டது. மிர்ரர் திரைப்பட உருவாக்கம் 1973 ஜூலையில் துவங்கி ஒன்பது மாதங்களில் முழுமை பெற்றது.

சோவியத் திரைப்பட மையமும், உயர் மட்ட கட்சி, அதிகார வட்டங்களும் இப்படத்தை தெளிவற்றது, மேட்டுக்குடியினருக்கான படம் என ஒதுக்கின. குறைந்த அளவில் மக்கள் பார்ப்பதுடன் இப்படத்தை ஒதுக்கிவிடவேண்டும் என விரும்பினர். கான் திரைப்பட விழா குழுவினர் இரு முறை வேண்டிக்கொண்டும், விழாவில் பங்கு பெற இப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

The Mirror, 1975 இல் ரஷ்யாவில் வெளியானது. உலகப் போரில் பெருமளவு இழப்புகள், குடும்பச் சிதைவுகள், தனிமை அனைத்தையும் அனுபவித்திருந்த ரஷ்ய மக்களுக்கு இப்படத்தின் சாரத்தை அணுகுவது சிரமமானதாக இருக்கவில்லை. பார்வையாளர் இப்படத்தை தங்களின் கதையாகவே கருதி தனக்கு எழுதிய கடிதங்கள் பற்றி தார்க்கோவ்ஸ்கி Sculpting In Time இல் குறிப்பிடுகிறார்.

தர்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்களுக்கு இரண்டாவது தகுதியை மட்டுமே அளித்துவந்த ரஷ்ய திரைப்பட மையம், இப்படத்திற்கு அதனிலும் கீழான மூன்றாவது தகுதியை அளித்ததால் குறைந்த அளவு, 73 பிரதிகள் மட்டும் எடுக்கப்பட்டு மூன்றாம் தர ரஷ்ய திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தொழிலாளர்களும், பொது மக்களும் பெருமளவில் இப்படத்தைக் கண்டனர். காலை முதல் நள்ளிரவு வரை காட்சிகள் தொடர்ந்து பல மாதங்கள் திரையரங்குகளில் காட்டப்பட்டதாக விதா ஜாண்சன், கிரஹாம் பெத்ரீ தங்கள் நுலில் குறிப்பிடுகின்றனர்.
தார்க்கோவ்ஸ்கி, ஐசென்ஸ்டைனின் மாண்ட்டாஜ் கோட்பாட்டை நிராகரிக்கிறார். காலத்தை முக்கியமானதாக முன்வைக்கிறார். காலத்தை பதிவு செய்வது என்பது திரைப்படக்கலை ஒன்றில் மட்டுமே சாத்தியம். இது வேறு எந்த கலைக்கும் இல்லாத சிறப்பு. ஒரு காட்சியை படமாக்கும்போது காமெரா இயங்க துவங்கிய கணத்திலிருந்து, நிறுத்தப்படும் வரை கடந்துசெல்லும் காலமும் காமெராவில் பதிவாகிவிடுகிறது. படைப்பு முழுமையாகும்போது காட்சிகள் வழியாக கடந்து செல்லும் காலம் ஒன்று சேர்கிறது; இணைக்கப்படுகிறது என நேர்காணலில் விவரிக்கிறார்.

காலம், லயம் (rhythm), படத் தொகுப்பு (எடிட்டிங்) பற்றிய தனது தீர்க்கமான கருத்துக்களை Sculpting In Time இல் எடுத்துக் கூறுகிறார். மிர்ரர் அளவில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் வழக்கமாக ஐநூறு முதல் ஆயிரம் ஷாட்களை கொண்டவையாக இருக்கும். ஆனால் மிர்ரர் திரைப்படத்தில் இருநூறு ஷாட்கள் போலவே உள்ளன. ஷாட்களின் குறைவான எண்ணிக்கைக்குக் காரணம் அவற்றின் நீளம். ஷாட்கள் வழியே கடந்து செல்லும் காலம் இணையும் போது லயம் (rhythm) உருவாகிறது. காட்சிகளை வெட்டி சேர்க்கும் போது படம் ஒருங்கிணைவது மட்டுமே நிகழ்கிறது; லயம் (rhythm) உருவாவதில்லை. இசைக்கு ஒலி போல திரைப்படத்திற்கு காலம் அடிப்படையானது – முக்கியமானது.

(A Deleuzian Analysis of Tarkovsky’s Theory of “Time-PressureTextual-Analysis of Tarkovsky’s Mirror” - Shot by shot analysis: http://www.horschamp.qc.ca/new_offscreen/deleuzian_pressure2.html )

குறும்படத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வாதிம் யூசோவ் கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்திலிருந்து விலகிவிட்டார். ஆந்த்ரேய் ரூப்ளேவ் படத்திலிருந்து சோதனைகளை தொடர்ந்து அனுபவித்த தார்க்கோவ்ஸ்கியிற்கு அதிகாரத்திலிருப்போர் மிர்ரரை எதிர்கொண்ட விதமும் கசப்பானதாகவே அமைந்தது. தொடர்ந்து ரஷ்யாவில் திரைப்படங்களை இயக்கமுடியுமா என்ற கேள்வி அவருள் எழுந்தது.

தார்க்கோவ்ஸ்கி ரஷ்யாவில் இறுதியாக இயக்கிய Stalker –ஸ்டாக்கர் - 1979 இல் ரஷ்யாவில் வெளிவந்தது. அவரது இரண்டாவது அறிவுப்புனைவு வகை திரைப்படம். Roadside Picnic என்ற நாவலின் தழுவல். பல வருடங்களுக்கு முன் வானிலிருந்து விழுந்த விண்கல்லால் அழிந்து போன நகரம் இருந்த இடம் இப்போது ’பிரதேசம்’ –Zone– என அழைக்கப்படுகிறது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும், மர்மங்கள் நிறைந்த இடம். பிரதேசத்தினுள் சக்தி வாய்ந்த ஓர் ’அறை’. அங்கு வருபவரின ஆழ்ந்த விருப்பங்கள் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். பிரதேசம் மக்களை திசை திருப்பிவிடும் என அஞ்சும் அரசு, முள் வேலிகள் அமைத்து ராணுவத்தை காவலுக்கு வைத்திருக்கிறது.
ராணுவ காவலையும், ஆபத்துகளையும் தாண்டி, ரகசியமாக ’அறை’க்கு அழைத்து செல்வதற்கு ஸ்டாக்கர் (Stalker) என அழைக்கப்படும் வழிகாட்டிகள் உள்ளனர். ஒர் எழுத்தாளரும், பேராசிரியரும் ’அறை’க்கு செல்ல முடிவு செய்து ஸ்டாக்கரை அணுகுகின்றனர். ஸ்டாக்கர் அனுபவம் மிக்கவன். பிரதேசத்தினுள் அவர்கள் மூவரும் மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு கட்டமும் நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு சென்றுவிடுகிறது.
’அறை’ வாசல் வரை சென்று நின்றுவிடுகின்றனர். ‘அறை’யையும் அதன் சக்தியையும் நம்பாத எழுத்தாளர், பிரதேசத்தை குண்டு வைத்து தகர்க்க நினைக்கும் பேராசிரியர் - இவர்களின் எண்ணங்களை அறியும் ஸ்டாக்கர் மனமுடைந்துவிடுகிறான். நம்பிக்கை அற்ற இவர்களை ’அறை’க்கு அழைத்து சென்றதையும், நம்பிக்கை என்பது அனைவரிடமும் அருகி வருவதையும் மனைவியிடம் சொல்லி வருந்துகிறான். தர்க்கோவ்ஸ்கியின் இறுதி திரைப்படங்கள் - ஸ்டாக்கர், நோஸ்டால்ஜியா, சாக்ரிபைஸ் - மூன்றும், தற்கால உலகில் குறைந்து வரும் நம்பிக்கை, பெருகிவரும் சுய நலம், ஆன்மாவின் சீர்குலைவு ஆகியவற்றை பேசும் முப்படத் தொகுப்பாக அமைந்துள்ளன.

வாழ்கையில் கலக்கமடைந்து வரிசையாக துன்பங்களை அனுபவித்துவரும் பலருக்கு ’அறை’ ஒரு விடிகால். ஸ்டாக்கரும் அவர்களில் ஒருவன். அவனுடைய வாழ்க்கை வளமாக இல்லை. ஊனமுற்று உடல் நிலை குன்றிய மகள். ’அறை’க்கு பலமுறை சென்று வந்தபோதும் தனக்கென எதையும் வேண்டியதில்லை. ஸ்டாக்கராகச் செல்பவர் ’அறை’யிடம் எந்த வேண்டுகோளையும் வைக்கலாகாது என்பது விதி. துன்புற்றோரை ’அறை’க்கு அழைத்து வருவது அவனுக்கு மன நிறைவைத்தரும் செயல். அந்த மன நிறைவுக்காகவே ஸ்டாக்கராக வழ்வைத் தொடருகிறான்.

தார்க்கோவ்ஸ்கி, பிரதேசத்தை உயிருடனிருக்கும் பாத்திரமாக மாற்றிவிடும் அளவு சித்தரிக்கிறார். தண்ணீர், பாசி, நீரினுள் தரையில் கிடக்கும் பொருட்கள், திடிரென மேலிருந்து அருவியாக விழுந்து கொண்டிருக்கும் தண்ணீர், எங்கிருந்தோ ஸ்டாக்கரை தேடி வரும் நாய், பொங்கிக் கொண்டிருக்கும் தரைப்பகுதி, என ஒவ்வொரு காட்சியும் மனதை நிறைத்துவிடுகிறது. இப்படத்தில் பணிபுரிந்தது புதிய ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு முழுமையும் தார்க்கோவ்ஸ்கியால் கையாளப்பட்டது என கிரஹாம் பெத்ரீ எழுதிய நூலில் குறிபிடபட்டுள்ளது.
1986 இல் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்து அதற்கு ஏழு வருடங்களுக்கு முன் உருவான ஸ்டாக்கர் திரரைப்படத்தில் பிரதிபலித்திருப்பதாக சொல்லப்படுவதை ஷான் மார்ட்டின் தன் நூலில் விவரிக்கிறார். செர்னோபிலில் உள்ள லெனின் அணு மின் உற்பத்திநிலைய ஊழியர்கள் வாழ்ந்த பகுதியைச் சுற்றி ஸ்டாக்கரில் வருவது போல ‘பிரதேசம்’ - zone - என்று அழைக்கப்படும் மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட பகுதி உண்டு. செர்னோபில்லில் நான்காவது ரியாக்டர் வெடித்து விபத்து நிகழ்ந்தது போல ஸ்டாக்கரில் நான்காவது பன்க்கரில் அணு ஆயுதம் ஒன்றை கண்டெடுக்கும் பேராசிரியர் அதைக்கொண்டு பிரதேசத்தை அழிக்க முடிவு செய்கிறார். தார்க்கோவ்ஸ்கி பயன்படுத்தியுள்ள விவிலியத்தின் வெளிப்படுத்துதல் ஆகமத்திலுள்ள வேதவசனங்கள், வரப்போகும் ஆபத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளன.

பிரதேசம் ’ஆன்மீக பாழ்நிலம்’ (spiritual wasteland) என உருவகப்படுத்தி சொல்லப்பட்டது. சிலர் அதை சோவியத் கே.ஜி.பி யின் கட்டுப்பாட்டில் இருந்த ரஷ்யா என்றனர். காட்சிகள் பலவாறு அர்த்தப்படுத்தப்பட்டன. ரஷ்ய ராணுவத் தலைவர்கள் இம்மாதிரியான இடம் எங்கிருக்கிறது என கேட்டுக்கொண்டிருந்தனர். படத்தை தடை செய்ய வற்புறுத்தினர். ஆன்மாவின் பயணத்தை விவரிக்கும் படைப்பாகவே ஸ்டாக்கரை முன்வைப்பதாக தாக்கோஸ்கி கூறினார். செர்னோபில் அணு உலை விபத்து , சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி போன்றவற்றை அன்றே வெளிப்படுத்திய தீர்க்கத்தரிசி என இன்று மதிக்கப்டுகிறார். ’ஸ்டாக்கர்” உலகளவில் அவருக்கென என்றும் அதிகரித்துவரும் தனிப்பட்ட ரசிக பின்தொடரலை (Cult following) உருவாக்கிய திரைப்படம்.
’நோஸ்டால்ஜியா’ இத்தாலிய RAI தொலைக்காட்சி நிறுவனத்தின் தயாரிப்பாக உருவானது. பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்ய இசையமைப்பாளர் சோலோன்ஸ்கி இத்தாலியில் வாழ்ந்த காலம் பற்றி அறிந்து எழுத இத்தாலிக்கு வரும் ரஷ்ய கவிஞர் ஆந்த்ரேய் கோர்ச்சகோவின் கதை. கோர்ச்சகோவின் மனம், பிரிந்துவந்த ஊரையும், கருவுற்றிருக்கும் மனைவியையும் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

அழகான மொழிபெயர்ப்பாளர் இயூஜினியா அவரிடம் நெருங்கி வருகிறாள். மனம் தனிமையை அதிகம் நாட உணர்வுகளின் பிடியில் தத்தளிக்கும் கோர்ச்சகோ குடித்துக்கொண்டே வாழ்நாளை முடித்துவிடப்போவதாக சொல்லுகிறார். டொமெனிகொவை சந்திக்கிறார். இயூஜினியா அவரை விட்டுச் சென்றுவிடுகிறாள் இறுதியில், புனித காதரின் ஊற்றில் நீர் வரண்டிருக்கும் நேரம் எரியும் மெழுகுவர்த்தியுடன் கோர்ச்சகோ நடந்து டொமெனிகொவின் வேண்டுகோளை நிறைவேற்றி முடிக்க, அவர் உயிர் பிரிகிறது.
உலகம் முடியப்போகிறது என்று தன் குடும்பத்தை ஏழு வருடங்கள் வீட்டில் பூட்டி வைத்திருந்த டோமெனிகோ (எர்லாண்ட் ஜோசப்சன்) ஒரு தீர்க்கத்தரிசியைப் போல் பேசுகிறார். மனித குலத்தின் சீரழவையும், ஆன்மாவை மீட்டெடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துவதற்காக இறுதியில் தீக்குளித்து இறக்கிறார். தார்க்கோவ்ஸ்கி ஸ்டாக்கரிலிருந்து ஒரு மினிமலிஸ்ட்டாக இயங்குகிறார் - குறைவான இடங்கள், பாத்திரங்கள், நிகழ்வுகள் கொண்டு பிரமிக்கத்தக்க காட்சிகளை உருவாக்குகிறார். ஆன்மாவின் தேடல்களாக அவர் படைப்புகள் அமைந்துள்ளன.

துவக்கத்தில் பியரோ தெல்லா ப்ரான்ஸெஸ்காவின் Madonna of Childbirth மாதாவின் ஓவியத்தின் முன் மகப் பேறு வேண்டுபவர்க்காக தேவாலயத்தில் நடைபெறும் மெய்சிலிர்க்கவைக்கும் மெழுகுவர்த்தி ஆராதனை காண்பிக்கப்படுகிறது. தார்க்கோவ்ஸ்கியின் படைப்புகளில் தொடர்ந்து ஓவியங்கள் பங்கு பெறுகின்றன.

ஓவியம், கவிதை; உலகின் இறுதி நாட்கள் பற்றிய குறிப்புகள்; கதா பாத்திரங்கள் பறப்பது, உயர எழும்புவது; நீர், நெருப்பு, காற்று, பனி, புற்கள், செடி கொடிகள் ,நிலப்பரப்பு என இயற்கையும் அதன் கூறுகளும்; குதிரை, நாய்; கனவுகள்; குடும்பம், குறிப்பாக தாய், மனைவி; அவர் சிறு வயதில் வாழ்ந்த - ’தார்ச்சா’ – வீடு ஆகிய அடிப்படை கூறுகள் ( motifs) அவரின் அனைத்து திரைப்படங்களிலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

படப்பிடிப்பிற்கு மனைவியுடன் இத்தாலி செல்ல ரஷ்ய அரசு அனுமதி வழங்கியது. மகனுக்கு அனுமதி இல்லை. அவர் மேற்கில் தஞ்சம் புகுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். 1983 கான் திரைப்படவிழாவின் உயர்ந்த பரிசான Palme d'Or நோஸ்டால்ஜியாவிற்கு அளிக்கப்படுவதை ரஷ்ய அரச தலையிட்டு நிறுத்தியது. அதை மீறி புதிதாக ஒரு பரிசை உருவாக்கி, கான் விழாக்குழுவினர் தார்க்கோவ்ஸ்கியை கவுரவித்தனர். ரஷ்ய அரசு திரைப்படம் எடுக்க இனி அனுமதி அளிக்காது என உணர்ந்த தார்க்கோவ்ஸ்கி ரஷ்யாவிற்கு திரும்புவதில்லை என மிலானில் 1984 ஜூலை 10 அன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

தாய்நாடா, திரைப்படக்கலையா என தேர்ந்தெடுப்பது அவருக்கு இறுதிவரை முடியாததாகவே இருந்தது. தனது படைப்புகள் தனது வாழ்க்கையின் ஒருபகுதி; திரைப்படங்கள் இல்லாமல் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது என்று எப்போதும் சொல்லுவார். அவர் கலை, வாழ்க்கை அனைத்தும் ரஷ்ய மண்ணுடனும், கலையுடனும், இலக்கியத்துடனும் இரண்டறக் கலந்தவை. வாழ்வின் இறுதிவரை இம் முடிவின் வலியும் கனமும் அவரைத் தொடர்ந்தன.

ஸ்வீடிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட் தயரித்த The Sacrifice தார்க்கோவ்ஸ்கியின் இறுதி படைப்பு. இங்மர் பெர்க்மன் வாழ்ந்த பாரோ தீவில் படமாக்கப்பட்டது. கடற்கரையில் தனிமையாக இருக்கும் அழகான வீட்டில் ஓய்வு பெற்ற நாடக நடிகர் அலெக்ஸாண்டர் (எர்லாண்ட் ஜோசப்சன்), மனைவி, சிறுவயது மகன், வளர்ப்பு மகளுடன் வாழ்கிறார். அவர் பிறந்தநாளன்று நண்பர்கள் இருவருடன் வீட்டில் இருக்கும் நேரம் மூன்றவது உலகப் போர் துவங்கிவிட்டதாக தொலைக்காட்சியில் அறிவிக்கப்படுகிறது. மின்சாரம் தடைபடுகிறது; தொலைபேசி செயலிழக்கிறது; போர் விமானங்களின் இரைச்சல் கேட்கத் துவங்குகிறது.

நிகழத்துவங்கும் அணுஆயுதப் போரில் அனைவரும் உயிழக்கப் போவது உறுதி. மனைவி மனம் கலங்கி அழுது புலம்புகிறாள். தாங்கமுடியாத சோகம் இல்லம் முழுவதும் படருகிறது. அமைதி மீள, தன்னையும் தான் நேசிப்பவற்றையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அலெக்சாண்டர் இறைவனிடம் வேண்டுகிறார். இறுதியில் அவர் வீட்டை தீயிட, வீடு முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது. மனம் கலங்கிய நிலையிலிருக்கும் அவரை ஆம்புலன்சில் அழைத்துச் செல்கின்றனர்.
மனிதத்துவத்த்தின் முக்கிய கூறான தியாகத்தை அடிபடையாகக் கொண்ட கதை. மரணத்தை விரைவில் சந்திக்கப்போவதை அறிந்தவர் போல, தார்க்கோவ்ஸ்கி தான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் அலெக்சாண்டர் வழியே சொல்லி விடுகிறார். போர் நடப்பது அலெக்சாண்டரின் கனவா, கற்பனையா அல்லது நனவா எனப் பிரித்தறிய முடியாதவகையில் சொல்லப்படும் கதை. தார்க்கோவ்ஸ்கியின் பிற படங்களைப் போலவே அவர் வாழ்க்கை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் இப்படத்தில், அவர் மனைவி, மகன், வளர்ப்புமகள் அனைவரும் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பெர்க்மனின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்வெஸ்ட்டின் அற்புதமான ஒளிப்பதிவில் மெதுவாக நகரும் நீண்ட காட்சிகள் கொண்டு காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தி உருவாக்கியுள்ள இப்படம் அவரின் முதிர்ச்சியான படைப்பாக மதிக்கப்படுகிறது. The Sacrifice, என்ற தலைப்பு, திரைப்படக் கலைக்காக தன்னையே அர்ப்பணித்த தார்கோவ்ஸ்கியின் தியாகம் எனவும் அறியப்படுகிறது. புற்றுநோய் பாதித்து படுக்கையில் இருந்த தார்க்கோவ்ஸ்கியிற்காக 1986 கான் திரைப்பட விழா பரிசை அவர் மகன் பெற்றுக்கொண்டான். 1986 டிசம்பர் 29 ஆம் தேதி பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் அவர் உயிர் பிரிந்தது. பிரான்ஸில் அடக்கம் செய்யப்ட்டார். ’தேவதூதனை நேரில் கண்ட மனிதனுக்கு‘ (To the man who saw the Angel) என்பது அவர் கல்லறையில் ரஷ்ய சிற்பி ஒருவரால் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம்.

மரணமடைவதற்குமுன் சோவியத் அரசின் அனுமதி கிடைத்து அவர் மகன் வந்து சேர்ந்தான். வருடங்கள் கழித்து மகன் தந்தையிடம் வந்து சேர்வதை க்ரிஸ் மார்க்கர் (Chris Marker) தனது ஆவணப் படத்தில் பதிவு செய்திருப்பது, கல்நெஞ்சம் கொண்டவரையும் கலங்கச் செய்துவிடும்.
ரஷ்ய அரசை தார்க்கோவ்ஸ்கியின் மரணத்துடன் இணைத்து புரளிகள் கிளம்பின. தற்போது காரணம் தெளிவாகிவிட்டது. ஸ்டாக்கரின் இறுதியில் மின் உற்பத்தி உலைகளின் பின்புலத்தில் ரசாயன கழிவுகள் ஓடிக்கொண்டிருக்கும் பகுதி காண்பிக்கப்டுகிறது. ஸ்டாக்கர் படப்பிடிப்பின் பெரும்பாலான பகுதி அதன் சுற்றுப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. அவர் உடல் அதனால் பாதிக்கப்பட்டது இறுதியில் தெரியவந்தது. அவருடன் பணிபுரிந்த பலர் நோய்வாய்ப்பட்டனர், சிலர் பின்னர் மரணமடைந்தனர். உடனிருந்த மனைவி லாரிஸ்ககா பின்னர் புற்றுநோயால் இறந்தார். எழுத்தாளராக நடித்த அனதொலய் சொலொனித்சின் உடல்நலம் குன்றி இறந்தார். ஷான் மார்ட்டின் இதைப்பற்றி தனது நூலில் எழுதியிருக்கிறார்.

தார்க்கோவ்ஸ்கி மனிதத்துவத்திற்கு முதலிடம் கொடுததவர். மதவாதி அல்ல. ட்ரையர், ப்ரெஸ்ஸோன் போன்று ஆன்மீகத்தை முனவைத்தவர். அவரது படைப்புகள் அனைத்தும் மனிதத்துவ அடிப்படையில் உருவானவை; அழகியலாக பரிணமிப்பதாகத் தோற்றமளித்தாலும் அரசியல், சமூக கூறுகளை உட்கொண்டவை. சிறந்த செவ்வியல் இசை, எழுத்து போல அவர் படைப்புகள் மறுவாசிப்புக்கானவை. வழக்கமான உத்திகளையும், படத்தொகுப்பு முறையையும் தவிர்த்து உருவாக்கப்பட்டிருப்பதால், அவருடைய திரைப்படங்கள் சிலருக்கு முதலில் நெருடலை அளிக்கலாம். பழக்கமாகிவிட்டால், அவர் திரைப்படங்களை காணும் ஒவ்வொரு முறையும் புதிய, அற்புதமான அனுபவங்களைப் பெறலாம்.

கதைசொல்லல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்திலும் தார்க்கோவ்ஸ்கி பயன்படுத்திய முறைகள் திரைப்படக்கலையை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றவை. திரைக்கதை எழுதுவதிலும் முதலிலிருந்தே அவருக்கே உரித்தான முறையை பின்பற்றினார். மிர்ரர் டிவிடியில் இருக்கும் ஆவணப்படத்தில், களக்கதை எழுதப்பட்ட முறையை அவருடன் இணைந்து எழுதிய அலெக்சாந்தர் மிஷாரின் (Aleksandr Misharin) விவரிக்கிறார். நல்ல திரைக்கதை எழுத விருப்பமுள்ளவர், காலாவதியான அடிப்படைகளை சொல்லிக்கொண்டிருக்கும் வழிகாட்டி புத்தகங்களை விட உலகின் சிறந்த திரைப்படங்களின் அசலான களக்கதைகளை (scripts) தேடி படிப்பது நல்லது. முக்கிய களக்கதைகள் தற்போது புத்தகவடிவில் கிடைக்கின்றன.

தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் பேச்சு, மௌனம், ஒலி (sound) மூன்றும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இசையைப் பொறுத்தவரையில் அதிகம் பயன்படுத்தியது மேற்கத்திய செவ்வியல் இசையை. பாஹ்கின் (Bach) இசைக்கு ஒரு விதமான, மனதை இழுக்கும் தனமை உண்டு என்பார். திரைப்படத்திற்கு இசை தேவையில்லை எனும் அடிப்படை கொண்டவர். அப்படி தேவையான இடங்களில் படத்தின் தன்மையை எவ்வித்திலும் பாதிக்காதவாறு இணைந்து ஒலிக்கும்படி இசையை பயன்படுத்துவதில் நிபுணர்.
மாஸ்பிலிம் ஸ்டுடியோவில் தார்க்கோவ்ஸ்கிக்கு ‘one take Tarkovsky’, என்று பெயர். எந்த அளவு சிக்கலான காட்சியையும் ஒரே தடவையில் பதிவு செய்துவிடுவார். வெகு அரிதாகவே இரண்டாவது தடவை பதிவு செய்வது தேவைப்படும். அவர் எடுத்த படச்சுருள்கள் அனைத்தும் படத்தில் இடம்பெறும். சோலரிஸ் திரைப்படத்தில் கதை மாற்றத்தால் வீணான சிறு பகுதி, ஸ்டாக்கரில் காலாவதியான கொடாக் பிலிம் சுருள்களால் வீணான பகுதிகள் தவிர, ஒரு சுருளைக் கூட வீணாகப் படமெடுத்ததில்லை. ரஷ்யாவுக்கு வெளியே எடுத்த படங்களில் இவ்விஷயங்களில் சரியாக இருக்க முடிந்ததில்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு.

தால்ஸ்தாய், தாஸ்தயோவ்ஸ்கி, புஷ்கின் போன்ற மக்களுக்கான படைப்பாளிகளின் வரிசையில் உருவான கலைஞனாகவே தன்னைச் சொல்லுகிறார். திரைப்படக் கலை இன்று, வெறும் சிகரெட், தீப்பெட்டி தயாரிப்பு போன்று முற்றிலும் வணிகத்திற்கானதாக ஆகிவிட்டது. ஆரம்பத்தில் திரைப்படத்தின் புதுமைக்காக மக்கள் கூட்டமாக வந்து கண்டுகொண்டிருந்தது படிப்படியாக குறைந்து விட்டது. நல்ல இசைக்கும், இலக்கியத்திற்கும், கலைக்கும் ரசிகர்கள் குறைவாகவே இருப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்கிறார்.
பிரெஞ்சு இயக்குநர் க்ரிஸ் மார்க்கரின் One Day in the Life of Andrei Arsenevich, ரஷ்ய இயக்குநர் அலெக்சாந்தர் சொக்ரோவின் Moscow Elegy போன்றவை உட்பட, தார்க்கோவ்ஸ்கியின் வாழ்க்கை, அவர் திரைப்படம் இயக்குவது பற்றிய ஆவணப்படங்கள் பல உள்ளன. 2010 இல் Meeting Andrei Tarkovsky வெளிவந்தது. இத்தாலியில் நோஸ்டால்ஜியா படப்பிடிப்பிற்காக இடங்களை பார்க்க சென்றபோது Voyage in Time என்ற ஆவணப்படத்தை தார்க்கோவ்ஸ்கி எடுத்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவற்றை இன்று நாம் காண முடிகிறது. முதலில் எடுத்த குறும்படங்கள் முதல் தார்க்கோவ்ஸ்கி இயக்கிய ஏழு திரைப்படங்களும் எளிதாக கிடைக்கின்றன.

தார்க்கோவ்ஸ்கியைப் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவர் வாழ்க்கையையும் படைப்புகளையும், கலையையும் ஆழமாக அறிவதற்கு உதவும் சில முக்கிய நூல்கள் : Andrei Tarkovsky Interviews edited by John Gianvito, Andrei Tarkovsky- Elements of Cinema by Robert Bird, Andrei Tarkovsky – A Visual Fugue by Vida T. Johnson and Graham Petrie, Andrei Tarkovsky by Sean Martin. அவர் எழுதிய Sculpting In Time , அவர் இறந்தபின் Time Within Time என்ற பெயரில் வெளியிடப்பட்ட 1970 – 1986 வரை அவர் எழுதிய நாட் குறிப்புகள் (Seagull மலிவுப்பதிப்பு ரூ.375) இரண்டும் முக்கியமானவை.

மறைந்த செர்கெய் பரஜனோவ் போன்று தார்க்கோவ்ஸ்கியின் பாதையில் திரைப்படங்களை இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க சிலர்: அலெக்சாந்தர் சொக்ரோவ், க்ரிஸ் மார்க்கர், அபிசத்பாங் வீரசெதகுல் (தாய்லாந்து), சுரானாஸ் பார்த்தாஸ் (லித்துவேனியா), நூரி சீலான் (துருக்கி). விமுக்தி ஜெயசுந்தரா (இலங்கை), கார்லோஸ் ரெய்காடாஸ் (மெக்சிகோ) ஆந்த்ரேய் ஸ்விகிண்ட்செவ் (ரஷ்யா). உலகளவில் முக்கிய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவதுடன், திரைப்படக் கலையின் வளர்ச்சிக்கும் வித்திடும் இந்த இயக்குநர்களின் வரிசை வளர்ந்துகொண்டு போகிறது. Contemplative Cinema என உருவாகியிருக்கும் பகுப்பில் தார்க்கோவ்ஸ்கியின் படைப்புக் கலை இணைகிறது. இந்த மேதையின் கலை என்றும் வாழும் என்பது நிர்ணயமாகிவிட்ட உண்மை.

ரஷ்ய அரசு தார்க்கோவ்ஸ்கியை நிராகரித்ததை இக்கட்டுரையில் சொல்லியிருப்தைக் கொண்டு ரஷ்யாவில் மட்டும்தான் இவ்வாறு நடக்கிறது என்று முடிவு செய்துவிடக் கூடாது. துவக்கத்திலிருந்தே அமெரிக்கா, ஐரோப்பா முதற்கொண்டு உலகெங்கும் இம்மாதிரியான புறக்கணிப்புகளை கலைஞர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் திரைப்படத் துறையாலும், அரசாலும் ரித்விக் கட்டக் நிராகரிக்கப்பட்டது போன்று தனித்துவமான படைப்பாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

தனது தாய் நாடு என்றாவது ஒருநாள் தன்னை மதித்து மீண்டும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லியிருந்தார். இறந்து ஒரு வருடம் கழித்து ரஷ்யாவில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தார்க்கோவ்ஸ்கி திரைப்பட விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. தணிக்கை செய்யப்படாத 205 நிமிட ஆந்த்ரேய் ரூப்ளேவ் பிரதியுடன் அவருடைய திரைப்படங்கள், திரையிடப்பட்டன. 1989 இல் ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி நினைவுப்பரிசு உருவாக்கப்பட்டது. 1990 இல் ரஷ்ய நாட்டின் உயர்ந்த பரிசான ’லெனின் பரிசு’ காலம் சென்ற தார்க்கோவ்ஸ்கியின் கலைக்காக வழங்கப்பட்டது. அவர் திரைப்படக் கலை கற்ற ரஷ்ய திரைப்பட பள்ளி (VGIK) தன்னிடம் பயின்ற இந்த உன்னதக் கலைஞனுக்கு சிலை வைத்து கவுரவித்துள்ளது.

“சினிமாவின் எதிர்காலம், அசுரத்தனமாக பணத்தை செலவு செய்து திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனங்களின் நிர்வாக பிடிகளிலிருந்து அதை விடுதலை செய்வதில் அடங்கியிருக்கிறது என நான் நம்புகிறேன். இது வெறும் கற்பனையல்ல. நிழற்பட தொழில் நுட்பங்கள் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. விரைவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது, ஒரு நாவலை தட்டச்சு செய்து எழுதுவது போல ஆகிவிடும் என்பது எனது நம்பிக்கை.”
– ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி



தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படக் கலையை ரசிப்பவர்களால் நடத்தப்படும் இணையதளம் : www.nostalghia.com

1 comment:

குலவுசனப்பிரியன் said...

நல்ல விரிவான அறிமுகம் இவருடையப் படங்களைப் பார்க்கத்தூண்டுகிறது. மிக்க நன்றி.