Tuesday 8 March 2011

13 மார்ச் 2011; ராபர்ட் ப்ரெஸ்ஸோனின் முஷெட்



முஷெட்

இயக்கம்: ராபர்ட் ப்ரெஸ்ஸோன்
வருடம் : 1967
ஓடும் நேரம்: 78 நிமிடங்கள்
13 மார்ச் 2011, மாலை 5.45
பெர்க்ஸ் மினி தியேட்டர்
ராபர்ட் ப்ரெஸ்ஸோன் ஒரு minimalist. அவர் படங்களில் கவிதை வரிகளின் சிக்கனத்துடனும், ஆழத்துடனும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வசனங்களை முடிந்தவரை தவிர்த்து, பிம்பங்களையும், ஒலியையும் (இசையை அல்ல) பயன்படுத்திக் கதை சொல்வது இந்த மேதையின் தனித்துவப் பாணி. காமெரா கோணங்களுக்கான பல அடிப்படை விதி முறைகள் ப்ரெஸ்ஸோனால் உடைக்கப்பட்டன, மீறப்பட்டன. நடிகர்களைப் பயன்படுத்துவதை இப்படத்திலிருந்து முற்றிலுமாகத் தவிர்த்து, நடித்துப் பழக்கமற்ற, சினிமாவுக்குப் புதியவர்களைத் தன் படங்களில் பயன்படுத்தத் தொடங்கினார்.
ப்ரெஸ்ஸோன் இயக்கிய “Mouchette” (1967) ஜார்ஜ் பெர்னானோஸின் கதை. முஷெட் பள்ளியில் படிக்கும் பெண். குடிகாரத் தந்தையும் சகோதரனும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். படுக்கையிலிருக்கும் நோயுற்ற தாயையும் கைக் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவளின் பொறுப்பு. பள்ளியிலும், வீட்டிலும் அனைவரும் அவள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்.

ஒரு மாலை பள்ளியிலிருந்து காட்டுப் பகுதிவழியாக வரும் முஷெட் மழையில் வழிதவறிவிடுகிறாள். திருட்டு வேட்டையாட அங்கு வரும் அர்சென் அவளைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்று கற்பழித்துவிடுகிறான். அதிகாலை வீடு திரும்பி தாயையும் குழந்தையையும் கவனித்து விட்டு உறங்கச் செல்கிறாள். கேட்பார் யருமில்லை. தந்தையும் சகோதரனும் வெளியே சென்றிருக்கின்றனர்.

முஷெட், நண்பர்கள், நெருக்கமனவர்கள் யாருமற்று தனித்து உலகை எதிர்கொள்பவள். கற்பழிக்கப்படும்பொழுது, இறுதியில் தன் அணைப்பால் அவள் அதை ஏற்றுக் கொள்ளுவதாகக் காட்டப்படும் காட்சி, அந்தக் குரூரமான நேரத்தில் கூட அவள் அன்புக்கும் அணைப்பிற்கும் ஏங்குவதைச் சொல்லுகிறது. கசப்பான, கொடுமையான ஒரு உலகத்தை ப்ரெஸ்ஸோன் நமக்கு காட்டுகிறர். சாவு அனைத்து அநீதிகளிலிருந்தும் மொஷெட்டுக்கு விடுதலையை அளிக்கிறது.
ப்ரெஸ்ஸோன் தனது படஙகள் அனைத்திலும் பெரிய அரங்கங்கள், பகட்டான காட்சிகளைத் தவிர்த்தார். ப்ரெஸ்ஸொனின் படங்களில் வரும் பாத்திரங்களின் பார்வையும், நடையும் , ஒவ்வொரு உடல் அசைவும், காட்டப்படும் வெற்றிடங்களும் (spaces) கதையின் ஆழத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காணலம். குறைவாகத் திரையில் காட்டுவதைக் கொண்டு காட்சிகளை முழுமையாக உணரச் செய்வதில் ப்ரெஸ்ஸோன் ஒரு ஜென் குருவின் எளிமையுடன் இயங்குபவர்.

திரைப்படங்களை முழுக் கவனத்துடன், ஆழமாக ரசிப்பவர்களுக்கு ப்ரெஸ்ஸோனின் திரைப்படங்கள் என்றும் மறக்கமுடியாத அனுபவங்களாக அமைவதில் வியப்பில்லை. ப்ரெஸ்ஸோனின் படைப்புகளை முழுமையாக ரசிப்பதற்கு, சட்டகத்திற்கு உள்ளும், வெளியிலும் நடப்பவற்றை உணருவதற்கான ஆழ்ந்த கவனமும், கற்பனையும்; இசையைக் கேட்பது போல் ஒலியை நுட்பமாக கேட்டு உணருவதும் அவசியமாகிறது. பார்வையாளரின் முழுப் பங்களிப்பும் அவசியமாகிறது. மேடை நாடகத்தை அப்படியே காமெரா கொண்டு படமாகப் பதிவு செய்வது போலத் தயாரிக்கப்படுபவற்றை சினிமா என்று பார்த்துப் பழகியவர்களுக்குத் தனது திரைப்படங்கள் பிடிக்காமல் போவது அதிசயமல்ல என்பார் ப்ரெஸ்ஸோன்

ரஷ்யத் திரைப்பட மேதை தார்க்கோவ்ஸ்கியின் சிறந்த பத்து உலகத் திரைப்படங்கள் பட்டியலில் ப்ரெஸ்ஸோனின் Diary of a Country Priest,Mouchette ஆகிய இரண்டும் இடம் பெறுகின்றன.
(’தமிழினி’ இலக்கிய இதழில் வெளிவந்த ’திரைப்பட மேதை ராபர்ட் ப்ரெஸ்ஸோன்’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள்கள் இங்கு தரப்பட்டுள்ளன. )

No comments: