Monday 14 March 2011

அசலும் நகலும்




ஏழுத்தோ, கவிதையோ களவாடப்பட்டு மற்றொருவரால் பயன்படுத்தப்பட்டால் சீறி எழுந்து அறம் பேசும் நம்மவர்கள், அவ்வாறு உருவாக்கப்படும் நம் திரைப்படங்களை எந்தப் பிரச்சினையும் இன்றி சிலாகித்து கட்டுடைத்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.


அசலும் நகலும்

எஸ்.ஆனந்த்

அசல் என்று ஏதாவது உண்டா?

ஆர்சன் வெல்ஸின் F for Fake திரைப் படம் பார்த்தீர்களென்றால் இப்படிக் கேட்க ஆரம்பித்து விடுவீர்கள்.

பிக்காசோ, மொடிக்லியானி என்று வரிசையாக பிரபல ஓவிய மேதைகள் படைத்த ஓவியங்களைத் தத்ரூபமாக வரைந்து உலகை ஏமாற்றிச் செல்வந்தரான எல்மிர் டி ஹோரி (Elmyr de Hory)யை இப்படத்தில் சந்திக்கிறோம். இவரது போலிகள் உலகப் பிரசித்தி பெற்றவை.பிக்காசோவே எல்மிரால் வரையப்பட்ட போலி ஓவியத்தை தன்னுடைய அசலான ஓவியம் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அந்த அளவு இவரது நகல்கள் அசலை விடச் சிறப்பாக அமைந்தவை.

குற்றம் என்ன செய்தேன் என எல்மிர் நம்மிடம் கேட்கிறார்.

இவருடன் க்ளிப்பொர்ட் இர்விங் அறிமுகமாகிறார். வெளி உலகத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு, தனியே வாழ்ந்த அமெரிக்க பத்திரிகை சாம்ராஜ்ய அதிபரும், மகா செல்வந்தருமான ஹாவர்ட் ஹ்யூஸின் சுயசரிதையை எழுதிப் பெரும் பணத்திற்கு விற்றவர். இர்விங் பின்னர் மாட்டிக் கொண்டார் என்பது தனிக் கதை. சந்தித்தே இராத ஒரு பெரிய மனிதரின் சுய சரிதத்தை கற்பனையாக எழுதி விற்றால் பின்னர் மாட்டிக்கொள்ளாமல் என்ன செய்வார்?ஆர்ஸன் வெல்ஸ் இந்த உண்மைக் கதா பாத்திரங்களைக் கொண்டு F for Fake இல் அசல், நகல் இரண்டிற்குமான தத்துவார்த்தமன நிலைகளை மகா எள்ளலுடன் அலசுகிறார்.

இதல்லாம் இருக்கட்டும்.

அசலை நகலாக்கினால் குற்றமா?

அப்படியெல்லாம் இருக்காது.

இருந்தால் எப்படி ஐயா நம்மூரில் திரைப்படங்களைத் தயாரிக்க முடியும்?

நமது திரைப்படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் முக்கிய பிரச்சினை அதில் வரும் பிறமொழிப் படங்களிலிருந்து சுடப்பட்டுள்ள கட்சிகள். நல்ல படம், கட்டாயம் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லப்படும் படத்தைப் பார்க்கும் பொழுது, நகலெடுக்கப்பட்ட ஒரு காட்சி வந்தால் கூடப் போதும், ஏகமாகக் கோபம் வந்துவிடுகிறது. நல்ல படம் என்று பார்க்க வந்தாயா மகனே, இரு உன்னைக் கவனிக்கிறேன் பார் என்கிற மாதிரி நடந்துவிடுவது, படத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் மனத்தடையை உண்டாகிவிடுகிறது. யாரோ கேலி செய்தாற் போல இருக்கிறது.

பல நண்பர்களுக்கு தமிழ்ப்படங்கள் இப்படி இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதைப் பற்றி சற்று உரக்கப் பேசியதால் தமிழ்ப் படம் பற்றி என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். ஒருவேளை எனக்கு நம் படங்களைச் சரியாகப் பார்க்கத் தெரியவில்லையோ, என்னவோ.


பல வருடங்களுக்கு முன் தேசிய விருது பெற்ற ‘ அவள் ஒரு தொடர் கதை’, தமிழ்த் திரை உலகை உய்விக்க வந்த ஒரு முக்கிய ‘சிகர’ இயக்குநரால் அருளப்பட்ட படைப்பு. ரித்விக் கட்டக்கின் ’மேக டாக்க டாரா’ படத்தைப் பார்த்தபின்புதான் இந்த ’சிகரம்’ ரித்விக் கட்டக்கின் படத்தை, அந்த மேதைக்கு ஒரு வார்த்தை கூட நன்றி தெரிவிக்காது அப்படியே நகலெடுத்திருந்தது தெரிய வந்தது. இந்த ’சிகரம்’ இயக்குநரின் முக்கியமான படமே இப்படி சுடப்பட்டிருந்தால், மற்றவை?


ரித்விக் கட்டக்கின் படைப்புகளிலிருந்து பல பாகங்கள் நம் பிரபலங்களால் வெட்கமின்றி அப்படியே திருடப்பட்டுள்ளன. (கட்டக், தனது அற்புதமான படைப்புகளுக்கு திரைஉலகிலும், நம் நாட்டிலும் எந்த அங்கீகாரமும் கிடைக்காது மனமுடைந்து குடியால் தன்னை அழித்துக் கொண்டார். வழக்கம் போல நமது அரசு இந்த மேதை இறந்து பல வருடங்கள் கழித்து இவர் உருவம் பதித்த தபால் தலை வெளியிட்டு இவருக்கு மரியாதை செய்துள்ளது!) மக்களால் கொண்டாடப்படும் தமிழ் இயகுநர்கள் பலர் இயக்கிய படங்களின் பல பகுதிகள் பிற மொழிப் படங்களிலிருந்து நகலெடுக் கப்பட்டிருப்பதைக் காண நேரிட்டது. இந்த அசல்/ நகல் தத்துவச் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்டேன்.

தொடர்ந்து விவாதங்கள், சண்டைகள். கைகலப்புகள் மட்டும் நிகழ்ந்ததில்லை. பலவிதமான அறிவுறைகள் வழங்கப்பட்டன: ’தேசீய விருது பெற்ற படத்தை அப்படியே ஈயடிச்சான் காப்பி என்கிறாய். விருது. கொடுபவரெல்லம் முட்டாள்களா? இப்படியான விஷயங்கள் உன்னை ஏன் பாதிக்க வேண்டும். நல்ல படம் என்று ஒன்றைச் சொன்னாலே உன்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லையே ஏன்? அரைக் காட்சி, ஒரு காட்சி அல்லது ஏன் முழுப் படமே நகலடுக்கப்பட்டிருந்தாலும் அதுவா முக்கியம்? அதைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள் என்பதல்லவோ முக்கியம். தழுவல் என்பது தான் சரி. மேதைகள் இயக்கும் படம். மேதைகள் நடிக்கும் படம் மேதைகள் இசையமைக்கிறார்கள் இவர்களை அறியாது பேசுகிறாய். தமிழ்த் திரையுலகம் எனபதே ஒரு தனி உலகம். நீ பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. வெட்டியாகக் கிடந்து மருகாதே.’

தமிழ்ப் படங்களில் அசல்/நகல் சிக்கல் பற்றிக் கோபத்தை ஏற்படுத்திய ஏராளமான படங்கள் இருக்க, ஓரிரு திரைப்படங்கள் மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன எனபதைக் கவனத்தில் கொள்க. தமிழில் சில நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. கடந்த எழுபத்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிவந்துள்ள நாலாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் திரைப்பட மொழியை ஓரளவுக்குச் சரியாகப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அசலான படங்கள் நான்கு அல்லது ஐந்து தேறும் என்ற உண்மையைச் சொன்னால், அதென்னடா பெரிய திரைப்பட மொழி என்று கொதித்தெழுகிறார்கள்.

வசனங்களையும், இசையையும், பாடல்களையும் மட்டுமே திரைப்படத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அளவு கோல்களாகக் கொள்ளும் பார்வையாளர் கொண்ட நம்மூர் தமிழ் சினிமா உலகத் தரத்தை எட்டுவது பற்றிப் பேசுவதில் பயனில்லை என்பதும் என் மந்த புத்திக்கு மெதுவாகத்தான் தெரியவந்தது.

எழுபதுகள் வரை யாரும் தங்களைச் சிகரம், ஆறு, மலை என்று சொல்லிக்கொண்டு படங்களை இயக்கவில்லை. மகிழ்ச்சியாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. தழுவப்பட்ட சில வங்காள மூலப் படங்களுக்கு டைட்டில் கார்டுகளில் நன்றி கூட கூறப்பட்டது. பாடல்கள் இனிமையாக படத்துடன் ஒன்றி இருந்தன. விடியோ லென்டிங் லைப்ரரிகள் கிடையாது. ஒரு சில படங்கள் தவிர சுடப்பட்ட மற்ற படங்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. இந்திய/ ஹாலிவுட் படங்கள் தவிர வேறு படங்களைப் பார்க்கும் வாய்ப்புகள் மிக அரிது. திரைப்பட சங்கங்களிலும், வெளிநாட்டுத் தூதரகங்களிலும் மட்டும் நம் படங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வித்தியாசமான வேற்று நாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கலம் – இந்தப் படங்களை விடாது பார்த்து வந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய பார்வையாளர்களைக் கணக்கில் வைக்கத் தேவையில்லை. (அதே குறைந்த எண்ணிக்கைகளில் இந்த வகை பார்வையாளர்களை இன்றும் திரைப்பட சங்கத் திரையிடல்களில் காணலாம்.)

எண்பதுகளில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தொலைக்காட்சிப் பெட்டிகள், வி.சி.ஆர், வி.எச்.எஸ் காசெட்டுகள் அறிமுகம். லெண்டிங் லைப்ரரிகள் தோன்ற ஆரம்பித்தன. இயக்குநர்களாக சிகரங்களும், இமயங்களும் தோன்றி சில ஆண்டுகள் ஆகியிருந்தன. இவர்கள் சுட்ட மூலப் படங்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரியத் தொடங்கின. தொண்ணூறுகளில் இந்த அசல்/நகல் தலைவலி அதிகமானது. நகல்களிலிருந்து விலகி இருப்பதே இந்தத் தலைவலிகளிலிருந்து விடுதலை அளிப்பது எனும் அரிய உண்மை தெரிய வந்தது.

இன்று இண்ட்டெர்நெட்/டிஜிட்டல் யுகம். காப்பி அடித்தால் வெளியே தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும்படியான நிலை. சில மாதங்களுக்கு முன் ரோட்டில் இரண்டு பேர் நடந்து போகும் ஒரு ஜப்பானியப் படத்தை நம்மூரில் சுட்டு ஏக அழுகைச் சமாச்சாரங்களை இணைத்து அனைவரையும் ஒரு இயக்குநர் கலங்க வைக்க, இணையத்திலும், பத்திரிகைகளிலும், உருகி உருகி குளமாகப் போன எழுத்துக்களில் நம்மூர் அறிவாளிகள் கரைந்து போனார்கள். காப்பிதான், இருந்தாலும் சிறப்பான படம் என்று சிலரும், இதைப்போய் காப்பி என்று சொல்லலாமா என்று பலரும் உருகி எழுதி எல்லோரையும் குழப்பினார்கள். இந்த இயக்குநர் அடுத்து ஒரு கொரியப்படத்தை தமிழ்ப்படமாக சுட்டு வெளியிட்டிருக்கிறார். சுடப்படுவதற்கு இன்னும் எத்தனையோ வெளிநாட்டுத் திரைப் படங்கள் இவருக்காக வரிசையில் காத்திருக்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஏழுத்தோ, கவிதையோ களவாடப்பட்டு மற்றொருவரால பயன்படுத்தப்பட்டால் சீறி எழுந்து அறம் பேசும் நம்மவர்கள், அவ்வாறு உருவாக்கப்படும் நம் திரைப்படங்களை எந்தப் பிரச்சினையும் இன்றி சிலாகித்துக் கட்டுடைத்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. அசலான சரக்கிற்குத் தானே ஐயா மரியாதையும் மதிப்பும் கொடுக்க முடியும். இல்லை, ஒருவேளை திரைப்படக்கலை வெறும் கேளிக்கைக்கு மட்டுமே உரிய கலையாக, எவராலும் காலில் மிதித்துச் செல்லக்கூடிய, தரம் குறைந்த, கீழ் நிலைக் கலையாக, இந்த அறிவுஜீவிகளால் கருதப்படுகிறதோ என்னவோ.

இன்று எந்த ஒரு சிறப்பான திரைப்படமும் மொழி, நாடு இவற்றைத் தாண்டி உலக கவனம் பெறுவதுடன், உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்று, சிறந்த உலகத் திரைப்பட நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படும் நிலை நிலவுகிறது. இதற்குத் தமிழில் தயாராகும் படங்கள் விலக்கல்ல. ஆனால் இத்தகுதி பெற தரமான, அசலான படங்கள் உருவாக வேண்டும்.

இது தமிழ் நாட்டில் முடியுமா?

ஏன் முடியாது ? - கட்டாயம் முடியும்.

நம்மவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.

ஆனால் மாட்டார்கள்.

ஒருமுறை காப்பியடித்தவரால், மறுமுறையும் காப்பியடிக்காமல் இருக்க முடியாது; சுய உழைப்பின்றி, அடிப்படைக் கதை, காட்சி நுணுக்கங்களைத் திருடி உபயோகித்து சுகம் கண்டவர்களால் இது முடியாது. முடியவே முடியாது.

இன்னொன்றும் முக்கியம். அசலாகப் படம் எடுப்பவருக்கு தரமாகவும் படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். இயக்குபவர் திரைப்பட மொழியையும் இலக்கணத்தையும் அறிந்தவராக, அவற்றைப் பயன்படுத்துவதற்கான திறமை கொண்டவராக் இருக்க வேண்டும்.

கை நிறைய வெளி நாட்டுப் படங்களின் டிவிடிக்களை வைத்துக்கொண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுட்டுக் கதம்பமாகப் படம் பண்ணும் நம் இயக்குநர்களும் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்களும் இருக்கும் வரை நம் திரைப்படங்கள் சிறப்பாக உருவாக முடியாது.

பரீட்சையில் காப்பியடித்துப் பிடிபட்டால் தண்டனை உண்டு. எழுத்துக்கும் அப்படியே. திரைப்படங்களை உருவாக்கும் போது ஒருவரின் படைப்பை அவர் அனுமதி பெறாமலோ, குறைந்த பட்சம் அவருக்கு நன்றியை எழுத்து மூலம் பட்த்தில் தெரிவிக்காமலோ பயன்படுத்தும் போது அதுவும் திருட்டு தான். ஒருவரின் ’ஒரிஜினல்’ கருத்தை அவர் அனுமதியின்றி மற்றவர் தன் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்றால் கூட அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். தண்டனையா, யாரிடம் பூச்சி காட்டுகிறீர் என்கிறீர்களா? அதுவும் சரிதான். நம் தமிழ் சினிமா உலகில் இந்தப் பருப்பெல்லாம் வேகாது.

நம்மைச் சுற்றியிருக்கும் பூட்டான், ஸ்ரீலங்கா, சிஙகப்பூர் போன்ற துளியூண்டு நாடுகளிருந்தெல்லாம் உலகத் தரத்துக்குத் அசலான திரைப்படங்கள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. நம் சினிமாவோ நாற்பதுகளில் இருந்தபடியே இன்றும் அதே நாடக பாணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது., யாராவது இந்தப் பாணியை மீறிய ஒன்றிரண்டு திரைப்படங்களை அவ்வப்போது கொடுத்துவிட்டுக் காணாமற் போய்விடுகிறார்கள். வழக்கமான பாணியை மீறியிருக்கிறார்கள் என்பதை விட இவர்களது திரைப்படங்களையும் பெரிதாகச் சொல்லுவதற்கில்லை.

தமிழ் சினிமா மாற்ற முடியாத – UNTAMED - சினிமாவாக ஆகிவிட்டது. வெற்றுப் பேச்சுக்கு மட்டும் இங்கு குறைவில்லை. தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில், ஏதோ பெரிய சாதனைகளைச் செய்துவிட்டவர் போல் - பெர்க்மன், ஃபெலினியை போன்று - இந்த இயக்குநர்கள பேசிக்கொண்டிருப்பதைக் காணும்போது சிரிப்புத்தான் வருகிறது. அத்துடன் தாங்கொண்ணா வருத்தமும் ஏற்படுகிறது. நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? ஏன் இப்படி நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் ?

அண்டை மாநிலமான கேரளத்தில் தமிழ்நாட்டைப் போலவே குப்பைகள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரத்திலும், வெகுஜன சினிமாக்களில் ஒரு சில அசலான படைப்புகள் சிறப்பாகத் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கின்றன. வடக்கிலும் இவ்வாறான மாற்றங்களைக் கடந்த சில ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம்.

இன்று டிஜிட்டல் யுகம். மாற்றங்களுக்கான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. மாற்றங்கள் நிகழ்வது என்பது காலத்தின் கட்டாயம். நம் தமிழ் சினிமாவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். வருடத்திற்கு ஒன்றிரண்டு அசலான, தமிழ் திரைப்படங்களாவது, சரியான திரை மொழியில் உருவாக்கப்பட்டு சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறலாம். திரைப்படக் கலையை முன்கொண்டு செல்லும் படைப்புகளாக அவை அமையலாம். இனி வரும் இளைஞர்கள் தான் இந்த மாற்றத்தை உருவாக்க முடியும். இந்த அற்புதம் நிகழும் நாட்களுக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.


Tuesday 8 March 2011

13 மார்ச் 2011; ராபர்ட் ப்ரெஸ்ஸோனின் முஷெட்



முஷெட்

இயக்கம்: ராபர்ட் ப்ரெஸ்ஸோன்
வருடம் : 1967
ஓடும் நேரம்: 78 நிமிடங்கள்
13 மார்ச் 2011, மாலை 5.45
பெர்க்ஸ் மினி தியேட்டர்
ராபர்ட் ப்ரெஸ்ஸோன் ஒரு minimalist. அவர் படங்களில் கவிதை வரிகளின் சிக்கனத்துடனும், ஆழத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வசனங்களை முடிந்தவரை தவிர்த்து, பிம்பங்களையும், ஒலியையும் (இசையை அல்ல) பயன்படுத்திக் கதை சொல்வது இந்த மேதையின் தனித்துவப் பாணி. காமெரா கோணங்களுக்கான பல அடிப்படை விதி முறைகள் ப்ரெஸ்ஸோனால் உடைக்கப்பட்டன, மீறப்பட்டன. நடிகர்களைப் பயன்படுத்துவதை இப்படத்திலிருந்து முற்றிலுமாகத் தவிர்த்து, நடித்துப் பழக்கமற்ற, சினிமாவுக்குப் புதியவர்களைத் தன் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்.
ப்ரெஸ்ஸோன் இயக்கிய “Mouchette” (1967) ஜார்ஜ் பெர்னானோஸின் கதை. முஷெட் பள்ளியில் படிக்கும் பெண். குடிகாரத் தந்தையும் சகோதரனும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். படுக்கையிலிருக்கும் நோயுற்ற தாயையும் கைக் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவளின் பொறுப்பு. பள்ளியிலும், வீட்டிலும் அனைவரும் அவள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.

ஒரு மாலை பள்ளியிலிருந்து காட்டுப் பகுதிவழியாக வரும் முஷெட் மழையில் வழிதவறிவிடுகிறாள். திருட்டு வேட்டையாட அங்கு வரும் அர்சென் அவளைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்று கற்பழித்துவிடுகிறான். அதிகாலை வீடு திரும்பி தாயையும் குழந்தையையும் கவனித்து விட்டு உறங்கச் செல்கிறாள். கேட்பார் யருமில்லை. தந்தையும் சகோதரனும் வெளியே சென்றிருக்கின்றனர்.

முஷெட், நண்பர்கள், நெருக்கமனவர்கள் யாருமற்று தனித்து உலகை எதிர்கொள்பவள். கற்பழிக்கப்படும்பொழுது, இறுதியில் தன் அணைப்பால் அவள் அதை ஏற்றுக் கொள்ளுவதாகக் காட்டப்படும் காட்சி, அந்தக் குரூரமான நேரத்தில் கூட அவள் அன்புக்கும் அணைப்பிற்கும் ஏங்குவதைச் சொல்லுகிறது. கசப்பான, கொடுமையான ஒரு உலகத்தை ப்ரெஸ்ஸோன் நமக்கு காட்டுகிறர். சாவு அனைத்து அநீதிகளிலிருந்தும் மொஷெட்டுக்கு விடுதலையை அளிக்கிறது.
ப்ரெஸ்ஸோன் தனது படஙகள் அனைத்திலும் பெரிய அரங்கங்கள், பகட்டான காட்சிகளைத் தவிர்த்தார். ப்ரெஸ்ஸொனின் படங்களில் வரும் பாத்திரங்களின் பார்வையும், நடையும் , ஒவ்வொரு உடல் அசைவும், காட்டப்படும் வெற்றிடங்களும் (spaces) கதையின் ஆழத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலம். குறைவாகத் திரையில் காட்டுவதைக் கொண்டு காட்சிகளை முழுமையாக உணரச் செய்வதில் ப்ரெஸ்ஸோன் ஒரு ஜென் குருவின் எளிமையுடன் இயங்குபவர்.

திரைப்படங்களை முழுக் கவனத்துடன், ஆழமாக ரசிப்பவர்களுக்கு ப்ரெஸ்ஸோனின் திரைப்படங்கள் என்றும் மறக்கமுடியாத அனுபவங்களாக அமைவதில் வியப்பில்லை. ப்ரெஸ்ஸோனின் படைப்புகளை முழுமையாக ரசிப்பதற்கு, சட்டகத்திற்கு உள்ளும், வெளியிலும் நடப்பவற்றை உணருவதற்கான ஆழ்ந்த கவனமும், கற்பனையும்; இசையைக் கேட்பது போல் ஒலியை நுட்பமாக கேட்டு உணருவதும் அவசியமாகிறது. பார்வையாளரின் முழுப் பங்களிப்பும் அவசியமாகிறது. மேடை நாடகத்தை அப்படியே காமெரா கொண்டு படமாகப் பதிவு செய்வது போலத் தயாரிக்கப்படுபவற்றை சினிமா என்று பார்த்துப் பழகியவர்களுக்குத் தனது திரைப்படங்கள் பிடிக்காமல் போவது அதிசயமல்ல என்பார் ப்ரெஸ்ஸோன்

ரஷ்யத் திரைப்பட மேதை தார்க்கோவ்ஸ்கியின் சிறந்த பத்து உலகத் திரைப்படங்கள் பட்டியலில் ப்ரெஸ்ஸோனின் Diary of a Country Priest,Mouchette ஆகிய இரண்டும் இடம் பெறுகின்றன.
(’தமிழினி’ இலக்கிய இதழில் வெளிவந்த ’திரைப்பட மேதை ராபர்ட் ப்ரெஸ்ஸோன்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. )

Thursday 3 March 2011

மார்ச் 6, 2011; அப்பாஸ் கியரஸ்தோமியின் ‘க்ளோஸ்-அப்’


க்ளோஸ்-அப்
இயக்கம்: அப்பாஸ் கியரஸ்தோமி
நேரம் : 98 நிமிடங்கள்
மார்ச் 6. 2011; மாலை 5.45 மணிக்கு
பெர்க்ஸ் மினி தியேட்டர்

‘க்ளோஸ்-அப்” ஈரானிய இயக்குநர் அப்பாஸ் கியரஸ்தோமியால் ‘டாக்கு டிராமா’ வகையில் அளிக்கப்படிருக்கும் அற்புதமான திரைப்படம்.
பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் மக்மல்பாப்ஃ ஆக நடித்து ஒரு குடும்பத்தை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சப்ஜியானின் கதை.
கியரஸ்தோமியே ஆரம்பக் காட்சிகள் சிலவற்றின் பின்புலத்தில் பங்கு பெறுகிறார்.


அப்பாஸ் கிரஸ்தோமி

அப்பாஸ் கியரஸ்தோமி உலகத் திரைப்பட மேதைக ள் ப்ரெஸ்ஸோன் , பெர்க்மன், தார்கோவ்ஸ்கி போன்றோரின் வழியில் ஈரானிய சினிமாவைக் கொண்டு செல்பவர். ஐந்து தணிக்கைகளும், கச்சா பிலிம் கட்டுப்பாடுகளும் உள்ள ஈரானில் இருந்தபோதும் இவற்றையெல்லாம் மீறி சிறப்பாகச் செயல்படும் இயக்குநர்.


மேலும் விவரங்களுக்கு http://konangalfilmsociety.blogspot.com/