Thursday 22 December 2011

காண்டூ

காண்டூ (Asshole): வெடித்துச் சிதறும் சினிமா

-மாமல்லன் கார்த்தி-


இயக்குனர் Q ' விடம் கேட்கப்பட்ட கேள்வி:
'இது போன்ற படத்தை எப்படி எடுத்தீர்கள் '?
'என்னிடம் டிஜிட்டல் கேமரா இருக்கிறது, படத்தொகுப்பு வசதிகளும் ஒலி கலவை கூடமும் இருக்கிறது , என் மேல் நம்பிக்கை வைத்து என் அலைவரிசையில் பயணிக்கக்கூடிய நண்பர்கள் இருக்கிறார்கள்... ஏன் என்னால் சினிமா எடுக்க முடியாது?'.
இது போன்ற பதிலை நாம் இங்கே பலரிடம் எதிர்பார்க்கலாம் ஆனால் இந்த பதிலுக்கு பின்பான அனுபவரீதியான தெளிவும் கலாபூர்வமான தீவிரமும் அனைவருக்கும் சாத்தியப்படாது. ஏனெனில் இன்று மைய்ய நீரோட்ட சினிமாவில் நட்சத்திரங்கள் இல்லாத ஒரு படத்தை எடுத்து அதை வெளியிடுவதே குதிரை கொம்பாக இருக்கும் வேளையில், முற்றிலும் சர்ச்சைக்குரிய சுயாதீன சினிமா ஒன்றை எடுத்துவிட்டு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது, அதாவது திரைப்பட விழாக்களில் கூட அங்கீகரிப்பார்களா? என்ற நிலையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டது என்று சொல்ல வேண்டும். ஆனால் நினைத்ததற்கு மாறாக உலகத் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பும், நினைத்தை போல் இந்தியாவில் மறைமுகமான புறக்கணிப்பும் ஏற்பட்டது . இதுவரையில் இந்த படத்தை தணிக்கைத் துறைக்கு அனுப்பவில்லை. படத்தின் அடிநாதத்தை சிதைக்கும் வண்ணம் அவர்களின் வெட்டுக்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் அவர்கள் படத்திற்கு தடை விதித்தால் யாருமே பார்க்கமுடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு படத்தை இணையதளத்தில் அதிகாரபூர்வமற்ற வகையில் வெளியிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன் . இந்த துணிச்சலான முன்னெடுப்பினால் தான் என்னால் படத்தை காண முடிந்தது.
நான் அறிந்த வரையில் இரண்டு வகையான சர்ச்சைக்குரிய சினிமாக்கள் உள்ளன. ஒருவகை, நேரடியான அரசியலை எவ்வித சமரசங்களின்றி பேசி உண்மைகளை துகிலுரிப்பவை. இன்னொரு வகை, எதிர் கலாச்சார உரையாடலின் வழி சமூகத்தால் ஏற்றுகொள்ளபட்ட ஒழுக்க மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்துபவை அல்லது கலைத்துவிடுபவை. 'காண்டூ' இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இவ்வகை சினிமா இந்திய சூழலில் நாம் காண்பது அரிது. அதுவும் பாலியல் ஒழுக்கம் சார்ந்த முகமூடிகளை கலாச்சார பின்னணியில் மறைத்துவைத்திருக்கும் நமது பொதுபுத்திக்கு பெரும் பாதகம் விளைவிக்கக் கூடியது. ஆகவே இது போன்ற படங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் பேசப்பட்டு புதைக்கப்படுகிறது. இயக்குனர் Q இதை நன்கு அறிந்திருக்கிறார். அவர் இதற்கு முன்பு எடுத்த ஆவணப்படமான 'Love in India', பண்டைய இந்தியாவின் பாலியல் உறவு முறைகள் சார்ந்த உச்சத்தையும் சுதந்திர போக்கையும் , இன்றைய இந்தியாவின் பின்னடைவையும், தற்கால வாழ்வின் போக்கிலிருந்து அலசுகிறது. படத்தில் நாட்டுபுற கதைகள், இதிகாசங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் யாவற்றின் வழியாகவும் பண்டைய இந்தியாவில் நிலவிய பாலியல் சார்ந்த மனநிலையை புரிய வைக்கிறார். இன்றைய வாழ்வின் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் போலித்தனங்களையும் அதன் வழியே நிறுவுகிறார். 'காண்டூ' படத்திற்கான முகாந்திரமாகவே இதை பார்க்கிறேன்.

'காண்டூ' படம் துவங்கும் போது சராசரி மக்களிடம் 'காண்டூ என்றால் என்ன அர்த்தம்?' என்று கேள்வி கேட்கப்படுகிறது. 'முட்டாள்', 'கேடுகெட்டவன்', 'தோல்வியடைந்தவன்', 'கயவன்' என்று அவர்கள் நான்கு விடைகளை கொடுக்கிறார்கள். பின்பு படம் காண்டூ என்கிற பெயர் கொண்ட இளைஞனின் அன்றாட வாழ்வை பின் தொடர்கிறது. அவன் தன்னுடைய தாயுடன் பழைய கொல்கத்தா'வின் மத்திய தர குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உண்மையில் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவனுடைய அம்மாவும் அவருடைய காதலரும் கலவியில் ஆழ்ந்திருக்கும் வேளையில் பூனையை போல் பதுங்கி வந்து அந்த காதலரின் பணப்பையிலிருந்து கணிசமான பணத்தை களவாடிவிட்டு தெருக்களில் அலைகிறான். காளி கோவிலுக்கு முன் அமர்ந்து புகை பிடிக்கிறான். குலுக்கல் லொட்டரியில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்கிறான். நண்பர்களும் சுற்றமும் அவன் மேல் சுமத்தும் ’கேடுகெட்ட குடும்பத்தை சார்ந்தவன்' என்கிற இழிசொல்லை கேட்கிறான். அவனது மனம் கோபமும் கொந்தளிப்பும் கொள்கிறது. இந்த தனிமையான புறக்கனிப்புக்குள் இருந்து துவண்டு வரும் அவனது விரக்த்தியான மனக்குரல் வார்த்தைகளாக கொப்பளிக்கிறது. அது ராப் இசை கோஷத்தோடு அவனிடமிருந்து வெளிப்படுகிறது. "கேடுகெட்டது இந்த உலகமா? அல்லது நானா? உன் முகத்திரையை கழட்டி எரி!" என்று வெறிகொண்டு பாடுகிறான். அவனது ஒரே நம்பிக்கை. ஒரே வடிகால், இசை தான் என்பதை அவன் அறிந்திருந்தும் அவனது அன்றாட வாழ்வின், சமூக மற்றும் மனித உறவு சார்ந்த அடையாளங்கள் அவனை குழப்பதிற்குள் மூழ்கடித்த வண்ணம் இருக்கிறது. 'ரிக்க்ஷா' என்கிற ரிக்க்ஷா ஓட்டுகிற இளைஞனோடு காண்டூவுக்கு ஏற்படும் தற்செயலான நட்பு அவனுக்கு சிறு ஆறுதலை அளிக்கிறது. ரிக்க்ஷா மிகத் தீவிரமான 'புரூஸ் லீ' ரசிகனாக இருக்கிறான். அவரை ஒரு குருவாக வைத்துக் கொண்டு தற்காப்பு கலையை சுயமாக கற்றுவருவதாக நினைத்துக் கொள்கிறான். அவனுடைய வடிகால் அது தான். இருவரையும் புழுக்கத்தில் வைத்திருக்கும் யதார்த்தை கடந்து செல்ல அவர்கள் தேர்ந்து கொள்ளும் வடிகால்- போதை வஸ்துக்கள். பொருளாதாரத்தில் கீழ்த்தரத்தில் உள்ள ரிக்க்ஷவும், சமூக மதிப்பீடுகளின் ஒழுக்க நெறிகளில் கீழ்த்தரத்தில் உள்ள காண்டூவும் இணைந்து செல்கிற அந்த போதையின் புகை மண்டிய இருண்ட பயணத்தில், யதார்த்தமும் கற்பனையும் தம் கோடுகளை இழக்கின்றன. யதார்த்தத்தின் கொடிய பிடியிலிருந்து தப்பி, அவர்களது விருப்பமான உலகத்துள் கொண்டாட்டத்தில் சஞ்சரிப்பதாக அவர்கள் பாவித்துக் கொள்கிறார்கள்.

என் புரிதலில் படத்தின் கட்டமைப்பு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி துவங்கும் முன் சராசரி மனிதர்களிடம் படத்திற்கு சம்பந்தமான ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. முதல் கேள்வி : காண்டூ என்றால் என்ன அர்த்தம்? , இரண்டாவது கேள்வி: ராப் இசை பற்றி உங்கள் கருத்து?, மூன்றாவது கேள்வி: ஆபாச (porn) படங்கள் பற்றிய உங்கள் கருத்து?. இந்த கேள்விகளின் வழி பெறக்கூடிய விடைகளின் முதன்மை சொல் ஒன்று காட்சியில் வருகிறது. அன்றாட வாழ்வில் புழங்கும் சொற்கள் அவை. அந்த சொற்கள் சமூகத்தின் அனுமானங்கள். சொற்கள் காட்சியில் முதன்மையாக காட்டப்படும் போது அவை நம்மை நோக்கியதாக மாறுகிறது. சமூகத்திற்கும் காண்டூ என்கிற மனிதனின் வாழ்விற்குமான முரண்களையும் ஒப்புமைகளையும் இந்த வகையான கட்டமைப்பு ஒரு உரையாடலாக மாற்றுகிறது. ஒரு வகையில், பார்வையாளர்களான நாம் அதுவரை படத்தில் கண்ட ஒரு அம்சத்தை பற்றி நம்மிடையே கேள்வியை எழுப்புகிறது.

படத்தின் நான்காவது பகுதியே மிகவும் வினோதமான ஒன்று. அந்த பகுதி துவங்கும் முன் காண்டூவும் ரிக்க்ஷாவும் போதையின் உச்ச நிலையில் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்கிற குழப்பத்துள் ஆழ்ந்துவிடுகிறார்கள். என்ன நடக்கிறதென்று அவர்களுக்கு புரியவில்லை. அது வரை பாரவையாளர்களான நாம் கண்டு வந்த படத்தையே கேள்வி ஆக்குகிறது, அந்த ஆலமரத்தின் அடியில் நடக்கும் சம்பவம். அங்கே அமர்ந்திருக்கும் ஒரு முதியவர் ' Q என்கிற இயக்குனர் 'காண்டூ' என்கிற படமெடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் இப்போது தன்னை பார்க்க வந்து கொண்டிருப்பதாகவும் 'அவரோடு நீங்கள் இருவரும் ஊர் போய் சேரலாம்' என்கிறார். காண்டூவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. திடீரென்று ரிக்க்ஷா 'Q உன்னை பற்றி தான் படம் எடுக்கிறார்' என்று அடித்து சொல்கிறான். காண்டூ மேலும் குழப்பமடைகிறான். சொன்னது போல் Q வருகிறார், அவர்களை தூரத்தில் இருந்து படம் பிடிக்கிறார். சற்று நேரத்தில் காண்டூ வெறி கொண்டு பாடத் துவங்குகிறான். மீண்டும் படத்தின் டைட்டில் ஓடுகிறது. ஒரு புதிய படம் துவங்குகிறது. அது வரை ஒரு ஒழுங்குமுறை கொண்டு கட்டமைகபட்ட படம் இப்போது தறிகெட்டு ஓடுகிறது அல்லது கட்டற்று போகிறது என்று சொல்லலாம். யதார்த்தம் எது? கற்பனை எது? என்கிற கேள்விகள் ஏதுமில்லாது தொடர்பறுந்து அலைபாயும் பிம்பங்களாக மாறுகிறது. முதலில் நாம் கண்டது இயக்குனரின் சினிமா அதன் பின் காண்பது காண்டூ'வின் சினிமா. அவன் தன் கடவுளை அடைந்துவிட்டான், தன் படைப்பாளரை (இயக்குனரை) கண்டுவிட்டான் . அதன் பின் அவனது விருப்பங்களை அந்த சினிமாவின் வழியே நிறைவேற்றிக் கொள்கிறான். இதில் உண்மை எது? கற்பனை எது ? என்கிற கேள்வி முற்றிலும் அழிந்து போகிறது.

’காண்டூ’ மற்றும் ’ரிக்க்ஷா’ என்கிற பெயர்கள் சமூகம் இந்த இளைஞர்களை விளிக்கும் பெயரே அன்றி அது அவர்களுடைய நிஜப்பெயர் அல்ல. அதுவே அவர்களின் சமூக அடையாளமாக இருப்பதால் அதுவே படத்தில் அவர்களது பெயர்களாகவும் இருக்கிறது. பிச்சை எடுப்பவனை பிச்சைக்காரன் என்று அழைப்பதை போல். காண்டூவின் அம்மாவுடைய காதலர்க்கு மட்டுமே நிஜப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'தாஸ் பாபு பற்றி நீ தப்பாக பேசாதே !' என்று காண்டூவை அவன் அம்மா ஒரு முறை அதட்டுகிறாள். சமூக அங்கீகாரம் அவருக்கு இருப்பதால் அவரது நிஜப்பெயர் படத்தில் உள்ளது. சமூக மனம் மற்றும் தனிப்பட்ட அல்லது தனிமைப்பட்ட மனம் இவற்றின் இடையே நிலவும் உள்ளார்ந்த வன்மத்தையும் முரண்களையும் கடந்து உயிர்பிழைத்து வாழ்வது சாத்தியமா என்கிற கேள்வியே படத்தின் அடிநாதம். அதனை படம் ஒரு இருபது வயது தாண்டாத இளைஞனின் மனதினுள் இருந்து சொல்ல விழைகிறது. காண்டூ என்கிற அந்த இளைஞனின் மன உலகத்தினுள் தன்னை முற்றிலும் இழந்திருக்கும் இயக்குனர், அந்த இளைஞனின் வாழ்வை மூர்கத்தனமான நேர்மையுடன் கூற முற்படும் போது, அங்கே முகம் சுளிக்கும் விடயங்கள் வராமலா இருக்கும் ? அவனுக்கு பாலியல் ரீதியான விரக்தியும், கனவுகளும், குழப்பங்களும் அதிகமாக இருக்காதா என்ன? அவன் தன் வயதை மீறிய பெண் மீது மைய்யல் கொள்ள மாட்டானா என்ன? படுகுழிக்குள் இருந்து எழும் குரல், கோபத்தோடும் சத்தத்தோடும் வேகத்தோடும் கழிவுகளின் வீச்சோடும் இருக்காதா என்ன? அது ஒடுக்கப்பட்ட இசை பாரம்பரியத்தின் வேர் கொண்டு நம்மை இறுக்காத என்ன? இந்த உணர்வுகளை தான் நம்புகிற சினிமாவின் வழி வெளிப்படுத்துவது ஒரு துணிச்சல் மிக்க கலைஞனால் மட்டுமே முடியும், அதுவும் நம் இந்திய சூழலில் அந்த துணிச்சல் பத்து மடங்கு அதிமாக தேவை. அந்த குணம் இயக்குனர் Q' விடம் நிறையவே இருக்கிறது. எனவே தான் காண்டூவின் மனக்குரலும் Q'வின் சினிமா அழகியலும் பிரிக்கமுடியாதபடி கரைந்துவிட்டிருக்கிறது.
Gandu
துவக்கத்தில் தனிமையும் அந்நியத் தன்மையும் கொண்ட காண்டூவின் தினசரி வாழ்வை சொல்லும் போது, பழைய கொல்கத்தாவின் தனிமையான கிளை சந்துகளை,குடியிருப்புகளை, ஹொவ்ரா என்கிற இடத்தின் பழந்தன்மையிலான சூழியலை, காட்சிப்படுத்தி இருக்கும் விதம், இந்திய மனோநிலையை நவீன கண் கொண்டு காண்பதை ஒத்து இருக்கிறது. அவனது உலகம் திடீரென்று இசையாய் கொந்தளிக்கும் போது, அதே திரை மொழி மிகுந்த இசைவோடும் லயத்தோடும் ஒன்று கூடி நடனம் ஆடி திளைக்கிறது. கோபம் கொண்ட வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது காண்டூவின் இசை உலகம். அதே வார்த்தைகளால், அதே ஜதியோடு தன்னை காட்சியும் நிரப்பிக் கொள்கிறது. உரையும்(Text) காட்சியும் (Image) ஒன்றன் மீது ஒன்று தாளத்தோடு கலந்து வரும் தொடர் பிம்பங்களாக மாறுவது மிகவும் படைப்பூக்கும் நிறைந்த செயல்பாடாக இருக்கிறது. Subtitle (வசன வரிகள்) என்பதையும் ஒரு படைப்பு சார்ந்த கருவியாக பயன்படுத்தி இருப்பது நமக்கு புதிய திறப்புகளை வழங்குகிறது. அது ஏற்படுத்தும் உணர்வுரீதியான தாக்கத்தின் முக்கியத்துவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். அது வெறும் அறிவுசார் பயிற்சி முறையாக இல்லை.

படத்தின் அடிப்படை உணர்வு ஆக்ரோஷம். ஆக்ரோஷத்தின் வடிவம் காளி. அக்னி தெய்வத்தின் ஏழாவது நாவு அவள். காண்டூவின் உள்மனம் அக்னியில் தகிக்கிறது. தன்னிலை கொள்ளாமல் அவன் போதையில் மூழ்கும் போது காளியின் உருவம் அவனை முதலில் பயமுறுத்துகிறது, பின்பு அரவணைக்கிறது, அதன் பின் காமத் தீயின் வழியே அவன் ரத்தம் குடித்து, அவன் நினைவை அழித்து, காலமற்ற வெளிக்குள் தள்ளுகிறது. இயக்குனர் Q இந்துக்கள் கட்டி எழுப்பியிருக்கும் காளியின் புனித பிம்பங்களை தகர்க்கிறார். என் வாசிப்பில், தெய்வமற்ற காண்டூவின் உலகில், அந்த தெய்வம் என்கிற பிம்பம் அல்லது கற்பிதம் ஏற்படுத்தி இருக்கும் பயத்தினை கடந்து, அவன் தன் சுயம் சார்ந்த உன்னத நிலையை அல்லது அபத்த நிலையை அடைவதாக காளியின் குறியீடு இருக்கிறது.

படத்தில் வரும் மூன்று பெண் கதாபாத்திரங்களை RII என்கிற ஒரே நடிகை ஏற்றிருக்கிறார். Internet parlor'ரில் தன் காதலனுடன் chat'டில் சல்லாபிக்கும் குடும்ப அமைப்பியல் சார்ந்த பெண்ணாக, காளியின் ஆக்ரோஷ உருவம் கொண்டவளாக, காமத்தின் உச்ச கிளர்ச்சியை தூண்டும் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். படத்தில் வரும் ஆண் பெண் உடலுறவு காட்சிகள் சராசரி இந்திய மனோநிலையின் தடைக்கட்டு ஏதுமில்லாத கொண்டாட்டமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. வெகுஜனப் பரப்பில் சதா நம் புலன்களை மறைமுகமாக சீண்டிக் கொண்டிருக்கும் பிம்பங்களை கண்டு பழகிய பார்வையாளர்களுக்கு இந்த கொண்டாட்டம் அதிர்ச்சியை தருவது நியாயம் தானே? குலைநடுங்கும் குற்ற உணர்வில் வாழ்பவர்கள் இந்த நேரடியான, கொண்டாட்டத்தின் எல்லை கடந்த உடல் உறவு காட்சிகளை கண்டு கோபமடைவது சரி தானே? இப்படிப்பட்ட பார்வையாளர்களின் அமைதியை குலைப்பதே இந்தப்படத்தின் குறிக்கோள் என்பதால், இந்த எதிர்வினைகள் ஏற்புடையது தான். படத்தின் கதை மாந்தர்கள் தங்கள் துயர் மிகுந்த வாழ்விலிருந்து தப்பித்துக் கொள்ள அல்லது அவ்வாறான துயர் நினைவுகளில் இருந்து சில காலமெனும் விடுபட அவர்கள் தேர்ந்தெடுப்பது மூன்று விடயங்கள்: போதை, கலவி, இசை. இவை மூன்றின் நிலைகளை மிகுந்த மகிழ்ச்சி வாய்ந்த தருணங்களாக படம் மாற்றுகிறது. கருப்பு வெள்ளை காட்சிகளாக நகரும் படம், காண்டூ அந்த பாலியல் தொழிலாளியை கண்டடையும் போது மட்டும் வண்ணம் கொள்கிறது. அவன் அவளோடு கலவியில் அனுபவிக்கும் கட்டற்ற தீவிரத்தை, நம் நினைவு ஸ்தம்பிக்கும் அளவு இயக்கப்பட்டடுள்ள ஒரு காட்சியை, இது வரை நான் இந்திய சினிமாவில் கண்டதில்லை. இதை ஆபாச படம் என்று சொல்லிவிடுவார்களோ என்று இயக்குநருக்கு ஒரு நொடியிலும் தோன்றி இருக்க வாய்ப்பில்லை,ஏனெனில் அது அந்த நிகழ்விற்கான உண்மையோடு இருக்கிறது.
Gandu
இங்கே நான் ஒன்றை சொல்ல வேண்டும். இந்த படம் இந்திய வெகுஜனப் பரப்பிற்கு எதிர் நிலையில் உள்ளது, அதாவது வெகுஜன கூறுகளை தன்னுள் கொண்டு அதனை கேள்விக்கும், பகடிக்கும் உட்படுத்துகிறது. குறிப்பாக, படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன, தாய் -மகன் உறவு உள்ளது, நட்பு உள்ளது, கிளர்ச்சி தரும் தருணங்கள் உள்ளன, துரிதமான படத்தொகுப்பு பாணி உள்ளது, இவையாவும் மைய நீரோட்ட சினிமாவில் நாம் பொதுவாக கானும் சில அம்சங்கள். ஆனால் இவை யாவும் மைய நீரோட்ட சினிமாவின் முற்றிலுமான எதிர் நிலையில், அவர்கள் எதிர் கொள்ளமுடியாதபடி வைக்கப்படுகிறது. 'நீங்கள் கேட்பவை எல்லாம் முழு சுதந்திரத்துடன் இதில் இருக்கிறது.. ஆனால் உங்கள் திரை அரங்கம் எதிலும் இதை திரையிட முடியாது!' என்கிற சவால் அதனுள் இயங்குகிறது. Q தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் வரும் கோபமும், இயலாமையும் கொப்பளிக்கும் அந்த கொச்சையான பாடல் வரிகளை எழுதியவரும் அவரே. கேமரா'வை ஒரு எழுதுகோலாக எண்ணி சினிமாவை தீட்டுகிற படம் காண்டூ. அப்படிப்பட்ட செயல்பாடாக இந்திய சினிமாவில் நான் அறிந்து சிறப்பான எடுத்துக்காட்டு 'காண்டூ' மட்டும் தான். படத்தின் இசை காண்டூவினுடைய ஆன்மாவின் குரலாக இருக்கிறது. புளுஸ் இசை வடிவின் வேரான 'ராபிங்'கும் மற்றும் புளுஸ்'சின் ஒரு உச்சமான ராக் இசையும் ஒன்றாகும் கலவை தான் படத்திலுள்ள இசையின் தனித்துவம். 'The Five little Indians' என்கிற ராக் இசை குழு இதனை உயிர்ப்புடன் செய்திருக்கிறது.

இயக்குனர் Q இந்த படத்தில் பிரயோகப்படுத்தும் திரைமொழியானது, எழுபதுகளின் கலாச்சார புரட்சி இயக்கத்தில் விளைந்த கலை-சமூகம் சார்ந்த உணர்வெளுட்சிகளையும் மற்றும் தொண்ணூறுகளின் எதிர் கலாசார இயக்கங்களின் தாக்கத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவில் உண்டான மறுப்பு செய்யும் கலை சார்ந்த இயக்கங்களின் தாக்கங்களை கொண்டுள்ளது. டென்மார்க் இயக்குனரான 'லார்ஸ் வான் ட்ரையர்' உருவாக்கிய Dogme என்கிற இயக்கத்தின் வழி வந்த அவரது 'இடியட்ஸ்' என்கிற படத்தின் கணிசமான் தாக்கத்தை- கட்டமைப்பு சார்ந்தும், எதிர்ப்பு மனோபாவம் சார்ந்தும், உள்ளடக்கம் சார்ந்தும், ’காண்டூ’ உள்வாங்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. வெகுஜன கலாச்சாரத்தின் பிம்பங்களை மற்றும் B Movies என்கிற வகை மாதிரிப் படங்களின் சில அழகியல் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. மேலும் போதை வஸ்துக்களால் உண்டாகும் மனவோட்டங்களை, உடலை தாண்டி செல்லும் மனதின் அனுபவத்தை, தன் திரைமொழியாக உருவாக்கி இருக்கும் பிரெஞ்சு இயக்குனரான கஸ்பர் நொ'வின் படங்களின் தாக்கத்தையும் நாம் காணலாம். ஐரோப்பிய விமர்சகர் ஒருவர் இயக்குனர் Q'வை 'இந்தியாவின் கஸ்பர் நொ' என்று சொன்னது பொறுத்தமானது தான்.

இந்தியாவில் ‘காண்டூ’ போன்ற ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இதனால் இது போன்ற படத்தை காண விரும்பும் கணிசமானோர் காண இயலாமல் போகும் வருத்தம் எனக்கு ஒருபுறம் இருப்பினும் , சமூகம் விதித்த எல்லைகளை துணிச்சலாக மீறி செல்லும் Q போன்ற கலைஞனுக்கு வேறு திறப்புகள் அமைந்து கொண்டு தான் இருக்கும் என்பது என் திண்ணமான நம்பிக்கை. சமூகத்தின் அந்தரங்கத்தில் வெளிச்சம் போடும் Q, தன் தனிப்பட்ட வாழ்வின் அந்தரங்கத்தையும் துறந்திருக்கிறார். கலைக்கும் தன் வாழ்விற்குமான கோடுகளை அழித்துக்கொண்டே வருகிறார். பாலியல் தொழிலாளியாக காண்டூ'வுடன் கலவியில் மிகத் தீவிரமாக தன்னை கரைத்துக் கொள்ளும் நடிகை RII, Q'வின் நிஜ வாழ்வில் அவரோடு சேர்ந்து வாழும் காதலி என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இந்திய சுயாதீன (independent) சினிமாவின் ஒரு கடைகோடி எல்லையில் தனியாகவும் காத்திரமாகவும் இயங்கி வரும் Q 'விற்கு என் ஆதரவை அளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி - மாமல்லன் கார்த்தி-
நன்றி - படப்பெட்டி ((இதழ் 6. டிசம்பர் 2011)
Gandu
இயக்குநர் Q

No comments: