Tuesday, 27 September 2011

இங்மர் பெர்க்மன் -பகுதி 2



இங்மர் பெர்க்மன்

பகுதி 2

எஸ்.ஆனந்த்

இங்மர் பெர்க்மன் திரைப்படங்களை ரசிப்பது பற்றிக் குறிப்பிடுகையில், இசையைக் கேட்டு உணர்ந்து ரசிப்பதுபோல, பிம்பங்களைக் கண்டு ‘உணர்ந்து’ அனுபவிக்க வேண்டும்; இசையும் பிம்பங்களும் புரிதலைத் தாண்டிச் செல்பவை (both music and images bypass intellect) என்கிறார். திரைப்படங்களைப் பார்வையால் கண்டு ‘உணர்வதை’யே திரைப்பட மேதைகள் ப்ரெஸ்ஸான், குரொசாவா, தார்க்கோவ்ஸ்கி அனைவரும் வலியுறுத்துகின்றனர்; ‘புரிதலை’ அல்ல.

திரைப்படத்தின் ‘அர்த்தம்’ பற்றிப் பேசுவதில்லை பெர்க்மன். படங்களின் வழியே வெளிப்படுத்திய, ஆழ் மனதில் புதைந்து கிடந்த பயங்களையும் பிறழ்வுகளையும், ஓளிவுமறைவின்றிப் பேசுவதற்கு அவர் தயங்கியதில்லை. மனநிலை பாதிப்புக்குக் காரணமான இளவயது அனுபவங்களையும் அவர் மறைத்ததில்லை. சிறுவயதில் கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர். கூடப் பிறந்த தங்கையையும் தமையனையும் சேர்த்து மூன்று குழந்தைகள். தவறுகளுக்கு பிரம்படிகள், துணிகள் வைக்கப்படும் பெரிய அலமாரிக்குள் (closet) பல மணிநேரம் பூட்டி வைக்கப்படுவது போன்ற தண்டனைகள்.

கண்டிப்பும் தண்டனைகளும் ஏற்படுத்திய ஆறாத மனக் காயங்கள் இளம் பெர்க்மனின் மனதையும் உடல் நலத்தையும் வெகுவாகப் பாதிக்கத் தொடங்கின. தந்தையை அறவே வெறுத்த பெர்க்மன், பத்தொன்பதாவது வயதிலிருந்தே பெற்றோரிடமிருந்து விலகி விட்டார். மேலும் சில அனுபவங்களும் பாதிக்க, இறுதி வரை மனநல சிகிச்சை பெறவேண்டியதாயிற்று. வாழ் நாள் முழுவதும் தொடர்ந்த உடல், மன நலக் குறைவுகள் இந்த மேதையைச் செயலிழந்து சோர்ந்து போகச் செய்யவில்லை. மாறாக, படைப்பாக்கத்தின் உச்சத்திற்கு உந்திச் சென்றன. காவியமயமான அற்புதப் படைப்புகளை உருவாக்கினார். ஒவ்வொரு முறை மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கிய போதும் பக்கம் பக்கமாகத் திரைக்கதைகளை எழுதிக்கொண்டிருந்தார்.

சேம்பர் இசை -Chamber Music – என்பது மேற்கத்திய செவ்வியல் இசையில் ஒரு பிரிவு. குறைவான – இரண்டு அல்லது மூன்று – இசைக்கருவிகளை மட்டும் கொண்டு இசைப்பதற்காக எழுதப்படும் செவ்வியல் இசை. தொடக்கத்தில், அரண்மனை அறைகளுக்குள் இசைப்பதற்காக எழுதப்பட்டுவந்தது. இதைப் போல இரண்டு மூன்று கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு குறிப்பிட்ட பரப்புக்குள் நடைபெறுவதாக பெர்க்மனால் உருவாக்கப்பட்ட படங்கள் ‘சேம்பர் திரைப்படங்கள்’ – Chamber Films- என அழைக்கப்பட்டன. முப்படத் தொகுப்பும் அதைத் தொடர்ந்து அவர் இயக்கிய பல படங்களும் இப் பிரிவைச் சேர்ந்தவை.

நவீன திரைப்பட ஆக்கங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ‘பெர்சோனா’வின் திரைக்கதையை ‘சைலன்ஸ்’ திரைப்படத்தை இயக்கியபின் மருத்துவமனையில் இருந்த பொழுது எழுதத் தொடங்கினார். பரிசோதனை முயற்சியாக பெர்க்மன் தொடங்கிய ‘பெர்சோனா’ , திரைப்பட சரித்திரத்தின் முக்கியமான பின்நவீனத்துவப் படைப்பாக உருப்பெற்றது. பிம்பங்களைக் கொண்டு மட்டுமே விவரிக்க முடியும் ரகசியங்களை உள்ளடக்கிய படைப்பு என இப்படம் பற்றி பெர்க்மன் குறிப்பிடுகிறார்.

பெர்சோனா என்பதற்கு லத்தீன் மொழியில் முகமூடி, முகத்திரை, பொய்முகம் என்பதான அர்த்தங்கள். இரண்டே பாத்திரங்கள். இருவரின் ஆழ்மன உணர்வுகளும், மனக்கொந்தளிப்புகளும் துகிலுரிக்கப்பட்டு நம் முன் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. இதுவரை நாம் பார்த்தறியா முறைகளில் இரு மனங்களின் போராட்டங்களையும் ரகசியங்களையும் காமெரா திரையில் காண்பித்துக் கொண்டிருக்கிறது.

புரொஜெக்டரின் இரு ஆர்க்குகளும் சூடேறி பிரகாசமாக, செலுலாய்ட் படச்சுருள் ஒடத் துவங்குவதைத் தொடர்ந்து பல்வேறு பிம்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. உடல்கள். மிக அருகாமைக் கோணங்களில் முகங்கள், கைகள், உடலின் பிற பகுதிகள். ஒரு சிறுவன் எதையோ கண்டு கையைக் கொண்டு தொடுவதுபோல் துழாவுகிறான், அவன் தொடுவது திரை முழுவதும் மங்கலாகத் தெரியும் முகம். முதலில் எலிசபெத்தின் (லிவ் உல்மனின்) முகம்; அடுத்து அல்மாவின் (பிபி ஆண்டெர்சனின்) முகம். காணப் போவது காமெராவால் பதிவு செய்யப்பட்ட பிம்பங்கள் – எதுவும் நிஜமல்ல - அனைத்தும் புனைவு . என்பதை அறுபது ஷாட்கள் கொண்ட ஆறரை நிமிடங்கள் ஓடும் ஆரம்பப் பகுதி பார்வையாளருக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது. கதை துவங்குகிறது.

பாதி நாடகத்தில், பிரபல நடிகை எலிசபெத் பேச்சை நிறுத்திவிடுகிறாள். மௌனமாகிவிடுகிறாள். மனநல சிகிச்சை பயனளிப்பதில்லை. மகனையும் கணவனையும் நிராகரித்துவிடுகிறாள். கணவன் கடிதத்துடன் அனுப்பும் மகனின் புகைப்படத்தைக் கிழித்துப்போடுகிறாள். தனிமையும் அமைதியும் அவள் குணமாக உதவலாம் எனக் கருதும் மருத்துவர், தனது விடுமுறை இல்லத்துக்கு அனுப்புகிறார். தாதி அல்மா உடன் செல்கிறாள்.

கதையின் பெரும்பகுதி இந்தத் தனிமையான வீட்டில் நிகழ்கிறது. தனிமை இரு பெண்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது. அல்மா நிறுத்தாது பேசிக்கொண்டிருக்கிறாள். உள்ளத்திலுள்ள அனைத்தையும் எலிசபெத்திடம் கொட்டிவிடுகிறாள். தானும் தோழியும் கடற்கரையில் இரு இளைஞர்களுடன் உடலுறவு கொண்ட நிகழ்வை ஒவ்வொரு கட்டமாக அல்மா விவரித்துக்கொண்டிருக்க, எலிசபெத் உணர்ச்சி பொங்கக் கேட்டுக்கொண்டிருக்கும் காட்சி, இரு பெண்களின் உறவு நெருக்கமாகும் முதற் பகுதியின் முக்கிய காட்சி. பெர்க்மனுக்கே உரிய பாணியில் இலக்கிய நயத்துடன் படமாக்கப்பட்டிருக்கும் இக்காட்சியில், அல்மாவின் பேச்சும், பேசும் முறையும் பார்வையாளரைக் கடற்கரையில் நிகழ்பவற்றை நேரில் காண்பதாக உணரச் செய்கிறது.

எலிசபெத்தின் முழுமையான மௌனம் அல்மாவின் மனநிலையைப் பாதிக்கிறது. மனதளவில் சிறுகச் சிறுக உடைந்து, தன்னை எலிசபெத்தாக நினைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிடுகிறாள். இரு பெண்களும் ஒருவருள் ஒருவராக மாறுவதை இருவர் முகங்களும் பாதிப்பாதியாக இணைக்கப்பட்ட ஒரே முகமாக பெர்க்மன் காட்டுகிறார். கருப்புக் கண்ணாடியணிந்த எலிசபெத்தின் கணவரைச் சந்திப்பதாகக் கனவு காணும் அல்மா, அக் கனவில் எலிசபெத் அருகிலிருக்க, தான் எலிசபெத்தாகப் பேசி, அவரிடம் உறவு கொள்கிறாள்.

நிதானமும் மனஉறுதியும் மிக்கவளாக மாறிக்கொண்டிருக்கும் எலிசபெத்திற்கு அல்மாவினுள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்துக்கொண்டிருப்பது சுவராஸ்யமாக இருக்கிறது. ஒருமுறை அல்மா பேச்சால் புண்படுத்தும் போது கோபத்தில் அடித்துவிடுகிறாள். பதிலுக்கு தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்தை அல்மா கையில் எடுக்க, பயத்தில் ‘வேண்டாம், அப்படிச் செய்யாதே’ என்று எலிசபெத்தின் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவருகின்றன. எலிசபெத்தின் குரலை முதல் முறையாக அல்மாவும் நாமும் கேட்கிறோம். அதற்கு முன் ஒருமுறை எலிசபெத் மிக மெதுவாக அல்மாவிடம் பேசுவதாக நாம் கேட்பது அல்மாவின் கற்பனையாக இருக்கலாம்.

இருவருக்குள்ளும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் உச்சமடைந்து, அல்மா தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரம் காட்சி உடைகிறது. வேறு ஏதோ சிரிப்புக் காட்சியொன்று திரையில் போய்க்கொண்டிருக்கிறது , செலு லாய்ட் பிலிம் எரிந்து போவதாகக் காட்டப்படுகிறது. இது போல இறுதியில் அல்மா வீட்டை விட்டு வெளியேறும் நேரம், கிரேனில், உயரத்திலிருந்துகொண்டு இருவர் காமெராவால் அவளைத் திரைப்படமெடுத்துக் கொண்டிருப்பது ஒரு நொடி காட்டப்பட்டு மீண்டும் கதை தொடர்கிறது. திரையில் காண்பிக்கப்படும் அல்மாவும் எலிச பெத்தும், அவர்களின் உறவும் உணர்ச்சிகளும் வெறும் புனைவுகள் – செலுலாய்டில் பதிவாயிருக்கும் பிம்பங்கள் – இவை நிஜமல்ல என்று இந்த இடைவெளிகளில் பார்வையாளருக்கு மீண்டும் நினைவூட்டப்படுகிறது.

பெர்க்மன் முதலில், எலிசபெத் நலமாகி மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதாக இக்கதையை எழுதியிருந்தார் என அமெரிக்க விமரிசகர் சூசன் சாண்டாக் ‘பெர்சோனா’ பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார். திரைப்படத்தில் வேறுவிதமாக முடிகிறது. இறுதிக் காட்சியில் மீண்டும் அல்மாவையும் எலிசபெத்தையும் முதலில் கண்ட அதே நிலையில் அதே மருத்துவமனை அறையில் காண்கிறோம். ‘ஒன்றுமில்லை‘ என்ற வார்த்தையை அல்மா சொல்ல எலிசபெத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பெர்சொனாவின் புகழ்பெற்ற கருப்புவெள்ளைச் சட்டக ஓவியமாக, இரு பெண்களின் முகங்களும் சேர்ந்திருக்கும் காட்சியுடன் இப்படம் முடிவு பெறுகிறது.

குரொசாவாவின் ‘ரஷமோன்’ திரைப்படம் போன்று, ‘பெர்சோனா’வும் உண்மையைப் பற்றிய ஒரு தியானம். ‘ரஷமோன்’ திரைப்படம் அவருள் எழுப்பிய உண்மை பற்றிய கேள்விகள், ‘பெர்சோனா’ திரைக்கதை உருவாவதற்கான காரணமாக அமைந்ததாக பெர்க்மன் குறிப்பிடுகிறார். எலிசபெத் ஒரு நாடக நடிகை. வாழ்நாள் முழுவதும் மேடைகளில் நடித்துக்கொண்டிருப்பவள். நடிகையாக, நிஜமல்லாத வசனங்களை மேடைகளில் பேசி, நடித்துக் கொண்டிருக்கும் தன் வாழ்வு உண்மையற்ற, பொய்யான தருணங்களால் நிறைந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பேச்சை நிறுத்திவிடுகிறாள். எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மௌனமாகிவிடுகிறாள்.

தனது மௌனத்தை விடப் பன்மடங்கு ஆழ்ந்த மௌனத்தை எதிர்கொள்ளும் தருணம் அதிர்ந்து போகிறாள். அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிராக வியத்நாமில் புத்த பிக்கு தீக்குளிப்பதைத் தொலைக்காட்சிச் செய்தியில் காணும் போது பதறி நிலை குலைந்துவிடுகிறாள். தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருக்கும் பிக்குவின் வலியை மீறிய ஆழ்ந்த மௌனம் எலிசபெத்தைப் போலவே நம்மையும் கலங்க வைத்துவிடுகிறது. மற்றொரு முக்கிய அரசியல் நிகழ்வு ஒன்று – நாற்பதுகளில் ‘வார்சா எழுச்சி’ (Warsaw uprising)யின்போது எடுக்கப்பட்ட புகைப் படம் - காட்டப்படுகிறது, போலந்தில் வார்சா நகரின் சேரிப்பகுதியில் நாஜிகளின் துப்பாக்கிகளின் முன் கைகளைத் தூக்கி மௌனமாக நின்றுகொண்டிருக்கும் யூதர்கள். அவர்களில் ஒரு சிறுவன் மிரளும் விழிகளுடன் முழுச்சட்டகத்தில் காண்பிக்கப்படுகிறான்.

பெர்சோனா, கட்டுடைத்து உள்வாங்கப்படவேண்டிய பின்நவீனத்துவப் படைப்பு. கட்டுடைப்பதற்கான தடயங்கள் எவற்றையும் பெர்க்மன் இப்படத்தில் வைத்திருக்கவில்லை. திரைப்பட அறிஞர் பீட்டர் கோவீ ‘பெர் சோனா’ பற்றிச் சொல்லும்போது, இப்படத்தை ஒருவர் அணுகுவதும், மற்றொருவர் அணுகுவதும் கட்டாயம் ஒன்றுக்கொன்று வேறாகத்தான் இருக்கும்; இருந்தும் இரு பார்வைகளும் சரியாகத்தான் இருக்கும் என்கிறார்.

இந்த நூற்றாண்டின் முக்கியமான கலைப்படைப்புகளில் ஒன்றான பெர்சோனாவை எழுத்தில் விவரிப்பது கடினம். முதல் பகுதியில் ஆர்க் விளக்குகள் எரியத் தொடங்குவதிலிருந்து இறுதிக்காட்சி வரை பிம்பங்கள் கவிதையாக கதையைக் கொண்டுசெல்கின்றன. ஸ்வென் நிக்விஸ்ட்டின் ஒளிப்பதிவில் உருவாயிருக்கும் ஒவ்வொரு சட்டகமும் என்றும் நினைவை விட்டு அகலாதவை.

அறுபதுகளில் ஐரோப்பியத் திரையுலகில் எதிர் கலாச்சார அலை ஒன்று உருவானது பிரெஞ்சு புதிய அலையைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில், திரைப்படக் கலையில் புதிய முயற்சிகளை மேற்கொண்ட இளம் இயக்குநர்களால் கடந்த காலப் பாணிகள் நிரா கரிக்கப்பட்டன. இக்காலத்தில் ‘கஷியே து சினிமா’ போன்ற பத்திரிகைகளில் பிரெஞ்சு புதியஅலை இயக்கத்தைச் சேர்ந்த சிலரால் கடுமையாக விமரிசிக்கப்பட்ட இயக்குநர்களில் பெர்க்மனும் ஒருவர். அவருக்கே உரிய வகையில் இவ்விமரிசனங்களை எதிர்கொண்டார். ‘கஷியே து சினிமா’ இதழில் தன்னையே தாக்கி புனைபெயரில் கட்டுரை எழுதினார். பெர்சோனா இவர்களின் விமரிசனங்களுக்குப் பதிலாக அமைந்தது.

‘பெர்சோனா’வுக்குப் பின் தான் வகித்துவந்த ஸ்வீடன் ராயல் நாடகக் குழு டைரக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பெர்சோனா உருவாகிக் கொண்டிருந்த நேரம் பிபி ஆண்டெர்சனுடனான உறவு முடிந்து, லிவ் உல்மனுடன் நட்பு தொடங்கியிருந்தது. சற்றுகாலம் ஒன்றாக வாழ்ந்தனர். இருவருக்கும் லின் என்ற மகளும் உண்டு. இவ்விரு நடிகைகளும் பெர்க்மனிடம் பெரு மதிப்பு கொண்டிருந்தனர்; இறுதிவரை நட்புடன் இருந்ததுடன், அவரது முக்கிய திரைப்படங்களிலும் நடித்துள்ளனர்.

தீவின் தனிமையில் வீடு, பிரபுக்களும் உயர்குடி தம்பதிகளும் சந்திக்கும் மாளிகை, அவர்கள் அனைவரும் ரத்தக்காட்டேரிகளாக மாறும் விசித்திரம் எனத் திகிலும் மர்மமும் கொண்டு சொல்லப்படும் கதை Hour of the Wolf (1968). ஓவியன் யொஹான் போர்க்கும் , அவன் மனைவி அல்மாவும் ஒரு தீவில் வாழ்கின்றனர். யொஹான் திடீரென காணாமற் போகிறான். அல்மா அந்த வீட்டில் யொஹானுடன் கழித்த இறுதி நாட்களைப் பற்றிச் சொல்வதுடன் படம் துவங்கி, அதுவரை நடந்தவை flashback ஆகக் காண்பிக்கப்படுகின்றன. ஸ்வென் நிக்விஸ்ட்டின் அற்புதமான ஒளிப்பதிவு. பெர்க்மனின் மனப்பிரச்சினைகளை அனைவரும் அறிந்திருந்தபடியால், கட்டவிழ்த்து விடப்பட்ட பெர்க்மனின் மனப்பேய்கள் பற்றிய படம் என்று இப்படத்தைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அதே வருடம் Shame (1968) வெளிவந்தது. ஸ்வீடனில் உள்நாட்டுப் போர் நடப்பதான கதை. வல்லரசுகளின் ஆயுதக் குவிப்பு, போர் போன்றவற்றைப் பற்றி ஸ்வீடனில் அதிக விவாதங்களை உருவாக்கிய திரைப்படம். ஸ்வீடன் உலகப்போர்களில் பங்கு பெறாது நடுநிலை வகுக்கும் நாடு. படம் வெளியான நேரம், ஒருபுறம் வியத்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பும், போரும் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் செக்கோஸ்லொவாகியாவில் ரஷ்யாவின் தலையீட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அமெரிக்கா மீது ஏற்கெனவே மக்களுக்கு மிகுந்த அதிருப்தியும் கோபமும் உண்டாயிருந்தது. ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகள், வல்லரசான சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலை உண்டாகலாம் எனும் பயமும் மக்களுக்கு இருந்தது.

யானும், ஈவாவும் ஒரு தீவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வயலின் கலைஞர்கள். திடீரென ஒரு நாள் போர்விமானங்கள் தலைக்குமேல் தாழப் பறக்கின்றன. குண்டுவீச்சால் ஏக சேதம். யான் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறுதியில் விடப்படுகிறான். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி போரின் அவலத்திற்கிடையே மாட்டிக்கொள்ளும்போது நிகழ்வது பெர்க்மனின் பாணியில் சொல்லப்படுகிறது. போரின் வன்முறையைத் தொடர்ந்து மனிதருள் உருவாகும் வன்முறையைக் காண்கிறோம். இறுதியில் தீவிலிருந்து யானும் ஈவாவும் படகில் தப்பிச் செல்கின்றனர். குடிநீர் தீர்ந்துவிடுகிறது. சக பயணி தற்கொலை செய்துகொள்கிறார். கரை தெரியாக் கடல் நடுவே படகில் யானுக்குத் தான் கண்ட கனவை ஈவா சொல்லிக் கொண்டிருப்பதுடன் படம் முடிகிறது.

மனிதருள்ளிருக்கும் வன்முறையை வெளிப்படுத்துவதை அடுத்த படமான The Passion of Anna விலும் தொடருகிறார். மனைவியை இழந்த, ஆந்த்ரேயா தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். தற்செயலாகச் சந்திக்கும் ஆனாவிடம் நெருக்கமாகிறான். தான் ஓட்டிக்கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானபோது கணவனையும் மகனையும் இழந்தவள். இறந்து போன அவள் கனவனின் பெயரும் ஆந்த்ரேயா. அவளுடன் நட்பாக இருக்கும் தம்பதிகள் ஈவா, எல்லிஸ் இருவரையும் சந்திக்கிறோம்.

ஆந்த்ரேயாவும் ஆனாவும் ஒன்றாக வாழத் துவங்க, இருவருக்குமிடையே உணர்வுச் சிக்கல்கள் பெரிதாக உருவாகுகின்றன. பெர்சோனா போன்று இப்படத்திலும் இடைச்செருகல்கள். நடிகர்கள் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பகுதிகள் இடையிடையே காட்டப்படுகின்றன. பிரெக்டியப் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள பெர்க்மனின் இரண்டாவது வண்ணப்படம். அவரின் முதல் வண்ணப்படம் All These Women (1964).

Passion of Anna உருவாக்கத்தின் போது வண்ணப் படம் எடுப்பது பற்றி பெர்க்மனுக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்வெஸ்ட்டுக்கும் இடையே ஏராளமான விவாதங்கள், கருத்து வேற்றுமைகள். அடுத்து வந்த பெர்க்மனின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான Cries and Whispers (1973) இருவருக்கும் மிகுந்த திருப்தியை அளித்த வண்ணப்படம். நிக்வெஸ்ட்டின் ஒளிப்பதிவுக்காகப் பரிசு பெற்ற திரைப்படம்.

பெர்சோனாவுக்கு அடுத்து மீண்டும் முழுக்க பெண்களைக் கொண்டு உருவானது Cries and Whispers. புற்றுநோய் முற்றி இறந்துகொண்டிருக்கும் ஆக்னெஸ், அவள் தாதி ஆனா, உடனிருப்பதற்காக வந்திருக்கும் சகோதரிகள் மரியா, காரின் ஆக நான்கு பெண்களைச் சுற்றி நிகழும் கதை. அருகாமைக் காட்சிகளில் வீட்டிலுள்ள கடிகாரங்கள் காட்டப்படுவதில் தொடங்கி, அடுத்து வரும் காட்சிகளில் இக் கதாபாத்திரங்களின் உறவுகளும் மனநிலைகளும் விவரிக்கப்படுகின்றன.

ஆக்னெஸைக் காண வரும் மருத்துவர் தாவித், ஆக்னெஸூக்கும் மரியாவுக்கும் மிகவும் நெருக்கமானவர். வந்திருக்கும் மரியாவைச் சந்திக்கிறார். கடந்த காலத்தில் இவ்விருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு காண்பிக்கப்படுகிறது. மரியாவின் கணவன் வெளியூர் சென்றிருக்கும் நேரம், தாதியின் குழந்தைக்கு மருத்துவம் செய்ய வரும் தாவிதை மரியா இரவு தங்கச் செய்கிறாள். இருவரும் பழைய காதலர்கள். மரியா தாவித் தங்கும் அறையில் இரவைக் கழிக்கிறாள். இப்பகுதியில், தனது படுக்கை அறையில், நிலைக்கண்ணாடியில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தெரியும் மரியாவின் முகத்தை தாவித் விவரிக்கும் காட்சி பெர்க்மனால் ஒரு கவிதை போலப் படமாக்கப்பட்டுள்ளது. ஊரிலிருந்து திரும்பும் கணவன் இதை அறியும் போது துயரத்தில் மேசைக்கத்தியால் தன்னைக் காயப்படுத்திக் கொள்கிறான்.

அடுத்த சகோதரி காரினைப் பற்றிச் சொல்லப்படும் பகுதியில் அதிர்ச்சியூட்டும் காட்சி ஒன்றைக் காண்கிறோம். உடல் உணர்சிகளுக்கு வடிகாலின்றி, பொய்த்துப்போன தன் திருமண வாழ்க்கையை எண்ணி, காரின் மன வெறுப்பில் பிறப்புறுப்பை உடைந்த கண்னாடித் துண்டால் சிதைத்துக் கொள்கிறாள். காரினுக்கும் மரியாவுக்கும் இடையே உறவு பனியும் நெருப்புமாகத் தொடர்கிறது. ஒருவரை ஒருவர் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தாதி ஆனா சமீபத்தில் குழந்தையை இழந்தவள் என்பதை அறிகிறோம். ஆக்னெஸ் எப்போதும் இறந்துபோன தாயை நினைத்து ஏங்கிக்கொண்டிருப்பவள். அவள் பாத்திரம் அவர் தாயின் நினவில் உருவானது என பெர்க்மன் கூறிப்பிடுகிறார்.

ஆக்னெஸ் இறந்து விடுகிறாள். பிறகு அதிர்ச்சியூட்டும் வகையில் கதை தொடர்கிறது. ஆக்னெஸின் உடல் இருக்கும் அறையிலிருந்து சப்தங்கள் கேட்கின்றன. அவள் மீண்டும் உயிருடனிருப்பதாகத் தெரிகிறது. மரியாவை அழைத்துப் பேசும் ஆக்னெஸ் அவளை அணைத்துக் கொள்ள முயல, சகோதரிகள் அதிர்ச்சியில் உறைந்துவிடுகின்றனர். தாதி ஆனா, தான் கவனித்துக்கொள்வதாக, ஆக்னெஸின் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்கிறாள். இப்பகுதி முழுக்கக் கனவு; தாதி ஆனாவின் கனவு. தாய்க்கு ஏங்கும் ஆக்னெஸ், தாதி ஆனாவின் மடியில் குழந்தையைப்போல் அமைதியாகப் படுத்திருக்க, ஆனா ஆக்னெஸைத் தான் இழந்த குழந்தையாக நினைத்து மார்போடு அணைத்துக்கொண்டிருக்கும் காட்சியுடன் இக்கனவுப் பகுதி முடிகிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் கதையில் கனவுப்பகுதியைப் பிரித்துக் கண்டுகொள்ள வேண்டியது பார்வையாளரின் பொறுப்பாகிறது.

சவஅடக்கம் முடிந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றபின் ஆனா ஆக்னெஸின் நாட்குறிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நாட்குறிப்பில் ஆக்னெஸ் எழுதியிருக்கும் காட்சி ஒன்று திரையில் விரிகிறது. வீட்டிற்கு வெளியே, பிரகாசமான மாலைப்பொழுதில் ஆனா ஆட்டிவிடும் ஊஞ்சலில் மூன்று சகோதரிகளும் அமர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருக்க, மனது முழுமையாக நிறைந்த நிலையில் ஆக்னெஸ் மன அமைதியுடன் இருப்பதுடன் படம் முடிவடைகிறது. ஆரம்ப காலங்களில் பெர்க்மன் படங்களில் நடித்த ஹாரியட் ஆண்டெர்டன் ஆக்னெஸாகவும், இன்கிரிட் துலின் காரின் ஆகவும், லிவ் உல்மன் மரியா ஆகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

நார்வே நாட்டு ஓவியர் எட்வர்ட் முன்க் (Edvard Munch) வரைந்த ஓவியங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். முன்க் வரைந்த ‘பொறாமை’ (Jealousy) ‘அலறல்’(The Scream), ‘மனமுறிவு’ (Despair) ஓவியங்களின் வண்ணங்களும், அவ்வோவியங்கள் வெளிப்படுத்தும் மன அலைக்கழிப்புகளும் Cries and Whispers முழுக்க பிரதிபலிப்பதைக் காணலாம். சிகப்பு நிறம் ஆன்மாவின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக பெர்க்மன் குறிப்பிடுகிறார். முதல் சட்டகத்திலிருந்தே முன்க் ஓவியங்களின் ஆழ்ந்த சிகப்பு வண்ணத்தினுள் மூழ்கிவிடுகிறோம். காட்சியின் fade out கூட வழக்கமான கருப்புக்குப் பதில் சிகப்பு நிறத்தில். சிகப்பு வெள்ளை வண்ணங்கள் படம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அற்புதமான கலைத்திறனோடு, பிரமிக்க வைக்கும் அருகாமைக் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ள Cries and Whispers கண்டு, உணர்ந்து, அனுபவிக்கப்பட வேண்டிய திரைக் காவியம்.

Cries and Whispers உருவாகிக்கொண்டிருந்த நேரத்தில் பெர்க்மன் ஐந்தாவது மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். நான்கு திருமணங்கள் விவாகரத்துகளில் முடிந்திருந்தன. தாம்பத்திய உறவில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், விவாகரத்துகள் ஏற்படுத்திய வலிகளையும் பெர்க்மனை விடத் தெளிவாக எவரும் சொல்லிவிட முடியாது. அந்த அனுபவங்களின் அடிப்படையில், ஆயிரம் பக்கங்களுக்கு மேல் Scenes from a Marriage திரைக்கதையை மன சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது எழுதியிருந்தார். Scenes from a Marriage (1973) ஸ்வீடனில் தொலக்காட்சித் தொடராக வெளிவந்து, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. இத்தொடர் ஒளிபரப்பானதை அடுத்து தாம்பத்திய உறவு பற்றி அதுவரை பேசப்பட்டிராத பல பிரச்சினைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன.

Scenes from a Marriage யொஹானும் மரியானும் தாம்பத்திய வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சொல்லும் படம். யொஹானுக்கு ஒரு இளம்பெண்ணிடம் தொடர்பு ஏற்பட, இவர்களின் திருமணம் விவா கரத்தில் முடிகிறது. ஏழு வருடங்கள் இவர்கள் வாழ்வில் நிகழும் முக்கிய காட்சிகளைக் காண்கிறோம். பதினாறு மில்லி மீட்டர் காமெராவில் தொலைக்காட்சிக்காகப் படமாக்கப்பட்ட இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஒரே அறையில் நிகழ்கின்றன. ஆறு, ஒரு மணி நேரப் பகுதிகளாகப் படமாக்கப்பட்ட இத் தொலைக்காட்சித் தொடர் திரைப்பட வெளியீட்டுக்காக மூன்று மணி நேரமாக பெர்க்மனால் சுருக்கப்பட்டது.

பெர்க்மன் மேற்கத்திய செவ்வியல் இசையை நன்கு அறிந்தவர்; ஆழ்ந்த ரசிகர். தனக்கு மிகவும் பிடித்த மொசார்ட்டின் இசையைப் பின்புலமாகக் கொண்டு அவர் உருவாக்கிய திரைப்படம் The Magic Flute. (1975). 1976 இல் தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட Face to Face திரைப்படமாக வெளிவந்தது. அந்த வருடம் வருமான வரி தொடர்பாக பெர்க்மன் கைது செய்யப் பட்டார். அதிர்ச்சியடைந்த பெர்க்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியதாயிற்று. அந்த நிகழ்வை அவமானமாகவும், அரசு தனக்கு இழைத்த அநீதியாகவும் கருதி ஸ்வீடனை விட்டு வெளியேறி ஜெர்மனிக்குச் சென்றுவிட்டார். விசாரணை அவரை நிரபராதியாக நிரூபித்தது. ஸ்வீடனின் பெயரை உலகளவில் உயர்த்திய மேதைக்குக் களங்கம் கற்பித்துவிட்டதற்கு வருந்தி, அவரை ஸ்வீடனுக்குத் திரும்புமாறு ஸ்வீடனின் பிரதமர் முதல் முக்கிய அறிஞர்கள், பிரமுகர்கள் அனைவரும் வேண்டிக்கொண்டதை அவர் சற்றும் பொருட்படுத்தவில்லை. கோபம் தணியும் வரை, ஜெர்மனியில் ம்யூனிக் நகரில் சில வருடங்கள் தங்கியிருந்தார். 1977 இல் அவர் இயக்கத்தில் ஜெர்மனியில் உருவான The Serpent’s Egg அவரது அப்போதைய வலிகளை வெளிப்படுத்திய இறுக்கமான படம்.

1978 இல் நார்வேயின், ஆஸ்லோ நகரில் அவரின் மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பான Autumn Sonata உருவானது. நீண்ட நாட்களுக்குப்பிறகு மகள் ஈவாவின் அழைப்பை ஏற்று அவளையும் அவள் கணவரையும் சந்திக்க சார்லட் வருகிறாள். சார்லட் கணவரை சில மாதங்களுக்கு முன் இழந்தவள். பிரபல பியானோ இசைக் கலைஞராதலால் எப்போதும் ஒய்வில்லாது இசை நிகழ்ச்சிகளுக்காகப் பல ஊர்களுக்குப் போய்க் கொண்டிருப்பவள். முதலில் மகளுடன் தாய் மகிழ்ச்சியாக இருக்க, சிறிது சிறிதாக இருவருக்கிடையே உணர்சி மோதல்கள் தொடங்குகின்றன. மருத்துவக் கண்காணிப்பு விடுதியில் சேர்த்திருந்த இரண்டாவது மகளை அந்த வீட்டில் பார்க்கும்போது சார்லட் அதிர்ச்சியடைகிறாள். இசை நிகழ்ச்சிகளை முக்கியமாக எடுத்துக்கொண்டு தன்னையும் நோயுற்ற சகோதரியையும் கவனிக்காது விட்ட தாயின் மீது ஈவாவுக்குக் கோபம் வெடித்துப் பீறிட, ஈவாவுக்கும் சார்லட்டுக்கும் இடையே நிகழும் உணர்ச்சிப் போராட்டம் இப்படத்தின் உச்சம். மனமுடைந்து போகும் சார்லட் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறாள். கோபம் தணிந்தபின் மீண்டும் ஈவா தாய்க்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறாள்.

ஈவாவாக லிவ் உல்மனும், சார்லட் ஆக இன்க்ரிட் பெர்க்மனும் நடித்திருக்கின்றனர். Autumn Sonata பெர்க்மன் இயக்கத்தில் இன்க்ரிட் பெர்க்மன் நடித்த ஒரே படமும், இன்க்ரிட்டின் இறுதித் திரைப்படமுமாகும். புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில், நாட்களை எண்ணிக் கொண்டிருந்த இன்க்ரிட் பெர்க்மனை, அதுவரை அவர் நடித்திராத பாத்திரப்படைப்பில் பெர்க்மன் நடிக்க வைத்தார். முதலில் இருவருக்குமிடையே ஏராளமான பிரச்சினைகள். படிப்படியாக இந்த நட்சத்திர நடிகையை பெர்க்மன் தன் வழிக்குக் கொண்டுவந்தார். இன்க்ரிட்டின் நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய திரைப் படமாக Autumn Sonata அமைந்தது. லிவ் உல்மனைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இப்படத்தின் சிறப்புக்கு பெர்க்மனின் இயக்கத்தை விட இந்த இரு நடிகைகளின் அற்புதமான நடிப்பு காரணம் என்று சொல்லப்படும் அளவுக்கு இரு நடிகைகளும் பாத்திரங்களோடு ஒன்றி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தில் அவர் தந்தையை நினைவுறுத்தும் ஈவாவின் கணவர் பாதிரி பாத்திரமும், வீடும் பெர்க்மனின் இளவயது நினைவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. படம் முழுக்க மஞ்சளுடன், தணிந்த பச்சை, ஆரஞ்சு, சாம்பல் என வசந்தத்தை வெளிப்படுத்தும் வண்ணங்கள். பெர்க்மனின் ஒளிப்பதிவாளரான ஸ்வென் நிக்வெஸ்ட் வண்ண ஒளிப்பதிவில் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக்கொண்டவர். ஷொபன் (Chopin), பாக் (Bach) செவ்வியல் இசைப் பகுதிகள் படத்தில் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் பெர்க்மன் படங்களை இயக்கும்போது அமைதியை இழந்து நடிகர்களிடம் கோபத்தில் கத்தி விடுவார். அடிக்கடி நிதானமிழந்ததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. பெர்க்மன் ஆசானாகக் கருதிய மூத்த இயக்குநர் விக்டர் சியஸ்த்ரம் அறிவுரை கூற, படிப்படியாக நிதானமாக இயக்கும் நிலைக்கு வந்தார். பெர்க்மன் நடிகர்களை நடிக்க வைக்கும் முறையைத் தற்போது அவரைப்பற்றிய பல ஆவணப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர் படங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட நடிகர்களே நடித்து வந்ததால் அவர் விரும்புவதை அவர்களால் எளிதாக நடிப்பில் அளிக்க முடிந்தது.

பெர்க்மன் படமெடுக்கும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்களுக்கு படத்தின் கதை வசனம் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே தபாலில் அனுப்பப்பட்டுவிடும். முதல் நாள் படப்படிப்புக்கு வரும்போது ஒவ்வொருவரும் தங்கள் வசனங்களை அறிந்து தயாராக இருப்பார்கள். காட்சியின் ஆழத்தை அதிகரிக்கும் வண்ணம் பெர்க்மன் அற்புதமாக வசனங்களை அமைத்திருப்பார். வசனங்களைத் திருத்தி அமைப்பதையும், மாற்றிச் சொல்வதையும் அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஒரே ஒருமுறை மட்டும் பிபி ஆண்டெர்சன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, Cries and Whispers இல் கடற்கரை உடலுறவுக் காட்சியை விவரிக்கும் பகுதியில் அவர் பேசும் வசனம் மாற்றப்பட்டது.

1982இல் பெர்க்மனின் இளவயது வாழ்க்கையை ஒட்டி அமைக்கப்பட்ட கதை கொண்ட Fanny and Alexander வெளிவந்தது. தொலைக்காட்சித் தொடராகவும் (ஐந்தரை மணி நேரம்) தயாரிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக நிறைய நடிகர்களுடன், நிக்விஸ்ட்டின் வண்ண ஒளிப் பதிவுடன் உருவான, மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் திரைப்படம். பாட்டியின் வீட்டில் தனியாக இருக்கும், இளம் பெர்க்மனை நினைவுறுத்தும் பத்து வயது அலெக்ஸாண்டரைக் காண்பிப்பதுடன் படம் துவங்குகிறது. ஏராளமான பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட கதைப்பரப்பில் இயங்கும் Fanny and Alexander, நான்கு ஆஸ்கர்களையும், பல சர்வதேசப் பரிசுகளையும் வென்றது. 2003இல் தொலைக்காட்சிக்காகத் தயரிக்கப்பட்ட Saraband பெர்க்மனின் இறுதிப்படைப்பு.

பெர்க்மன் தனது வாழ்வின் இறுதிக் காலத்தை நிம்மதியாக ஃபாரோ தீவில் கழித்தார். தனிமை விரும்பியான பெர்க்மனை அத்தீவில் வாழ்ந்த மக்கள் மரியாதையுடனும் அன்புடனும் கவனித்துக்கொண்டனர். அவர்களிடம் பெர்க்மன் வீட்டிற்கு வழி கேட்டால் வேறு திசையைக் காட்டிவிடுவர் அல்லது அப்படி ஒருவரும் அங்கு இல்லை என்று பதில் கிடைக்கும். பெர்க்மனின் மூன்று ஒரு மணி நேர நேர்காணல்கள்- ஃபாரோவில் பெர்க்மன், பெர்க்மனும் நாடகமும், பெர்க்மனும் திரைப் படமும் – 2002இல் ஆவணப்படமாக வெளிவந்தது. பெர்க்மன் ரசிகர் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணப்படம்.

ஜோனத்தான் ரோசன்பாம் (Jonathan Rosenbaum) போன்ற விமரிசகர்கள் பெர்க்மனின் மீது இன்றுவரை காழ்ப்பை உமிழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை பெர்க்மன் சமுதாய அக்கறை அற்ற, நாடகத்தனமான திரைப்படங்களை உருவாக்கியவர். இவர்களின் கருத்துக்களுக்கு பல முக்கிய திரைப்பட அறிஞர்களும், விமரிசகர்களும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர். பெர்க்மனைப் பொறுத்தவரையில் நாடகக்கலை அவர் மனைவி என்றால் திரைப்படக்கலை அவரின் காதற்கிழத்தி என்பார். வெளிப்படையாக எவரும் பேசத் தயங்கிய மனித உறவுகள், மனம் சார்ந்த ஆழமான பிரச்சினைகளை தனது படைப்புகள் வழியே மிகச் சிறப்பாக அணுகியவர். அரசியலைத் தனது படைப்புகளில் நிராகரித்தவர் எனக் குறை கூறப்பட்டதை பெர்க்மன் கண்டுகொண்டதில்லை. மனித உறவுகளுக் குள்ளான அதிகாரமும் அரசியலும் பெர்க்மனைப் போல் எந்தப் படைப்பாளியாலும் திரைப்படைப்புகளில் இது வரை கையாளப்பட்டதில்லை. திரைப்பட அழகியலுக்கு அறிமுகமில்லாதவரால் கூட பெர்க்மனின் படங்களில் பிம்பங்களின் வலிமையை உணர இயலும். எவராலும் மறுஆக்கம் செய்யப்பட முடியாத அளவு தனித்துவமானவை இந்த மேதையின் படைப்புகள்.

ஐந்து திருமணங்கள், நான்கு விவாகரத்துக்கள், நடிகைகளுடனான உறவுகள் எனக் கொந்தளிப்பான வாழ்க்கை. சொந்த வாழ்க்கையைப் பற்றிய நினைவின்றி சினிமாவைத் தனது மூச்சாகக் கொண்டிருந்த பெர்க்மனுக்கு, தனது குழந்தைகள், அவர்கள் பிறந்த நாட்கள் போன்றவை ஒருபோதும் நினைவிலிருந்தது கிடையாது. ஆனால் இயக்கிய படங்கள் வெளியான தேதி முதல், அவை பற்றிய அனைத்து விவரங்களும் விரல் நுனியில் இருக்கும். ஃபாரோ தீவில் குடியேறிய பின் ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்தநாளன்று பிள்ளைகள் அனைவரும் அங்கு கூடி அவருடன் இருப்பது வழக்கமாகியது. ஃபாரோ தீவில் தினமும் காலை நடைப்பயிற்சிக்குப் பிறகு மூன்று மணி நேரம் எழுதுவார். தனக்காகக் கட்டியிருந்த சிறிய திரைப்பட அரங்கில், பிற்பகல் நேரத்தில் அவர் விரும்பிய திரைப்படத்தைத் திரையிட்டுப் பார்ப்பது வழக்கம். இறுதிவரை அவருடைய பழைய நண்பர்கள் அவரிடம் நெருக்கமாக இருந்தனர்.

பெர்க்மன் தன் வாழ்க்கை, கலை பற்றி Magic lantern, Images ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரையும் அவர் படைப்புகளையும் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. கிரைட்டீரியன் வெளியிட்டுள்ள பெர்க்மன் திரைப்பட டிவிடிக்கள் ஒவ்வொன்றிலும் அவர் நேர்காணலைக் காணலாம். Bergman Makes a Movie எனும் டிவிடியும் கிடைக்கிறது. பெர்க்மனின் அனைத்துப் படைப்புகளும் தற்போது கிடைக்கின்றன. குறிப்பிட்ட சில திரைப்படங்களின் ஸ்கிரிப்ட்களும் புத்தகங்களாகக் கிடைக்கின்றன.

நேர்காணலில், தனது பயங்கள், குறைகள், உறவுகள், படைப்புகள் அனைத்தையும் பகடியும் கேலியும் கலந்து உற்சாகமாகப் பேசும் பெர்க்மனைக் காண்கையில், Wild Strawberries இன் ஐசக் போர்க் போன்று தன்னுடைய குறைகளை ஏற்றுக்கொண்டவராய், வாழ்வின் கசப்புகளையும் வலிகளையும் மன்னித்தவராய்க் காணமுடிகிறது. 2007 இல், எண்பத்து ஒன்பதாவது வயதில் இந்த மேதை மரணமுற்றார். பெர்க்மனின் விருப்பப்படி, மிக எளிய முறையில், அவர் பிள்ளைகள், லிவ் உல்மன், பிபி ஆண்டெர்சன், நண்பர்கள் மட்டும் சூழ்ந்திருக்க ஃபாரோ தீவில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தமிழினி

1 comment:

kumaran said...

இங்க்மார் பெர்க்மன் என்னும் திரைகலைஞனின் படைப்புகளை அதிகமாக பார்க்காதவன் நான்.தங்களது எழுத்துக்கள் அந்த குறையை சற்று குறைப்பதோடு பார்க்கவும் ஆர்வத்தை தூண்டுகின்றன.நன்றிகள் ஆயிரம்.